.
மத்திய அரசு 'வரலாற்றை தத்தெடுத்தல்', Adopt a Heritage எனும் திட்டத்தை துவக்கி இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வரலாற்று சின்னத்தையும் ஒரு தனியார் நிறுவனம் 'தத்தெடுத்துக்' கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட வருடங்களுக்கு அந்த சின்னத்தை பராமரித்து காப்பாற்றுவது அவர்கள் வேலை. அதற்கு பதிலாக அவர்களுக்கு அந்த சின்னங்களை சுற்றி தங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்யும் வாய்ப்பு கிட்டலாம்.
இதன் முதல் படியாக தில்லி செங்கோட்டையை டால்மியா சிமெண்ட் நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 25 கோடிகள் அங்கே செலவழிப்பார்கள். இன்னும் 22 சின்னங்கள் தத்தெடுப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக கண்டித்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்திருக்கிறது.
நான் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறேன். நம் வரலாற்று சின்னங்கள் இன்றைக்கு எந்த லட்சணத்தில் உள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும். அரசின் பராமரிப்பில் அரசாங்க அலுவலங்கள் போலவே புழுதி படிந்து, அழுக்கு மல்கி, பெரும் சோகம் வடியவே இவை காட்சி அளிக்கின்றன. இதனை வரலாற்று சின்னங்கள் மேல் நாம் தொடுக்கும் போர் என்று வர்ணித்து நான் முன்னர் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.+++
இங்கே எல்லாம் ஒன்று பராமரிப்பு இருப்பதில்லை. அல்லது பராமரிப்புக்கு தேவைப்படும் துறை அறிவு இல்லை. அல்லது பராமரிப்புக்கு ஒதுக்கிய பணம் வேறு யார் பாக்கெட்டுக்கோ போய் விடுகிறது.
இந்தப் பின்னணியில் தனியார் நிறுவனங்கள் இப்படி தத்தெடுப்பது அந்த சின்னங்கள் புனரமைப்பில் மற்றும் பெருமையில் பெரிதும் உதவும். என்னைக் கேட்டால் தாஜ்மகால், செங்கோட்டை என்று பெரிய, புகழ் வாய்ந்த சின்னங்கள் மட்டுமின்றி சிறு, குறு சின்னங்களும் தத்துக்கு கொடுக்கப் பட வேண்டும். காஞ்சீபுரம் முழுக்க ஆயிரம் ஆண்டுப் பழைய கோயில்கள் டஜன் கணக்கில் உள்ளன. இவற்றில் நிறைய சோகவடிவாகக் காட்சி அளிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக கன்னிமரா நூலகத்தில் உள்ள பண்டைய புத்தகங்களை தனியார் தத்தெடுத்துப் பராமரிக்கலாம். மியூசியத்தில் உள்ள பொருட்களை தனியார் நிறுவனங்களோ, தனி மனிதர்களோ தத்தெடுத்து அதன் பராமரிப்புக்கு நிதி உதவி அளிக்கலாம். .இந்த திட்டத்தில் இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற அந்நிய நிறுவனங்கள் பங்கெடுக்கலாம். பிரிட்டிஷ் மியூசியம், ஆக்ஸ்போர்ட் ஆஷ்மோலியன், அமெரிக்கன் காங்கிரஸ் லைப்ரரி போன்றவற்றை இதில் அனுமதிக்கலாம்.
ஆகவே அரசின் இந்தத் திட்டத்தை முழுமனதோடு ஆதரித்து, இதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுகிறேன்.
..
.
வரலாற்று சின்னங்கள் பற்றிய என் முந்தைய பதிவு: https://www.facebook.com/sridharfc/posts/10154216671581473

No comments:
Post a Comment