Monday 2 November 2015

மோடியின் இந்தியா - பாகிஸ்தானின் வாய்ப்பு



(ஆயாஸ் அமீர் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி. பஞ்சாப் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். The Newsல் அவர் எழுதிய இந்தக் கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்திருக்கிறேன்.)


இந்தியாவில் நிகழ்ந்தவற்றிலே பாகிஸ்தானுக்கு மிகவும் பிரயோசனமான என்றால் அது நரேந்திர மோடி பிரதமரானதுதான். ஜியா உல் ஹக் சமயத்தில் பாகிஸ்தான் எப்படி பார்க்கப் பட்டதோ அந்த மாதிரி மற்றவர்கள் இந்தியாவை பார்க்க வைத்திருக்கிறார் அவர்.

சுதந்திர சிந்தனைகள் மேல் தாக்குதல்கள், கருத்து சுதந்திரத்துக்கு எதிர் வரும் ஆபத்து, தன் நம்பிக்கைகள் காரணமாக தனி மனிதர்கள் கொல்லப் படுவது, வெறுப்பும், அடிப்படைவாதமும் தேசத்தின் மேல் உமிழப் படுவது, மத அடிப்படைவாத கருத்துக்கள் திணிக்கப் படத் துவங்குவது, அரசியலில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு மதம் நுழைவது...இது எல்லாமே பாகிஸ்தானில் நடக்க வேண்டியது.

இதில் விஷயம் என்னவென்றால் இது வரை இந்தியர்கள் தங்கள் தேசத்தின் பெருமையைப் பற்றி, ‘ஒளிரும் இந்தியாவைப்’ பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றம், எதிர்காலத்தின் சாத்தியக் கூறுகள் எல்லாமே விளம்பர ஏஜென்சிகளின் கனவு உலகம் போல இருந்தது. பாகிஸ்தானின் தோல்விகளோடு ஒப்பிடுகையில் அவை எங்கோ மேலே இருந்தது. பாகிஸ்தானியர்களோடு பேசும் போதெல்லாம் இந்தியர்கள் ஒரு பாசாங்குக் கவலையோடும், ‘நாங்கள் மிகவும் முன்னேறிய சமூகம் பார்’ என்கிற தோரணையோடுமே அணுகினார்கள்.

இது எல்லாம் போதாதென்று ‘நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு பார்’ என்றும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உலகத்துக்கு நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.  இதனால் உலகெங்கும் பொதுவான எண்ணம் ‘இந்தியா முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்க பாகிஸ்தான் மதத் தீவிரவாதிகளின் கையில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருக்கிறது,’ என்று நிலைத்தது.

அந்த மாதிரி சிந்தனைகள் நம்மை சோர்வடைய வைத்தாலும் அதை நிரூபிக்கும் வகையில்தான் பாகிஸ்தானில் நடந்து வந்து கொண்டிருந்தது.  யாராவது ஒரு ஏழை மத அவமதிப்பு கைது செய்யப் ஜெயிலில் போடப் படுவார், ஒரு கிறித்துவ சமூகத்தில் தாக்குதல் நடக்கும், இஸ்லாத்தின் ஒரு தனிப் பிரிவை சேர்ந்த ஒருவர் சுடப்படுவார், இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் நடக்கும், இவைதான் உலக செய்திகளில் முதல் பக்கத்தை பிடிக்கும். அதுவே பின்னர் பாகிஸ்தான் எப்போதுமே பிரச்சனை நிறைந்த நாடுதான் என்கிற எண்ணத்தை உலகுக்கு உறுதிப் படுத்தும்.

ஆனால் சென்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதும், அதன் மூலம் ஹிந்து அடிப்படைவாதத்துக்கு கிடைத்த உற்சாகமும், இந்தியா ஒரு ‘ஹிந்து தேசம்’ என்று திரும்ப திரும்ப நிரூபிக்க நடக்கும் முயற்சிகளும் ஆட்ட விதிகளை பெருமளவு மாற்றி விட்டன. இன்றைய தேதியில் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்படைவாதம் என்கிற குழியில் இருந்து மேலே வர பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அதற்கு எதிர் திசையில் வேகமாக பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

நியூ யார்க் டைம்ஸ்ஸில் பணி புரியும் இந்திய பத்திரிகையாளர் சோனியா ஃபலெரொ எழுதுகிறார்: ‘இன்றைய இந்தியாவில் மத சார்பற்ற சிந்தனையாளர்கள் கடும் சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 77 வயது கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். கோவிந்த் பனசாரே மும்பையில் கொல்லப் பட்டிருக்கிறார். நரேந்திர தாபோல்கர் கொல்லப் பட்டிருக்கிறார். இவர்கள் எல்லாருமே ஹிந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை சாடியவர்கள்.’  

கூடவே உபியில் ஒரு முஸ்லிம் பசுக்கறி வைத்து உண்டார் என்கிற சந்தேகத்தில் அடித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். இதனை எதிர்த்து நிறைய எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். ஷர்மிளா தாகூர் இன்றைய இந்தியாவை எமெர்ஜென்சியோடும் பாபர் மசூதி இடிப்பு நேரத்தோடும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். ஆனால் இவை எல்லாம் ஆங்காங்கே ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்கள்தான். சமூகத்தில் பொதுவாக பயமும் சகிப்பின்மையும்தான் நிலவுகிறது.

பிரதமரோ அமைதியாகவே இருக்கிறார். ஹிந்துக் கும்பல்கள் குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த போது அவர் காத்த அதே அமைதிதான் இப்போதும் அவரிடம் தென்படுகிறது. முதல்வர் மோடிக்கும் பிரதமர் மோடிக்கும் வித்யாசம் இருக்கும் என்று நிறையப் பேர் நம்பினார்கள். ஆனால் அவர் மாறவே இல்லை என்பது இப்போது புரிபடுகிறது. நரேந்திர மோடி ஹிந்துத்வா கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-ஸோடு மணம் புரிந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்துத்வாவும் ஒரு மாதிரியான நாஜி சிந்தனைதான். உள்ளூர் நாஜி அல்லது காவி நாஜி என்றும் அதனை அழைக்கலாம். இந்தியா ஹிந்துக்களுக்காகவே உள்ள தேசம், அதில் முஸ்லிம்களுக்கோ வேறு மதத்தினருக்கோ இடம் கிடையாது என்று நம்பும் ஒருவகையான இனவாதம் அது. ஆனால் இந்தியாவில் நிகழும் இந்தக் குழப்பத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. வெகு காலமாகவே நாம் மத அடிப்படைவாதத்திலும் சகிப்புத் தன்மையற்ற நிலையிலும் உழன்று கொண்டிருக்கிறோம். இப்போது இந்தியா ஒரு ஹிந்துப் பாகிஸ்தானாக ஆகத் துவங்கும் வேளையில் இந்தியாவின் நஷ்டம் பாகிஸ்தானின் லாபமாக மாற நாம் உழைக்க வேண்டும்.

ஆனால் இந்த லாபம் நல்ல பிரயோசனமான லாபமாகவும் பாகிஸ்தானிய சிந்தனைத் திறனை முன்னேற்றுவதாகவும் இருக்க வேண்டும். நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்: பாகிஸ்தானிய அடிப்படைவாதத்தின் பொற்காலம் முடிந்து போய் விட்டது. துப்பாக்கியை ஆட்டிக் கொண்டு இஸ்லாமிய தேசத்தை கட்டமைக்க உலவிய முல்லாக்கள் பெருமளவு அடக்கப் பட்டு விட்டார்கள்; முழுவதும் ஒழிக்கப் படவில்லைதான், ஆனால் அடக்கப் பட்டு விட்டார்கள். ஆனால் இந்த வெற்றியை இன்னமும் விரிவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நம் தேசத்தில் பெருமளவு விரவிக் கிடக்கும் ஊழல் ஒழிய வேண்டும். அடிப்படை சேவைகள் - நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை - போன்றவை சரி செய்யப் பட வேண்டும். சுகாதாரத்துக்கு நாம் தேவையான அளவு செலவிடுகிறோமா என்று பார்க்க வேண்டும். தேசம் முழுவதும் ஒரே கல்வி முறை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. எல்லா மாணவர்களுக்கு ஒரே புத்தகம் தேவை; அது நல்ல, அறிவார்ந்த புத்தகமாக இருக்க வேண்டும், சும்மா பாகிஸ்தானிய வரலாறு மாதிரி குப்பைகள் இருக்கக் கூடாது.

நம் ஒட்டு மொத்த பார்வையும், சிந்தனையும் பகுத்தறிவு மற்றும் நவீனவாதம் நோக்கிப் பயணிக்க வேண்டும். பழைய மூட சிந்தனைகளில் இருந்து நாம் வெளி வர வேண்டும். இந்தியா அடிப்படை வாதத்தை தழுவிக் கொண்டால் தழுவிக் கொள்ளட்டும். நாம் அந்த நிலையில் ஏற்கெனெவே இருந்திருக்கிறோம். அது நம்மை முன்னேற்றவில்லை. எனவே அதனை நாம் தூக்கி எறியவேண்டும். பகுத்தறியும் பண்புதான் கற்றலுக்கு முதல் தேவை. அந்தப் பண்பை நாம் வளர்க்க வேண்டும்.

மேற்கு தேசங்கள் எல்லாம் மதமே இல்லாத தேசங்கள் கிடையாது. அவற்றில் முக்கால்வாசி கிறித்துவ நம்பிக்கைகளை போற்றுபவை. நமது நம்பிக்கை இஸ்லாம், இந்த தேசத்தின் பெரும்பான்மையினரின் மதம். மேற்கு தேசங்களிலும் மதப் பிரச்சனைகள் தோன்றி மறைந்திருக்கின்றன. இப்போது தங்கள் மதத்தை  அவர்கள் சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதில்லை. அதே போல நாமும் நம் மதத்தை சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும்.

மசூதிகளில் தென்படும் ஒலிப்பெருக்கி துப்பாக்கிகளை விட அதிக நாசங்களை நம் சமூகத்தில் செய்ய வல்லவை. அவற்றை இப்போதுதான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரத் துவங்கியிருக்கிறோம். இன்னமும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத அவமதிப்பு சட்டத்தை வைத்து குழப்பம் விளைவிப்பது நிற்க வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பதில் ஏவுகணையோ ஒவ்வொரு அணுகுண்டுக்கும் பதில் அணுகுண்டோ நாம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நமக்கென்று ராக்கெட்டுகள், டாங்குகள், அணுகுண்டுகள் உள்ளன. இதுவே போதுமானது. வலிமையான தரைப் படையும் விமானப் படையும் நம்மிடம் உள்ளன. நமக்கு இப்போதைக்கு தேவை எல்லாம் நல்ல பள்ளிகள், கல்லூரிகள், அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமான ஞானம் இவையெல்லாம்தான். நம் மேல் பெரும் நம்பிக்கை வைத்து இந்தியா பற்றி குறைவாகப் பேசி இந்தியா பற்றிய பயத்தைக் குறைத்துக் கொண்டு வாழ முயல வேண்டும். அணுகுண்டு எண்ணிகையில் இந்தியாவை முறியடிக்க நினைக்காமல் சகிப்புத் தன்மையில், அறிவியல் அறிவில், பகுத்தறிவில், ஒருங்கிணைத்துச் செல்லும் மனநிலையில் இந்தியாவை விட உயர வேண்டும்... இசையிலும் கலையிலும் கூட அவர்களை மீற வேண்டும்.

நம் தேசத்து அறிவு ஜீவிகள் பாகிஸ்தான் தாலிபானை நம்மால் முறியடிக்கவே முடியாது என்று நினைத்தனர். கராச்சி பிரச்சனையை தீர்க்கவே முடியாது என்று எண்ணினர். அவர்கள் எண்ணம் தவறாகப் போனது. தாலிபான் மாதிரியான பெரும் சோதனைகளை பாகிஸ்தான் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது. மற்றவற்றையும் அப்படி கடக்க முடியாதா என்ன? மதுவிலக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம் மதுவை தடை செய்தாலும் ஒரு போன் செய்தால் எந்த ஊரிலும் உங்களுக்கு டெலிவரி கிடைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் இந்த மாதிரி பாசாங்குத் தன்மையிலேயே இருக்கிறோம். சட்டமும் நிஜ வாழ்க்கையும் ஒரே கோட்டில் இணைய வேண்டும். மதுவிலக்கு போன்ற பாசாங்குத் தனங்கள் ஒரு முன்னேறிய சமூகத்துக்கு ஒவ்வாதவை. அவை பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான பிம்பத்தை கட்டிக் காக்கவே உதவுகின்றன. கிரிமினல்களுக்கும் இந்த பாசாங்குத் தனங்கள் வசதியாக இருக்கின்றன. கள்ள மார்க்கெட்டுக்குப் போக வேண்டியது அரசு கஜானாவுக்கு போக வேண்டும். நமக்கு முன்மாதிரி துபாயாக இருக்க வேண்டும், சவுதியாக இருக்கக் கூடாது. நடைமுறை உண்மையை உணர்ந்து கொண்ட தேசமாக துபாய் இருக்கிறது, அதுவே அதன் பொருளாதார வெற்றிக்கும் காரணம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு இறைவன் கொடுத்த வரம். ஹிந்துத்வாவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும், காவி நாஜிகளுக்கு சேரும் வலிமைகளும் நமக்கு நல்லதுதான். நம்முடைய உள்நாட்டு பலவீனங்களை சரி செய்து கொண்டால், நம் சகிப்புத் தன்மையை, நம் பகுத்தறிவை நாம் வளர்த்துக் கொண்டால் யாரைப் பார்த்தும் எந்த நாட்டைப் பார்த்தும் பயந்து சாக வேண்டிய அவசியம் நமக்கு வராது.

Thursday 22 October 2015

கல்லடி படும் அரசு



'நாய்கள் மேல் யாராவது கல்லடித்தால் அரசாங்கம் பொறுப்பல்ல,' என்று தலித் குழந்தைகள் எரிப்பு பற்றி கருத்தளித்த ஜெனரல் விகே சிங் தலித்துகளை இழிவு படுத்தியிருக்கிறார் என்பது ஒரு முக்கியமான கருத்தாக பார்க்கப் படுகிறது. அது சரிதான் என்றாலும் பிராணிகள் மீதான அக்கறையின்மையும் அதை ஒட்டி உள்ள பெரும் பிரச்சனையும் இங்கே தென்படுகிறது. எனவே அவர் சொன்னதால் வெளிப்பட்டிருக்கிற உணர்ச்சிகளை கொஞ்ச நேரம் தள்ளி வைத்து விட்டு இந்தப் பிரச்சனையை பார்ப்போம்.


நம்மில் நிறையப் பேர் பொதுவாக தெரு நாய்கள் பற்றி கவலைப் படுவதில்லை. அவை என்ன சாப்பிடுகின்றன, எங்கே தூங்குகின்றன, மழை அல்லது கடும் வெயிலில் என்ன செய்கின்றன என்கிற கவலை நமக்கு பொதுவாக இருப்பதில்லை. உணவாவது குப்பை தொட்டியிலும், கசாப்பு மற்றும் டீக் கடைகளிலும் ஓரளவுக்கு கிடைத்து விடும். ஆனால் அவற்றுக்கு தண்ணீர் கிடைப்பதே இல்லை. பிஸ்கட் அல்லது இறைச்சி துண்டு போடுகிறவர்கள் கூட அவற்றுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை.


பொதுவாக குப்பங்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்விடங்களில்தான் நாம் நிறைய தெரு நாய்களை பார்க்கலாம். அவர்களில் நிறைய பேர் இந்த நாய்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க அங்கேதான் குப்பைகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன என்பதும் ஒரு காரணம். மும்பையில் மட்டும் தினமும் 500 டன் குப்பை அள்ளாமல் இரவில் விடப்படுகிறது என்று ஒரு தகவல் சொல்கிறது. இவை இந்த நாய்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கே  புணர்வில் ஈடுபடும், குட்டி போட்டு பாதுகாக்கும் அல்லது ரேபிஸ் போன்ற கொடும் வைரஸ் வந்து அவதியுறும் நாய்கள் மக்களை கடிக்க முயல்கின்றன. இதில் இருந்து தப்பிக்க மக்கள் அவற்றின் மேல் கல்லடித்து விட்டு தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார்கள்.


தெரு நாய்கள் உலவுதற்கு மூல காரணம் மனிதனின் தோல்விதான். Stray dogs எனப்படும் ஆதரவற்ற நாய்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல ரேபிஸ்-ஸால் ஏற்படும் மரணங்களிலும் நமக்குத்தான் முதலிடம். மும்பையில் மட்டும் ஆண்டுக்கு 80,000 பேர் நாய்க் கடி படுகிறார்கள்; 20,000 பேர் ரேபிஸால் இறக்கிறார்கள். ரேபிஸ் வைரஸ் உருவானதே இந்தியாவில்தான் என்று சார்லஸ் ரெப்ரெக்ட், அட்லாண்டாவை சேர்ந்த Centers for Disease Control and Preventionன் தலைவர், குறிப்பிடுகிறார்.


இந்தியாவில் நமக்கு இருக்கும் பொதுவான கருணையின்மையால் வளர்ப்பு நாய்களாக வாங்கப்படும் ஜாதி நாய்களையும்  முக்கால் வாசி நேரம் சரியாக கவனிக்க முடியாமல் துரத்தி விடுகிறோம். அதே போல நாய் விற்பனையாளர்களும் விற்காத நாய்க் குட்டிகளை துரத்தி விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் தெரு நாய்களோடு சேர்ந்து உணவுக்கும் வாழ்வுக்கும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டு விடுகின்றன.


சில பேர் தெரு நாய்களை பிடித்து கும்பலாக கொல்வதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால் பிரச்சனை நாய்கள் அல்ல; நம் ஊர் குப்பைகள். நாய்களை கொன்று தீர்த்து விட்டால் எலிகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஏன் போயஸ் கார்டனிலோ போட் கிளப்பிலோ தெரு நாய்களை பார்க்க முடியவில்லை என்றால் அந்த சாலைகள் துப்புரவாக இருக்கின்றன. அங்கே நாய்களுக்கு பெரிய தீனி கிடைக்காது.


ஆகவே நம் சாலைகளின் துப்புரவுக்கும், நம்முடைய சுகாதாரத்துக்கும், நாய்களின் பிரச்சனையை தீர்ப்பது ஒரு முக்கியமான தேவை. ஒரு தேசம் என்கிற அளவில் நாம் ஓரளவு முன்னேறுவதற்கும் நம் சாலைகள் பாதுகாப்பானதாக ஆவதற்கும் நாய்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டும்.  இது பிராணிகள் மீதான கருணை என்கிற அளவில் மட்டுமே நிற்பதல்ல. மனிதர்கள் மீதான கவலையும் கூட. சும்மா ஏதோ நாய் மேல் ஒருத்தன் கல்லடிக்கிறான் என்பதன் பின்னணியில் ‘நாய்கள் / குப்பைகள் / ரேபிஸ் / சாலை பாதுகாப்பு / துர்மரணம்’ என்கிற ஒரு வட்டம் இருக்கிறது.


நாய்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. குப்பை இல்லா தெருக்களை உருவாக்குவது, தெரு நாய்கள் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் குறைக்கும் வழிகளை கண்டறிவது, பிராணிகள் மீதான மக்களின் அக்கறையின்மையை போக்கும் வழிகளை கண்டறிவது, என்று அவர்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.  


எனவே தலித் குழந்தைகளோடு செய்யப்பட்ட அந்த அருவருக்கத் தக்க ஒப்பீட்டை கொஞ்சம் ஒதுக்கி  விட்டுப் பார்த்தால் கூட ஜெனரல் விகே சிங் சொன்னது தவறு. நாய்கள் மீது அடிக்கப்படும் கல் உண்மையில் சமூகத்தின் மீதும் அதனை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் செயலின்மை மீதும் அடிக்கப்படும் கல்தான். அதற்கு தான் பொறுப்பல்ல என்று அரசு சொல்லவே முடியாது. அந்த அப்பாவி விலங்குகள் மேல் எறியப்படும் கற்களை தடுப்பதில் நம் சமுதாயத்துக்கும் நம் அரசுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

Tuesday 13 October 2015

விருதுகளும் கேள்விகளும்



சாஹித்ய அகாதெமி அலுவலகத்தின் அலமாரிக்கு திரும்ப வந்து கொண்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட இருக்கும் இந்நிலையில் அதனை கிண்டல் அடித்தும் விமர்சித்தும் நிறைய கருத்துக்கள் வலது சாரி சிந்தனையாளர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் பண்டிட்கள் தாக்கப் பட்ட போது ஏன் திருப்பவில்லை, ஸ்ரீலங்காவில் போர் மூண்ட போது ஏன் செய்யவில்லை என்கிற மாதிரி கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அந்தக் கேள்விகளை கொஞ்சம் அலசலாம் என்றிருக்கிறேன்.


முந்தைய பிரச்சனைகளில் நயன்தரா சஹ்கல் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியாது. நான் இங்கே சொல்லப் போவது என்னை முன் நிறுத்தி மட்டுமே. நான் ஒரு விருதை திருப்பி அதற்கு இந்தக் கேள்விகள் எழும் பட்சத்தில் என்ன பதில் சொல்வது என்று மட்டுமே இங்கே யோசிக்கிறேன். அவ்வளவுதான்.


முதலில் காஷ்மீரி பண்டிட்கள் விஷயத்தைப் பார்க்கலாம். அதனை ஒரு இந்திய அரசியல் கட்சி முன் நின்று நடத்தவில்லை. அது காஷ்மீர் வெறியர்கள் நடத்திய செயல். ஜியா உல் ஹக் பாகிஸ்தானில்  கொண்டு வந்த இஸ்லாமியமயம் காஷ்மீரையும் பாதித்தது. அதில் பண்டிட்கள் பெருமளவு பாதிக்கப் பட்டார்கள். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம்கள் இதற்கு எதிராகவே இருந்தார்கள். இன்றும் கூட மிதவாத பிரிவினை அமைப்புகள் பண்டிட்களை திரும்பவும் குடியேற அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். (1) இன்றும் அங்கே நிறைய பண்டிட்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பகுதியில் பஞ்சாயத்து தலைவியாக ஒரு பண்டிட் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. (2)


அது ஒரு புறம் இருக்க அதை யாரும் கேட்கவில்லை என்று சொல்லவே முடியாது. 1989க்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தை மத்திய அரசு மிகக் கடுமையாக அணுகியிருக்கிறது. 1989ல் அங்கே 36,000 ராணுவ வீரர்கள் இருந்தார்கள் . இன்று ஆறு லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். அதாவது 15 காஷ்மீரிகளுக்கு ஒரு வீரர் என்கிற மேனிக்கு காஷ்மீர் ராணுவமயமாகி இருக்கிறது. 'Most militarised civilian zone in the word' என்கிற பெருமையை காஷ்மீர் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.(3) அங்கே அமுலில் உள்ள AFSPA என்கிற சட்டத்தை எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. அங்கே ராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாரண்டே இல்லாமல் கைது செய்யலாம். சித்ரவதை பண்ணலாம். கொலை கூட பண்ணலாம். இதுவரை பல்லாயிர கணக்கான காஷ்மீரிகள் அந்த மாதிரி 'காணாமல்' போயிருக்கிறார்கள். அங்கே ‘அரை விதவைகள்’, Half Widows, என்கிற பதம் மிகப் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதாவது கணவனை ‘விசாரணைக்கு’ ராணுவம் அழைத்துக் கொண்டு போய் அவன் காணாமல் போய் திரும்பியே வராமல் போய் விடுவான். அந்தப் பெண் விதவையாகி விட்டாளா இல்லையா என்பது தெரியாமலே அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். (4) அப்படி நூற்றுக்கணக்கான அரை விதவைகள் அங்கே இருக்கிறார்கள். எனவே 1989க்குப் பின் சில ஆண்டுகள் நடந்த கலவரங்களுக்கான விலையை காஷ்மீர் மக்கள் இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பது பெரும் பொய். சொல்லப் போனால் காஷ்மீரில் நம் இந்திய அரசு செய்யும் அட்டூழியங்களை எதிர்த்து வேண்டுமானால் விருதை திருப்பித் தந்திருக்கலாம்.


அடுத்தது சீக்கியர் பிரச்சனை. அது இந்திரா காந்தி தன் சுய லாபத்துக்காக உருவாக்கியது. அதற்கு விலையாக தன் உயிரரையே கொடுத்தார். அவருக்குப் பிறகு அதுவும் பெருமளவு வன்முறையினாலேயே ஒடுக்கப் பட்டது. கேபிஎஸ் கில் பஞ்சாபில் பெரும் முயற்சிகள் செய்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த முயற்சிகளில் பெரும் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்கிற குற்றச் சாட்டுக்கள் இன்றளவும் தொடர்கின்றன.(5) அதுவுமின்றி இன்று வரை ராணுவம் புகுந்த ஒரே வழிபாட்டுத் தலம் சீக்கியர்களின் பொற்கோயில் என்கிற அவமான சின்னத்தை தாங்கியே அது நிற்கிறது. சீக்கியர் கலவரத்துக்கு சோனியா, மன்மோகன் ஆகியோர் பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது நயன்தரா சஹ்கல் அகாதெமி விருது வாங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்திரா காந்தியை பெரிதும் விமர்சித்தே வந்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.


அடுத்தது, இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள் பற்றி சொல்லப் பட்டது. அதையும் யாரும் கேட்கவில்லை என்பது சரியல்ல. அந்த மாதிரியான நிகழ்வுகளால் அந்த சமூகம் படும் கஷ்டம் சொல்லி மாளாது. நிறைய ஊர்களில் முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பதில் தொடங்கி அன்றாடம் நிறைய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். முக்கியமாக, undertrials என்று சொல்லப்படும், சிறைப்பிடிக்கப்பட்டு வெறும் விசாரணை நிலையில் மட்டுமே சிறையில் வாடும் மூன்று லட்சம் பேரில் 21 சதவிகிதம் பேர்  முஸ்லிம்கள். (6) தலித்/பழங்குடியினருக்கு அடுத்த இடம் இவர்களுக்குத்தான். அதிலும் இந்தக் கைதிகளில் 17 சதவிகிதம் பேர் மேல்தான்   குற்றம் நிரூபிக்கப் படுகிறது. அதாவது 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் அப்பாவிகள். எனவே, யாரோ பத்துப் பதினைந்து தீவிரவாதிகள் செய்யும் அநீதிகளுக்கு மொத்த சமூகமும் பெரும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆகவே இந்தப் பிரச்சனைகளில் யாருமே கேள்வி கேட்கவில்லை. எந்த நடவடிக்கையுமே வரவில்லை என்கிறவர்கள் ஒன்று விவரம் தெரியாதவர்கள், அல்லது பொய் சொல்பவர்கள்.


(இலங்கையில் நடந்த போரை எதிர்த்து ஏன் யாரும் விருதை திருப்பி அனுப்பவில்லை என்கிற ஒரு பதிவையும் பார்த்தேன். அது கொஞ்சம் குழப்பமாக இருந்தது.சரி, இலங்கை எழுத்தாளர்களைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று அந்தப் பதிவைக் கடந்து விட்டேன்!)


ஆனால் ‘இதைக் கேட்டார்களா?’, ‘அதைக் கேட்டார்களா?’ என்று முஸ்லிம்கள் மேல் குற்றம் சாட்டும் இவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பிடுவதே இல்லை.


முதல் விஷயம், சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) புத்தகம் ராஜீவ் அரசால் தடை செய்யப் பட்டது. கருத்து சுதந்திரத்துக்கு இந்தியாவில் அடிக்கப்பட்ட மிக முக்கியமான சாவுமணி அது. இன்று 'மாட்டுக்கறி சாப்பிடுவது என் உரிமை,' என்று கூக்குரல் விடும் நிறைய முஸ்லிம்கள் அன்று அந்தத் தடையை ஆதரித்து குரல் விடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் நபிகள் நாயகத்தை மிகவும் கண்ணியக் குறைவாக சித்தரித்திருந்தது என்பது உண்மைதான் எனினும் தங்கள் மதத்துக்கு ஒவ்வாத ஒரு புத்தகத்தை தேசம் முழுமைக்கும் தடை செய்ய வேண்டும், அதாவது  அதை மற்ற மதத்தவரும் படிக்கக் கூடாது என்று போராடியது முஸ்லிம் இயக்கத்தவர்கள் செய்த தவறு. முஸ்லிம்களில் நிறைய முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்தத் தடையை கண்டித்திருந்தாலும் அப்போது எழுந்த பெரும் கூக்குரல்களில் அவர்களின் குரல்கள் அடிபட்டுப் போய் விட்டன. அதிலும் முற்போக்குவாதியான குஷ்வந்த் சிங் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதலாமவர்.(7)


ஆனால் ருஷ்டி சம்பவம் உலகளாவிய பிரச்சனையாக மாறிய ஒன்று. அப்போது மும்பையில் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். அந்த நாவலை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்தவர் குத்திக் கொல்லப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் ஆயதொல்லா கொமேனியின் ஆணையை சிரமேற்கொண்டு ருஷ்டியை கொல்ல நிறைய பேர் அவரைத் தேடி அலையோ அலை என்று அலைந்தார்கள். (8)


இரண்டாவது, ஷா பானோ வழக்கு. கணவனால் விவாகரத்து செய்யப் பட்ட ஷா பானோ ஜீவனாம்சம் கோரி கோர்ட்டுக்கு சென்றார். ஹை கோர்ட்டில் அவர் வெற்றி பெறவே அவர் கணவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். அங்கும் ஷா பானோ வெற்றி பெற்று விடவே பிரச்சனை பெரிதானது. விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய ஷரியா சட்டப்பட்டி விவாகரத்து நடந்து 90 நாட்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் கொடுத்தால் போதுமானது. இதனை சுட்டிக் காட்டி முஸ்லிம்கள் தேசமெங்கும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் பயந்து போன மத்திய அரசு அந்த ஷரியா சட்டத்தை உள்ளடக்கி புதிய சட்டம் ஒன்றை இயற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியாவில் இருந்த எல்லா முஸ்லிம் பெண்களின் உரிமையும் ஒரே நாளில் சட்ட ரீதியாக பறிக்கப் பட்டது. இதனை எதிர்த்து எந்த எழுத்தாளரும் பிரச்சனை பண்ணவில்லை. சொல்லப் போனால் வினோத் மேத்தா போன்ற கருத்து சுதந்திர காவலர்கள் இந்த புதிய சட்டத்தை வரவேற்று ‘இதன் மூலம் முஸ்லிம்கள் கலவரத்தை நிறுத்துவார்கள் என்றால் இந்த சட்டம் வருவதில் தவறில்லை’ என்றே எழுதினார். (9)


என்னைக் கேட்டால் ஸல்மான் ருஷ்டி மற்றும் ஷா பானோ வழக்கு இந்த இரண்டும்தான் செக்யூலரிசம் பலவீனமடைய காரணமாக இருந்தவை. இந்த இரண்டு விஷயங்களில் கோபமுற்றிருந்த ஹிந்துத்வா இயக்கங்களை மனம் குளிர்விக்க வேண்டி அயோத்தியில் பாபர் மசூதியை ராமர் பூஜைக்காக ராஜீவ் காந்தி திறந்து கொடுத்தார். அதன் பிறகு நடந்ததை நாடறியும். அதற்குப் பிறகு ஹிந்துத்வவாதிகள் தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்கள், சினிமாக்கள், டிவி சீரியல்கள் போன்றவற்றை தடை செய்யக் கோரும் போதெல்லாம் அவர்களுக்கு வசதியாக ருஷ்டி சம்பவம் பயன்பட்டது.


ஆனால் ஒன்று. இவை எல்லாவற்றையும் விட இன்று நடக்கும் சமாச்சாரங்கள் மிக மோசமானவை. ஏனெனில் இன்றைய பிரச்சனை என்னவென்றால் மத்திய அரசே முன் நின்று ஹிந்துத்வா சிந்தனைகளை, அதன் அடிப்படையற்ற தாத்பரியங்களை பரப்பும் பெருமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான். இங்கே சிறுபான்மையினரின் தேசபக்தி அதிகம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறைகள் மீது தொடர்ந்து சிந்தனாவாத தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கூடவே ஹிந்து மதத்தின் பன்முக படிவங்கள் ஒடுக்கப் பட்டு ஹிந்துத்வவாதிகள் மனதில் மட்டுமே இருக்கும் ஒரு கற்பனையான ஹிந்து மதம் நடை முறைப் படுத்தப்படும் முயற்சிகள் அரங்கேறுகின்றன. பாடப் புத்தகங்கள் ‘சுத்திகரிக்கப்’ படுகின்றன. வரலாறு ‘சுத்தம்’ பண்ணப் படுகிறது. பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகர்கள் மீது மிரட்டல்கள் விடப்படுகின்றன. நம் பண்டைய வரலாறு பற்றிய கற்பனையான விஷயங்கள் புகுத்தப் படுகின்றன. ஹிந்து அரசர்கள் ஹீரோக்களாகவும் இஸ்லாமிய அரசர்கள் வில்லன்களாகவும் மாற்றப் பட்டு வருகின்றனர்.


இவை எல்லாமே பாகிஸ்தானில் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் நிகழ்ந்தவை. அப்போது பாக் அதிபராக பொறுப்பேற்ற ஜியா உல் ஹக் அங்கே இஸ்லாமியவாதத்தை கொண்டு வந்தார். ஷரியா விதிகளை சட்டங்களாக்கினார். பாடப் புத்தகங்களை இஸ்லாம் மயமாக்கினார். இன்று பாகிஸ்தானில் பெரும்பான்மை இளைஞர்கள் இந்தியாவை வெறுக்கும் மனநிலையில் இருப்பதற்கும் இஸ்லாமிய தீவிரவாதம் அங்கே பெருகியதற்கும் ஜியா உல் ஹக்கின் இந்த முயற்சிகள்தான் காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். (10)


அதே மாதிரியான முயற்சிகள் இங்கே ஆரம்பித்திருக்கின்றன. மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்களே இப்படி நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார்கள். முக்கியமான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களுக்கு தகுதியே இல்லாத ஹிந்துத்வா அபிமானிகள் தலைவர்களாக நியமிக்கப் பட்டு வருகிறார்கள் (11) இந்த விஷயங்களை விளக்கவோ, இந்த குறுந் தலைவர்களை கண்டிக்கவோ, அல்லது இவர்களால் நமக்கு வரும் கவலைகளை போக்கவோ ஓரிரு வார்த்தைகளையாவது சொல்ல பிரதமர் தயாராக இல்லை. ஹிந்துத்வவாதம் சம்பந்தமாக அவரிடம் இருந்து கனத்த மவுனம்தான் நமக்கு கிடைக்கிறது. உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் நடிகர்கள் வரை எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்களில் நிறைந்து கிடக்கும் நம் பிரதமர் இதுவரை இந்த எந்த விஷயத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு ட்விட்டர் கூட பதியவில்லை. இதைப் பார்க்கும் போது அவரின் சம்மதம் அல்லது ஆசியுடனேயே இவை எல்லாம் நடக்கின்றன என்றுதான் கருத  வேண்டி இருக்கிறது.


இதற்கு எதிராக பெருமளவிலான உரத்த குரல்கள் தேவைப்படுகின்றன. மனம் நொந்து விருதுகளை திருப்பி அனுப்பும் எழுத்தாளர்களின் ஈனக் குரல்கள்தான் இப்போதைக்கு ஒலித்து வருகின்றன. அவை கிண்டல்களாலும் கேலிகளாலும் அலட்சியப் படுத்தப் படுகின்றன. ‘விருது சரி, வாங்கிய பணத்தை கொடுத்தியா?’ என்று எக்காளங்கள் கேட்கின்றன.


இந்த வழியிலேயே இவர்களை போக விட்டால் இவர்கள் ஒரு ஹிந்து தேசத்தை கட்டமைக்காமல் நிறுத்த மாட்டார்கள். ஹிந்து தேசம் என்பது உண்மையில் ஒரு நரக உலகம்தான். தங்களுக்கென ஒரு இஸ்லாமிய தேசம் அமைத்து நரகத்தில் உழலும் பாகிஸ்தானுக்கு போட்டியாக இவர்கள் உருவாக்கும் ஹிந்து நரகம்தான் அது. இப்போதைக்கு அந்த நரகத்துக்கு கடைக்கால்கள் நடப்பட்டு வருகின்றன. நாம் யாரும் கண்டுகொள்ளாமல் போனால் கூடிய விரைவில் நரகத்தின் திறப்பு விழாவிற்கு நமக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்படும்.


References:
---
1) Separatists ask Pandits to return: http://goo.gl/qL9NUR
2) Kashmiri Pandit woman wins Panchayat poll: http://goo.gl/2ZHVX5
3) Most Militarised Zone: https://goo.gl/Nj2lHo
4) Kashmir's Half Widows: http://goo.gl/IpEfeT
5) Punjab Counterinsurgency: http://goo.gl/2tJzCP
6) Undertrials: http://goo.gl/GCRSJf
7) Satanic Verses Controversy: http://goo.gl/47wsuL
8) Salman Rushdie's run for his life is depicted in his autobiography Joseph Anton
9) Mehta supporting  Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986: From the book 'Mr Editor, How Close are you to the PM?' by Vinod Mehta
10) Jia and his Islamisation: From the book 'Pakistan: Eye of the Storm' by Owen Bennett Jones
11) On NDA's academic appointments: http://goo.gl/zNcba1



Saturday 1 August 2015

சசி பெருமாள்


மதுவிலக்குக்கு ஆதரவாக போராடிய சசி பெருமாள் இறந்திருப்பது மதுவிலக்கு ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா என்கிற அளவுக்கு பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. தமிழகத்தில் நிலவும் அதீத சூழலால் உண்மை என்ன என்பது கடைசி வரை நமக்கு தெரியாமலே போகும் வாய்ப்புகள்தான் இருக்கின்றன.


அது ஒரு புறம் இருக்க சசி பெருமாள் மொபைல் டவர் மேல் ஏறி போராடப் போவது அதிகாரிகளுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வாங்கினாரா, அல்லது வாங்கவாவது முயற்சித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரை ‘காந்தியவாதி’ என்று விளிக்கின்றனர். சொல்லாமல் கொள்ளாமல் தீவிரமான போராட்டங்களை காந்தி என்றுமே மேற்கொண்டதில்லை. முதலில் அரசுக்கு கடிதங்கள், petitionகள், அரசுடன் பேச்சுவார்த்தைகள், பின்னர் நீதிமன்றம் மூலமான முயற்சிகள், பின்னர் அதுவும் பலிக்காமல் போனால்தான் போராட்டம் என்பது அவரின் template ஆகவே இருந்தது. அதுவும் அந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு, இங்கே, இந்த நாளில் போராட்டம் நடக்கப் போகிறது, இத்தனை பேர் வரை கலந்து கொள்ளப் போகிறோம், போராட்டத்தின் வடிவம் இது என்பதை எல்லாம் தெளிவாக விளக்கி, அனுமதி கிடைத்தால் சட்டபூர்வ போராட்டம் அதுவும் கிடைக்காமல் போனால்தான் சட்ட மீறல் போராட்டம் என்கிற ஒரு systematic approachஐ காந்தி எப்போதுமே பின்பற்றினார். ‘காந்தியவாதியான’ சசி பெருமாள் இதை எல்லாம் செய்தாரா என்று தெரியவில்லை. அவரின் உதவியாளரின் பேட்டியின் படி பார்த்தால் அவர் தீக்குளிக்கும், அல்லது அப்படி மிரட்டி அதிகாரிகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தோடுதான் சென்றிருக்கிறார் என்று தெரிகிறது. இது காந்திய வழியே அல்ல. இன்னும் சொல்லப் போனால் plain blackmail. இதைக் கேட்டால் காந்தி மிகவும் முகம் சுளித்திருப்பார்.


தவிர, மதுவிலக்கு என்கிற ஒரு மிக முக்கியமான விஷயத்தை சும்மா டவர் மேல் ஏறி தீக்குளிப்பு என்கிற மாதிரி பயமுறுத்தி எல்லாம் கொண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் நாகாலாந்து, மணிப்பூர், குஜராத், லக்ஷத்வீப் போன்ற இடங்களில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமுலில் இருக்கிறது. குஜராத் போன்ற இடங்களில் கூட அதனை அமுல்படுத்த பெரிய முயற்சிகள் எல்லாம் அரசுகளால் எடுக்கப் படுவதில்லை. உலகெங்கிலும் தீவிரமான தண்டனைகளை வழங்கும், ஜனநாயகம் இல்லாத, இஸ்லாமிய தேசங்கள் தவிர பிற எந்த இடத்திலும் மதுவிலக்கு அமுலில் இல்லை, அல்லது அமுல்படுத்த முயற்சித்த சமயங்களில் பெரும் தோல்விகளையே சந்தித்திருக்கிறது.


‘மது அரக்கன்’ என்று அழைக்கப் படும் பிரச்சனையை அணுகுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான போதை விடுதலை மையங்கள் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும்தான் தேவை என்று நான் நிறைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். கூடவே விளிம்பு நிலை மக்கள் மதுவில் வீழ்வதற்கு காரணமாக இங்கே இருக்கும் சமூக அவலங்களை களையும் முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மேலும் நிறையப் பேர் மதுவுக்கு அடிமையாக இருப்பதற்கு clinical depression, post traumatic disorder, stress disorder போன்ற உளவியல் நோய்கள் காரணமாக இருக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து மருத்துவம் கொடுத்தாலே அவர்களை மதுவில் இருந்து விடுவிக்கலாம். இந்த மாதிரி எந்த முயற்சியும் எடுக்காமல் மதுவிலக்கு கொண்டு வருவது இப்போது இருப்பதை விட நிலைமையை இன்னும் மோசமாக்கும்.


மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் சசி பெருமாள் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காந்தி மேல் கொண்ட கண்மூடித்தனமான பற்றால் அவர் மதுவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். இப்போது நேர்ந்த அந்த துர்மரணத்தாலும் அதற்கு கிடைக்கும் விளம்பரத்தாலும் தியாகியாகக்கூட  போற்றப் படலாம். ஆனால் இந்த மாதிரி சிந்தனைகளை ஊக்குவிப்பது பெரும் தீங்கில் நம்மை கொண்டு விடும் என்று நினைக்கிறேன். எனவே சசி பெருமாளை தியாகியாக ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஏற்கெனெவே மூன்று நான்கு பேர் மொபைல் டவர் மேல் ஏறி இருக்கிறார்கள். இன்னும் சிலர் பெட்ரோல் கேனை தூக்கிக் கொண்டு கிளம்பக் கூடும். இவற்றை எல்லாம் காந்தியப் போராட்டம் என்று நம்பி நாமும் கை தட்டி, நிதி உதவி கொடுத்து ஊக்குவிக்கக் கூடும்.


இவற்றால் எல்லாம் மதுப் பிரச்சனை தீராவே தீராது என்று உறுதியாக நம்புகிறேன். உணர்ச்சி வசப்படுபவர்களால் மதுப் பிரச்சனை தீர்க்கப் படவே முடியாது. அதற்கு முதலில் சசி பெருமாள் தலைக்கு பின்னால் உள்ள ஒளி வட்டத்தை கழற்றி விட்டு அவர் சீடர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும். மது கொள்முதலையும் வியாபாரத்தையும் தனியார் வசம் விட்டு விட்டு மதுவை விட்டு அரசையும் அரசியல் கட்சிகளையும் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் மதுவின் பின்னால் உள்ள சமூகப் பிரச்சனைகளை களைய அரசை நெருக்க வேண்டும். நமக்கு தெரிந்த மதுவுக்கு அடிமையான ஆட்களுக்கு உளவியல் ரீதியான ட்ரீட்மென்ட் கொடுக்க முயல வேண்டும். கடைசியாக, சமூக ரீதியாக விளிம்பு நிலை மக்கள் படும் discriminationகளை அறிந்து அதனை களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். (இதனைப் பற்றி ஒரு தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.)


இந்த மாதிரி இல்லாமல் போகிறவர் வருகிறவர் எல்லாரையும் காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் காந்தியை அவமதிப்பதோடு இல்லாமல் பிரச்சனையும் மோசமாக்குவதற்கும் சேர்த்து நாம் உதவுகிறோம் என்பது மட்டும் நிச்சயம்.

மதுவிலக்கு பற்றிய என் முந்தைய பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள்:
http://goo.gl/pS66OJ

Saturday 25 July 2015

அடைபடும் இந்திய சிந்தனை வளங்கள்

by ராமச்சந்திர குஹா
=================================================


முதன் முதலில் காங்கிரஸ் தலைமையில் யூபிஏ அரசு 2004ல் வந்த போது மூத்த அமைச்சர் ஒருவர் ஒரு மூத்த பத்திரிகையாளரை லஞ்ச் சந்திப்புக்கு அழைத்திருந்தார். மிகவும் மரியாதை வாய்ந்த வரலாற்று ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பதவி ஒன்று காலியாக இருந்தது; அதற்கு தகுந்த நபர்களை அந்த அமைச்சர் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பத்திரிகையாளர் பரிந்துரைத்த முதல் பெயர் என்னுடையது. ‘குஹாவா? அவர் இந்திராஜி-யை  பெரிதும் விமர்சித்திருக்கிறாரே,’ என்றார் அந்த அமைச்சர். ‘அவரை நியமிக்க இயலாதே!’

அந்த பத்திரிகையாளர் சொன்ன அடுத்த பெயர்: பார்த்தா சாட்டர்ஜி, மிகவும் திறமை வாய்ந்த அரசியலியல் அறிஞர். ‘ஆனால் சாட்டர்ஜி நேருவைப் பற்றி விமர்சனங்களை செய்திருக்கிறாரே,’ என்றார் அந்த அமைச்சர்.’அவரையும் நியமிக்க முடியாதே.’

இது வேலைக்காகாது என்று அந்த பத்திரிகையாளர் கவனத்தை திருப்பி மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்றைக்கு ஏதோ மோடி அரசுதான் கல்வி மற்றும் ஆராய்ச்சி  பதவிகளுக்கு அரசியல் ரீதியாக ஆட்களை நியமிக்கிறார்கள் என்கிற ரீதியில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தாலும் அவர்களும் தங்கள் ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நியமித்திருக்கிறார்கள். இரண்டாவது காரணம்: மற்ற விஷயங்களில் எப்படியோ, ஆனால் காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்ந்த அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் படிக்கிறார்கள்! (அப்படி படிப்பது அவர்கள் கட்சியின் முதன்மைக்  குடும்பத்தைப் பற்றி என்ன விமர்சனங்கள் எழுதப் படுகின்றன என்று தெரிந்து கொள்வதற்காகவே இருந்தாலும் கூட, அது பரவாயில்லைதானே.)

ஆனால் இந்த மாதிரி நியமனங்கள் எல்லாம் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடப்பதுதான். கலாசார மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் சுதந்திரத் தன்மையை பாதிக்கும் வேலைகளை அப்போதே மத்திய அரசு செய்யத் துவங்கி விட்டது. முக்கியமாக காங்கிரசைச் சேர்ந்த இரண்டு கல்வி அமைச்சர்கள், நூருல் ஹசன் மற்றும் அர்ஜுன் சிங் இருவரும் சோஷலிச மற்றும் மார்க்ஸிய சிந்தனைகள் மட்டுமே கொண்ட அறிஞர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கினார்கள்.

ஆனால் ஒன்று, இவர்கள் இருவரும் இருப்பதிலேயே சிறந்த அறிஞர்களை நியமித்தார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் இருப்பதிலேயே மோசமானவர்களை நியமிக்கவில்லை. ஆனால் பிஜேபி தலைமையில் நடக்கும் இந்த என்டிஏ ஆட்சியில் நியமித்த ஆட்கள் அவர்கள் துறைகளில் உள்ள மற்றவர்களால் நிசமாகவே வெறுக்கப் படுகிறவர்கள். இதில் இருப்பதிலேயே அதிர்ச்சிகரமான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒய் சுதர்ஷன் ராவை குறிப்பிடலாம். இவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுத் துறையின் (ICHR) சேர்மனாக சமீபத்தில் நியமிக்கப் பட்டார். இவர் வரலாற்றில் என்ன ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார், எந்த புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார் என்பனவெல்லாம் சக வரலாற்று அறிஞர்களுக்கு கூட தெரியாத விஷயம்; அதே போல கஜேந்திர சௌஹான் என்பவர், இந்திய திரைப்பட மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் (FTII) சேர்மனாக நியமிக்கப் பட்டவர், இவரும் இந்தத் துறைகளில் செய்த சாதனைகள் என்று சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லை.

1998 முதல் 2004 வரை நடந்த முந்தைய பிஜேபி ஆட்சியிலும் கூட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளே நியமிக்கப் பட்டார்கள். ஆனால் மிகவும் மரியாதைக்குரிய பதவிகளுக்கான நியமனங்களில் மட்டும் கொஞ்சமாவது சம்பந்தப் பட்டவரின் அறிஞத்திறமையை (scholarly credentials)  பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்கள். வாஜ்பாய் அரசில் இந்திய மேம்பட்ட ஆய்வுகள் (Indian Institute of Advanced Studies) நிறுவனத்துக்கு சேர்மனாக சிஜி பாண்டே நியமிக்கப் பட்டார். இவர் பண்டைய இந்தியா பற்றி மிக முக்கியமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். ICHRன் சேர்மனாக நவீன வரலாற்று அறிஞர் எம்ஜிஎஸ் நாராயணன் நியமிக்கப் பட்டார். இந்திய சமூகவியல் ஆய்வுக் கழகத்தின் (ICSSR) சேர்மனாக முன்னாள் தூதராக இருந்து பின் கல்வியாளராக மாறிய எம்.எல். சோந்தி நியமிக்கப் பட்டார்.

இந்த அறிஞர்கள் யாருமே மார்க்சிஸ சிந்தனை கொண்டவர்கள் இல்லை. அதுவும் இதில் இரண்டு பேர் வெளிப்படையாகவே மார்க்ஸியவாதிகளை எதிர்த்தவர்கள் என்பது பிஜேபிக்கு முக்கியமான தகுதியாக இருந்திருக்கிறது.  ஒன்றும் ஆச்சரியமில்லை. விஷயம் என்னவென்றால் பாண்டே மற்றும் நாராயணன் இருவருமே தங்கள் துறைகளில் மிகத் தீவிரமக இயங்கும்  அறிஞர்கள். சோந்தியோ தேசத்தின் மிக முக்கியமான சர்வதேச ஆய்வுத் துறையில் ப்ரொபசர்-ஆக இருந்திருக்கிறார்.

கால ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் முன்னால் போவோம். தேவே கவுடா பிரதராகவும் எஸ் ஆர் பொம்மை கல்வி அமைச்சராகவும் இருந்த போது ICHR சேர்மனாக எஸ். செட்டரும் ICSSR தலைவராக டி. நஞ்சுண்டப்பா-வும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் இருவருமே கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது வேறு விஷயம், ஆனால் செட்டர் ஹொய்சாலா கோவில்கள் பற்றி மிகவும் தனித் துவமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர். நஞ்சுண்டப்பா புகழ் பெற்ற ஒரு ஆசிரியர் என்பது மட்டுமின்றி பொதுக் கொள்கை வடிவமைப்புகளில் மிகத் தீவிரமாக பங்களித்தவர்.

மேற்சொன்ன விஷயங்கள் மூன்று விஷயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் போன்ற விஷயங்கள் கல்வி மற்றும் கலாச்சார நியமனங்களை ஆட்டுவிக்கின்றன. இரண்டு, முந்தைய அரசுகள் தங்கள் கொள்கை மற்றும் சிந்தனைக்கு வேண்டிய ஆட்களுக்கு பதவிகள் கொடுத்தாலும், அவர்கள் மக்கள் மன்றத்தின் முன் மரியாதை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அளவுக்காவது குறைந்த பட்சம் யோசித்திருக்கின்றனர்.

மூன்றாவது, இப்போது இருக்கும் என்டிஏ அரசு அப்படிப்பட்ட குறைந்த பட்ச மரியாதையைக் கூட காற்றில் பறக்க விட்டு விட்டது.

இந்த மூன்றாவது விஷயம்தான் இப்போது நடக்கும் நியமனங்களை முடிவு செய்கிறது. அந்த மாதிரியான இன்னொரு நியமனம், தேசிய புத்தக கழகத்தின் (NBT)  சேர்மனாக பல்தேவ் ஷர்மா நியமிக்கப் பட்டிருப்பது. இவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகார பூர்வ பத்திரிகையான பாஞ்சஜன்யா-வுக்கு கொஞ்ச காலம் ஆசிரியராக இருந்தார் என்பதைத் தவிர இலக்கியத்துக்கோ ஆராய்ச்சிக்கோ அவரின் பங்களிப்பு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

முன்பு NBT-க்கு சேர்மனாக இருந்தவர்கள் பெயரை இவரோடு ஒப்பிட்டுப்  பார்ப்போம்: வரலாற்றறிஞர் சர்வபள்ளி கோபால், விமர்சகர் சுகுமார் அழிக்கொட், எழுத்தாளர் யு ஆர் அனந்த மூர்த்தி. இவர்கள் எல்லாருமே கொஞ்சம் இடது சாரி சிந்தனை உடையவர்கள்தான், ஆயினும் அவர்களின் புத்தகங்கள் பரவலாக படிக்கப் பட்டு, பேசப்பட்டு விவாதிக்கப் பட்டவை.

இப்போதைய என்டிஏ ஆட்சி இந்த விஷயத்தில் முந்தைய என்டிஏ ஆட்சியை விட மகா மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? மூன்று காரணங்கள் சொல்லலாம். ஒன்று, வாஜ்பாய் அரசில் இருந்த சில அமைச்சர்கள் ஆய்வரிஞர்களுடனும், அறிவு ஜீவி-களுடனும் ஓரளவுக்கு தொடர்பில் இருந்தார்கள். இன்றைய அரசுக்கு அப்படிப்பட எந்த தொடர்பும் இல்லை. இரண்டாவது, குஜராத்தின் முதல்வராக இருந்த போதே கூட நரேந்திர மோடிக்கு அறிவு ஜீவிகளிடமும் கலாச்சார சிந்தனையாளர்களிடமும் பெரிய மரியாதையே இருந்ததில்லை. அப்போது குஜராத்தில் இருந்த நிலை இப்போது  மத்திய அரசுக்கு இடம் மாறி விட்டிருக்கிறது, அவ்வளவுதான். மூன்றாவது, இந்த மாதிரி சமூக, வரலாற்று மற்றும் கலாசார ஆய்வுகள் சம்பந்தப் பட்ட வேலைகளை மொத்தமாக ஆர்எஸ்எஸ்-ஸிடம் மோடி தத்துக் கொடுத்து விட்டார். ஆகவே அந்த விஷயங்களில் அவர் தலையிடுவது இல்லை. அவருக்குப் பிடித்த பொருளாதாரம் மற்றும் அயலுறவுக் கொள்கை விஷயங்களில் அவர்கள் தலையிடக் கூடாது அல்லவா?

காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அரசு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்களை மிகத் துச்சமாக மதிக்கிறது என்பதுதான் நடப்பு நிலை.இந்தத் துறைகளில் அவர்கள் நியமித்த ஆட்களைப் பார்க்கும் போது இந்த சோகமான முடிவுக்குத்தான் வேறு வழியில்லாமல் வர வேண்டி இருக்கிறது.

===

(இந்தக் கட்டுரையை புகழ் பெற்ற வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதி இருந்தார். இதனை அவர் அனுமதியுடன் நான் மொழி பெயர்த்து இங்கே p.)

Thursday 16 July 2015

பாகுபலி


இந்தப் படத்தை யோசித்த போதே எஸ் எஸ் ராஜமவுலி இதனை ஒரு மாபெரும் வரலாற்றுக் காவியமாகவே உருவாக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார். இது கண்களுக்கு பெரும் விருந்தாக அமைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தப் போகிறோம் என்பதில் தெளிவாகவே இருந்திருக்கிறார். எண்ணிய போலவே அது நன்றாகவே நடந்தேறி இருக்கிறது. பாகுபலி திறமையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட காட்சி விருந்து. ஆமாம், ஆமாம், ராஜமவுலி  கண்டிப்பாக அவதார், 300, லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் எல்லாம்  பார்த்திருக்கிறார்தான். ஆனால் இதை எல்லாம் நாம் எல்லோருமேதானே பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் அளவுக்கு உள்ளூர் ருசியுடன் பரிமாற நிறையப் பேரால் முடியவில்லையே. ஒரு டிவி சீரியல் போல கிராஃபிக்ஸ் போட்ட தசாவதாரத்தை பார்த்தோம். ஆசை காட்டி மோசம் பண்ணின கோச்சடையான் பார்த்தோம். அப்படித்தானே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது! சொல்லப் போனால் கோச்சடையான் ஒரு பாகுபலி-யாக இருந்திருக்க வேண்டியது. ஒரு தெலுங்கு இயக்குனர், பெரிய ஸ்டார் நடிகரே இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பட்ஜெட்-டை பெற முடியும் என்றால் ரஜினி, ரஹ்மான் போன்றவர்களை வைத்து எப்படியெல்லாம் செய்திருக்க இயலும்!


நிற்க. இது கோச்சடையான் பற்றிய விமர்சனம் அல்ல. பாகுபலி பற்றியது. சொல்ல வந்தது என்னவென்றால் எங்கெல்லாம் கோச்சடையான் கோட்டை விட்டாரோ அங்கெல்லாம் பாகுபலி பெருமிதத்துடன் வென்று காட்டி இருக்கிறார். ஓரிரு இடங்கள் தவிர வேறெங்கிலும் நம்மால் கிராஃபிக்ஸ்ஸை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உண்மைக் காட்சியும் கிராஃபிக்ஸ்ஸும் இயைந்து இணைந்து ஒரு இசை போல இயங்குகின்றன. ராஜமவுலி எதிர்பார்த்த பிரம்மாண்டம் பிரேமுக்கு பிரேம் தெளிவாக உருவெடுக்கிறது. நம்மையே அறியாமல் நாம் கண்கள் விரிய காட்சிகளை உள்வாங்குகிறோம். அந்த நீர் வீழ்ச்சிகளை நாம் அவதாரில் பார்த்திருக்கிறோம். கோட்டை கொத்தளங்களை லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்-ல் பார்த்திருக்கிறோம். 120 அடி சிலைகளை லாஸ்ட், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்-ல் எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பாகுபலி-யில் பார்க்கும் போது அவை புது உருவம் எடுக்கின்றன. அந்த நீர் வீழ்ச்சியே ஒரு பாத்திரமாக மாறுகிறது. அந்த சிலை கலோசஸ் ஆஃப் ரோட்ஸ் மாதிரியான கிரேக்க மிரட்டல் விடுக்கிறது.


அதே போல அந்த பனிச் சரிவுகளையும் முன்பே பார்த்திருக்கிறோம். இங்கே அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அதையும் சந்தோஷமாகவே பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக அந்த இறுதிப் போர், சுமார் 40 நிமிடங்கள் ஓடுகிறது. நமக்கு அது பற்றிய சிந்தனையே இல்லாமல் போரில் மூழ்கிப் போகிறோம். அதில் காட்சியின் பிரம்மாண்டம் மற்றும் காரணம் அல்ல. அந்தப் போரில் ஈடுபட்ட  பாத்திரங்களோடு நாம் ஒன்றியதால் வந்த விளைவு அது.


இந்த காவியத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை திரைக்கதை அமைப்புதான். கதை வழக்கமான ராஜா ராணி கதைதான். அந்த கிரேக்க பிரம்மாண்டத்துக்கு அடியில் எட்டிப் பார்த்தால் நம் வழக்கமான தெலுங்கு படம்தான். ஹீரோயின் உடை களையப் பட்டு மழையில் நனைவிக்கப் படுகிறாள். ஹீரோ யாராலும் தோற்கடிக்க இயலாமல் எங்கு தேவைப் படினும் அங்கு வந்து காப்பாற்றுகிறான். ஏன், ஒரு ஐட்டம் பாடல் கூட இருக்கிறது. அதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் சில வெகு அடிப்படையான திரைக் கதை தவறுகள் படத்தில் இருக்கின்றன. சில பாத்திரங்கள் திடீரென தோன்றுகின்றன. சில காட்சிகள் திடீரென உருவெடுக்கின்றன. அவை ஏன் நடக்கின்றன என்பது வேறு ஒரு பாத்திரம்  ‘விளக்கிய’ பிறகுதான் புரிகிறது. இதெல்லாம் ராஜமவுலி ‘கண்டுக்காதது’ கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை தன் விமர்சனத்தில் ‘ராஜமவுலி ஒரு பிரம்மாண்ட வரலாற்றுக் காவியத்துக்கு தேவையான எல்லா விஷயங்களையும் ஒரு லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டு டிக் அடித்துக் கொண்டே வருகிறார்.’ என்று கூறியிருக்கிறது. மாபெரும் நீர்வீழ்ச்சி - டிக், காட்டு விலங்குகளோடு சண்டை - டிக், பனி  மலையில் சரிவு - டிக், மிக உயரமான கிரேக்க சிலை - டிக், அடிமைகள் - டிக், இறுதிப் போர் - டிக்.

ஆனால் இவ்வளவு செய்தவர் திரைக் கதை விஷயங்களுக்கு ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டிருந்தாரா என்ற கேள்வி எனக்கு எழுந்தது. ஆனால் என்ன, அந்தக் கேள்விகள் எல்லாம் திரைக் கலை விற்பன்னர்களுக்கு தான் தேவை. எழுத்தில் வந்த குறைகளை காட்சியில் மொத்தமாக சரிக் கட்டி விட்டார். ஸ்க்ரீன் சைஸ் பத்தவில்லையே என்று யோசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட செட்-கள் என்று காட்சிக்கு காட்சி மலைக்க வைக்கிறார். சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என்று இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க, சாபு சிறில் ஒவ்வொரு செட்-டையும் பார்த்து பார்த்து வடிக்க ஒரு பைபிள் காவிய அனுபவத்தை ராஜமவுலி நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒரு பெரிய பட்ஜட் படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு புது இலக்கணத்தை பாகுபலி இந்தியாவுக்கு தந்திருக்கிறது. படம் ஒரு பெரும் சஸ்பென்ஸில் முடியும் போது அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஏங்க வைத்து விட்டார். அந்த சஸ்பென்ஸே தேவை இல்லாமலே நாம் அடுத்த பாகத்துக்கு ஏங்குவோம். அந்த நீர் வீழ்ச்சியை மீண்டும் காண வேண்டும், அந்த கோட்டையை மீண்டும் காண வேண்டும், சிவா-அவந்திகா இடையில் உருப் பெரும் அந்தக் காதலை மீண்டும் காண வேண்டும். பாகம் 2-க்கு எல்லாம் காத்திருக்க முடியாது. பாகம் 1-ஏ திரும்ப பார்க்க வேண்டியதுதான்.

Monday 22 June 2015

யோகா



யோகா இன்றைக்கு மிகப் பெரிய வணிக நிறுவனமாகி விட்டது. அமெரிக்காவில் மட்டுமே இன்றைய தேதிக்கு ஒன்றரைக் கோடிப் பேர் யோகா பயில்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இன்று உலக யோகா தினம் கொண்டாடப் படுகையில் டெல்லி இந்தியா கேட் அருகே பிரதமரே கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் யோகப் பயிற்சிக் கூட்டம் கின்னஸ் சாதனை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறது.

இந்த உலக யோகா தினத்துக்கு போவதில் கொஞ்சம் பிரச்சனைகளும் இல்லாமலில்லை. மத்திய அரசு பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் யோகா செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் இருந்து கொஞ்சம் எதிர்ப்பு எழுந்து, யோகா ஹிந்து மதத்தை சேர்ந்ததா இல்லையா என்பதில் கொஞ்சம் விவாதங்கள் நடந்து, யோகா எத்தனை புராதனமானது, எவ்வளவு புனிதமானது என்கிற அளவுக்கு போயிருக்கிறது. குறிப்பாக மத்திய தர முன்னேறிய சாதியினர் ‘யோகா பற்றி தவறாக பேசினால் கையை ஒடிப்பேன்,’ என்று பாயத் துவங்கி விட்டனர்.

ஆகவே யோகா-வின் பழைமை வரலாறு பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று யோசித்தேன்.

சிலர் யோகா சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் (கிமு 3500). அங்கே கிடைத்த சில சித்திரங்களில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் உருவங்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கின்றன என்பது மட்டுமே இதற்கு ஆதாரம். அது நம் இந்தியர்கள் சாதாரணமாக அமரும் நிலைதான் என்பது ஒருபுறம் இருக்க இந்த தியரி ஒரு ஆதார தவறை செய்கிறது. அதாவது யோகா என்பது ‘ஆசனங்கள்’ மட்டுமே என்கிற சிந்தனையின் பேரில் வரும் தியரி இது. யோகா என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமே என்கிற நிலை வந்தது 19ம் நூற்றாண்டில்தான்.

யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.

பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.

யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

கடைசியாக இன்றைய யோகா-வுக்கு ஆதாரமாக பெரும்பாலும் எல்லாரும் குறிப்பிடுவது பதஞ்சலியின் யோக சூத்திரம் எனும் புத்தகம்தான் (கிபி 300). ஆனால் இதிலும் இன்றைய ஆசனங்கள் பற்றியெல்லாம் பெரிய அளவு விளக்கங்கள் இல்லை. தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி செய்பவர் சகஜமான நிலையில் உட்கார வேண்டும் என்று மட்டும்தான் பதஞ்சலி குறிப்பிடுகிறார்.

அதாவது சிந்தனைப் கட்டுப் பாட்டில் தியான நிலை என்கிற அர்த்தத்தில்தான் யோகம் என்கிற வார்த்தை பெரும்பாலும் அப்போது பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் உடலை போஷிப்பதையே  பதஞ்சலி தூற்றுகிறார். உண்மையான யோகிகள் உடலை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று சொல்கிறார். அது உண்மைதான். அவர் காலத்தில் யோகிகள் என்று அறியப்படுபவர்கள் உடல் என்கிற கட்டுப் பாடுகள் இல்லாத காரியங்கள் செய்வார்கள் (என்று நம்பப் பட்டது). அதாவது யோகிகள் தண்ணீரில் நடப்பார்கள், பறப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் உலாவுவார்கள்.

இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யோகிகள் என்கிற வார்த்தை பண்டைய காலத்தில் நிறைய அர்த்தங்களை குறித்தது. சில யோகிகள் மேற்சொன்ன ‘சித்து வேலைகள்’ செய்வார்கள். சிலர் போதை மருந்துகளை உட்கொண்டு கடவுளர் பற்றிய மாயத் தோற்றங்களை காண்பார்கள். (எல்.எஸ்.டி. சாப்பிட்டு நிறையப் பேர் அமெரிக்காவில் இயேசு கிறிஸ்துவை பார்த்து பேசியெல்லாம் இருக்கின்றனர்!).

இவர்கள் வணங்கும் கடவுள் ருத்ரன் எனப்படும் வேதக் கடவுள். (இந்த ருத்ரன் பிற்காலத்தில் சிவனின் ஒரு வடிவமாக ஆக்கப்பட்டு விட்டார். இவரின் இன்னொரு பெயர்தான் யோகேஸ்வரன் - அதாவது யோகிகளின் ஈஸ்வரன்.)

இதே யோகிகள் பிற்காலத்தில் இந்த ‘உடலை வெறுக்கும்’ வேலையை கொஞ்சம் ஓவர்-ஆகவே செய்து காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது இவர்கள்தான் உடலை  ‘மலம், மூத்திரம், சீழ் இவற்றால் ஆன கலவை’ என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தவர்கள். உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெரும் குளிரில் பாதுகாப்பே இல்லாமல் நடப்பார்கள். உடைகள் அணியாமல் நிர்வாணமாக உலவுவார்கள். மண்டையோட்டை தட்டாக வைத்து சாப்பாடு போட்டு சாப்பிடுவார்கள். (நிறையப் பேர் மனிதக் கழிவை உண்டு நாளைக் கடத்துவதும் உண்டு.) இவர்கள் செய்யும் ஒரே ‘ஆசனம்’ ஒற்றைக் காலில் தவமிருப்பதுதான். இந்த ஒற்றைக் கால் தவசி யோகிகள் மக்களின் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார்கள். (மாமல்லபுரத்தில் - இதே கிண்டலில் செய்யப் பட்ட - ஒற்றைக் காலில் தவமிருக்கும் பூனையின் சிற்பம் ஒன்று உள்ளது.)

இந்த மாதிரி எல்லாம் செய்ததால், அப்போது (5 முதல் 10ம் நூற்றாண்டு) யோகிகள் பொதுவாக பைத்தியக் காரர்கள் அல்லது மந்திரவாதிகள் என்றுதான் மக்களால் கருதப் பட்டார்கள். இவர்களைப் பார்த்து நிறையப் பேர் பயந்தார்கள். யோகிகள் எனப்படுபவர்கள் பொதுவாக சம்பிரதாய வழிபாட்டு முறைகளுக்கு எதிரானவர்கள் என்கிற தோற்றமே பெரும்பாலும் இருந்தது. யோகிகள் ‘மந்திர சக்தி’ வாய்ந்தவர்கள் என்று நம்பியதால் அவர்கள் மேல் பாலியல் ரீதியான பயமும் இருந்தது. சில ‘நல்ல யோகிகள்’ வாழ்த்தினால் அவர்களின் ‘செலவிடாமல் சேமித்து வைத்த விந்து சக்தியால்’ பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. இதே போர்வையில் சில ‘போலி யோகிகள்’ தங்களை அண்டிய பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதும் அப்போதே நடந்திருக்கிறது. பின்னர் 12 முதல் 15ம் நூற்றாண்டுகளில் இந்த தாந்திரீக முறைகளும் சேர்ந்து கொண்டதால் யோகிகளுக்கு இருந்த கெட்ட பெயர் இன்னும் மோசமானது. இந்த காலகட்டத்தில் தான் ‘ஹட யோக ப்ரதீபிகா’ என்கிற புத்தகம் பிரபலமானது. ‘ஹட’ என்றால் force என்று அர்த்தம். இந்த புத்தகத்தில்தான் குண்டலினி என்கிற முறையில் முதுகுத் தண்டின் கீழ் உறங்கிக் கிடக்கும்  பாம்பு போன்ற ஒன்றை யோக முறையில் மேலே ஏற்றி ஏற்றி மூளைக்கு கொண்டு செல்லும் முறை குறிப்பிடப் பட்டிருந்தது. இதிலும் ஒரு  பெண்ணுடன் கலவி கொள்ளும் யோகி அவளின் ‘சக்தி’ முழுவதையும் உறுஞ்சி தனதாக்கிக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு பாலியல் ரீதியான பயமுறுத்தும் விஷயங்கள் நிறைய இருந்தன . இவை நிலைமையை இன்னும் மோசமாக்கின.

ஆதி சங்கரரின் சீடர்கள் இந்த உடல் ரீதியான யோகா முறைகளை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தக் கால கட்டத்தில் படித்த ஹிந்துக்கள் யோகிகளை முழுவதுமாக ஒதுக்கி விட்டனர். ‘ஹட யோக ப்ரதீபிகா’ புத்தகம் ஹிந்துக்களுக்கு ஒரு அவமானமாச் சின்னமாகவே இருந்தது. 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய, சுவாமி தயானந்த சரஸ்வதி ஹட யோகா ப்ரதீபிகா புத்தகத்தை ஆற்றில் விட்டெறிந்த ஒரு கதையும் இருக்கிறது.

சுவாமி விவேகானந்தரும் ஹட யோகத்தை அறவே ஒதுக்கி தானே ராஜ யோகம் என்கிற யோக வழியை பின் பற்ற வலியுறுத்தினார். பல்வேறு ஹிந்து தத்துவ வழிகளில் இருந்து கலந்து எடுக்கப் பட்ட இந்த வழியே எல்லா யோகத்திலும் உயர்ந்தது என்று கருதினார் (எனவேதான் அந்தப் பெயர்.)

இந்த மாதிரி சங்கடகரமான விஷயங்களால் பிரிட்டிஷாரும் கூட யோகிகள் என்பவர்களை வெறுத்தனர். மேற்சொன்ன பிரச்சனைகள் போதாதென்று பிரிட்டிஷ் அரசை வன்முறை ரீதியாக எதிர்த்த ‘தீவிரவாதக்’ குழுக்கள் நிறைய  யோகா நிலையங்கள் என்கிற போர்வையில்தான் இயங்கின. இதனால் யோகா நிலையங்களையே சட்ட விரோதமாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

அந்தக் கால கட்டத்தில் யோகா-வும் பாலியலும் கூட கலந்தே பார்க்கப் பட்டது. பண்டைய காலத்து சிந்தனையான யோகிகளின் ‘பாலியல் சக்தி’யும்  மத்திய காலத்து தாந்திரீக முறைகளும் கலந்து யோகிகள் அல்லது யோகா என்றாலே செக்ஸ் என்னும் பார்வையும் மக்களிடம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சர் ரிச்சர்ட் பர்ட்டன் 1883ல் பதிப்பித்த காம சூத்ரா என்னும் புத்தகத்தில் ‘ஆசனங்கள்’ பற்றி குறிப்பிடுகிறார். 1902ல் தாமஸ் எடிசன் எடுத்த Hindu Fakir என்னும் ஆவணப் படத்தில் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக யோகா செய்யும் படங்கள் அமெரிக்காவில் பிரசித்தி பெற்றன.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ‘நவீன’ யோகா உருப் பெற ஆரம்பித்தது. கொஞ்சம் பிரிட்டிஷ் உடற்பயிற்சி முறைகள், அமெரிக்க transcendentalism, ஸ்வீடனின் ஜிம்னாஸ்டிக்ஸ், YMCA-வின் பயிற்சிகள் இவற்றை சேர்த்து ஒரு  கலவையாக உடற்பயிற்சி முறைகள் உருவாகின. இந்த முறை யோகா உருவாக ஐரோப்பியர்கள், பிரிட்டிஷ் அரசு மற்றும் தேசியவாதப் போராட்ட வீரர்கள் மூவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷார் அவர்களின் உடற்பயிற்சி முறைகளை இதனுள் புகுத்த, தேசியவாதிகள் உடலை வலிமைப் படுத்தும் வழியாக யோகாவை மாற்றும் முயற்சியில் இந்த மாறுதல்கள் நிகழ்ந்தன.




ஆகவே, இன்று நாம் யோகா என்று புரிந்து கொள்ளும், பயிற்சி செய்யும் கலை உண்மையில் பல்வேறு மூலங்களில் இருந்து வந்து சங்கமித்த ஒரு விஷயம். முக்கியமாக டி. கிருஷ்ணமாசார்யா என்பவர் 1930 முதல் 1950 வரை உருவாக்கிய உடற் பயிற்சி முறைகள் மைசூர் அரச ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் இருந்து எடுக்கப் பட்டது. இவையும் யோகாவில் சேர்ந்து கலந்தன.



மேலும் பி.கே.எஸ். ஐயங்கார் 1966ல் பதிப்பித்த Light On Yoga புத்தகத்தில் இருந்த பயிற்சி முறைகள் நிறைய 1930லேயே மேற்கத்திய பயிற்சி முறைகளில் வழக்கத்தில் இருந்தன. அவை பெரும்பாலும் மேற்கத்திய பெண்களுக்கான ‘மென்மையான’ உடற்பயிற்சியாக பழக்கத்தில் இருந்தவைதான். இந்தப் புத்தகங்கள் மற்றும் யோகா மேற்கு நாடுகளுக்கு போன பிறகு இந்தப் பயிற்சிகள் ‘பெண்களுக்கான யோகா’ என்று ஆகி விட்டன. (ஆண்கள் இதற்கு மாறாக ‘கடுமையான’ உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.) இன்றும் கூட பார்த்தால் ஆண்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பெண்களே யோகா பயிற்சி செய்கின்றனர்.

விவேகானந்தர் ஹட யோகாவை புறந்தள்ளி விட்ட பிறகு இந்திய ‘யோகிகள்’ ஹட யோகத்தில் இருந்த ‘சங்கடகரமான’ விஷயங்களை விட்டு விட்டு ஆங்காங்கே இருந்த சகஜ ஆசனங்கள், பண்டைய இந்தியாவில் இருந்த மூச்சுக் கட்டுப்பாடு (பிராணாயாமம்) என்று பலவற்றை கட்டுக் கலந்து ஒரு யோகா-வை உருவாக்கினார்கள். இதில் பண்டைய இந்தியாவில் இருந்த ‘சங்கட’ யோகா-வை விட்டுத் தள்ளி நவீன யோகா-வில் இருந்த நல்ல விஷயங்களை சேர்த்து இதுதான் பண்டைய யோகா என்று ஒன்று உருப் பெற்றது. அதாவது பழைய விஷயத்தில் புதிய விஷயங்கள் புகுந்து ஆனால் அதுதான் பழைய விஷயம் என்று ஆகி விட்டது. இந்த மாதிரி நடப்பதற்கு ஆங்கிலத்தில் palimpsest என்று சொல்வார்கள்.

பின்னர் இந்த ‘நவீன யோகா’-வுக்கு நிறைய குருமார்கள் உருவாகி 1950 மற்றும் 60களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பிரபலமடைய வைத்தார்கள். ஹென்றி தொரோ என்னும் அமெரிக்க யோகி கொஞ்சம் பதஞ்சலி, கொஞ்சம் தாந்திரீகம் என்று கட்டுக் கலவையாக ஒரு யோகா உரையை நிகழ்த்த ‘யோகா’ பண்டைய இந்தியக் கலை என்கிற எண்ணம் இன்னும் வலுப் பெற்றது.

கடைசியாக, இன்றைய யோகா என்று நாமெல்லாரும் புரிந்து கொள்ளும் ஆசனங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் உபநிஷதங்களுக்கும் ஹட யோகத்துக்கும் ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு விஷயம். இரண்டு நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தில் பல்வேறு கலைகள், பழக்கங்கள் கலந்து புதிய கலை உருவாகி அதுவே பண்டைய கலையாக உருமாறிய மாயம்தான் யோகா. கண்டிப்பாக பண்டைய இந்தியாவில் யோகா என்று ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் அது சுத்தமாக வேறு ஒரு விஷயம். இந்தியா கேட்டில் 35,000 பேர் பண்ணியது நவீன யோகா. அதனை ஐரோப்பியர்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அதனை மெருகேற்றி நிறைய பங்களித்து ஒரு ‘சங்கடகரமான’ விஷயத்தை பெருமையான விஷயமாக மாற்றித் தந்திருக்கிறார்கள். யோகா ஐரோப்பியக் கலை அல்ல. முழுமையான இந்தியக் கலையும் அல்ல. முதல் முதலில் உலகமயமான, வணிகமயமான உலகக் கலை.

-----------------------
தரவுகள்:

On Hinduism – Wendy Doniger, Penguin India
Rig Veda – Wendy Doniger
Raja Yoga – Swami Vivekananda
Eight Upanishads – Swami Gambhiranandha
Not as Old as You Think - Meera Nanda