Sunday, 22 April 2018

முத்தலாக் தீர்ப்பு


.
(22nd August 2017)

இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ‘முத்தலாக்’ எனும் உடனடி விவாகரத்து முறைமையை சட்டவிரோதம் என்று அறிவித்து இருக்கிறது. அதே நேரம் இது தாற்காலிக தடைதான் என்றும் நீண்ட கால அடிப்படையில் இதையொட்டி ஒரு சட்டவடிவத்தை நாடாளுமன்றம் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு என்று கருதுகிறேன். நான் பலமுறை முத்தலாக் பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அது ஒரு பண்டைய கால மூடத்தனம்தான் என்றாலும் இன்றைக்கு இஸ்லாத்தில் மிகவும் நவீனமாக உபயோகிக்கப் படும் விஷயங்களில் அதுவும் ஒன்று. நாளிதழ் விளம்பரங்கள் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. எஸ்.எம்.எஸ், ஸ்கைப், ஏன் வாட்ஸ்அப் மூலம் கூட மூன்று முறை தலாக் பிரயோகித்து மனைவியை கழட்டி விட்ட சம்பவங்கள் நடைமுறையில் இருக்கின்றன துருக்கி, மலேசியா, பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய பெரும்பான்மை மக்கள் வசிக்கும் நாடுகளிலேயே இது தடையில் இருக்கிறது. ஏன், பாகிஸ்தான் மாதிரி ஷரியா சட்டங்கள் நடைமுறையில் உள்ள தேசத்திலேயே கூட முத்தலாக்-குக்கு அங்கீகாரம் இல்லை.
காரணம் ‘தலாக்-ஏ-பிதா’ (Talaq-e-Bid’ah) எனும் முத்தலாக் இஸ்லாமிய சமூகங்களில் பண்டைய காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்தாலும் இஸ்லாத்தில் அதற்கு அங்கீகாரம் இல்லை. குர்ஆனில் முத்தலாக் கிடையாது. நபிகளும் அதனை அங்கீகரித்ததில்லை. அவரின் உடனிருந்த ருக்கான்-பின்-யாஸித் என்பவர் ஒரு முறை முத்தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் நபிகளிடம் அது பற்றி வருந்திக் கூறிய போது நபிகள் ‘எதை வைத்து உன் மனைவியை விவாகரத்து செய்ததாக நினைக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு யாஸித் ‘அவளிடம் மூன்று முறை தலாக் கூறினேன்,’ என்றார். ‘ஒரே நேரத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்வது ஒரே ஒரு முறை தலாக் சொல்வதற்குதான் சமம்; உன் விவாகரத்து முடிவடையவில்லை. எனவே, அவளை திரும்ப உன்னிடம் அழைத்துக் கொள்வதில் தடையேதும் இல்லை.’ என்று நபிகள் அறிவித்தார்.
இந்த சம்பவத்தை ஒட்டி மூன்று முறை தொடர்ந்து தலாக் சொல்வது ஒரே ஒரு முறை சொல்வதாகத்தான் உலகெங்கும் இஸ்லாமிய அறிஞர்களால் கருதப் படுகிறது. எனவேதான் முத்தலாக்கை ஆதரித்த முஸ்லீம் சட்ட வாரியமே கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிவிட்டில் ‘முத்தலாக் இஸ்லாத்தில் ஒரு பாவம்,’ என்றே குறிப்பிட்டு இருக்கிறது.
இஸ்லாமிய அறிஞர்களை உச்ச நீதிமன்றம் தீர கலந்தாலோசித்தே இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைஸி ‘இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பெரும் பாடாக இருக்கும்!’ என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். இஸ்லாமிய விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வராது. தவிர முஸ்லிம்கள் கெட்டோ (ghetto) என்று சொல்லப்படும் உள்ளடங்கிய, தனித்துவ சமூகங்களாக பெருமளவு வாழ்வதால் அங்கே நடக்கும் குடும்ப சச்சரவுகள் அதிகம் வெளியே வராது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக படித்த பெண்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் உள்ள போராளிகள் அத்துமீறல்களை வெளியே கொண்டு வந்து சர்ச்சையை கிளப்பி இந்த வழக்கத்தை பெருமளவு கட்டுக்குள் வைக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்தத் தீர்ப்பு வந்த உடனே அடித்துப் பிடித்து இதனை வரவேற்று ட்வீட் செய்திருக்கிறார். அது சரிதான்; ஆனால் ‘இது முஸ்லீம் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!’ என்று டீவீட்டில் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கான அப்பாடக்கர் தீர்ப்பா இது என்பது தெரியவில்லை. கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது; அவ்வளவுதான். என்னைப் பொருத்த வரை முஸ்லீம் பெண்கள் நலனில் இது ஒரு துவக்கம், அவ்வளவே. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தப் பயணத்தை முஸ்லீம் ஆண்கள் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, ‘முத்தலாக் தீர்ப்பை கொடுத்த உச்ச நீதிமன்றம் சபரி மலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் இதே மாதிரி முடிவு எடுக்குமா?’ என்று கேட்டு பதிவுகள் முஸ்லிம்களிடம் இருந்து பார்க்கிறேன்.
சபரி மலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் பெண்களை அனுமதிக்கும் விதமாக தீர்ப்பு வரும், வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் முத்தலாக் விஷயத்தில் மத-ரீதியாகத்தான் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதிலும் மதரீதியாக முடிவெடுக்க எத்தனித்தால் பெண்களுக்கு இருக்கும் தடையை தொடரத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். (பல நூறு ஆண்டுகளாக அய்யப்பன் கோயிலில் வயது வந்த பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இல்லை என்று தேவஸ்தான போர்ட் குறிப்பிட்டு உள்ளது. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.) ஆகவே சபரிமலை விஷயத்தில் ‘முத்தலாக்கில் செய்தது மாதிரியே மத ஆதாரங்கள் சார்ந்து முடிவெடுக்காமல் மதம் தாண்டிய ‘பெண்ணுரிமையை’ கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடைசியாக, இப்படி ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. ‘குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுகிறாயே? காஷ்மீர் பண்டிட் பற்றி பேசினாயா? சீக்கியர் கலவரம் பற்றி பேசினாயா?’ என்று ஹிந்துத்துவ அபிமானிகள் கேட்கிறார்களே, அதற்கும் ‘முத்தலாக் வேண்டாம் என்கிறாயே, சபரிமலை விஷயத்தில் என்ன சொல்கிறாய்?’ என்று கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப் போனால் ஹிந்து மதத்தில் பெண்கள் விஷயத்தில் சீர்திருத்தங்கள் துவங்கப் பட்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகின்றன. சுதந்திர இந்தியாவில் ஹிந்துப் பெண்களுக்கு நிறைய உரிமைகள் வழங்கும் முக்கியமான சட்ட வடிவமான Hindu Code Bill ஐ கொண்டு வர நேருவும் அம்பேத்கரும் கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த ஹிந்துத்துவ அபிமானிகள் (ஹிந்து மகாசாபா போன்றோர்) இதே சீர்திருத்தங்களை ஹிந்துப் பெண்கள் என்றில்லாது இந்தியா முழுக்க கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அதனை முஸ்லீம் தலைவர்கள் எதிர்த்தார்கள். பிரிவினையின் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பெரும் பாதுகாப்பின்றி உணர்ந்ததால் அப்போது இந்த சட்டங்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டது.
இப்போதும் புதிய அரசின் முஸ்லீம் விரோதக் கொள்கைகளால் அந்த பாதுகாப்பின்மை நிலைமை கொஞ்சம் திரும்பி வந்திருக்கிறது என்பது உண்மைதான் எனினும் 1948ல் இருந்த அளவு மோசமான நிலை இப்போது இல்லை என்று உறுதியாகவே சொல்லலாம். எனவே, இப்போது இதனை எதிர்க்காமல், ஹிந்துப் பெண்களுக்கு செய்தாயா, கிருத்துவர்களுக்கு செய்தாயா என்றெல்லாம் எதிர்வாதங்கள் புரியாமல் இந்திய முஸ்லீம் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்தக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவைஸி விடுத்த எச்சரிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு இந்த நீதிமன்ற உத்தரவை நடைமுறையில் அமுல்படுத்தி ஹிந்துத்துவ பிரச்சாரத்தின் பல்லைப் பிடுங்க இந்திய முஸ்லிம்கள் உதவுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் இந்த உத்தரவை மனதார ஆதரித்து உச்ச நீதிமன்றத்துக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment