Sunday, 22 April 2018

புராணங்களும் வரலாறும்


.
.

(28th March 2018)

மத்தியில் புதிய அரசு வந்ததில் இருந்து பண்டைய இந்துப் புராணங்கள் எல்லாமே உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் என்கிற விவாதம் துவங்கி தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் பதவி ஏற்ற கையோடு ‘ராமாயணம் ஒரு வரலாற்று சம்பவம்,’ என்று பேசி கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் உத்தரகண்ட் அரசு அனுமார் கொய்து வந்த சஞ்சீவி மலையைத் ‘தேட’ நிதி ஒதுக்கியது. இது பற்றி என் புத்தகத்திலேயே ஒரு கட்டுரை இருக்கிறது. பின்னர் புராணங்கள் எல்லாம் வரலாறுதானா என்று ஆராய்ந்து ‘நிரூபிக்க’ ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது.
இது பற்றி பேசுகையில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்: முந்தைய ஆட்சியில் பாபர் மசூதி வழக்கில் அயோத்தி பற்றிய ஒரு வாதத்துக்கு பதில் அளிக்கையில் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் ‘ராமாயணம் கற்பனையாக புனையப்பட்ட ஒரு காவியம் மட்டுமே,’ என்று அஃபிடவிட் சமர்ப்பித்து சர்ச்சைக்கு உள்ளானது.
அது இருக்கட்டும்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்த சம்பவம், ராமர் என்று ஒருவர் ராவணன் எனும் கொடிய அரக்க குணம் கொண்டவனை வதம் செய்து வாழ்ந்து மறைந்தார் என்று ஆன்மீகவாதிகள் நம்புவதில், அவரை தொடர்ந்து வணங்குவதில், யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கத் தேவையில்லை. ஆனால் அது வரலாறு என்று சொல்ல வந்தால் கேள்விகள் எழும்.
பண்டைய சமூகங்களில், நாகரிகங்களில் வரலாறுக்கும், காப்பியங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. அந்த மாதிரி தனியான வகைமுறைகள் அவர்களுக்கு தேவைப்படவில்லை. ஆனால் நவீன சமூகத்தில், விஞ்ஞான அணுகுமுறையில், வாழ முனையும் ஒரு சமூகத்துக்கு அந்த வித்தியாசம் தேவை. ஏனெனில் வரலாறு என்றது எதைக் கருத வேண்டும் என்பதற்கு கடுமையான விதிமுறைகள் இன்றைக்கு உள்ளன. அதற்கு முதல் விதியே ‘இலக்கியங்களை’ விலக்கி விட்டுப் பார்க்க வேண்டும்,’ என்பதே. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தை வைத்து கண்ணகி என்று ஒருத்தி வாழ்ந்தாள் என்று சொல்ல மாட்டார்கள். உலக இலக்கியங்கள் எல்லாமே புனைவுகள் சேர்த்து, நிறைய மிகைப்படுத்தல்கள் வைத்து வடிக்கப்பட்டவைதான். ஆகவே அதை நோண்டி அதில் எது உண்மை, எது மிகைப்படுத்தல் என்று கண்டுபிடிப்பது வேலையற்ற வேலை. ஆகவே வரலாற்று அறிஞர்கள் அங்கே போவதில்லை.
அவர்களுக்கு நிரூபிக்கப்படும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. Empirical Evidence என்று சொல்வார்கள். அவற்றில் முக்கியமானது அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள். சிவபெருமான் என்று ஒருவர் வாழ்ந்ததற்கோ அல்லது அயோத்தியில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் இருந்ததற்கோ இதுவரை எந்த அகழ்வாராய்ச்சி ஆதாரமும் நமக்கு கிட்டவில்லை. அவை மிகவும் பண்டைய காலத்தவை, ராமர் 8,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார் அதனால்தான் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. டைனோசார்கள் வாழ்ந்ததற்கு நமக்கு இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இதுவரை கிடைத்ததிலேயே பழமையான டைனோசார் எலும்புக் கூடு 23 கோடி ஆண்டுகள் முந்தையது. அதாவது கோடிக்கணக்கான ஆண்டுகள் முந்தைய உயிரினங்கள், வாழ்வியலுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னர் பற்றி ஆதாரங்கள் இல்லை என்பது நம்ப இயலாத விஷயம். அந்த ஆதாரங்களை எல்லாம் யாரோ அழித்து விட்டார்கள் என்று சொன்னால் யார் எப்போது அழித்தார்கள், அப்படி சொல்லும் ஆளுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று கேள்வி வரும். அந்த ‘அழித்த’ சம்பவத்துக்கும் ஆதாரம் தேவைப்படும்.
ராமரோ, சிவனோ, முருகரோ இவர்கள் இங்கே வாழ்ந்து மறைந்த காக்கும் கடவுள்கள் என்று ஆன்மீகவாதிகள் நம்ப முயல்வது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதனை ஒரு அரசு தன் கொள்கையாக வரித்து பரப்ப முனைவது ஆபத்தானது. Scientific Temper எனப்படும் அறிவியல் அணுகுமுறை நம் மக்களிடம் இல்லாமல் போவதற்கு இந்த மாதிரி முயற்சிகள்தான் காரணமாக அமைகின்றன. இதன் பக்க விளைவுதான் டார்வின் தியரி பொய், ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி நம் வேதத்திலேயே உள்ளது என்னும் ஜல்லியடிகள் எல்லாம்.
ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவை நம் பண்டைய சமூகங்களின் மாபெரும் சாதனைகளில் அடங்குபவை. கிரேக்க காப்பியங்களை விட பன்மடங்கு நீளமான, சிக்கலான காப்பியம் மகாபாரதம். நம் நவீன இந்திய சமூகத்தை இன்று வரை பாதித்து நம் கலாச்சாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் காவியங்கள் இவை. இவற்றை அப்படியே விடுவது அவற்றுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வைத் தொடரட்டும். ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஆதாரம் கிட்டினால் பார்க்கலாம்.
அதுவரை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை கடவுளாக வழிபட்டு உய்யட்டும். நம்பிக்கை அற்றவர்கள் இவற்றை இலக்கியங்களாக மதித்து ரசித்து மகிழ்வோம்.
நடுவில் குட்டையைக் குழப்பும் இந்த போலி வரலாற்று அறிஞர்களை புறக்கணித்து, அவர்களை ஊக்குவிக்கும் இந்த அரசின் திட்டத்தை உணர்ந்து அதனையும் புறக்கணிப்போம்.
.

No comments:

Post a Comment