Friday 8 June 2018

காலா





(No spoilers - கதையின் முக்கிய திருப்பங்கள் விளக்கப் படவில்லை.)
.
.
தொண்ணூறுகளின் இறுதியில் நான் படித்தவைகளில் அருந்ததி ராய் எழுதிய The Greater Common Good முக்கியமான புத்தகம். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப் படும் விளிம்பு நிலை மக்களின் அவலம் பற்றி உணர்வு பூர்வமாக பேசிய புத்தகம். மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்கள், கனிமச் சுரங்கங்கள், நகரங்களில் எழுச்சி கொள்ளும் அபார்ட்மெண்ட் தீவுகள் பற்றிய என் மதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்கிய புத்தகம் அது. அதன் பின் இந்தப் பிரச்னை பற்றி நிறைய புத்தகங்கள் படித்ததும் நகரத்தின் மத்தியில் கண்களுக்கு ‘உறுத்தலாக’ இருக்கும் குப்பங்கள் பற்றி மோசமாக யோசித்ததே இல்லை. ஆனால் இந்தியாவின் இந்த முக்கியப் பிரச்னை பற்றி ஏன் படங்கள் வருவதில்லை என்று யோசித்ததுண்டு.
அதற்குப் பின் பாலிவுட்டில் நிறைய படங்கள் வந்து விட்டன. ஆனால் காலா அதனை தெளிவாக, வெளிப்படையாக பேசுகிறது. வளர்ச்சி எனும் சொல் நம்மை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை, எப்படி ஏமாற்றி மயக்குகிறது என்று பேசுகிறது. அழுக்கான, நாறும் குப்பங்கள்...அதற்குப் பதில் அழகான சுத்தமான அடுக்கு மாடி கட்டிடங்கள், நட்ட நடுவே ஒரு கோல்ஃப் மைதானம். கேட்கவே எவ்வளவு ஆசையாக இருக்கிறது? நாமும் எப்போதுதான் சிங்கப்பூர் ஆக மாறுவது?
இந்த சிந்தனைக்குப் பின் உள்ள அரசியல்வாத, நில மாஃபியா சூழ்ச்சிகள், அதில் பகடைக்காய் ஆகும் விளிம்பு நிலை மக்கள் பற்றியெல்லாம் படம் விவாதிக்கிறது. கூடவே அவர்கள் எப்படி கிரிமினல்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள் எப்படி சமூக விரோத செயல்களாக சுலபமாக பிம்பப் படுத்தப் படுகிறது என்று காட்டுகிறது.
இதனை ரஞ்சித் தன் தலித் அரசியல் பார்வையில் வழக்கம் போல நிறைய குறியீடுகளாக மாற்றுகிறார். பிள்ளையார் சிலை கடலில் விழுவது படத்தின் முக்கிய திருப்பதுடன் இணைக்கப் பட்டிருப்பது. தாராவியை ஆட்டையைப் போட முயலும் கம்பெனியின் பெயர் ‘மனு ரியல்ட்டர்ஸ்’. காலா வாழும் ஏரியா ‘தண்டகாரண்ய நகர்’. காலா, கருத்தவன், ராவணன். அரசியல் தாதா ஹரிதாஸ் அப்யங்கர், சிவத்தவன், ராமன். கதைப்படி ராமன்தானே ஜெயிக்க வேண்டும்? ஆனால் ராவணனை ஜெயிப்பது அத்தனை எளிதல்லவே? பத்துத் தலைகளில் ஒவ்வொன்றை வெட்ட வெட்ட இன்னொரு தலை முளைக்கும் சக்தி கொண்டவன். அப்படிப்பட்ட ‘தீய சக்தியை’ ராமன் எப்படி எதிர் கொண்டு வீழ்த்த முடியும்?
மணி ரத்னத்தின் ‘ராவணன்’ படம் பார்த்தபோது ராமாயணக் குறியீடுகளை இவ்வளவு மோசமாக பயன்படுத்த முடியாது என்று நினைத்தேன். ஆனால் காலாவில் ராமாயணம் சரியாக பயன்படுத்தப் படுகிறது. இங்கே அது வேறு ஒரு பரிமாணம் கொள்கிறது. நவீன நிலக் கையகப் படுத்தும் அரசியலில், தலித் பிரச்சனைகளில் விளிம்பு நிலை வாழ்வியலில் ராமாயணத்தை ரஞ்சித் பெரும் திறமையுடன் பதிக்கிறார். ராமாயணம் பற்றிய நம் பிம்பங்களை, கருப்பு/சிவப்பு பற்றிய நம் மாயைகளை தகர்த்தெறிகிறார்.
என்ன, இவற்றை எல்லாம் செய்வதற்கு ரஜினி எனும் பெரிய மேடை தேவைப்பட்டிருக்கிறது. அவர் படத்தில் இல்லாவிடில் ஒரு சிறிய கலைப்படமாக, அல்லது வெறும் ஆவணப் படமாக காலா மாறி இருந்திருக்கும். ரஜினி என்னும் மந்திர நடிகன் சேர்ந்ததும் வேறு ஒரு உருக் கொள்கிறது. காலாவை தன் இருப்பால் ஒரு மாஸ் படமாக ரஜினி மாற்றுகிறார். அவருக்காக சேர்த்திருக்கும் பகுதிகள் பெரும் சிலிர்ப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக மேம்பாலத்தில் நடக்கும் சண்டை மற்றும் காவல் நிலையக் காட்சி இரண்டும் ரஜினியின் மாஸ் இன்னும் மங்கவில்லை என்று காட்டுகிறது.  67 வயதில் வேறு எந்த நடிகராலும் நிகழ்த்த முடியாத ஒரு ஆச்சரியம் இது. கபாலியில் ரஜினியின் பிம்பத்தையும் தன் தீவிர அரசியலையும் இணைத்து கொண்டு செல்வதில் ரஞ்சித்துக்கு சில சவால்கள் இருந்தன. காலாவில் அந்த சவால்கள் சரி செய்யப்பட்டு விட்டன.
படம் முடிந்ததும் நிலப்பிரபுத்துவம், வளர்ச்சி எனும் மாயகோஷம், சிங்கார நகரங்கள் எனும் கோஷங்கள், கருப்பு/சிவப்பு, இவை பற்றியெல்லாம் கேள்விகள், விவாதங்கள் உங்கள் மனதில் எழுந்தால் படத்தின் நோக்கம் வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம். அருந்ததி ராய் படத்தைப் பார்த்தால் நிறையவே சிலாகிப்பார்.

No comments:

Post a Comment