Sunday, 22 April 2018

ரஹ்மான் ரோபோ

ஐடி துறைகளில் வேலைகள் காலியாக்கப் படுவதைப் பற்றியும் Automation எனப்படும் தானியங்கி மென்பொருட்கள் எப்படி மனித உழைப்பை தேவையில்லாமல் ஆக்குகின்றன என்றும் Shan Karuppusamy ஒரு பதிவு எழுதி இருந்தார். அது உடனே சர்ச்சைகளை எழுப்பி விவாதம் (வழக்கம் போல) கம்யூனிசம் வரை போய் விட்டது.
நானே கூட சில வாரங்களுக்கு முன்பு தானியங்கி செயலிகள் எப்படி மனிதர்களுக்கு வருங்காலங்களில் வேலைகளே இல்லாமல் செய்யப் போகிறது என்ற தலைப்பில் துறை நிபுணர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் பெரிதும் கவனிக்கப் படாமல் போய் விட்டது.
தானியங்கி என்பதை நாம் நிறுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியின் வரலாறே தானியங்கிதான் என்று சொல்லி விடலாம். காலால் நடப்பதற்கு பதிலாக குதிரையை அல்லது கழுதையை பழக்கியதே கூட ஆட்டோமேஷன்தான். விவசாயம் என்கிற கண்டுபிடிப்பு அடுத்த ஆட்டோமேஷன். தினமும் தேடித்தேடி காட்டு தானியங்களை உண்பதற்கு பதில் தானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து பயிரிட்டு அவற்றை சேகரித்து அப்புறம் கொஞ்ச காலம் உட்கார்ந்து உண்பது. வாழ்நாள் வரை ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்த நாடோடி கும்பல்கள் ஒரே இடத்தில் டேரா போட்டு வாழத் துவங்கியது இதற்கு அப்புறம்தான். இல்லையேல் என் தேசம், என் தமிழ்த் திரு நாடு, என் சொந்த ஊர் போன்ற பிரச்னை எல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது. அதே போல கையால் மாவு அரைப்பது, உரலில் நெல்லை இடிப்பது, அடுப்பை ஊதி ஊதி பத்த வைப்பது இதை எல்லாம் நிறுத்தி விட்டது ஆட்டோமேஷனின் அடுத்த கட்டம். சுமார் எண்பது ஆண்டுகள் முன்பு என்.எஸ். கிருஷ்ணன் பாடல் ஒன்றில் ‘பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும் கூட காபியும் வந்திடனும்,’ என்று கிண்டலாக வரிகள் வரும். இப்போது மொபைலில் ஸோமாடோ செயலியை தட்டினால் வெங்காய பக்கோடா வீட்டுக்கே வருகிறது (தில்லியில் கூட).
அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களை நான்கு ஐந்து பேர் மட்டும் பராமரித்து விவசாயம் பண்ணி விடுகிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் கவனித்துக் கொண்டு விடுகின்றன.
போரில் 'வீல், வீல்' என்று கத்தி வாள் வீசி சண்டை போடுவதற்கு பதில் உட்கார்ந்த இடத்தில் ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் குண்டு வெடிக்கிறது. இருந்த இடத்தில இருந்தே மானிட்டர் மூலம் பார்த்து எதிரி இருக்கும் இடத்தை சரியாக கண்டு கொண்டு ஒரு பட்டன் அமுக்கினால் ட்ரொன் எனப்படும் சாட்டிலைட் ஏவுகணை குறிப்பிட்ட ஜிபிஎஸ் லொகேஷனை வெடித்துத் தகர்க்கிறது. கத்தி கூச்சல் போட வேண்டிய அவசியமே இல்லை. நிதானமாக பியர் குடித்துக் கொண்டே போர் புரியலாம்.
பொழுதுபோக்கில் மனிதர்கள் தினம் தினம் மேடையில் நடிப்பது நின்று போய் ஒரு முறை நடித்து பின்னர் திரும்ப திரும்ப திரையில் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றாகி விட்டது. அதுவும் பிலிம் ரோல் வைத்து கழற்றி கழற்றி மாற்றி போட்டுக் கொண்டு இருந்தார்கள். அது மாறி ஒரு ஹார்ட் டிஸ்கை சொருகினால் படம் தானாக ஓட ஆரம்பித்தது. இப்போது அதுவும் போய் க்யூப் ப்ரொஜெக்ஷன் என்று இணையம் மூலம் சர்வரை தொடர்பு கொண்டு படத்தை தானாக லோட் பண்ணி படம் ஒடத் துவங்குகிறது. தினமும் மேடையில் இசைக் கலைஞர்கள் வாசித்தது நின்று போய் எம்பி3-யில் சும்மா டவுன்லோட் பண்ணி பீத்தோவனா, இளையராஜாவா, மைக்கேல் ஜாக்ஸனா நாமே கேட்டுக் கொள்கிறோம்.
மனித பரிணாம வளர்ச்சியின் பயணத்தை கவனித்தால் ஆதியில் இருந்து இன்று வரை ஆட்டோமேஷனை நோக்கி மட்டுமே போய்க் கொண்டு இருக்கிறோம். ‘எவ்வளவு குறைவாக வேலை செய்ய முடியும்?’ என்பதை கண்டுபிடித்து செயல்படுத்துவதில் மட்டுமே நம் பூராக் கவனமும் இருந்து வந்திருக்கிறது.
இது தவறில்லையா, இதனால் வேலைகள் பறிபோகாதா என்று கேட்டால் ஆமாம், வேலைகள் போகும். ஆனால் புது வேலைகள் உருவாகும். நீங்கள் கவனித்தால் தெரியும். ஐநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த வேலைகளைப் பற்றி படித்துப் பாருங்கள். அவற்றில் முக்கால்வாசி இன்று தேவைப்படாத வேலையாக இருக்கும். 1900ன் ஆரம்பத்தில் இருந்த வேலைகள் கூட முக்கால்வாசி இன்று இல்லை. அதே போல இன்று இருக்கும் சாஃப்ட்வெர், டிவி சானல், வீடியோ கிராஃபிக்ஸ், டிஜே, ஆர்ஜே, பிக் பாஸ்கெட் டெலிவரி, கூரியர், இன்பவுண்ட் மார்க்கெட்டிங் போன்ற வேலைகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை அல்லது தொழில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்காது என்று பெருமளவு உறுதியாக சொல்லி விட முடியும்.
ஆட்டோமேஷன் பாரம்பரிய வேலைகளை ஒழிக்கிறது. கடினமான வேலைகளை மனிதன் செய்ய வேண்டி இல்லாமல் ஆக்குகிறது. என்ன, அதன் பரிமாண வளர்ச்சி இப்போது கொஞ்சம் வேகமாகவே பயணிக்கிறது. இதை செய்ய வேண்டாம், அதை செய்ய வேண்டாம் என்பது தாண்டி, இன்னமும் 100 ஆண்டுகளில் எந்த வேலையையும் நாம் செய்ய வேண்டி இருக்காது. கவிதை-நாவல் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, இசை அமைப்பது இந்த மாதிரி கிரியேட்டிவ் வேலைகள் மட்டும்தான் மனிதன் செய்ய வேண்டி இருக்கும் என்று கொஞ்ச நாள் வரை நம்பிக் கொண்டு இருந்தோம். அதெல்லாம் மட்டும் எதற்கு என்று இப்போதே செயலிகள் வந்து விட்டன. இப்போதைக்கு சொதப்பலாக முகநூலில் காதல் கவிதை எழுதுபவர்கள் மாதிரி ரோபோ எழுதிக் கொண்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் ஓரளவு பாரதி ரேஞ்சை தொட்டு விடக் கூடும். இப்போதைக்கு சந்திரபோஸ் மாதிரி இசை வடிவமைத்தது போய் நூறு ஆண்டுகளில் ரஹ்மான் ரோபோ வந்து விடும்.
மனிதன்? மனிதர்கள் வேலையே செய்ய வேண்டி இல்லாமல் அரசாங்கமே வீடு, உணவு எல்லாம் கொடுத்து எல்லாவற்றுக்கும் மிஷின் வைத்து நடக்கக் கூட தேவை இல்லாமல் ஒரு ஸ்கேட்டிங் மிஷினை உடலில் இணைத்து வைத்துக் கொண்டு தின்றுத் தின்று பெருத்துப் போய் ஜாலியாக இருப்பான். கொஞ்ச நாள் முன்பு பிக்ஸார் தயாரிப்பில் வந்த வால்-ஈ (Wall-E) எனும் அற்புதமான படத்தை தேடிப் பாருங்கள். மனித குலத்தின் வருங்காலம் அந்தப் படத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment