Friday 2 June 2017

தொண்ணூற்றி ஐந்து வயது வாலிபன்


அவரைப் போல வாழ்வின் சூறாவளிகளை சந்தித்திருக்கும் மனிதர்கள் கொஞ்சமேதான் இருப்பார்கள். ஆனாலும் அதெல்லாம் யாருக்கோ நடந்தது போல, இன்னமும் 1969ல் முதல் பதவி ஏற்ற இளைஞன் போலவே, வலம் வந்து கொண்டு இருப்பது அதிசயம்தான். அவரின் சிந்தனைக்கு வயதே ஆகாத மாதிரிதான் தெரிகிறது.

சமீப காலம் வரை உடலுக்கும் கூட வயதாகாமல்தான் இருந்திருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது, அப்போதைய முதல்வர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நேரத்தில், அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தவர் கலைஞர். அது போதாதென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் போய் பார்த்து, நிவாரணங்களை வழங்கித் திரும்பினார். அப்போது அவருக்கு 93 வயது என்பதும் சக்கர நாற்காலியில் கட்டுண்டிருந்தார் என்பதும் முக்கியமான விஷயம். (அந்த வீடியோவை அடிக்கடி போட்டுக் காட்டி நோய்வாய்ப்பட்டிருந்த என் 83 வயது அம்மாவை நான் ஊக்குவித்துக் கொண்டு இருந்தேன்.)

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முதல் எமெர்ஜென்சி முதல் பொருளாதார தாராளமயம் வரை எல்லா சரித்திர நிகழ்வுகளுக்கும் கலைஞர் உடனிருந்து இருக்கிறார். தமிழ் நாட்டில் ஒரு நிகழ்வு கூட அவர் கவனத்தை விட்டுப் போனதில்லை. ஒரு சமகால வரலாற்று குறிப்பாளராகவே இருந்தார். அவருக்குப் பாதகமான விஷயங்களில் கூட கருத்து சொல்லி மாட்டிக் கொண்டும் இருக்கிறார். அப்போது அவர் அறிக்கைகளை எல்லாம் கிண்டல் அடித்தாலும் இன்றைக்கு எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத முதல்வர்களைப் பார்த்த பின்புதான் அவரின் அருமை புரிகிறது. நிருபர்களிடம் அவர் சண்டை போட்டு திட்டினாலும் கூட ஊடகங்களிடம் பேசவே செய்தார். இன்று போல ஒரு நிருபர் கூட்டம் கூட வைக்காமல் ஆட்சியையே முடித்து விட்ட அரசியல் தலைவர்களைப் பார்க்கும் போதுதான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிகிறது.

எனக்குத் தெரிந்து நேருவுக்குப் பின் மத வாதம், சமூக நீதி, பெண்ணுரிமை, ஊடக சுதந்திரம், பகுத்தறிவு இவை எல்லாவற்றையும் பற்றி பேசி, கவலைப்பட்ட ஒரே இந்தியத் தலைவர் இவர்தான்.

நேருவுக்குப் பின் இந்த அளவுக்கு எழுதிக் கொண்டே இருந்த இந்தியத் தலைவரும் இவர் மட்டுமே. சமீப காலம் வரை கூட தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டு இருந்தவர். (ஒரே ஒரு புத்தகத் தொகுப்பை முடிப்பதற்குள் என் தாவு தீர்ந்து போய் விட்டது.)

ஆனாலும் கலைஞர் என்ற பதம் பெரும் தீரமான உணர்வுகளை மக்களிடையே இன்று வரை கூட எழுப்புகிறது என்பதில் சந்தேகமில்லை. அவர் ஆதரவாளர்கள் அவரை ஏறக்குறைய வணங்குகிறார்கள். ஆனால் அவர் எதிர்ப்பாளர்கள் மோசமான வசவுகளால் அர்ச்சிக்கிறார்கள். சும்மா மிதமான எந்த கருத்தியலையும் அவர் உருவாக்குவதில்லை என்பதே கூட அவர் அரசியல் பயணத்தின் தீவிரத்தை மற்றும் அது ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைத்தான் காட்டுகிறது.

சொல்லப்போனால், தமிழகத்தின் மற்ற தலைவர்களை வைத்து அவரை எடை போடுவதே அவருக்கு செய்யும் அநீதிதான். ஜெயலலிதாவை எடுத்துக் கொள்ளுங்கள்; ரகசியமான வாழ்வு, ரகசியமான சாவு, சர்வாதிகார ஆட்சி, கடும் ஊழல்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது. விஜயகாந்த், ஒரு வாக்கியம் கூட கோர்வையாக பேசத் தெரியாத மனிதர். ஓபிஎஸ், சமீப காலம் வரை அடிமை வாழ்வு வாழ்ந்து விட்டு இப்போதுதான் அந்த சங்கிலியை கழற்றி விட்டு வந்திருப்பவர். எடப்பாடி பழனிச்சாமி, அவரின் சங்கிலியை இன்னமும் கழற்றாமல் பூட்டின் சாவியை இன்னொரு எஜமானனிடம் கொடுத்து விட்டு அமர்ந்திருப்பவர். ராமதாஸ் சாதியவாதத்தை, சாதிய வன்முறைகளை அடிக்கல்லாக வைத்து தன் அரசியலை கட்டமைத்து இருப்பவர், சீமான், இனவாதம், சாதியவாதம் மற்றும் பிற்போக்குக் கொள்கைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர். சுற்றி இவர்களைப் பார்க்கும் போதுதான் கலைஞரின் அருமை தெரிய வருகிறது. தொண்ணூறுகள் தாண்டியும் தொடர்ந்து பொது வாழ்வில் பங்கெடுத்துக் கொண்டு தொடர்ந்து கொடுத்து வரும் அவரின் கடும் உழைப்பையும் வியக்க வைக்கிறது.

பிரச்சனைகளும் இல்லாமலில்லைதான். சர்ச்சைகள், ஊழல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்றெல்லாம் அவர் வாழ்வு தோறும் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் என்ன? இத்தனை நீண்டதொரு வாழ்வில், நீண்ட அரசியல் பங்கெடுப்பில், அதுவும் இந்தியாவில், இந்த மாதிரி சர்ச்சைகள் இல்லாமல் யாராலும் இருந்திருக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

அவரை நீங்கள் விரும்புகிறீர்களோ வெறுக்கிறீர்களோ, ஆனால் இந்த மனிதர் தமிழை விரும்புகிறார், இலக்கியத்தை ரசிக்கிறார், ஜனநாயகத்தை, சமூக நீதியை, பெண்ணியத்தை, ஊடக சுதந்திரத்தை, கூட்டாட்சி தத்துவத்தை, பகுத்தறிவை இவற்றை எல்லாம் மதிக்கிறார். ரசிக்கிறார்.

எல்லாவற்றை விட வாழ்வை ரசிக்கிறார்; அனுபவிக்கிறார்; வாழ்கிறார்.

அந்த ரசிகனுக்கு, இந்தியாவின் இளம் அரசியல் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.