Sunday 8 February 2015

ஷமிதாப்


படத்தின் பாத்திரங்களை விட்டு விலகி அதன் நடிகர்களைப் பற்றியே பேசும் படங்கள் நம் ஊரில் கொஞ்சம் அதிகம். குறிப்பாக ஷாருக் கான், ரஜினி காந்த் ஆகியோர்  தேர்ந்தவர்கள். இருவரின் படங்களிலும் அவர்களின் முந்தைய படங்களில் இருந்து வசன வரிகள், குறிப்புகள் எடுத்து உபயோகிப்பது அவர்கள் ரசிகர்களை கிளுகிளுப்படைய வைத்து கை தட்டல்களை அள்ளுகிறது. இந்த மாதிரி self-referencing  வரிசையில் அடுத்த மைல் கல் ஷமிதாப். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நீங்கள் உங்களை சற்று தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் பார்க்கப் போவது அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் அவர்கள் தன் சொந்தப் பத்திரமாகவே நடிக்கும் படம், எனவே அவர்களின் ஆளுமை பற்றிய குறியீடுகள் நிறைய வரப் போகிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் படத்தை பெருமளவு ரசிப்பதில் பிரச்சனை இருக்காது.

அதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவோ என்னவோ, இயக்குனர் பால்கி படத்தில் பாத்திரங்களின் பெயரை உண்மைக்கு மிக அருகில் வைத்திருக்கிறார். தனுஷின் பாத்திரத்தின் பெயர் டானிஷ். மும்பைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த டானிஷ் ஒரு ஊமை. ஆனால் சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும்  பெரும் காதல் கொண்டவன். பச்சன் பாத்திரத்தின் பெயர் அமிதாப் சின்ஹா. வாழ்க்கையில் பெரும் தோல்வியுற்ற அமிதாப் ஒரு கல்லறை ஓரம் உள்ள சிறிய வீட்டில் அதன் வெட்டியானுடன் வசிக்கிறார். அதாவது ‘one foot in the grave’ என்று சொல்வார்களே அந்த மாதிரி.அமிதாப் இள வயதில் சினிமா வாய்ப்புகள் தேடி தோற்றுப் போனவன். அக்ஷரா ஹாசன் பாத்திரத்தின் பெயர் அக்ஷரா, டானிஷின் திறமையை முதல் முதலில் புரிந்து கொண்ட ஒருஒரு உதவி இயக்குனர். தன் உதவி இயக்குனர் வேலையை ‘கண்டுக்காமல்’ டானிஷுக்காக வாய்ப்பு தேடி அலைகிறார். அமிதாபின் குரல் ரொம்ப பிடித்துப் போய் அவரை  டானிஷுக்காக டப்பிங் கொடுக்க வேண்டி கேட்டுஅக்ஷரா அலைகிறார். இந்த ‘டப்பிங்’சமாசாரம்  கொஞ்சம் வித்யாசமானது. தனுஷின் குரல் வளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து அதில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரை பொருத்தி அதனோடு Bluetooth இணைப்பில் வேறொருவர் பேச அந்தக் குரல் தனுஷின் குரல் வளையில்  பதிவாகி அவர் குரல் போலவே திரும்பி ஒலிக்கிறது.இது ஃபின்லாந்தில் உருவான  புதியதொரு டெக்னாலஜி. இதற்காக கிராமத்தில் வளர்ந்த ஏழை டானிஷ் எப்படி பின்லாந்து போனான், இந்த டெக்னாலஜியை எப்படி யாருக்குமே தெரியாமல் மறைத்து உபயோகிக்க அவர்களால் முடியும் என்கிற கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.

ஏனென்றால் பால்கி-க்கே கூட அந்தக் கவலைகளெல்லாம் இருந்த மாதிரி தெரியவில்லை. ஆகா, தனுஷ்-க்கு பச்சன் டப்பிங் பண்ணும் நிலை வந்தால் எப்படி இருக்கும், அதை வைத்து என்னவெல்லாம் சுவாரஸ்யமாக பண்ணலாம் என்கிற சிந்தனை மட்டும்தான் இருந்திருக்கிறது. இதை வைத்து என்னென்ன வசனங்கள் எழுதலாம், என்ன மாதிரி காட்சிகள் டெவலப் ஆகும் என்று மட்டும்தான் யோசித்திருக்கிறார். உதாரணத்துக்கு தன் சொந்தக் குரலிலேயே டானிஷ் பேசுவதைக் கேட்டு முதன் முதலில் அமிதாப் அதிர்ச்சிக் குள்ளாகிறார். ‘உங்கள் குரல் இவன் வாயிலிருந்து வந்தால் நன்றாக இருக்கிறது இல்லையா?’ என்று அக்ஷரா கேட்கிறாள். அவளை முறைத்து விட்டு அமிதாப் ‘இந்தக் குரல் ஒரு நாயின் வாயில் இருந்து வந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்.’ என்கிறார். அரங்கத்தில் பார்வையாளர்கள் கூச்சலிட்டு குதூகலிக்கிறார்கள்.

இந்த மாதிரி காட்சி அமைப்புகள்தான் பால்கியின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. ஆகவே இந்த மாதிரி நிறைய காட்சிகள், வசனங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. தொடர்ந்து பார்வையாளர்கள் குதூகலிக்கிறார்கள். படம் முழுக்க பச்சனைத்தான் குறிப்பிடுகிறோம், அமிதாப் சின்ஹா என்கிற பாத்திரத்தை அல்ல என்பதில் பால்கிக்கு குழப்பமோ, தயக்கமோ இருக்கவில்லை. அவருக்கே அந்தத் தெளிவு இருக்கும் போது பார்வையாளனுக்கும் அது பற்றிய குழப்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு இன்னொரு காட்சியில் டானிஷ் அமிதாப் சின்ஹாவை நன்றாக அடித்து விடுகிறான். அந்தக் காட்சி முழுக்க வெறும்  தனுஷ் முகம் மட்டுமே காட்டப் படுகிறது. ஏனெனில் தனுஷ் பச்சனை அடிப்பதை நேரடியாக காட்ட முடியாதல்லவா?

இந்தத் தெளிவை நானும் பெற்று விட்டதால் படத்தை சந்தோஷமாக ரசிப்பதில் எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருக்கவில்லை. அதுவும் தனுஷும் பச்சனும் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சப் போடும் போட்டிகள் மற்றும் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது எல்லாம் பெரும் குதூகலத்தை ஊட்டின.

என்ன, ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் போட்டா போட்டி கொஞ்சம் அலுக்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இரண்டு பேரின் அற்புதமான நடிப்பினால் கொஞ்சம் அந்த அலுப்பை சரிக்கட்டி விட்டார்கள். அதற்கு மிகவும் உதவிய ஒரு ஆளைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்: இளையராஜா. இந்த மனுசனுக்கு வயசே ஆகாதா என்று கேட்கும் அளவுக்கு வசீகரமான பாடல்கள் மற்றும் நெஞ்சை வருடும் பின்னணி இசையில் சும்மா விளையாடி விட்டார். 

இந்த சந்தோஷப் பயணத்தை உடைக்கும் விபத்து என்ன என்றால்  க்ளைமேக்ஸ்-தான். இந்த மாதிரியான ஒரு மெல்லிய, குறும்பான ஒரு படத்துக்கு அப்படி ஒரு கனமான முடிவு தேவைதானா என்ற கேள்வியை எழுப்பியது. படம் தன்னைத்தானே ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாத வரை நன்றாக இருந்தது. திடீரென்று பால்கி, நான் ஏதோ காவியம் படைக்கிறேனாக்கும் என்று ஆரம்பித்த உடனே உடைந்து விட்டது. நல்ல வேளை, க்ளைமேக்ஸுக்கு மிக அருகில்தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தாரோ, நாம் தப்பித்தோமோ!