Saturday 16 February 2019

ராமலிங்கங்கள் பற்றி எழுதுதல்

.

பிரதமர் மோடி ஊடக சந்திப்புகள் நடத்தாமல் இருப்பது பற்றிய என் பதிவில் ஒரு நண்பர் வந்து ‘நீ ஏன் ராமலிங்கம் சம்பவம் பற்றி எழுதவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதாவது நான் ராமலிங்கம் பற்றி எழுதாமல் போனதால்தான் மோடி கோபித்துக் கொண்டு நிருபர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு அந்த கமெண்ட் இருந்தது.

இந்த மாதிரி பேசுவதை Whataboutism அல்லது Whataboutery என்று அழைப்பார்கள். மதவாத வலதுசாரிகள் உலகெங்கும் பின்பற்றும் உத்தி இது. குஜராத் கலவரத்தை கேட்டால் ‘சீக்கியர் படுகொலை பற்றி கேட்டாயா?’ (What about Sikh massacre?’) என்று கேட்பது. ரஃபேல் பற்றிக் கேட்டால் ‘போஃபர்ஸ் பற்றிக் கேட்டாயா?’ என்று கேட்பது. அதாவது ‘What about this?’ என்ற மறு கேள்வியே முந்தைய கேள்விக்கு பதிலாக இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது (1).

இதனை இந்துத்துவ / பாஜக அபிமானிகள் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு மட்டுமே இதில் பங்கில்லை. எல்லாத்தரப்பினரும் இந்த Whatabouteryஐ பின்பற்றுகிறார்கள். பர்தா பற்றிய என் பதிவுகளில் சில முஸ்லிம்கள் வந்து வடஇந்தியாவில் இந்துப்பெண்களும் முக்காடு போட்டுக் கொள்கிறார்களே அதைக் கேட்டாயா? என்று வினவினார்கள்.

ராமலிங்கம் பற்றி நான் எழுதாததற்கு காரணம் அது மதமாற்றத்தை எதிர்த்ததால் வந்த கொலையா அல்லது வேறு தகராறில் நடந்த கொலையா என்பதே எனக்கு முதல் இரண்டு நாட்கள் குழப்பமாக இருந்தது. அப்புறம் மதமாற்றத்தால் நடந்த கொலை என்றால் அதில் எதனை கண்டிப்பது என்பது புரியவில்லை. மதமாற்றத்தை கண்டிப்பதா? அல்லது சில முஸ்லிம்கள் மதத்துக்காக கொலையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பதா? இந்துத்துவ அபிமானிகளுக்கு மதமாற்றம்தான் பிரச்சனையாக இருக்கிறது.

மதமாற்றம் என்பது கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு நம் அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமை. அது சலுகை அல்ல. தவிர, அந்த உரிமை தானாகவே கூட வழங்கப்படவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு அமுலில் இருந்த மதவாத தொகுதி ஒதுக்கீட்டு முறைமையை (Communal Electorate) ரத்து செய்ய ஒப்புக்கொள்வதற்காக சிறும்பான்மை பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை (2). இது சலுகை என்று சொல்பவர்கள் ‘இந்தியா ஒரு இந்து தேசம். இங்கே மதபோதகம் செய்ய அடுத்தவர்களுக்கு உரிமை இல்லை,’ என்று நம்புபவர்கள். இஸ்லாமும், கிறித்துவமும் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் இங்கே பின்பற்றப்பட்டு வருகின்றன, எனவே இந்து மதத்துக்கு இருக்கும் அதே உரிமை இஸ்லாம் மற்றும் கிறித்துவத்துக்கும் இருக்கிறது என்பதை வேறு ஒரு பதிவில் விளக்கி இருக்கிறேன். (3)

அப்படியானால் கொலை செய்யலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாக செய்யக்கூடாதுதான். அதே மாதிரி கிறித்துவ மத போதகர்கள் இந்துக் கடவுளர்களை அவமதித்து, கிண்டலடித்து போதனைகள் செய்வதும் தவறுதான். ஒரு வீடியோவில் கிறித்துவ போதகர் ஒருவர் தமிழகத்தில் உள்ள கோயில்கள் சாத்தானின் உறைவிடங்கள் என்று பேசிய வீடியோ சில மாதங்கள் முன்பு வைரல் ஆனது. இந்த மாதிரி ஆட்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஏன் கொலையாளிகள், வன்புணர்வாளர்கள், மதவெறியர்கள் இந்து மதத்தில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? வேற்று மதத்தில் கொலைகாரர்கள் இருந்தால் மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது? ராமலிங்கத்துக்காக அப்படி கண்ணீர் வடித்த நீங்கள் அக்லாக்குக்காக எவ்வளவு சொட்டு கண்ணீர் வடித்தீர்கள் என்று நான் கேட்கலாமா? மதமாற்றத்தை கண்டித்த நீங்கள் கர்-வாப்ஸி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? (இத்தனைக்கும் கர்-வாப்ஸி எனும் தாய் மதம் திரும்பும் சடங்கு இந்து மத மரபிலேயே கிடையாது.)

அப்படி நான் கேட்க முடியாது. கேட்டால் நானும் மற்றவர்களைப் போலவே Whatboutery செய்வது மாதிரி ஆகி விடும்.

அக்லாக் சம்பவம் நடந்த போது நான் அந்த சம்பவத்தைப் பற்றி நேரடியாக எழுதாமல் மாட்டுக்கறி உண்ணும் பண்டைய இந்திய மரபு பற்றி வரலாற்றுக்குறிப்புகளுடன் ஒரு பதிவு எழுதினேன் (4). கேரள பாதிரி ஒருவர் பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போது பழைய போப் ஆண்டவர்கள் முதல் இதில் சம்பந்தப்பட்டது பற்றியும் இந்த ‘கிறித்துவ சாமியார்’ சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் எழுதினேன். அதே போல ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடந்த போது வஹாபிஸம் பற்றி நீள் பதிவு எழுதினேன் (4).

எனக்கு இந்த மாதிரி ஆதார சிஸ்டங்களை அலசுவது மட்டுமே உவப்பாக இருக்கிறது. அதனால்தான் தனிப்பட்ட சம்பவங்களை விட பொதுவான தத்துவ ரீதியான வளர்ச்சி மற்றும் அழிவுகள் என்னை ஈர்க்கின்றன. Macro currents more significantly important than micro incidents. அதனால்தான் ஒரு ராமலிங்கம் விஷயமோ அல்லது ஒரு லோக்கல் பாஜக தலைவர் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேசுவதோ தனியாக பின்பற்றி பதிவுகள் எழுதுவது எனக்கு உகந்ததாக இருப்பதில்லை. அவற்றில் சொல்வதற்கு எனக்கு பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை.

வஹாபிஸம் உலக அளவில் பரவுவதும், அது இஸ்லாமிய சமூகத்துக்கு வில்லனாக இயங்குவதும் கவலை தருகிறது. அதே போல, இந்துத்துவம் இந்து சமூகத்துக்கு அழிவாக வருவது கவலை தருகிறது. இந்துத்துவம், வஹாபிஸம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று கண்ணாடி பிம்பங்கள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆனால் இந்துத்துவத்தை குறிப்பாக அதிக அளவில் விமர்சிக்கிறேன். காரணம், அதுதான் இப்போது அதிகாரத்தில் இருக்கிறது. அது பெரும்பான்மை மதத்தை சார்ந்து இருக்கிறது. தேசத்தின் மாபெரும் ஒரு கட்சியின் ஆதாரக் கொள்கையாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் இந்துத்துவ சிந்தனை அரங்கேற்றிய சம்பவங்களில் இறந்த அப்பாவிகள் எண்ணிக்கை இஸ்லாமிய தீவிரவாத சம்பவங்களில் இறந்தோரை விட பன்மடங்கு அதிகம்.

அதே போல இன்று இந்தியாவில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கோ, வளர்ச்சி திட்டங்கள் தீட்டுவதற்கோ, பாடத்திட்டங்களை முடிவு செய்வதற்கோ வஹாபிஸ்ட்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏன் சாதாரண முஸ்லிம்களுக்கு கூட அரசியல் அதிகாரம் இல்லாத அளவுக்கு போய்க்கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்த அதிகாரங்கள் எல்லாம் இந்துத்துவ சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. வரலாற்று ஆய்வு முதல் பாடத்திட்டங்கள் வரையறை செய்யும் குழு வரை இந்துத்துவ சிந்தனையாளர்கள் தலைமை வகிக்கிறார்கள். இந்துத்துவத்தை வாழ்நாள் முழுவதும் முழு மூச்சுடன் எதிர்த்து வந்த நேருவின் நினைவு நிலையத்தின் இன்றைய இயக்குனர் ஒரு ஆர்எஸ்எஸ் அனுதாபி. அந்த அளவுக்கு இந்துத்துவம் இங்கே வேர் கொண்டிருக்கிறது.

இவை எல்லாமே இந்தியாவுக்கு ஆபத்தான விஷயங்கள். இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் முஸ்லிம்கள் மட்டும்தான் என்று நம்பும் இந்த illiteracy சுதந்திர இந்தியாவுக்கு வந்திருக்கும் மாபெரும் நோய். இதனை தொடர்ந்து கண்டிக்காமல் விட்டால் இந்த நோய் முற்றி குணமாக்கவே முடியாத நிலைக்கு போய் விடும்.

ஆகவேதான் இந்துத்துவத்தை குறி வைத்து தொடர்ந்து எழுதி வருகிறேன். ஊழலோ, பொருளாதாரக் கொள்கையோ, வளர்ச்சி திட்டங்களோ, அடிக்கடி நடக்கும் தீவிரவாத சம்பவங்களோ இவற்றில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. மோடி பெருசா, மன்மோகன் பெருசா என்று தனிப்பட்ட ஆட்சியாளர்கள் இடையில் ஒப்பீட்டு விவாதம் நடத்தலாம். ஆனால் கட்சி அளவில் இருவரும் பெரிய வித்தியாசம் இன்றிதான் இயங்கி வருகிறார்கள். இருக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் இந்துத்துவம். அதனால்தான் அதனை சிறப்பாக தேர்ந்தெடுத்து விமர்சிக்க வேண்டி இருக்கிறது. அதைப்பார்த்து அதிகமாக பயப்பட வேண்டி இருக்கிறது.

எனவே இந்த WhatAbouteryஐ நிறுத்தும் வரை நமக்கு விமோசனமில்லை. இது நம் சிந்தனையை குறுக்கி கோபத்தை, அர்த்தமற்ற விரோதத்தை மட்டுமே வளர்க்க உதவும் கருவி. அடுத்த முறை ஒரு விவாதத்தை எதிர்கொள்வதற்கு முன்பு நாம் WhatAbouteryஐ அங்கே பயன்படுத்துகிறோமா என்று யோசித்துக் கொள்வோம். தரமான சிந்தனைக்கும், விவாதத்துக்கும் முயற்சி செய்வோம். தேசம் என்ன ஆகிறதோ இல்லையோ, நம் சுய வளர்ச்சிக்கு அது நன்கு உதவும்.



1) Whataboutery for Dummies - https://www.youtube.com/watch?v=H91QUGgsPBU
2) Question of Representation - https://www.thehindu.com/opinion/op-ed/questions-of-representation/article23930516.ece
3) இந்திய மதங்கள் - https://www.facebook.com/sridharfc/posts/10155558982456473
4) ‘மாட்டுக்கறி’ மற்றும் ‘வஹாபிஸமும் ஷிர்க் ஒழிப்பும்’ இரண்டு கட்டுரைகளும் என் முதல் புத்தகம் ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகத்தில் இருக்கிறது.



Saturday 9 February 2019

புர்காவும் பிகினியும்



ரஹ்மான் மகள் கதிஜா நிகாப் அணிந்து கொண்டது பற்றிய என் பதிவு பெரும் அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது. அது குறித்து கொஞ்சம் விரிவாகப் பேசலாம் என்று நினைத்தேன். 

முதலில் ஒரு சிறிய விளக்கம்: தலையை மட்டும் ஒரு துணியால் சுற்றிக்கொள்ளும் ஆடைக்கு ஹிஜாப் என்று பெயர். முகம் மறைத்து கண்கள் மட்டும் தெரியும் ஆடைக்கு ‘நிகாப்’ என்று பெயர். கண்களும் மறைக்கும் முழு ஆடைக்கு புர்கா என்று பெயர். இது பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய தேசங்களில் பின்பற்றப்படுகிறது. 

இரண்டாவது, அந்தப்பதிவு ரஹ்மான் பற்றியது அல்ல. தான் எந்த அளவுக்கு மதக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனும் சுதந்திரத்தை தன் குடும்பத்தினருக்கு அவர் வழங்கியே இருக்கிறார் என்று நம்புகிறேன். கதிஜாவும் சுயமாக விரும்பியே நிகாபை அணிந்து கொண்டிருப்பதாக தெளிவு படுத்தி இருக்கிறார். என் விமர்சனம் அவர் பற்றியோ அல்லது ரஹ்மான் பற்றியோ அல்ல. 

என் விமர்சனம் நிகாப் மற்றும் அதனை வலியுறுத்த முயலும் மதக்கட்டுப்பாடுகள் குறித்துதான். இந்த ஆடையை அணிய வலியுறுத்துவதன் தீவிரம் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. தலிபான், ஐஎஸ், அல்லது போகோ ஹராம் போன்ற தீவிரவாத இயக்கங்களின்  கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் முழு புர்கா அணியாத பெண்கள் பிரம்படி பெறுவார்கள். சற்றே கோபமாக இந்தக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் பெண்கள் கல்லடி பெற்று இறக்கவும் நேரிடலாம். ஈரான் போன்ற தேசங்களில் ஹிஜாப் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த மாதிரி ஆடைகளை வெளிப்படையாக தடை செய்துள்ள இஸ்லாமிய பெரும்பான்மை தேசம் துருக்கி மட்டும்தான். அதற்கு அங்கே மதச்சார்பின்மையை வலுக்கட்டாயமாக கொண்டு வந்த கேமல் அடதுர்க் முக்கியக் காரணம். ஏறக்குறைய இந்தியாவுக்கு நேரு மாதிரி இவர் துருக்கிக்கு. 

இவற்றை தடை செய்திருக்கும் இன்னொரு இஸ்லாமிய நாடு ‘சாத்’ எனும் குறு ஆப்பிரிக்க தேசம். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,  போன்ற நிறைய ஐரோப்பிய தேசங்களில் இந்த வகை ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

நிகாப் பற்றி குர்-ஆனில் தெளிவான, வெளிப்படையான வலியுறுத்தல் இல்லை. பின்வரும் வரிகளை பொதுவாக குறிப்பிடுகிறார்கள்:

'Prophet, tell your wives, daughters and women believers to make their outer garments hang low over them. This will make it more likely that they will be recognised and not insulted.' (33:59)

அதே போல இன்னொரு இடத்தில், நெருங்கிய ஆண் உறவினர்களைத்தவிர வேறு எவரிடத்தும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது:

'Tell believing women that they should lower their eyes and guard their private parts and not reveal their charms beyond what to reveal.' (24:31)

இதில் ‘தஹாரா’ எனும் அரேபிய வார்த்தை  ‘காட்டுவது’, ‘வெளிப்படுத்துவது’  என்ற பொதுவான வார்த்தையாகையால் எந்த அளவு வெளிக்காட்டுவது என்பதில் கொஞ்சம் குழப்பம் தெரிகிறது. வழக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட வரிகளை ஹதீத் எனும் இன்னொரு நூலில் உள்ள குறிப்பிட்ட சில வரிகளுடன் சேர்த்து பார்க்கிறார்கள். அதில் முகம் மற்றும் கைகளை மட்டும் வெளிக்காட்ட வேண்டும் என்று இருக்கிறது.++

எனவே குர்-ஆனை வைத்துப் பார்த்தாலும் அல்லது ஹதீத்தை வைத்துப் பார்த்தாலும் முகம் முழுவதையும் மூடுவதற்கு மார்க்கத்தில் தெளிவான வலியுறுத்தல் இல்லை. குர்-ஆன் இறைவன் கொடுத்த வேதம்; ஹதீத் நபிகள் நாயகத்தின் வாழ்வு நெறிகளை தொகுத்தது. அதாவது ஏக இறைவன் மற்றும் அவனின் தூதர் நபிகள் இருவருமே இதனை வலியுறுத்தவில்லை.

முகத்தை மூடும் வழக்கம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. இது முக்கியமாக ஆப்கானிய, எகிப்திய மற்றும் ஓரிரு அரேபிய பழங்குடிகளிடம் இருந்திருக்கிறது. இது பற்றிய குறிப்புகள் (பழைய ஏற்பாட்டு) பைபிளிலும் காணப்படுகின்றன. இஸ்லாத்துக்கு முன்பு இந்தப்பகுதிகளுக்கு பயணித்த ரோமானிய பயணிகளும் இது குறித்து குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள். 



இந்த மாதிரி வழக்கம் இந்துக்களிடமும் இருக்கிறது. வடஇந்தியாவில், குறிப்பாக ‘ஹிந்தி பெல்ட்’ என்று அழைக்கப்படும் பிராந்தியங்களில் மணமான பெண்கள் தலையை மூடி, பாதி முகத்தை மூடிக் கொண்டு இருக்கும் ‘கூங்கட்’ எனும் முக்காடு பரவலாக வழக்கத்தில் இருக்கிறது. பண்டைய இலக்கியங்களிலும் இது குறித்து குறிப்புகள் இருக்கிறது.

நிகாப் மற்றும் புர்கா இரண்டுமே சில மத்திய கிழக்கு  ஆசியாவின் சில பழங்குடியினர் இடையில் நிலவி வந்த பழக்கம். இந்தப்பகுதிகளில் இஸ்லாம் தலையெடுத்ததால் இவை இஸ்லாமிய பழக்கமாக பரவலாக நம்பப்பட்டு விட்டது. சலாஃபிசம் மற்றும் வஹாபிஸம் மாதிரி சில தீவிரவாத இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மட்டுமே நிகாப், புர்கா இரண்டையும் கட்டாயமாக வலியுறுத்துகிறார்கள். வஹாபிஸம் போற்றும் தாலிபான், சவூதி மதவாதிகள், போகோ ஹராம் உலகெங்கும் போகுமிடமெல்லாம் நிகாப், புர்கா போன்றவற்றை கட்டாயமாக்கி இருந்ததில் இது ஏறக்குறைய வஹாபிஸத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறி விட்டிருக்கிறது என்று இல்ஹாம் மனேயா எனும் ஆய்வாளர் கூறுகிறார். பல இஸ்லாமிய தேசங்களை சமூகப்பொருளாதார ரீதியாக நாசம் செய்த வஹாபிஸத்தின் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த நிகாப் மற்றும் புர்கா இரண்டுமே.

அதாவது இன்றைக்கு தலித் ஒருவர் ஊரைத் தாண்டி ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்து ‘உயர் சாதியினர்’ முன்பு துண்டை இடுப்பில் கட்டி அவர்கள் தெருவுக்குள் புகாமல் வாழ்ந்து ‘இது நானே விரும்பி ஏற்றுக்கொண்டது. வர்ணாசிரம தர்மத்தின் மேல் எனக்கு இருக்கும் மரியாதையால் நான் இதை செய்கிறேன்,’ என்று சொன்னால் என்ன செய்வோம்? அல்லது கணவனை இழந்த ஒரு இளம்பெண் மொட்டை அடித்துக்கொண்டு வெள்ளையுடை அணிந்து ‘இது என் விருப்பம்,’ என்றாலோ என்ன சொல்வோம்? கண்டிப்பாக அந்தப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வண்ண உடை அணிவிக்க மாட்டோம்தான். ஆனால் அதனை freedom of choice என்று புகழ மாட்டோம். (நான் அந்தப்பெண்ணின் தந்தையாக இருந்தால் அவளை psychological counselling க்கு அனுப்ப முயற்சி செய்வேன்.)

இந்த வாதத்தை நான் துவங்கியதும் உடனே பிகினி போடுகிறார்களே  அவர்களை கேள்வி கேட்டீர்களா என்று எதிர்வாதம் வருகிறது. பிகினியை ஒரு மதத்துடன் இணைத்து இந்த மதத்தில் பெண்கள் பிகினி போட்டுக்கொண்டுதான் வெளியே வர வேண்டும். சுடிதார் அல்லது புடவை கட்டி வரும் பெண் மானங்கெட்டவள். செக்ஸுக்கு அலைபவள் என்று பிரச்சாரங்கள் நடக்கவில்லை. அப்படி நடந்தால் அந்த நிலையை கண்டிப்பாக எதிர்த்திருப்பேன்.

ஆனால் ஒரு விஷயம்: இப்படி கேள்வி கேட்பவர்கள் ‘டி-ஷர்ட், ஜீன்ஸ் போட்ட பெண்’ என்று சொல்வதில்லை. ஒப்பீடு நேரடியாக பிகினிக்கு போய் விடுகிறது. அப்போதுதானே வசதியாக இருக்கும்? நிர்வாணம் என்கிற வார்த்தையை அங்கே கொண்டு அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி புர்காவுக்குள் திணிக்க முடியும்! ஒரு பெண் ஒன்று நிகாப் அணிய வேண்டும், இல்லையேல் அவள் பிகினி அணிய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? எனக்கு நிகாப் வேண்டாம், டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் எனக்கு வசதியாக இருக்கிறது என்று சொல்லும் ஒரு பெண் பற்றிய நமது கருத்து என்ன? 

என்னைப்பொருத்த வரை பிகினியோ, டிஷர்ட்டோ, நவீன, வசதியான உடை அணியும் பெண்ணைத்தான் சுதந்திரப் பெண்ணாக பார்க்க விரும்புகிறேன். பண்டைய உடையை, அதுவும் பாலியல் ஒடுக்குமுறையை வலியுறுத்திய உடையை அணியும் பெண் freedom of choice பற்றி பேசலாம். ஆனால் அங்கே உண்மையில் freedom இருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க சிந்தனையாளர் வில்லியம் ஜேம்ஸ் சொன்னது போல ‘A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.’ பெண்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதில் பெரும்பாலான விஷயங்கள் ஆணாதிக்க அடக்குமுறை வலியுறுத்தல்கள் என்பது ஆண்களுக்கே நிறைய நேரம் புரிவதில்லை. 

எனவே, வெள்ளை ஆடை அணிந்த விதவைப்பெண் ‘பெண் முன்னேற்றம்’ மற்றும் ‘தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்’ பற்றி பேசுவது பொருந்தாது. அவள் நூற்றாண்டு கால அடக்குமுறையை, பாலியல் தனிமைப்படுத்தலையே மறுஉறுதி செய்கிறாள்.

நவீன ஆடைகள் அணியும் பெண் தனக்கு விதிக்கப்பட்ட கட்டுமானங்களில் இருந்து ஒன்றை தாண்டி முன்னேறுகிறாள். தனக்கு தடை செய்யப்பட்ட ஒன்றை செய்கிறாள். மேல் சட்டையே அணியக்கூடாது என்ற நிலையை மீற கோட் சூட் போட ஆரம்பித்த அம்பேத்கர் செய்ததும் அதுதான். மேல் சட்டை போடாமல் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு அம்பேத்கரால் தலித்தியம் பேசி இருந்திருக்க முடியாது. அது போல்தான் பெண் முன்னேற்றம் தனக்கு விதிக்கப்பட்ட தளைகளை ஒவ்வொன்றாக உடைப்பதில் இருக்கிறது. 

‘லலிதாவிஸ்தார சூத்திரம்’ என்ற பண்டைய இந்திய இலக்கியத்தில் யசோதரா எனும் பெண் கூங்கட் எனும் முக்காடு அணிய மறுக்கிறாள். அதனால் அவள் ஒழுக்கம் கெட்டவளாக எல்லாராலும் இகழப்படுகிறாள். அப்போது அவள் அரசவைக்கு வந்து தைரியமாக அரசனிடம் முறையிடுகிறாள். ‘தங்கள் எண்ணங்களுக்கு முக்காடு போட்டு மூடி வைக்காதவர்கள் தங்கள் உடலுக்கு ஆயிரம் உடைகளை போட்டுக்கொண்டாலும் நிர்வாணமாகவே இருக்கிறார்கள். மாறாக, தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருவனுக்கு மட்டும் தன் காதலை கொடுத்துக் கொண்டவர்களுக்கு எதற்கு முக்காடு தேவை?’ என்று கேட்கிறாள்.

அதே வாதத்தின் நீட்சியாகவே பிகினியையும் பெண் முன்னேற்றத்தின், பெண்ணியத்தின்  அங்கமாகக் கருத முனைகிறேன். படிப்பது, வேலைக்குப் போவது போன்றவைதான் முன்னேற்றம் என்று சொல்லலாம். அதுவும்தான், ஆனால் அது மட்டுமே என்று கோடு போடுவதில்தான் நாம் நமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைகிறோம். நிகாப் என்கிற விஷயம் மனிதியின் அடிப்படை விஷயமான அடையாளத்தையே பறிப்பது. அவளை முகம் முதல் கட்டை விரல் வரை பாலியல் அடையாளமாக பார்க்க முனைவது. உன் அடையாளத்தை நீ விலக்கிக் கொண்டால் நீ மதிக்கத் தக்கவள்; இல்லையேல் நீ மதிப்பிழந்தவள் என்று சொல்ல முனையும் ஆணாதிக்க அரசியல் அது. இங்கே விவாதத்தில் பிகினியை கொண்டு வருவதன் பின்னணியும் அதுதான். ஒன்று முழுவதும் மூடும் ஆடை, இல்லையேல் நீ நிர்வாணம் என்று கட்டமைக்க முனைதல்; அதன் மூலம் சம்பந்தப்பெண்ணை கூச வைத்து கட்டுப்பாடுகளை பின்பற்ற தள்ளுதல். 

அதுவுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தேசங்களில் கூட அந்த ஊர் பெண்கள் வேலையிடத்திலோ அல்லது வீட்டு விசேஷங்களிலோ பிகினி போட்டுக்கொண்டு அலைவதில்லை. பொதுவாக அலுவலகத்துக்கு  சூட் அல்லது வெளியிடங்களில் டி-ஷர்ட், ஜீன்ஸ் என்றுதான் சுற்றுகிறார்கள்.
அவர்கள் நீச்சலுக்குப் போகும் போதோ அல்லது பீச் விடுமுறைகளிலோ மட்டுமே பிகினி அணிகிறார்கள். (பீச் விடுமுறைகள் பெரும்பாலும் கோடை காலத்தில் போகிறார்கள். அப்போது sunbath என்று அழைக்கப்படும் சூரியக்குளியலுக்காக உடலை முடிந்த அளவு சூரிய ஒளி பெறுவதற்காக திறந்து வைத்து இருக்க வேண்டி இருக்கிறது.)

நீச்சலுக்கு புடவை கட்டியோ, ஹிஜாப் அணிந்தோ போக முடியாது. அதற்கும் ஒரு தீர்வாக ‘புர்கினி’ (Burqa + Bikini) என்று தலை முதல், கால் வரை மறைக்கும் கருப்பு நீச்சல் அங்கி ஒன்று கொண்டு வர முயற்சி செய்தார்கள். நல்லவேளையாக அது பெரிய அளவு பிரபலம் ஆகவில்லை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெண்கள் பிகினியில் அலையும் மேலை நாட்டு பீச்சுகளில் வன்புணர்வு சம்பவங்கள் நடப்பதில்லை. பெண்கள் தலை முதல் கால் வரை மூட சொல்லி வலியுறுத்தும் போகோ ஹராம், ஐஎஸ் கேம்ப்களில்தான் மானாவாரியாக நடக்கிறது. என்ன ட்ரெஸ் போட வேண்டும், எங்கே போக வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்று பெண்களுக்கு ஆயிரத்தெட்டு க்ளாஸ் எடுக்கும் இந்தியாவில் நடக்கிறது.

அதாவது பிரச்சினை  பெண்கள் உடையிலோ, அவர்கள் நடத்தையிலோ இல்லை. பிரச்சினை ஆண்களாகிய நம்மிடம் இருக்கிறது. சதா பெண்களை காம எந்திரமாகவே பார்க்கும் நம் பார்வையில் இருக்கிறது. அப்படி பார்க்க சொல்லி நமக்கு கற்றுக்கொடுக்கும் நம் மதங்களில் இருக்கிறது. அதில் இருந்து நம்மை காப்பாற்றும் பொறுப்பு பெண்களிடம்தான் உள்ளது எனும் நம் கபடத்தனத்தில் இருக்கிறது. நிறைய நேரம் மதம் கூட சொல்லாத ஒரு விஷயத்தை உள்ளே நுழைத்து அதனை பெண்கள் பின்பற்ற வலியுறுத்தும் நம் கள்ளத்தனத்தில் இருக்கிறது. அந்த திட்டத்துக்கு சில பெண்கள் பலியாகும் போது அதற்கு வரும் எதிர்ப்பை சமாளிக்க freedom of choiceஐ வாதத்துக்கு கொண்டு வரும் நம் திறமையில் இருக்கிறது.


++ 'The Qur'an - A new translation' by MAS Abdel Haleem, Oxford University Press, Fourth Edition