Tuesday 28 March 2017

கண்டுகொள்ளப்படாத குழந்தை உரிமைகள்

(இன்றைய  மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு நலத் திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவை கொஞ்சம் கொஞ்சமாக குலைந்து வருகின்றன என்று ழான் த்ரே (Jean Drèze) ஹிண்டுவில் எழுதிய கட்டுரையை அவர் அனுமதியுடன் தமிழில் வழங்குகிறேன்.)



சத்துணவுத் திட்டத்தில் உணவு உட்கொள்ளும் சிறுவர்கள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய சமீபத்திய சுற்றறிக்கை விமர்சனத்துக்கு உள்ளானது நினைவிருக்கும். இதில் சோகம் என்னவென்றால், அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டது என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை அரசுத் தரப்பில் உருவாக்கி விட்டார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

சிறுவர்கள், குழந்தைகள் உரிமையின் மேல் இந்த அரசு தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு அத்தியாயம்தான் இது. மேலும் சில உதாரணங்களை இங்கே பகிர்கிறேன்

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013ன் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூபாய் 6,000 கர்ப்ப கால உதவித் தொகையாக வழங்க வேண்டும். இதனை  கடந்த மூன்று வருடங்களாக செயல்படுத்தாமல் வருகிறார்கள். 2015-16ல் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் ‘ தாயும் சேயும்’ என்கிற முக்கியமான அத்தியாயம் இருக்கிறது. அதில் மகப்பேறு மற்றும் கைக்குழந்தை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் ‘பெரும் பலனைக் கொடுக்கின்றன,’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முந்தைய அரசு ‘இந்திரா  காந்தி மகப்பேறு திட்டம்’ என்று கொண்டு வந்து 53 மாவட்டங்களுக்கு மாதிரி முயற்சியை மேற்கொண்டது. இந்தத் திட்டத்தை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவாக்குவதாக சுப்ரீம் கோர்ட்டுக்கு 2015 அக்டோபர் மாதம் இப்போதைய மத்திய அரசு எழுத்தில் உறுதிமொழி அளித்திருந்தது.

டிசம்பர் 31ம் தேதி உரையில் பிரதமர் நரேந்திர மோடி தேசமெங்கும் கருவுற்ற பெண்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை தனது அரசின் புதிய திட்டமாக பெருமை கொண்டார். விஷயம் என்னவென்றால் இது ஏற்கெனெவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் இருந்ததுதான். இது கூடப் பரவாயில்லை என்று விட்டு விடலாம். பண நீக்கத்தில் பாதிக்கப் பட்டிருந்த மக்களுக்கு ஆறுதலுக்காக அப்படி சொல்கிறார் போல; எப்படி இருந்தாலும் பிரதமரே மகப்பேறு திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் இதில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் வரும் என்று நினைத்தோம்.

ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் வரவில்லை. மத்திய பட்ஜெட்டில் இதற்கு ஒதுக்கியிருக்கும் நிதி 2,700 கோடி மட்டுமே. தேசத்தில் இருக்கும் மொத்த கர்ப்பிணிப் பெண்களில் நான்கில் ஒரு பங்குக்குக் கூடப் போதாது. இதிலும், இந்த நிதியில், 40 சதம் மாநிலங்களின் பட்ஜெட்டில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டம் முதல் முறை கருவுற்ற பெண்களுக்கு மட்டுமே செல்லும் செல்லும் என்று வேறு ஒரு பேச்சு இருக்கிறது. இதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. அதெல்லாம் போக, இன்று வரை இந்தத் திட்டம் எங்கேயும் அமுல் படுத்தப்பட்டதாக தகவல் இல்லை. ஆற அமர திட்டத்தை ஆரம்பித்தால் ஒதுக்கப்பட்ட 2,700ஐ விடக் குறைவாக செலவழித்து விடலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள் போல. பொருளாதார ஆய்வறிக்கையில் ‘கர்ப்ப காலத்தில் சத்துணவுத் தேவையை பூர்த்தி செய்ய முயலும் திட்டம்,’ என்று இதை வர்ணித்ததற்கும் நடைமுறைக்கும் உள்ள சம்பந்தம் இவ்வளவுதான்.

இரண்டாவது விஷயம், முழுமையான குழந்தை வளர்ச்சி சேவைகள் பற்றியது.  2015 வரை இதில்  நல்ல முன்னேற்றம் இருந்தது. இந்த அரசில் முதல் பட்ஜெட்டில் இதற்கான நிதியை 50% வரை குறைத்தார்கள். இது அவர்களின் அமைச்சரவையில் இருந்த மனேகா காந்தியையே கூட விமர்சிக்க வைத்தது. பெண்கள் குழந்தை நலத்துறை அமைச்சரான அவர் ‘நலத்துறை ஊழியர்களை “அடுத்த மாதம் சம்பளம் வருமா,” என்று சஸ்பென்ஸில் வைத்து விட்டோம்!’ என்று புலம்பினார்.

மாநில அரசுகளும் கூட இதனால் பிரச்சனைக்கு உள்ளாகின. ஜூலை 15, 2016ல் ஒரிஸா அரசு மத்திய அரசுக்கு ஒரு  கடிதம் அனுப்பியது.அதில் இந்த பட்ஜெட் குறைப்பால் சத்துணவுக் கூட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாததை குறிப்பிட்டு இருந்தார்கள். ஆரம்பக்கல்வி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு மருந்துகள் விநியோகமும் கூட பாதிக்கப் பட்டத்தை குறிப்பிட்டு இருந்தது.

சத்துணவு விநியோகமும் இதனால் பாதிக்கப் பட்டது. மேலே குறிப்பிட்ட திட்டங்கள் போலவே சத்துணவு திட்டமும் அதிர்ச்சியூட்டும் 36 சதவிகித பட்ஜெட் வெட்டை சந்தித்தது. பண மதிப்பில் 10,000 கோடி ரூபாய் நான்கு வருடத்துக்கு முந்தைய ஒதுக்கீட்டை விட 25 சதம் கம்மி (உண்மையான நேரடிக் கணக்கில் இன்னமும் குறைவாக வரும்.)

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த சத்துணவுத் திட்டத்துக்கு மாநில அரசுகளின் பங்கும் இருக்கும். அந்தப் பங்கை 32%ல் இருந்து 42% ஆக ஏற்றி விட்டார்கள். இதில்  விஷயம் என்னவென்றால் ஏன் சிறுவர்கள் நலத் திட்டங்கள் மட்டுமே இவ்வளவு பாதிப்புக்கு உள்ளானது என்பது புரியவில்லை. (குடிநீர், சுகாதாரம் தவிர வேறு எந்தத் திட்டமும் இந்த அளவு பட்ஜெட் வெட்டை சந்திக்கவில்லை.)

அடுத்தது பாதிக்கப் பட்டது முட்டை: .நிறைய மாநில அரசுகள் இப்போது சத்துணவில் முட்டை சேர்த்துப் போடுகின்றன. முட்டை மூலம் பல்வேறு ஊட்ட சத்துகள் சிறுவர்களுக்கு கிடைப்பதால் இது ஒரு அற்புதமான திட்டம். இதனை  தேசிய அளவில் செயல்படுத்தி இருந்திருந்தால் கோடிக்கணக்கில் சிறுவர்கள் பயன் பெற்று உடல்நல முன்னேற்றம் கண்டிருப்பார்கள். ஆனால், இங்கேதான் சுவாரஸ்யமான விஷயம்: சத்துணவில் முட்டை  போடாத மாநிலங்களில் முக்கால்வாசி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்தான். அதே போல, முட்டை சேர்க்கும் மாநிலங்களில் முக்கால்வாசி பிற கட்சிகள் ஆட்சி செய்பவைதான். வடமாநிலங்களில் அவர்களுக்கு இருக்கும் சைவ உயர்சாதியினரை திருப்திப் படுத்தவே இப்படி செய்கிறார்கள் என்பது கண்கூடு. இந்த விஷயத்தில் பதில் சொல்ல இயலாமல் மத்திய அரசு அமைதி காப்பதில் ஆச்சரியமே இல்லை.

அடுத்து மாட்டிக் கொண்டு இருப்பது ஜனனி சுரக்ஷா திட்டம், இது மருத்துவமனையில் பிரசவம் நடப்பதை ஊக்குவிக்கும் திட்டம். அப்படி நடக்கும் ஒவ்வொரு பிரசவத்துக்கும் இந்த திட்டத்தின் கீழ் பண உதவி கொடுக்கப் படும்.  தேசியக் குடும்ப ஆய்வறிக்கையின் தரவுகளின் படி இந்த பிரசவங்கள் எண்ணிக்கை நன்றாகவே உயர்ந்திருக்கின்றன; 2005ல் 39% ஆக இருந்தது 2015ல் 79% ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரித்ததால் பிரசவத்தின் போது தாய் மரணிக்கும் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கிறது. ஜனனித் திட்டத்தினால்தான் இந்த முன்னேற்றம் வந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

ஆயினும் இந்த திட்டத்தை மூடி விட மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. பிப்ரவரி மாதம் விக்யான் பவனில் நடந்த ஒரு கூட்டத்தில் தாய் சேய் நலத்துறையின் உதவியாளர் இந்தத் திட்டம் தேசிய மகப்பேறு திட்டத்தோடு இணைத்து விடப்படும் என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, மகப்பேறு நல உதவிகள் எல்லாமே மருத்துவமனையில் பிரசவம் நடப்பதை நிபந்தனையாக முன்வைக்கின்றன. இது தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இதை சாக்காக வைத்து ஜனனி திட்டம் விரைவில் குப்பைக்குப் போகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடைசியாக, ஆதார் இனி எல்லாருக்கும் கட்டாயமாக ஆக்கப் படும். சத்துணவு, மகப்பேறு, ஜனனி என்று எல்லாமுமே ஆதாரில் ஐக்கியமாகும். இதை ஊழலை ஒழிக்கிறோம் என்கிற பேரில்தான்  செய்கிறார்கள், ஆனால் இந்தத் திட்டங்களில் தனிமனித அடையாளத்தில் ஃபிராடு நடக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை. விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி சும்மா ஆதாரை எல்லா இடங்களிலும் பரவி விரவி இருக்க செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகத் தெரிகிறது. ஆதார் தன்னிச்சையான விஷயம் என்றால் சத்துணவு திட்டங்களில் எல்லாம் ஏன் இதனை கட்டாயமாக்க வேண்டும் என்கிற கேள்வி வருகிறது. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மேல் எந்த மரியாதையும் இருப்பதாகத் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் அதைப் பெரிதும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இந்த உதாரணங்கள் மத்திய அரசு சிறுவர்களை மோசமாக நடத்துவதை வெளிச்சம் காட்டுகின்றன. ‘ஸப்கா ஸாத் ஸப்கா விகாஸ்’ என்பதில் சிறுவர்கள் சேர்த்தி இல்லாதது மாதிரி தெரிகிறது. நிதி அமைச்சகத்தில் பணி புரியும் ஒரு மூத்த அதிகாரியை இந்த பட்ஜெட் வெட்டுக்கள் பற்றி கேட்டதற்கு, இவை எல்லாம் அவசர கதியில் யோசிக்காமல் செய்யப்பட்டவை என்றும் தனியாக சிந்தித்து இவற்றின் விளைவுகள் பற்றி எல்லாம் ஆராயாமல் நடந்தவை என்றும் குறிப்பிட்டார். அதாவது சிறுவர் நலம் எவ்வளவு சுலபமாக ஓரம் கட்டப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சில மாநில அரசுகள் இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டாமல் செயல்படுகின்றன. தமிழ் நாடு, ஒரிஸா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் தாங்களே சுயமாக மகப்பேறு திட்டங்களை கொண்டு வந்து தங்கள் மாநில நிதியிலேயே இவற்றை செயல்படுத்துகின்றன. இவர்கள் மத்திய அரசின் நிதிக்கு காத்திருக்கவில்லை. ஆயினும், மத்திய அரசின் அக்கறையின்மை கூடிய விரைவில் மாநில அரசுகளையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது  இந்தியாவின் சிறுவர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்துக்கே பாதிப்புகளை உண்டாக்கப் போகிறது.

(ழான் த்ரே, புகழ் பெற்ற பொருளாதார அறிஞர். முன்னேற்றப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளை நிறைய மேற்கொள்கிறார். நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.)