Monday 13 August 2018

கலைஞரியம்



கலைஞர் எத்தனை அணைக்கட்டுகள் கட்டினார், எத்தனை பள்ளிகள் கட்டினார், என்னென்ன வேலைவாய்ப்புகளை உருவாக்கினார் போன்ற விவாதங்கள் நிறைய நடந்து கொண்டு இருக்கின்றன. அவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
நான் இங்கே பார்க்க விரும்புவது கலைஞர் எனும் சித்தாந்தத்தை. கலைஞர் எனும் பெயர் உருவாக்கும் எதிர்வினைகளை. சுருக்கமாக, கலைஞரியத்தை.
இந்தியாவின் முதல் (மற்றும் கடைசி) நாத்திக பிரதமர் நேரு. ஆனால் அவர் தன் நாத்திகத்தை பெருமையுடன் பீற்றிக் கொண்டதில்லை. ஆனால் கலைஞர் தன் நாத்திகத்தை கிடைத்த வாய்ப்பில் எல்லாம் தீரத்துடன் சுட்டிக் காட்டி பெருமிதப் பட்டுக் கொண்டவர். இந்தியா மாதிரியான மதநம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் நிறைந்த தேசத்தில் பெரியார் மாதிரி தனியாக ஒரு நாத்திகவாதி வாழ்ந்து விட்டுப் போவதே பெரிய ஆச்சரியம். ஆனால் கலைஞர் மாதிரி வாக்கரசியலை நம்பி இருக்கும் ஒரு அரசியல் தலைவர் இப்படி தன் கொள்கையை தீவிரமாக பொதுவெளியில் முன்வைத்து அரசியல் நடத்தி அதில் வெற்றிகளும் அடைந்தது பெருத்த ஆச்சரியம்.
இந்தியா மதசார்பின்மை கொண்ட தேசமாக இருந்ததே இல்லை. இந்து முஸ்லீம் கலவரங்கள் பெருமளவு நடந்து வந்த பூமிதான் இது. சுதந்திரத்துக்குப் பிறகு கூட பல்வேறு கலவரங்கள் நிகழ்ந்தே வந்தன. குஜராத் மாதிரி மாநிலங்களில் அதற்கு தீர்வாக இரண்டு சமூகத்தினரும் தனித்தனியே வாழத்துவங்கி விட்டனர். ‘இந்தக்கோட்டை தாண்டி நான் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது,’ என்ற எழுதப்படாத விதி அமுலுக்கு வந்து குஜராத்தில் கலவரங்கள் பெரிதும் நடைபெறாமல் காப்பாற்றி வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் சமூகங்கள் இணைந்து இயங்கி வருவது தமிழகத்தில் நடக்கும் முக்கிய ஆச்சரியம். எம்ஜிஆர் இந்த விஷயத்தில் பெரிய ஆர்வம் காட்டியதாக தகவல் இல்லை. அவர் காலத்தில் இது ஒரு பிரச்சனையாக வெடிக்கவும் இல்லை என்பது வேறு விஷயம். ஜெயலலிதாவோ ஒரு மென்-இந்துத்துவவாதியாகவே தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.
ஆனால் இந்த விஷயத்தில் வெளிப்படையாகவே தன் கருத்தியலை முன்வைத்து வந்தவர் கலைஞர். சூழல் காரணமாக பாஜவுடனான கூட்டணி வந்தபோதும் இது பற்றிய கேள்விகளை எதிர்கொண்டு, தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாக்கி வந்தவர். வேறு எந்த தமிழக அரசியல்வாதியை விட இந்த விஷயத்தில் அவர் காட்டி வந்த உறுதி மகத்தானது. சில நேரங்களில் அது எல்லையை தாண்டிய போக எத்தனித்தாலும் அந்த கொள்கை உறுதி முக்கியமாக கவனிக்கப் படத்தக்கது. இந்த விஷயத்தில் ஏறக்குறைய நேருவின் செக்யூலரிஸத்தோடு ஒப்பிடக் கூடியது கலைஞரின் நிலைப்பாடு. இரண்டுமே மைனாரிட்டிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது. இரண்டுமே போலி மதசார்பின்மை என்று இகழப்பட்டது. இரண்டுமே ஹிந்து மதத்தை அழிக்கப் புறப்பட்டதாக அஞ்சப்பட்டது. முதலாவது இந்தியாவில் கொடும் உள்நாட்டுப் போர் நடப்பதில் இருந்து தடுத்து காப்பாற்றியது. இரண்டாவது தமிழகத்தை இந்துத்துவ கூடாரமாக மாறுவதில் இருந்து தடுத்தது. இன்றுவரை இந்துத்துவ இயக்கங்களுக்கு கண் உறுத்தலாக கலைஞர் மட்டுமே இருந்து வந்ததற்கும் இதுவே காரணம்.
அடுத்ததாக மாநில சுயாட்சி: சுதந்திரம் வந்த போது மாநில சுயாட்சி பற்றிய சிந்தனாவாதம் பெரிதும் எடுபடவில்லை. அதிகாரம் மொத்தமும் மத்திய அரசில் குவிக்கப் பட்டது. அதற்கு காரணமும் இருந்தது. தேசமெங்கும் எரிந்து கொண்டிருந்த கலவரங்கள். இன்னமும் வேர்கொள்ளாத மாநில அரசு கட்டமைப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்பட்ட கனரக தொழிற்சாலைக்கான அதிரடி முடிவுகள், இவற்றிற்காக இந்த அதிகாரங்கள் மத்திய அரசுக்கு தேவைப்பட்டன. ஆனால் நேருவுக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யத்துவங்கிய போது அதனை தடுத்து நிறுத்த மாநில அதிகாரங்கள் பற்றி மாநிலங்கள் பேச வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது மாநில சுயாட்சி மற்றும் பிராந்தியவாதம் (federalism) ஆகியவற்றின் குரலாக ஒலித்தவர் கலைஞர். இதுவும் அண்ணா துவக்கினாலும் அவரையும் தாண்டி கலைஞர் இதனை தீவிரமாக தொடர்ந்தார். இயற்கை விவசாயத்தின் சின்னம் நம்மாழ்வார் என்று ஆனமாதிரி மாநில சுயாட்சியின் சின்னமாகவே இருந்தவர் கலைஞர். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அவசரநிலைப் பிரகடனம் இரண்டும் இந்தப்பயணத்தில் முக்கிய மைல்கல்கள்.
மொழிக்கொள்கை பற்றி நான் முன்பே ‘ஹிந்தி அரக்கி’ எனும் கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன். ஹிந்தித்திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்காசியாவுக்கே, ஏன், உலகுக்கே பாடமாக இருக்கும் விஷயம். மதம், இனம், ஜாதி இவை எல்லாவற்றையும் விட மொழிக்காக நடந்த போராட்டங்கள் உலகில் அதிகம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தேசியவாத சிந்தனையே மொழியை மையமாக வைத்து உருவான சிந்தனைதான். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு கலைஞர் முன்னோடி இல்லை என்றாலும் அதனை பெருமளவு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தவர். ஒரு தலைமுறைக்கே மொழிப்பெருமை பற்றிய உணர்வை கொண்டு வந்தவர்.
மொழி என்பதையும் தாண்டி இலக்கியம், தமிழ் எழுத்து, நவீன தொழில்நுட்பங்களில் தமிழ் என்றெல்லாம் முனைந்தவர். எழுத்தாளர்களை எல்லாம் அரவணைத்து, ஊக்குவித்தவர். இலக்கிய வளர்ச்சி, நூலக வளர்ச்சி போன்றவற்றை இந்த அளவுக்கு முனைப்பாக முன்னெடுத்த வேறு முதல்வர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பது தெரியாது. அது தவிர, தானே தொடர்ந்து எழுதியும் வந்தவர். எனக்குத்தெரிந்து நேருவுக்குப் பின் இந்த அளவு எழுதிக் குவித்த ஒரே இந்திய அரசியல்வாதி அவர்தான்.
அடுத்தது கலைஞரின் சமூக நீதி முனைப்புகள். தன் ஒவ்வொரு ஆட்சியிலும் சமூக நீதிக்காகவும் சமத்துவ வாழ்வு முறைக்காகவும் முனைந்திருக்கிறார். இட ஒதுக்கீடாக இருக்கட்டும், சமத்துவபுரம் காலனிகளாக இருக்கட்டும் அவரின் முயற்சிகள் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் அதிகாரத்தை நோக்கியே இருந்தது. தான் வாழ்வில் கொண்டு வந்த திட்டங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தது சமத்துவபுர திட்டம்தான் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததை ஹிண்டு சமீபத்தில் மேற்கோள் காட்டி இருந்தது. தானே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து உயர்ந்ததன் உணர்வு நிலை கலைஞருக்கு இருக்கவே செய்தது. அது நிறைய தளங்களில் ஒலிக்கவும் செய்தது. மாயாவதி மாதிரி ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து தலைவர்கள் மேலே வந்ததே ஒரு சாதனை என்ற அளவில் நின்று விட, கலைஞரோ அந்த சாதனையையும் தாண்டி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தையும் உயர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டார். அவர் முனைப்புகள் கொள்கை அளவில் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனாவாதங்களை தொடர்ந்து பொதுவெளியில் விவாதங்களுக்கு உட்படுத்திக் கொண்டே இருந்தது. அதே மாதிரி தகுதியுள்ள அனைவரும் அர்ச்சகராகும் திட்டம்; பிராமணியத்தின் வேரையே அசைக்கும் இந்த திட்டம் தேசிய அளவிலேயே விவாதத்துக்கு உள்ளானது. என்னைப்பொருத்த வரை இன்னும் பத்து ஆண்டுகளில் அனைவரும் அர்ச்சகராகும் வழிமுறை தேசமெங்கும் வந்துவிடும் என்று நம்புகிறேன். அப்போது அது கலைஞரின் சிந்தனாவாதத்துக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். (தனிப்பட்ட முறையில் அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் இந்து மதம், இந்திய சமூகம், சமூக நீதி என்று எல்லா அளவிலும் புரட்சிகரமான திட்டம் என்று கருதுகிறேன்.)
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதுநிலைப்பாட்டுக்கு எதிராகவே கலைஞரின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. ‘அம்பாள் எப்போதடா பேசினாள்,’ என்னும் கலகக் குரலில் துவங்கி மதவாதத்தை தீவிரமாக எதிர்ப்பது வரை அவரின் நிலைப்பாடுகள் தன் சொந்த நம்பிக்கையை, சிந்தனாவாதத்தை முன்வைத்தே இருந்திருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி நவீன அரசியல்வாதிகளுக்கு கொள்கை சுமை பெரிதும் தேவையாக இருப்பதில்லை. அதனை மக்களும் எதிர்பார்ப்பதில்லை. கலைஞர் மாதிரியான இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் சென்ற நூற்றாண்டின் மிச்சங்கள். கொள்கையை முன்வைத்து, அதில் பெருமளவு சமரசம் இன்றி, முடிந்த அளவு தன் அரசியலை அதனை நோக்கி செலுத்துவது. நேரு இதனை செய்து வந்தார். கொள்கை ரீதியாக தன் மக்களை செலுத்த முற்படுவது.
‘இன்விக்டஸ்’ எனும் ஆங்கிலப் படம் நெல்சன் மண்டேலா வாழ்க்கை பற்றியது. இதில் பொதுக்கருத்துக்கு எதிராக மண்டேலா ஒரு முடிவு எடுப்பார். அவர் ஆலோசகர்கள் அப்படி செய்ய வேண்டாம் என்று அறிவுரைப்பார்கள். ‘பொதுமக்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்களின் தலைவராகிய நீங்கள் அதனை முன்னெடுக்கக் கூடாது,’ என்பார் ஒரு ஆலோசகர். அதற்கு மண்டேலா பின்வரும் பதில் சொல்வார்: ‘பொதுமக்களின் முடிவை நான் பின்பற்றினால் நான் அவர்கள் தலைவன் என்று எப்படி அர்த்தம் ஆகும்? நான் அவர்களின் தொண்டன் என்றல்லவா ஆகிவிடுவேன்? என் கொள்கையை அவர்களுக்கு கடத்தினால்தான் நான் அவர்கள் தலைவன் எனும் தகுதியை பெறுவேன்!’