Saturday 6 May 2017

ஃபிரெஞ்சு தேர்தல்



ஃபிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முக்கிய கட்டம் இன்று நடைபெற இருக்கிறது. களத்தில் நிறைய பேர் இருந்தாலும் வழக்கம் போல கவனம் இரண்டு பேரிடம் மட்டும்தான் இருக்கிறது. தேசிய முன்னணியைச் சேர்ந்த மரின் லபென் மற்றும் முன்னேற்றக் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன்.

இதில் மக்ரோன் நடுவு சார் கொள்கைகளை நம்புபவர். இனச் சிறுபான்மையினர், அகதிகள் குடியேற்றம், இஸ்லாமியர்கள் போன்ற விஷயங்களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வற்புறுத்துபவர். ஃபிரான்ஸ் தேசம் ஐரோப்பிய யூனியனுக்கு உள்ளேயே இருந்து தன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துபவர். சோஷலிஸக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்.

லபென் பற்றி பேசுவதற்கு முன் அவர் தந்தை பற்றி: இவரின் தந்தை ழான்-மரி லபென்தான் தேசிய முன்னணிக் கட்சியை நிறுவியவர். அதீத வலது சாரி சிந்தனையாளர். பெரும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக திகழ்ந்தவர். யூதர்களை, முஸ்லிம்களை வெளிப்படையாகவே விமர்சித்தவர். யூதர்களை கொத்துக் கொத்தாக எரித்த ஹிட்லரின் நெருப்பு மனைகளை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்கிற அர்த்தத்தில் இவர் பேசிய ஒரு பேச்சு பெரும் அலைகளைக் கிளப்பியது. ஃபிரெஞ்சு கால்பந்து டீமில் வெள்ளையர்கள் கம்மியாக இருப்பதால் அது ஃபிரெஞ்சு டீமே அல்ல என்று பேசியவர். இவரை விட இவர் மகள் கொஞ்சம்  ‘மென்மையான’ வலது சாரி என்று நம்புகிறார்கள். அது ஓரளவு உண்மைதான். அந்த ஹிட்லர் பேச்சுக்காக தன் தந்தையையே கட்சியை விட்டு நீக்கினார் லபென். ஆனால் தந்தை மாதிரியே லபென்னும்  ஐரோப்பிய யூனியனை விட்டு ஃபிரான்ஸ் விலக வேண்டும் என்று விரும்புகிறார். பிரிட்டன் பிரெக்சிட் (Brexit = British Exit) கொண்டு வந்த மாதிரி ஃபிரெக்சிட் (Frexit = French Exit) கொண்டு வரவேண்டும் என்று பிரச்சாரம் செயகிறார். அகதிகளை வெளியேற்ற விரும்புபவர். பிரெஞ்சுக் கலாச்சாரத்தை காப்பாற்ற ‘வந்தேறிகள்’ திருப்பி அனுப்பப் படவேண்டும் என பேசுகிறார். எல்லா தீவிர வலதுசாரிகள் போலவே இஸ்லாமிய வெறுப்பு, சொந்த தேச கலாச்சார மகிமை, வெளிநாட்டவருக்கு விசா கெடுபிடிகள், என்றெல்லாம் டெம்பிளேட் வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்.

வழக்கம் போல இந்த எளிமையான, உணர்வு பூர்வமான வலதுசாரி தத்துவங்கள் மக்களிடையே எடுபட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஃபிரெஞ்சு மக்கள் கலாச்சாரப்பெருமை கொண்டவர்கள். ஐரோப்பாவிலேயே உயர்ந்த கலாச்சாரம் தங்களுடையதுதான் என்று தீவிரமாக நம்புபவர்கள். அதற்கு முஸ்லிம்களாலும், குடியேறிகளாலும் பங்கம் வந்து கொண்டு இருக்கிறது என்று லபென் செய்யும் பிரச்சாரம் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

ஆனால் இப்போதைக்கு லபென் கொஞ்சம் பின்னணியில் இருக்கிறார். முதல் காரணம் அவர் தந்தைக்கு இருந்த ஹிட்லர் இமேஜ். இரண்டாவது காரணம், முக்கியமாக, ஃபிரான்ஸ் தேசத்தின் பொதுவான மென்மையான அணுகுமுறைதான். செக்யூலரிஸம், சமத்துவம், சமூக நீதி போன்ற விஷயங்களை வெகு காலத்துக்கு முன்பே கொண்டு வந்த சமூகம் ஃபிரெஞ்சு சமூகம். தேசத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் மத நம்பிக்கை அல்லாதவர்கள். மொத்த தேசத்தில் 12 சதவிகிதம்தான் தொடர்ந்து சர்ச்சுக்கே போய்க் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசம் அவ்வளவு எளிதில் இந்த விஷயங்களை விட்டுக் கொடுத்து மதவாதம் மற்றும் இனவாதங்கள் மேல் விழ மாட்டார்கள்…

என்று நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறது. உலகெங்கும் தீவிர வலதுசாரி சிந்தனைகள் கொடியேற்றிக் கொண்டு வருகின்றன. இந்தியா, ஃபிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் (பிரெக்சிட்) என்று இவை பெறுகிற வெற்றிகள் ஃபிரான்ஸையும் பாதிக்குமா என்பதுதான் இன்றைய தேர்தல் முன் இருக்கும் கேள்வி. செக்யூலரிஸம், சமத்துவம் போன்ற விஷயங்களை உலகுக்கே போதித்த ஒரு தேசம் அவற்றை விடுத்து உணர்ச்சி வசப்பட்டு லபென் பின்னால் போகுமா? அப்படிப் போனால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? ஃபிரான்ஸ்தான் ஐரோப்பிய யூனியனின் அச்சாணி என்று சொல்வார்கள். அந்த அச்சாணி கழண்டால் ஐரோப்பிய யூனியன் துண்டு துண்டாக உடைந்து போகும். உலகப் பொருளாதாரத்தில் அதன் விளைவு எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட 12 சதம் முஸ்லிம்கள் வாழும் தேசத்தில் முஸ்லீம் வெறுப்பு ஜனாதிபதி ஒருவர் வந்தால் என்ன விளைவுகள் உருவாகும்? தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சிந்தனைகளுக்கு லபென்-னின் வெற்றி எந்த மாதிரியான ஊக்கம் கொடுக்கும்?

அதை எல்லாம் விட முக்கியமாக மற்ற தேசங்கள் போல ஃபிரான்ஸும் உணர்ச்சி வசப்பட்டு விடுமா, அல்லது தங்கள் ஆதார சிந்தனைகளின் பின் அணிவகுக்குமா?

விடை நாளை தெரிந்து விடும்.

நிர்பயா எனும் சின்னம்



‘நிர்பயா வழக்குதான் பெரிய வழக்கா? பில்கிஸ் பானோ வழக்கு பெரிய வழக்கு இல்லையா? அதைப் பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள்?’


என்று பதிவுகள் பார்க்கிறேன்.


பில்கிஸ் பானோ யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய பின்குறிப்பு: குஜராத் கலவர நேரத்தில் தன் குடும்பத்துடன் பில்கிஸ் பானோ தப்பித்துப் போக முயன்ற போது ஒரு கும்பல் அவர்களை தடுத்து பானோவை கொடும் வல்லுறவு செய்து, கூடவே அவர் மகள், தாய் என்று எல்லாரையும் கொன்று போட்டனர். அவர் அப்போது ஐந்து மாத கர்ப்பிணி என்பதும் முக்கியமான விஷயம். அந்த வழக்கில் 11 பேருக்கு மும்பை ஹைகோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டி பானோ இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறார்.


நிற்க. இங்கே பிரச்னை அவர்களுக்கு தூக்கு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதல்ல (என்று நம்புகிறேன்). நிர்பயா அளவுக்கு அந்த வழக்கு முக்கியத்துவம் பெறவில்லையே என்பதுதான்.


அவர் முஸ்லீம் என்பதால் அது முக்கியத்துவம் பெறவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் நிர்பயா அல்லது பானோ என்று இரண்டே இரண்டு வல்லுறவு சம்பவங்கள் நடந்திருந்தால் நாம் அப்படி நினைக்கலாம். ஆனால் ஆண்டுக்காண்டு ஆயிரக்கணக்கில் வல்லுறவு வழக்குகள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.


தேசிய குற்றவியல் ஆவணக் கழக அறிக்கையின் படி வல்லுறவுக் குற்றங்கள் எண்ணிக்கை:
  • 2012 - 24,923
  • 2013 - 33,707
  • 2014 - 36,735
  • 2015 - 34,651


அதாவது 2012ல் நிர்பயா சம்பவம் நடந்த அதே ஆண்டில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வல்லுறவு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அப்படியானால் அந்த மற்ற வழக்குகள் ஏன் பெரிய கவனம் பெறவில்லை? அதற்கு அடுத்த வருடமே கூட சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் சிறுசேரியில் வல்லுறவுக்கு உள்ளாகி இறந்து போனாள். அதே வருடம் உத்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் இரண்டு தலித் இளம்பெண்கள் சாதி இந்துக்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். அப்புறம் மற்ற தலித்துகளுக்கு சேதியாக அந்த சடலங்கள் ஊர்ப் பஞ்சாயத்து ஆலமரத்தில் தொங்க விடப்பட்டன. சென்னை சம்பவம் எந்தக் கம்பெனி, உபி சம்பவம் எந்த கிராமம் என்று கூகுள் செய்யாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல இயலும்?


விஷயம் இதுதான். நிறைய சம்பவங்கள், குற்றங்கள், நல்ல, கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில விஷயங்கள் மட்டும் திடீரென்று நம் உணர்வைத் தூண்டி நம் கற்பனையை உசுப்பி விட்டு விடுகின்றன. ஆண்டாண்டு காலமாக கறுப்பின மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப் பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் அறுபதுகளில் ரோஸா பார்க்ஸ் எனும் பெண்ணுக்கு பஸ்ஸில் வெள்ளையர் சீட்டில் உட்கார இடம் கொடுக்கவில்லை என்றதும் அதை அவள் எதிர்த்தும் பெரும் பிரச்சனையாகி அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வலுத்து உலக வரலாற்றையே மாற்றியது. இன்று கறுப்பின உரிமைப் போராட்டத்தின் சின்னமாகவே அந்தப் பெண்மணி மாறி விட்டார்.


அது என்ன பார்க்ஸ் பிரச்சனைதான் பெரிய பிரச்சனையா? வேறு கறுப்பர்கள் அதற்கு முன்பெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாகவே இல்லையா என்றால் என்ன சொல்ல முடியும்? அடக்கி வைக்கப் பட்டிருந்த கோபங்களின் கதவை அந்த சம்பவம் திறந்து விட்டது. அவ்வளவுதான். அது இல்லையென்றால் வேறு ஏதாவது திறந்து விட்டிருக்கும்.


அதே போல உப்பு சத்தியாகிரகம் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சம்பவமாக பார்க்கப் படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை அசைத்த சம்பவம் அது. ஆனால் அதுதான் இருப்பதிலேயே பெரிய போராட்டமா என்றால் இல்லை. சாவு எண்ணிக்கையில், கைதான ஆட்களின் எண்ணிக்கையில் என்று எதில் யோசித்தாலும் உப்பு சத்தியாகிரகம் லிஸ்டில் கடைசியில்தான் இருக்கும். ஆனால் என்னவோ ஏதோ திடீரென்று பூரா இந்திய மக்களின் கற்பனையை அது தூண்டி வெள்ளையருக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்து விட்டது.


தமிழகத்தில் அமில வீச்சு என்றால் நமக்கு விநோதினிதான் நினைவுக்கு வருவார். ஆனால் அவருக்கு முன்பும் பின்பும் பல்வேறு பெண்கள் அமிலம் வீசப்பட்டு வாழ்வை இழந்துள்ளனர்.


கலவரம் என்றாலே நமக்கு குஜராத் கலவரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் சாவு எண்ணிக்கையில், மக்கள் இடம்பெயர்ந்த எண்ணிக்கையில் மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குஜராத் கலவரம் லிஸ்டில் மூன்றாவதாகத்தான் வருகிறது. ஆனால் இன்று மதக்கலவரம் என்றாலே நம் எல்லாருக்கும் குஜராத்தான் நினைவுக்கு வரும்.


இதே போல சொல்லிக் கொண்டே போகலாம்.


போலவே நிர்பயா சம்பவமும் திடீரென்று எல்லார் கற்பனையையும் தூண்டி வல்லுறவுகளுக்கு எதிரான கோபத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. கறுப்பின உரிமைக்கு ஒரு ரோஸா பார்க்ஸ் மாதிரி இந்திய வல்லுறவுக் குற்றங்களுக்கு ஒரு நிர்பயா. ஒரு சின்னம். ஒரு கொடி. அவ்வளவுதான்.


இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை என்பது என் நிலைப்பாடு. மாறாக நிர்பயா சின்னத்தை நாம் மென்மேலும் பரப்பி, விவாதித்து, அதன் வடு அழியாமல் பராமரிக்க வேண்டும். 25 ஆயிரம், 35 ஆயிரம் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அவலமான ஒரு விஷயம் தேச அளவில் பத்துப் பதினைந்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது தூக்கு தண்டனைகளாலும், ஆயுள் தண்டனைகளாலும் நடக்காது. ஆண்களாகிய நாம் நம்மை, பெண்கள் பற்றிய நம் சிந்தனைகளை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சும்மா பாரதி டி-ஷர்டை மட்டும் போட்டு வலம் வராமல் நிசமான பெண் விடுதலை பற்றிய விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அது நிர்பயா என்கிற சின்னத்தின் கீழ் நடப்பதில் தவறேதும் இல்லை. தேவை சமூகத்தில் மாற்றம். சின்னத்தில் அல்ல.