Monday 9 May 2016

யாருக்கு ஒட்டு?



யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. கட்சி சார்ந்து வரும் பதிவுகள் தவிர முக்கியமாக மெலிதாக சாதி சார்ந்த பதிவுகள் நிறைய தென்படுகின்றன. ‘எல்லாருமே திருடங்கதான்...இங்கே யாரு யோக்கியன்?’ என்கிற பதிவுகளும் நிறைய தெரிகின்றன. இப்படி பதிவிடுகிறவர்கள் கோபத்தில் சொல்கிறார்களா அல்லது நிம்மதிப் பெருமூச்சில் சொல்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

என் அனுமானத்தில் இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை இங்கே பகிர்கிறேன்.

நிறைய முறை போல இந்தத் தேர்தலிலும் யார் வரக் கூடாது என்பதுதான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது. விலக்க வேண்டியவர்களை விலக்கி அப்புறம் யார் மிஞ்சுகிறார்கள் என்று பார்ப்பதுதான் இங்கே வேலை செய்யும் என்பது என் கருத்து.

அந்த வரிசையில் என் லிஸ்டில் இருக்கும் முதல் கட்சி தேமுதிக. இப்போது தேர்தலில் இருக்கும் கட்சிகளிலேயே எந்தக் கொள்கையும் இல்லாத ஒரே கட்சி இவர்கள்தான் என்று உறுதியாக சொல்லி விடலாம். ஆனானப் பட்ட சீமானே, ‘தமிழ் நாஜி’ என்று இகழப் படுகிறவர், கூட தனக்கென்று கொள்கைகள் வைத்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகள் தயார் செய்திருக்கிறார். (அந்தக் கொள்கைகள் நிறைய ஆபத்தானவை என்பது வேறு விஷயம்.) ஆனால் கொள்கை என்று சும்மா பேருக்குக் கூட வைத்திராமல் இயங்கும் கட்சி தேமுதிக  மட்டுமே. அது தவிர தலைவர், முதல்வர் வேட்பாளர், என்கிற விஜயகாந்த் எப்படிப்பட்ட தரமானவர், மேடைகளில் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்த்து வருகிறோம். ஜெயலலிதாவாவது பத்திரிகைகளை சந்திப்பதே இல்லை. விஜயகாந்த் வெளிப்படையாக திட்டுகிறார். காறித் துப்புகிறார். அடிக்க எழுந்து ஓடுகிறார். இதெல்லாம் ஒரு ரவுடி கூட செய்யக் கூடாத காரியங்கள், ஆனால் முதல்வர் வேட்பாளர் செய்கிறார். மேலும் தெளிவாக சிந்தித்து ஒரு வாக்கியம் கூட பேசத் தெரியாத அவர் எப்படி அரசு சிக்கல்களை புரிந்து கொள்வார், எப்படிப்பட்ட தெளிவான நிர்வாக முடிவுகளை எடுப்பார் என்பது பெரிய கேள்வி. ஆகவே, என்னைப் பொருத்த வரை சட்டசபைக்குக் கூட அனுப்பப்படக் கூடாத மனிதர் அவர்.

அடுத்ததாக லிஸ்டில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இருப்பதில் திறமையானவராக உள்ளவர் திருமாவளவன் மட்டுமே. ஆனால் அவர் கட்சி மாநில அளவில் இன்னமும் வளராதது ஒரு பிரச்சனை என்பது தவிர மிக முக்கியமான பிரச்சனை இவர் இப்போது முதல்வர் போட்டிக்கு இல்லை. எனவே அவரையும் விட்டு விடுவோம்.

அடுத்ததாக லிஸ்டில் இருப்பது அதிமுக. ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தலைவரைக் கொண்டது அந்தக் கட்சி. தான் ஒரு ஜனநாயக நாட்டின் மாநிலத்தில் முதல்வர் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியுமா என்பது சந்தேகம்தான். முதல்வர் ஆனது முதல் ஒரு சினிமா ரிலீஸ் பிரச்சனையை தாண்டி அவர் பத்திரிகைகளை சந்தித்ததே இல்லை. தன் மந்திரிகள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் ஆகியோருக்கு எந்த சுதந்திரமும் வழங்காமல் தன் ஆணைக்காக காத்திருக்க வைத்திருப்பவர். டிசம்பரில் அந்த ஆணை நேரத்துக்கு வராமல் போனதில் என்ன ஆனது என்பதைப் பார்த்தோம். பெருவெள்ளம் போன்ற ஒரு பேரிடர் நேரத்தில் மக்களோடு தொடர்பே இல்லாமல் விமர்சனங்கள் எல்லை மீறிப் போன பிறகு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் அனுப்பியதோடு சரி. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவச மற்றும் ஏற்கனவே இருக்கும் நலத் திட்டங்கள் தவிர்த்து கட்டுமான மற்றும் தொலை நோக்கு திட்டங்கள் என்ன என்ன நிறைவேற்றப் பட்டது என்பதை அவர்கள் சொல்வதே இல்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் மேல் அக்கறை இருக்கிறது என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவர் சர்வாதிகார எண்ணம் கொண்டவர் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என்னைப் பொருத்த வரை, மோசமான ஜனநாயகவாதியைக் கூட ஏற்றுக் கொள்வேன். ஆனால், கருணையுள்ள சர்வாதிகாரியை எந்நாளும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஏனெனில், அப்படிப்பட்டவர் மக்களுக்கு திட்டங்கள் தீட்டுவதாக நினைக்க மாட்டார்கள். மக்களுக்கு பிச்சை போடுவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தவிர, அவர்களால் ஜனநாயக அமைப்புகளுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட்டு தேசத்தின் அடிப்படையே குலைந்து போகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே இட்லி முதல் சிமெண்ட் வரை அம்மா பிராண்ட் எங்கெங்கும் விரவி இருக்கிறது. எனவே, ஜெயலலிதா தோல்வியுற்று தன் அகங்காரத்தின் எல்லைகளை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை அவருக்கு நாம் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் வழக்கு தோற்றால் சட்டமே அந்த வாய்ப்பையும் அவருக்கு வழங்கும்.

முக்கியமாக அவர்களின் தேர்தல் அறிக்கை, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் இலவசங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. கட்டமைப்பு பற்றியும் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றியும் இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்கிற accountabilityயே இல்லாதவர்கள் வெறுமனே மொபைல் ஃபோன் மற்றும் மோட்டார் சைக்கிள் மானியத்தோடு நிறுத்திக் கொண்டு விடுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

அடுத்தது பாமக. விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற விஷயங்களில் அன்புமணியின் அணுகுமுறை பாராட்டத் தக்கதாகவே இருக்கிறது. தன்னம்பிக்கையோடு பதவிப் பிரமாணத்தையே ட்ரைய்லர் காட்டியதில் இருந்து இலவசமே கிடையாது என்கிற தீர்மானத்தில் இருந்து நிறைய விஷயங்களில் இவர்களைப் பாராட்டலாம். அதுவுமின்றி இன்றைக்கு எல்லாரும் பேசிக் கொண்டு இருக்கும் மதுவிலக்கை ரொம்ப நாளாகவே வலியுறுத்திக் கொண்டு இருக்கும் ஒரே கட்சி அவர்கள்தான். மேலும் நிழல் பட்ஜெட் போடுவது போன்ற விஷயங்களில் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் செயல்படுவதில் இவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால் சாதிக் கட்சி என்கிற லேபிளை இன்னமும் இவர்கள் முழுமையாக துறக்கவில்லை. இளவரசன் சம்பவத்தில் இவர்கள் பேசிய பேச்சுக்களும் முரணான அணுகுமுறைகளும் உருவாக்கிய கசப்புணர்வு இன்னமும் தீரவில்லை. கடைசியாக வடமாவட்டங்களில், வன்னியப் பெரும்பான்மை இருக்கும் இடங்கள், தவிர்த்து இவர்கள் மற்ற இடங்களில் பெரிய இருப்பை நிலை நிறுத்தவில்லை என்பதால் இந்தத் தேர்தலில் இவர்களை விட்டு விடுவது உத்தமம்.

நாம் தமிழர் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆகவே அவர்களின் ஆபத்தான உளறல்களை இங்கே ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்ததாக நம்மிடம் இருக்கும் ஒரே ஆப்ஷன் திமுக. அது சென்ற ஆட்சியில் நிறைய தவறுகள் செய்து அதனால் போன தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த கட்சி. அதில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்பலாம். போன ஆட்சியின் தவறுகளுக்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுவரை இப்படி தமிழ்நாட்டில் செய்த ஒரே தலைவர் இவர்தான். சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து, தேசிய அளவிலேயே தங்கள் முந்தைய தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்ட இரண்டே கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி மட்டும்தான். தங்கள் தவறுகளை வெளிப்படையாக விளக்கி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்கவில்லைதான். ‘தெரிந்தோ தெரியாமலோ’ என்று கொஞ்சம் பூசி மெழுகித்தான் செய்திருக்கிறார். ஆனால் அதைத் தாண்டி  செய்வது நம் ஊரில்  ஆபத்தான விஷயம். செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது மேலை நாடுகளில் ஒருவரின் உளவியல் பலமாக பார்க்கப் படுகிறது. இந்தியாவில் அதுவே ஒருவரின் பலவீனமாக மக்களால் பார்க்கப் படுகிறது. எனவே இந்த அளவுக்கு ஸ்டாலின் இறங்கி வந்திருப்பதே, என்னைப் பொருத்த வரை, பாராட்டத் தக்க விஷயம்.

அடுத்தது, அவர்களின் தேர்தல் அறிக்கை. தமிழருக்குப் பிடித்த இலவசப் பொருட்களை கொஞ்சம் வைத்து, நிறைய நலத் திட்டங்களை சேர்த்து, மற்றபடி கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் பட்டிருப்பது நல்ல விஷயம்.

அடுத்தது, இருக்கும் முதல்வர் வேட்பாளர்களிலேயே உடல் ஆரோக்கியமான வேட்பாளர்கள் இருவர்: அன்புமணி மற்றும் ஸ்டாலின். கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப் பட்டிருக்கிறார் என்றாலும், வந்து ஓரிரு மாதங்களிலேயே ஸ்டாலின் முன்னுக்கு கொண்டு வரப்படுவார் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது.

அடுத்தது, இந்தத் தேர்தல் ஸ்டாலினுக்கு மிக முக்கியமான ஒன்று. அவரை முன் நிறுத்தி நடக்கும் இரண்டாவது தேர்தல் இது. திமுகவில் நாம் முகம் சுளிப்பது மாறன், அழகிரி போன்றோரின் குறுக்கீடுகள்தான். இப்போது ஸ்டாலின் ஜெயித்தால் திமுகவில் இருக்கும் இந்த சக்தி மையங்கள் பலவீனமடையும் வாய்ப்பு அதிகரிக்கும். தோற்றால் ஸ்டாலின் பலவீனப் பட்டு அழகிரி போன்றோரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அது திமுகவுக்கும், மாநிலத்துக்கும் நல்லதல்ல.

கடைசியாக இந்தத் தேர்தலில் ஜெயித்தால் அதிமுக போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு கட்சி அசுர பலம் பெரும். ஏற்கெனெவே அம்மா-வாக உருப் பெற்று, யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாமல் உலா வரும் ஜெயலலிதா மக்களிடம் இருந்து இன்னமும் தள்ளிப் போய் அமைச்சர்கள் இன்னமும்  அடிமைத்தனம் மிகுந்து நிர்வாகம் மேலும் சீர்கெடும் வாய்ப்பு அதிகரிக்கும். ஹோட்டலில் இட்லி போடுவதையே பிச்சை போடுவதாக காட்டிக் கொள்ளும் ஒரு கட்சி அரசியலில் இருந்து தூர வைக்கப் பட வேண்டும். இந்தத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வி அடைந்தால் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கை கொள்வேன்.

யாருக்குமே பெரும்பான்மை வராமல் போவது நல்லது என்கிற கருத்து இங்கே நிலவுகிறது. எனக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. அப்படி நடப்பது கொஞ்சம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஒரு செக் வைப்பது போல இருக்கும் என்றாலும், சிறு மற்றும் உதிரிக் கட்சிகளுக்கு குதிரை பேரம் நடத்துவது, எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவது, ஸ்டார் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களை பதுக்கி வைப்பது போன்ற 80களில் நடந்த ஜனநாயக விரோதக் காட்சிகள் அரங்கேறும். ஆட்சி இன்றைக்கு இருக்குமா நாளைக்குப் போகுமா என்று தெரியாமல் தொலைநோக்குத் திட்டங்கள் பெரிய அளவில் நிறைவேறாமல் தடை படும் வாய்ப்புகள் அதிகம்.

திமுகவுக்கோ அதிமுகவுக்கோ விஜயகாந்த் ஆதரவு தேவைப்படும் நிலை வருவது நல்லதல்ல என்று நினைக்கிறேன். எனவே இந்த தொங்கு சட்டசபை பற்றி எனக்கு கவலை இருக்கிறது. என்னைப் பொருத்த வரை, ஒரே கட்சி மட்டுமே ஆட்சிக்கு வருவது நல்லது. அது திமுகவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவைப்பட்டால் காங்கிரஸ் கொஞ்சம் தொகுதிகள் ஜெயித்து இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆட்சி செய்யலாம்.

கடைசியாக, அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரியும் ஆபத்து இந்தத் தேர்தலில் இருக்கிறது. அவை பிரியக் கூடாது. அதிமுக, குறிப்பாக அதன் தலைவியின், சர்வாதிகாரத்தனம் நமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இங்கே ஜெயலலிதா ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமே. மக்களின் ஒப்புதல் பெற்று அதன் மூலம் அரசு நிர்வாகம் செய்வதற்கு பணிக்கப் பட்டிருப்பவர் மட்டுமே; ஏழைத் தமிழர்களுக்கு தினமும் இட்லிப் பிச்சை போடும் மகாராணி அல்ல என்பதை அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தத் தேர்தல்.

ஜெயலலிதாவுக்கு மக்களாட்சி குறித்தோ மக்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தோ எந்தவொரு நினைவும் இல்லை. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வீசியதை வீசி எறிந்து விட்டால் ஓட்டைப் போட்டு தன்னை மீண்டும் கோட்டைக்கும் கொடநாட்டுக்கும் ஹெலிகாப்டரில் அனுப்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இப்போது அவருக்கு ஒரு பாடம் தேவையாக இருக்கிறது. கடந்த காலங்களில் செய்தது போலவே மக்கள் அந்தப் பாடத்தைப் புகட்ட வேண்டிய நாள் மே 16.

Sunday 20 March 2016

ஆதார் என்னும் ராஜ சதி



(ழான் த்ரே பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த, இந்தியாவைத் தன் இல்லமாக வரித்துக் கொண்டு விட்ட, பொருளாதார அறிஞர். அமர்த்திய சென்னோடு சேர்ந்து நிறைய ஆய்வுகள் நடத்தியவர். ஆதார் பற்றி அவர் ஹிண்டுவில் எழுதியதை அவர் அனுமதியோடு இங்கே மொழி பெயர்த்து பதிகிறேன். முன்வடிவைப் படித்து திருத்தங்கள் வழங்கிய Shah Jahan அவர்களுக்கு
முதன் முதலில் ஆதார் திட்டம் விருப்பமுள்ள மக்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்யலாம் என்று சொல்லித்தான் ஆரம்பிக்கப் பட்டது. அதாவது நீங்கள் ஆதார் எண் வைத்துக் கொள்வதற்கு சட்ட ரீதியாக எந்த அழுத்தமும் அரசு கொடுக்கப் போவதில்லை. ஆனால் ஆதாரை உருவாக்கிய மத்திய அரசின் UIDAI துறை கடுமையாக உழைத்து, ஆதார் இல்லாமல் வாழ இயலா நிலையை உருவாக்கி வருகிறது. நிறைய திட்டங்களுக்கு இன்றைக்கு உங்களுக்கு ஆதார் கண்டிப்பாகத் தேவை என்று ஆகி விட்டது. விரைவிலேயே ஆதார் இல்லாத இந்தியனுக்கு வாழ்க்கை ரொம்பவே கஷ்டமாக மாறப் போகிறது. இன்றைய சூழலில் ‘ஆதாருக்கு கட்டாயம் இல்லை, தன்னிச்சையானது’ என்று சொல்வது ‘மூச்சு விடுவதற்கு உங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை, அது தன்னிச்சையானது’ என்று சொல்வதற்கு சமம். கட்டாயம் என்பது சட்ட ரீதியானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நடைமுறை ரீதியாக இருந்தாலும் அது கட்டாயம்தான்.

வானளாவிய அதிகாரங்கள்
-----------------------------------------
இப்படி ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்று அரசு இருந்ததை சுப்ரீம் கோர்ட் மார்ச் 2014ல் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. ‘எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய சேவைகள் "ஆதார் இல்லை" என்பதை வைத்து நிறுத்தவோ தாமதிக்கவோ கூடாது,’ என்று உத்தரவு பிறப்பித்தது. ஆதார் தன்னிச்சையானது என்பதற்கு ஏற்ற முடிவு இதுதான். ஆனால் அந்த வழக்கு விவாதங்களில் மத்திய அரசு ‘ஆதார் தன்னிச்சையானது’ என்றே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு வந்தது. எனவே அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கோர்ட் எதுவும் சொல்லி விடவில்லை.

இதில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்: தன்னிச்சையான ஆதார் என்பது மிகவும் பயனுள்ள திட்டம். சரி பார்க்கக் கூடிய பொதுவான அடையாள அட்டை என்கிற அளவில் அது மிகவும் முக்கியமான ஆவணமாக அது மக்களுக்கு இருக்கும். ஆனால் UIDAI துறை ஆதாரை பொதுவான ஐடி கார்டாக உருவாக்குவதிலும், அதற்கான மென்பொருள்களை கட்டமைப்பதிலும் பெரிய ஆர்வம் காட்டவே இல்லை. அதனை கட்டாய அடையாளமாகவும், பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை + கண் ரெடினா அடையாளங்களை வைத்து ஒரு மாபெரும் தகவல் பெட்டகத்தை உருவாக்குவதிலுமே கவனமாக இருந்தது. அதன் நோக்கங்கள் ஆதாரின் அடிப்படை நோக்கத்தில் இருந்து முற்றிலுமாக விலகியவை.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிகாரிகளுக்கு மனக் கசப்பைக் கொடுத்தது. ஏனெனில், அந்த உத்தரவு ஆதாரினால் செயல்பாட்டுத் திட்டங்கள் பலதையும் பெரிதும் பாதித்தது. எனவே அதற்கு பதில் தாக்குதலாக கடந்த வாரத்தில் ஆதாரை பண மசோதாவாக மாற்றி அரசு நிறைவேற்றி விட்டது. அதில், விதி எண் 7ன் கீழ் ஆதாரை பலவிதமான சேவைகளுக்கும் கட்டாயமாக்கும் வானளாவிய அதிகாரத்தை அரசுக்கு அந்த மசோதா கொடுக்கிறது. விதி எண் 57 ஆதார் அடையாளத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் சுதந்திரத்தை அரசுக்குக் கொடுக்கிறது. (அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றனதான்.)

அதாவது, இந்த மசோதா ஆதாரை நிறைய விஷயங்களுக்கு கட்டாயமாக்க அரசுக்கு அதிகாரத்தை தருகிறது: சம்பளப் பட்டுவாடா, முதியோர் உதவித் தொகை, பள்ளிச் சேர்க்கை, ரயில் டிக்கட் பதிவு, திருமண சான்றிதழ், ஓட்டுனர் லைசென்ஸ், மொபைல் சிம் கார்ட் வாங்குவது, ஏன் ஒரு இன்டர்நெட் சென்டரை பயன்படுத்துவதற்குக் கூட உங்களுக்கு ஆதார் தேவைப்படும் நிலை விரைவில் வரும். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அரசாங்கம் ஆதாரை வைத்து வேறு என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதை நாமே கற்பனை செய்து பார்த்துக் கொள்ள இயலும். ஆதாரை உருவாக்கிய நந்தன் நிலேகனியே ஒரு முறை குறிப்பிட்டது போல ‘ஆதார் எங்கும் விரவி இருக்கும் ஒன்றாக’ மாறும் நாள் தொலைவில் இல்லை.

ஒட்டு மொத்தக் கண்காணிப்பு
---------------------------------------------

சரி, அப்படியே வந்தால்தான் அதில் என்ன பிரச்சனை? நிறைய இருக்கிறது: பயோ-மெட்ரிக்கின் நம்பகத் தன்மை முதற் கொண்டு தனி நபர் சுதந்திரம் பறி போவது வரை சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் விட முக்கியப் பிரச்சனை குடிமகன்களை ஒட்டு மொத்தமாக கண்காணிப்பதற்கான கதவை ஆதார் திறந்து கொடுக்கிறது. ‘தேசப் பாதுகாப்புப் பிரச்சனை’ என்கிற ஒன்றை வைத்தே அரசு ஆதார் சம்பந்தப் பட்ட தகவல் பெட்டகங்களை நிறைய சட்டச் சிக்கல்கள் இன்றி திறந்து பார்க்க இயலும். யாரை எப்போது வேண்டுமானாலும் தொடர்ந்து கண்காணிப்பது நமது உளவு நிறுவனங்களுக்கு வெகு சுலபமாகி விடும் - நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், எங்கெல்லாம் போகிறீர்கள், எந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள், யாரைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள், சந்திக்கிறீர்கள், யாருடன் போனில் பேசுகிறீர்கள் என எல்லாமே கண்காணிப்புக்கு உள்ளாகும். எந்த உலக நாடுமே, குறிப்பாக எந்த ஜனநாயக நாடுமே, இதுவரை இந்த அளவுக்கு தங்கள் குடிமக்கள் மேல் இத்தனை வலுவான கண்காணிப்புக் கட்டமைப்பை வைத்திருக்கவில்லை.

நான் கொஞ்சம் அதிகமாகவே பயப்படுகிறேன் என்று உங்களுக்கு தோன்றினால், இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஒட்டு மொத்தக் கண்காணிப்பு என்பது உளவு நிறுவனங்கள் உலகெங்கிலும் ஏங்கும் விஷயம். எட்வர்ட் ஸ்நோடேன் விஷயத்தில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்தானே? இந்திய அரசாங்கத்துக்கும் குடிமக்களைக் கண்காணிப்பது, குறிப்பாக தங்களுக்கு பிடிக்காதவர்களை கண்காணிப்பது எவ்வளவு பிடித்தமான விஷயம் என்பதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஒரு ஆளை பிடித்து அடித்தால் ஓராயிரம் பேர் வழிக்கு வருவார்கள் என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்த விஷயம். தனி நபர் சுதந்திரம் என்பதற்கும் ஜனநாயக தேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தக் கண்காணிப்பு என்பது தனி நபர் சுதந்திரம் மற்றும் சமூக உரிமைகள் இரண்டுக்கும் எதிரானது. பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் மக்கள் கொடிய, சர்வாதிகார அரசாங்கங்களின் கீழ்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கட்டாயப் படுத்தல்கள், கைதுகள், அரசியல் கொலைகள், சித்ரவதைகள் இவை எல்லாம் செய்து தங்களுக்கு பிடிக்காத ஆட்களை/ தங்களை எதிர்க்கும் ஆட்களை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். யாரிடம் பேசுவது, என்ன பேசுவது, எழுதுவது என்கிற பயமில்லாமல் வாழ்வது போன்ற, இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் தனி நபர் சுதந்திரம் எல்லாமே பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நாம் பெற்றவையாகும். இந்த அளவுக்கான சுதந்திரம் இன்றும் கூட பெருமளவு மக்களுக்கு கிடைக்கவில்லை. தலித் மக்களும், ராணுவத்தின் காலடியில் நசுங்கிக் கிடக்கும் பகுதிகளும் இன்னமும் இத்தகைய சுதந்திரத்துக்காக காத்திருக்கிறார்கள். அது வேறு விஷயம். ஆனால் அவர்களுக்கும் இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக நாம் போராட வேண்டுமே தவிர, இருப்பவர்களிடம் இருந்தும் அதைப் பிடுங்குவது தவறு.

ஆதார் சட்டம் இந்த வரலாற்றுப் போராட்டங்களை எல்லாம் நம்மை மறக்கச் சொல்கிறது. அரசாங்கம் நம் மீது கருணையுடன் நடந்து கொள்ளும் என்று நம்பிக்கை வைக்கச் சொல்கிறது. இப்போதைக்கு ஒன்று சொல்லலாம்: நம் சமூக உரிமைகளுக்கும், தனி நபருக்கு உள்ள ஜனநாயக சுதந்திரத்துக்கும் உடனடியாக பெரிய ஆபத்து ஏதும் இல்லைதான். ஆனால் மிக அப்பாவியான ஒரு நபர் மட்டுமே ஆதாரை ஒட்டு மொத்தக் கண்காணிப்புக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புவார். அரசாங்கம் அந்தக் கண்காணிப்பை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவே மாட்டார்கள் என்று உறுதி அளித்தால் கூட அப்படிப்பட்ட கண்காணிப்பு என்பதே ஜனநாயகத்துக்கும் சமூக உரிமைகளுக்கும் எதிரானதுதான். க்லென் க்ரீன்வால்ட் தான் எழுதிய No Place to Hide என்கிற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எந்த சமூகத்திலும் கண்காணிப்புக்கான வசதி இருந்தாலே போதும். அதைப் பயன்படுத்தாமலே அது எதிர் மறைக் கருத்துக்களையும், அரசுக்கு எதிரான போராட்டங்களையும் உருவாகாமலே செய்து விடுகிறது.”

உறுதியற்ற சேவைகள்
-----------------------------------
ஆதார் சட்டத்தை ஆதரிப்பவர்கள் இந்தக் கவலைகளை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆதார் மூலம் அரசுக்கு நிறைய பணம் சேமிக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். ஆதாரால் திட்டங்களில் ஊழலை நிறுத்த முடியும் என்பது போன்ற கற்பனாவாதங்கள் உலவ விடப் படுகின்றன. உண்மையில் ஆதாரால் குறிப்பிட்ட சில திட்டங்களில் மட்டுமே பணக் கசிவைத் தவிர்க்க முடியும். உணவுப் பொது விநியோகத்தில் (ரேஷன் கடைகள்) அடையாளம் சம்பந்தப் பட்ட பிரச்சனை இல்லாததால், ஆதாரால் அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்த இயலாது. சமீபத்திய உதாரணங்களைப் பார்த்தால் ஆதார் பொது விநியோகத்தில் நிறைய குழப்பங்களைத்தான் உருவாக்கி இருக்கிறது. எங்கெல்லாம் பொது விநியோகத்தில் ஆதார் அறிமுகப் படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் தாமதங்களும், அடையாளக் குழப்பங்களும், கனெக்ஷன் பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதுவும் பொது விநியோகம் மிக முக்கியமாக தேவைப்படும் மாநிலங்களில் ஆதார் மாதிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வசதிகள் சரியாக இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் இதே பிரச்சனைகள்தான்.

நானே என் கண்களால் இதைப்பார்த்திருக்கிறேன். ஜார்க்கண்டில் உணவு விநியோகம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் வங்கிக் கணக்குகள் இவற்றில் ஆதார் நுழைந்த போது குழப்படிகள் நடந்திருக்கின்றன. அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப் படுவதிலேயே தடைகள் வரும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. உதாரணத்துக்கு ஊரக வேலைக்கான அட்டை வழங்கலில் பிரச்சனை வந்ததால் ஆதாரின் 100 சதவிகித கார்டு நோக்கத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக நிறைய வேலைக் கார்டுகளை கான்ஸல் செய்து விட்ட சம்பவங்களை நானே பார்த்தேன். அந்தத் திட்டத்தில் இருந்த வேலையாட்களை ஊரக வங்கிகள் ஆதார் வங்கிகளுக்கு மாற்றி விட, அதில் அவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் பெருத்த தாமதங்கள் நிகழ்ந்தன. ஜார்க்கண்டில் இப்போதுதான் உணவு விநியோக முறையில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நேரத்தில் ஆதாரை அங்கே நுழைத்ததில், நடந்து வந்த கொஞ்ச நஞ்ச சீர்திருத்தங்களும் பாதிப்படையும் நிலையில் இருக்கிறது.

ஆதார் ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகியும் அது துவங்கப் பட்டபோது கொடுத்த வாக்குறுதிகளையும், அது உறுதியளித்த சீர்திருத்தங்களையும் செய்வதில் பெரும் பிரச்சனைகள் தென்படுகின்றன. ஆனால் பொய்யான ஆய்வுகளும், விளம்பரப் பிரச்சாரங்களும், கற்பனையான சேமிப்பு எண்களும்தான் இதுவரை நமக்கு திரும்பத் திரும்ப கிடைத்திருக்கின்றன. (சமையல் எரிவாயுவில் 12,700 கோடி சேமிப்பு பற்றிய தகவலும் இப்படிப்பட்டதுதான்.) எனக்குத் தெரிந்தவரை ஆதார் பற்றிய ஒரு தீவிரமான ஆய்வும் எந்தத் திட்டத்திலும் மேற்கொள்ளப் படவில்லை. சொல்லப் போனால் ஆதாரில் நிகழ்ந்த தோல்விகளையே பிரச்சாரங்கள் மூலம் வெற்றிகளாக காட்டி இருக்கிறார்கள். ஜார்க்கண்டில் ராத்து மாவட்டமும் ராஜஸ்தானில் கோட்காசிம் மாவட்டத்தில் செய்த மண்ணெண்ணெய் மானியமும் இதற்கு உதாரணங்கள்.

ஆதாரில் ஓரளவு பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதில் இருக்கும் பிரச்சனைகளை மனதில் வைத்து ‘குறைந்த பட்ச உபயோகம், அதிக பட்ச எச்சரிக்கை’ என்றுதான் அதன் பயன்பாடு இருக்க வேண்டும். ஆனால் அரசின் நோக்கமோ ‘அதிக பட்ச உபயோகம், குறைந்த பட்ச எச்சரிக்கை’ என்பதாக இருக்கிறது. ஆதார் பண மசோதாவில் கொஞ்சம் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஆதாரை ஒட்டு மொத்தக் கண்காணிப்புக்கு அல்லது தவறான பயன்பாட்டிலிருந்து தடுக்கும் எந்த அம்சமும் அதில் இல்லை. இருக்கின்ற சிலவும் சர்ச்சையில் இருந்து அரசின் UIDAI துறையை பாதுகாப்பது பற்றி மட்டுமே அதில் இருக்கிறது.

ஆதாரின் பிரச்சாரகர்கள் அதைப் பற்றி பேசும் போது நாம் ஒரு ‘புரட்சியின் எல்லையில்’ இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அதை ‘ராஜ சதியின் எல்லை’ என்றுதான் சொல்வேன். இப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் ஆதார் சட்டம் உச்சநீதிமன்றத்துக்குத் தெரியாமல் ஒரு கண்காணிப்புக் கோட்டையை கட்டிக் கொள்ள அரசாங்கத்துக்கு உதவி இருக்கிறது. அதனை பண மசோதாவாக நிறைவேற்றியதில் நாடாளுமன்றத்தில் அது குறித்து நடக்கவிருந்த ஆரோக்கியமான விவாதங்களையும் அது தடுத்து இருக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையே ஆதார் பற்றிய கவலைகளை இன்னமும் மோசமாக்குகிறது.

Sunday 6 March 2016

பி.ஹெச்.டி-யும் அரசு உதவிப் பணமும்



பி.ஹெச்.டி-க்கு அரசு கொடுக்கும் உதவிப் பணத்தை கிண்டலடித்தும், விமர்சித்தும் பதிவுகள் பார்த்தேன். இதில் நிறையப் பேர் பிஜேபி அபிமானிகள் என்பதில் சந்தேம் இல்லை. இன்போசிஸ் கம்பனியின் முன்னாள் நிதி இயக்குனர் மோகன்தாஸ் பை கூட இதைக் கேள்வி கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் (1).

உலக அளவில் பி.ஹெச்.டி படிப்பு என்பதை வேலையாகவே பார்க்கிறார்கள். அதாவது, அந்த மாணவர் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் வேலை செய்கிறார் என்றுதான் அர்த்தம். அதுவுமின்றி, பி.ஹெச்.டி என்பது மாஸ்டர்ஸ் (முதுகலைப்) பட்டத்துக்கு அப்புறம் படிக்க வேண்டிய படிப்பு. முதுகலைப்பட்டத்தை முடிக்கும்போது ஒரு மாணவனோ மாணவியோ 25 வயதை எட்டி இருப்பார்கள். அவர்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களுக்கு உதவி ஊதியம் கொடுக்கப்படாவிடில், மேலே படிக்கும் ஆர்வம் இருக்கிற இளைஞர்களும் அப்படி செய்யாமல்  வேறு வேலை தேடிக் கொள்ள நேரிடும். அதனாலேயே பி.ஹெச்.டி படிப்புக்கு மாதா மாதம் உதவி ஊதியம் கொடுக்கப் படுகிறது.

அது சரி, அப்படியே அவர்கள் வேலை தேடிக் கொள்ளட்டுமே? அரசாங்கம் ஏன் பி.ஹெச்.டியை ஊக்குவிக்க வேண்டும் என்றால் பதில் இருக்கிறது.

பி.ஹெச்.டி-க்கு செலவு செய்வது ஒரு தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. பிரிட்டன் அரசின் ஒரு துறை நடத்திய ஆய்வில் எந்த தேசத்திலும் பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியும் (GDP) அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் (2). மேற்கத்திய தேசங்கள் மேற்படிப்புக்காக கொள்கை அளவிலான நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அமெரிக்காவில் நிறைய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் பி.ஹெச்.டி படிக்கும் போது வேறு வேலை செய்வதற்கே கூட தடை விதிக்கப் பட்டிருக்கிறது. வேறு சில தேசங்களில், அப்படி செய்யும் வேறு வேலை வாரத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறைகள் உள்ளன. (3)

அடிப்படை எழுத்தறிவு அதிகரிப்பது சமூக முன்னேற்றத்துக்கு அறிகுறியாக கருதப்படுவது போல, பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப் படுகிறது. பெர்னார்ட் லீவிஸ் என்னும் அமெரிக்க வரலாற்று அறிஞர் 9/11க்கான பின்னணிக் காரணங்களை ஆய்ந்து What Went Wrong என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் வளைகுடா நாடுகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகையில் அங்கே பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது என்கிற தகவலையும் ஒரு முக்கியப் பிரச்சனையாக குறிப்பிடுகிறார்(4). வெண்டி ஸ்டாக் மற்றும் ஜான் செக்ஃபிரைட் பதினைந்து வருடங்கள் அமெரிக்காவின் மேற்படிப்பு பற்றிய ஆய்வில் அமெரிக்காவில் பி.ஹெச்.டி முடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் அமெரிக்கர் அல்லாதவர் என்பதை கவலையுடன் குறிப்பிடுகிறார்கள் (5).

அதே ஆய்வுக் கட்டுரையில் பொதுவாக பி.ஹெச்.டி முடிக்க எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம் ஆய்வுத் தலைப்புகளின் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருவதும், ஒரிஜினல் ரிசர்ச் என்று சொல்லப் படும், புதிய சிந்தனைகளை ஆய்வில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருக்கும் அழுத்தங்களும்தான் காரணம் என்று நம்புகிறார்கள். படிக்க வருபவர்களில் 40% பேர் படிப்பை முடிக்க இயல்வதில்லை என்று இதே ஆய்வில் தெரிகிறது. ஆகவே அரசு உதவிப் பணம் பெற்று படிப்பவர்கள் முடிக்க இயலாமல் போவதில்  ஆச்சரியமோ கோபமோ படுவதிற்கில்லை.

எனவே பி.ஹெச்.டி படிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இருக்கிறது. இப்போது செலவு செய்வதை விட அதிகமாகவே செலவு செய்ய வேண்டுமே தவிர குறைப்பது பிரச்சனையில்தான் கொண்டு விடும். இந்தியாவில் நடத்தப் படும் பி.ஹெச்.டி-யின் தரம் சரியில்லை என்றால் அதை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மொத்தமாக அரசின் உதவிகளையே நிறுத்துவது. சரியல்ல

அது ஒரு புறம் இருக்க, இந்திய அரசு பி ஹெச் டி-க்காக எவ்வளவுதான் செலவிடுகிறது?  நேச்சர் எனும் அறிவியல் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் படி அரசு ஒரு பி.ஹெச்.டி மாணவன் / மாணவிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் 16,000 ரூபாயும் அடுத்த மூன்றாண்டுகள் மாதம் 31,330ம் உதவி ஊதியமாக வழங்குகிறது (6). இதுவே சென்ற ஆண்டு உயர்த்தப் பட்டதற்குப் பிறகு கிடைப்பது. டைம்ஸ் ஆஃப் இந்தியா-வின் ஒரு கட்டுரையின் படி இந்தியாவில் 77,798 பேர் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறார்கள் (7). இதை வைத்துக் கணக்கிட்டால் வருடத்துக்கு சுமார் 2,664 கோடி வருகிறது.

இது அதிகமான செலவுதான். இதை ‘வேஸ்ட்’ என்று நிறுத்தி விட்டால் அந்தப் பணத்தை வேறு பற்பல கட்டுமானப் பணிகளுக்கு செலவிடலாம்தான். ஆனால், ‘வேஸ்ட்’ பற்றி பேசும் போது வேஸ்டாகப் போகும் மற்றப் பணத்தையும் பார்ப்போம்.

ஆட்டோமொபைல் துறையை ‘ஊக்குவிக்க’ 2014ல் அரசு விற்பனை வரிகளை குறைத்தது. அதில் வருடத்துக்கு 22,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் வந்தது (8). இதில் கவனிக்க வேண்டியது, இந்த வரிக் குறைப்பு செடான் மற்றும் எஸ்.யூ.வி எனப்படும் சொகுசுக் கார்களுக்கும் கிடைத்தது. அதாவது பென்ஸ் கார் வாங்குபவரும் அரசின் வரிச் சலுகையை அனுபவித்தார். இந்த மாதிரி சொகுசுக் கார்களுக்கு கொடுத்த வரிச் சலுகையில் வந்த நஷ்டம் சுமார் 1,800 கோடிகள்.(9)

தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப் படும் மறைமுக வரிச் சலுகைகளில் ஆண்டுக்கு 7,500 கோடி அரசு இழக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதி வரியை அரசு தள்ளுபடி செய்ததில் 65,000 கோடி இழப்பு; ‘வாராக் கடன்’ போல ‘வாரா வரி’ என்று அரசு முழுக்குப் போட்டதில் 76,000 கோடி ரூபாய்கள். இதில் முக்கிய விஷயம் இந்த முழுக்குப் போட்டது பெருந்தொழிற் சாலைகள் என்று இருப்பவைகளில் இருந்து போனதுதான். இந்த மாதிரி பெருந் தொழிற்களுக்கு வரிச் சலுகைகள் கொடுப்பதை இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியே கூட விமர்சித்து இருக்கிறார் (10).

இந்த மாதிரி தொழிலதிபர்களிடம் இருந்து அரசுக்கு வராமல் போனதும், அரசே தள்ளுபடி மற்றும் சலுகைகள்  கொடுத்தது எல்லாம் சேர்த்து கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்கள் (11).

சரி, எந்த ‘வேஸ்ட்’ பற்றி இப்போது நாம் பேசலாம்? எதனை அரசு நிறுத்த வேண்டும் என்று போராடலாம்? பி.ஹெச்.டி படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கும் ஊதியம் 2,600 கோடிகளை நிறுத்த சொல்லலாமா? அல்லது பென்ஸ் கார் மாதிரி வாங்குபவர்களுக்கு கொடுக்கும் வரிச் சலுகையை நிறுத்த சொல்லலாமா? அல்லது மொத்தமாக ஆட்டோமொபைல்-களுக்கு தரும் 22,000 கோடி ரூபாய்களை  நிறுத்தலாமா? சரி, இந்த 30 லட்சம் கோடி இருக்கிறதே அந்தக் கடலில் கொஞ்சம் கை விட்டு அள்ளலாமா? இல்லையேல் அதெல்லாம் முடியாது என்று இந்த பி.ஹெச்.டி மாணவர்களின் 16,000 ரூபாயில் கை வைக்கலாமா?

தரவுகள்:

  1. SUV கார்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகையின் மூலம் உண்டாகும் இழப்பின் உண்மையான புள்ளி விபரம் கிடைக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது, கடந்த வருடங்களின் விற்பனையில் இந்த வரிச் சலுகை சதவீதத்தைப் போட்டு செய்திருக்கும் ஒரு குத்துமதிப்பான கணக்குதான்

Tuesday 23 February 2016

நாம் பார்க்காத முதல்வர்



‘ஒரு முதலமைச்சரை எப்படி மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க முடியும்?’


‘தினமும் நான் பார்க்க முடிகிற ஆளைத்தான் சி.எம் ஆக்க வேண்டுமென்றால் எங்க எதிர் வீட்டு சிந்துவை-தான் முதல்வராக்கணும்!’


‘முதல்வரை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? ஒரு சால்வை போர்த்தி விட்டு வந்து விடுவீர்கள். அவ்வளவுதானே?’


செய்தித் தாள்களில் திமுக வெளியிட்ட முதல் பக்க விளம்பரத்துக்கு பதிலாக இந்த மாதிரியான பதிவுகள் பார்க்கிறேன். அந்த விளம்பரத்தை அவர்கள் ரொம்பவும் literal ஆக அர்த்தம் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. அதற்கு இரண்டு விதங்களில் விளக்கம் அளிக்கலாம் என்று யோசித்தேன்.


ஒரு முதல்வர் அல்லது பிரதமர் என்பவர் ராஜா அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் மக்களின் ‘பிரதிநிதி’ அவ்வளவுதான். ஒரு பிரச்சனை அல்லது ஒரு தேவை என்று வரும் போது மக்களோடு மக்களாக கை கோர்த்து நிற்பது அவரின் முதல் கடமை.


இங்கிலாந்தில் 2011ல் போலீஸ் தவறுதலாக ஒரு கறுப்பின மனிதரை சுட்டு அவர் இறந்து விட கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில் கலவரம் மூண்டது. லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு எல்லாம் சென்றார். 


ஒவ்வொரு மணி நேர இடைவெளிக்கும் பத்திரிகைகளுக்கு கலவரத்தை அடக்கும் முயற்சிகள் பற்றிய அப்டேட் அளித்துக் கொண்டே இருந்தார். முடிந்த அளவு டிவி விவாத நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு  கறுப்பின ஏரியாவுக்கு  மிக அருகில் வசித்துக் கொண்டிருந்த என் மாதிரி ஆட்களுக்கு ஜான்சன் எங்கள் வீட்டுக்கே வந்து ஆறுதல் செய்தது மாதிரி இருந்தது.


அதற்குப் பிறகும் கூட போரிஸ் ஜான்சனை இரண்டு முறைகள் டியூப் ரயிலில் (மெட்ரோ) பார்த்திருக்கிறேன். ஒரு முறை செல்பி கூட எடுத்துக் கொண்டேன்.




சென்ற டிசம்பர் தமிழ் நாட்டில் வெள்ளம் வந்த அதே நேரம் இங்கிலாந்தின் வட பிராந்தியங்களிலும் வெள்ளம் வந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அந்த ஊரிலேயே ஒரு வீடு எடுத்து தங்கி தினமும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு போய் நிவாரணப் பணிகளை மேற்பார்வை இட்டும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல்கள் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் வெள்ள எச்சரிக்கை வந்ததுமே ராணுவமும், பேரிடர் குழுவும் அந்தந்த ஊர்களில் முகாமிட்டு வெள்ளம் வரும் முன்பே மக்களை இடம் பெயர்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒருத்தர் கூட சாகவில்லை. பொருட்சேதமும் குறைவுதான். ஆயினும் கேமரான் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.


நாங்கள் விம்பிள்டனில் குடி பெயர்ந்த போது ஒரு நாள் யாரோ கதவை தட்ட யார் என்று கேட்டால் ‘உங்கள் ஏரியாவின் எம்பி நாந்தான்!’ என்றார் அவர். உள்ளே வரச் சொல்லி காபி கொடுத்து பேசிக் கொண்டு இருந்தோம். ‘என்ன வேலை செய்கிறீர்கள்?’, ‘உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா?’, ‘ஏரியா உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?’ என்றெல்லாம் பேசி விட்டு காபி குடித்து விட்டு புறப்பட்டு விட்டார். அதற்குப் பிறகும் அவரை சில முறை தெருவில் பார்த்த போது சிரித்து விட்டு ‘ஹவ் ஆர் யூ?’ என்று தலை ஆட்டி விட்டு போவார்.


மக்களை சந்திப்பது என்றால் இதுதான். இந்த அளவுக்கு நெருக்கமாக மக்களோடு வாழ்வதுதான் மக்களாட்சி. சரி இந்த மாதிரி எல்லாம் இங்கே எம்பிக்கள், மேயர்கள் இருக்க முடியாது. பாதுகாப்பு பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன என்றே வைத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?


கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறை கூட முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. மேலே சொன்ன மாதிரி பிரச்சனைகளில் மக்களோடு ஆதரவாக கூட நின்றதில்லை. பொருளாதாரம், மது விலக்கு, மாநில நிதிப் பற்றாக்குறைகள், போன்ற முக்கியமான பிரச்ச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரியாது. கோவன் கைது, சசி பெருமாள் மரணம், டிராபிக் ராமசாமி தாக்குதல், அவதூறு வழக்குகள் போன்ற விஷயங்களில் அவர் என்ன நினைத்தார் என்றே நமக்கு தெரியாது. மந்திரிகள் அடிமைகள் போல் நடந்து கொள்வது, அவர் சிறையில் இருந்த போது நடந்த அலகு குத்திய, யாகம் செய்த  அவலங்கள் பற்றி எல்லாம் அவர் என்ன நினைக்கிறார் என்றே நமக்கு தெரியாது.


எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக வெள்ள நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார், ஏன் எங்கேயும் தென்படவே இல்லை, ஏன் ஒரு நிருபர் கூட்டம் கூட நடத்தவில்லை, ஏன் ஒரு தரம்குறைந்த ஒரு வாட்ஸ் அப் ஆடியோ மூலம், அதுவும் வெள்ளம் வடிந்து பல நாட்கள் கழித்து, மக்களோடு அவர் பேச வேண்டிய அவசியம் வந்தது என்பதற்கு எல்லாம் அவர் பதில் சொல்லவே இல்லை. அப்படி செய்யவில்லை என்பதை விட, பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட அவர் நினைக்கவில்லை என்பதுதான் பெரிதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஜனநாயக ரீதியில் நிர்வாகம் நடத்தும் முதல்வர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. உப்பரிகையில் இருந்து கொண்டு அரசாளும் மகாராணி போல மட்டுமே நடந்து கொள்ளும் மனநிலை அவரிடம் தென்படுகிறது.


வெள்ள நேரத்தில் அவருக்கு உடம்பு சரியில்லை; ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு இருந்தார் என்று சிலர் வாதம் செய்கின்றனர். அது வாதம் இல்லை, வெறும் வதந்தி மட்டுமே. அவருக்கு உடலுக்கு என்ன பிரச்சனை, என்ன அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பன பற்றி எல்லாம் எந்த அதிகார பூர்வ தகவல்களும் நம்மிடம் இல்லை. சும்மா கிசுகிசு போல மட்டுமே விஷயங்கள் உலா வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி சும்மா ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் கூட அந்த ரிப்போர்ட் அவரின் அதிகார பூர்வ இணையத்தில் வெளிடப் பட்டு விடும். அதற்குக் காரணம் ஜனாதிபதியின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இருக்கிறது என்பதுதான். சில தீவிரமான வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் நம் சிந்தனைத் திறமையை பாதிக்கும் சக்தி உள்ளவை. நிறைய நேரங்களில் சரியான முடிவெடுக்கும் திறனை அவை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த ஆட்சியாளர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுகிறார். ஆனால் இங்கே அந்த மாதிரி எந்தக் அக்கறையும் நம் முதல்வருக்கு இருந்ததாக தெரியவில்லை. தமிழகத்தை ‘ஆளும் உரிமையை’ அவர் பரம்பரை சொத்து மாதிரி மட்டுமே கருதுவதாக தெரிகிறது.


தான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை, எந்த நிருபரையும் மதிக்கத் தேவையில்லை. எந்த அக்கவுண்டபிலிட்டி-யும் எனக்குக் கிடையாது என்று உலவும் ஒரு முதல்வர் ஆபத்தானவர். அப்படிப்பட்டவர் நல்லவராகவும், கருணையுடைவராகவும் கூட இருக்கட்டும். ஆனால் அவர் ஜனநாயகத்தின் நீண்ட கால ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதவர்.


முதல்வரை மக்கள் பார்க்க வேண்டும் என்றால் தினமும் கேட் வாசலில் வந்து ‘குட் மார்னிங் ஆன்டி’ என்று சொல்லி விட்டுப் போகிற எதிர் வீட்டு சிந்து அல்ல; நம்மோடே வாழ்கிறார்; நம் கவலைகளை பகிர்ந்து கொள்கிறார்; நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்; தேவைப்படும் போது நம் வீட்டுக்கு அல்ல,  நம் ஏரியாவுக்கு வருகிறார் போன்றவைதான் தேவை. வெள்ளம் வந்த போது பாரீஸில் இருந்தாலும் ட்விட்டர் மூலம் கவலைப் பட்டு இந்தியா திரும்பியவுடனே  ஹெலிகாப்டரில் ஏறி பாதிப்பை பார்வையிட வந்த மோடியின் கவலை, வீல் சேரில் மட்டுமே வாழும் அளவுக்கு மூப்படைந்து விட்டாலும் தெருவில் இறங்கி சேதங்களை பார்வையிட்ட கருணாநிதியின் அக்கறை, இவைகள்தான் நமக்குத் தேவை. அரசியல் லாபத்துக்காக இவர்கள் செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன் வைத்தால் கூட அதே அரசியல் லாபத்தைப் பற்றி முதல்வர் ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி வருகிறது.

நிறைவாக, ‘எங்கேயுமே போக மாட்டேன்’, ‘யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்’, ‘எந்த நிருபரையும் சந்திக்க மாட்டேன்’, என்று நினைக்கும் ஒருவர் அவர் நல்லவராகவே இருந்தால் கூட எனக்கு தேவையில்லை. எல்லாரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கும், யாரும் சந்திக்க பெரிதும் கஷ்டப்படத் தேவையிருக்காத, பத்திரிகைகளை மதிக்கும் ஒருவர், அவர் ஓரளவு கெட்டவராகவே இருந்தால் கூட அவர்தான் இந்த நாட்டுக்கும், நம் ஜனநாயகத்துக்கும் தேவை. அந்த நோக்கில் இன்றைய விளம்பரத்தில் உள்ளடங்கிய விமர்சனத்தை முழுவதும் ஆதரிக்கிறேன். எந்த அக்கவுண்டபிலிட்டியும் எடுத்துக் கொள்ளாத இந்த அரசும், உப்பரிகையில் அமர்ந்து அருள் புரியும் இந்த மகாராணித்தனமும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Thursday 14 January 2016

ஜல்லிக் கட்டு - பாகம் 1 (பீட்டா)

Big Girl, one of the dogs that was abused by their owners and left to die. PETA put her to sleep.
ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக பெரும் ஆரவாரத்துடன் கருத்துகள் முன் வைக்கப் பட்டுக் கொண்டு வருகின்றன. என் முகநூல் கணக்கில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு என்னை டேக் செய்து பதிவுகள் வந்திருக்கின்றன. இன்பாக்ஸில் கொஞ்சம் பாராட்டியும் மிக அதிக அளவு விமர்சித்தும் வந்திருக்கின்றன. பாட்டி தவிர என் வீட்டில் உள்ள எல்லாப் பெண்களும் வீதிக்கு இழுத்து வரப் பட்டு விட்டார்கள்.


இன்றும் நேற்றும் ஜல்லிக்கட்டு பற்றி வந்த பதிவுகள், திட்டுக்கள் அளவுக்கதிகமாக இருந்ததால் முழுமையாக பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. எனவே தனித் தனியாக பதில் அளிக்க இயலாததற்கு வருந்துகிறேன். ஆனால் அந்தக் கேள்விகள் இன்னமும் கொஞ்சம் தொக்கி நிற்கின்றன. எனவே அவற்றை இங்கே ஆராயலாம் என்று முனைந்தேன்.


முதல் முதலில் PETA பற்றி பேசலாம். அவர்கள் நாய் பூனைகளை கொல்கிறார்கள் என்பதை பெரிய வாதமாக முன் வைக்கிறார்கள். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் விகடன் இணைய தளத்திலேயே இதை ஒரு கட்டுரையாக போட்டிருந்தார்கள் (1). அதை விட பெரிய ஆச்சரியம் ‘ரத்தக் கறை படிந்த பீட்டா-வின் உண்மை முகம்!’ என்றும் ‘அதிர்ச்சிப் பின்னணி’ என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஒரே ஆதாரம் ஹஃபிங்க்டன் போஸ்ட் என்கிற இணைய தளத்தில் வந்த கட்டுரை (2). பாதிக்குப் பாதி விஷயங்கள் ‘சொல்லப் படுகிறது’, ‘கூறப்படுகிறது’ என்றெல்லாம் சாமர்த்தியமாக எழுதி உள்ளனர். யார் கூறினார்கள், யார் சொன்னார்கள் என்பதெல்லாம் பற்றி கவலையே படவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பீட்டா-வின் இணைய தளத்துக்கு போய் பார்த்தோ அல்லது அவர்கள் அலுவலகத்துக்கோ கூட போன் பேசி விசாரித்து இருக்கலாம். அப்படி செய்யாமல் ஒரு பக்க வாதத்தை மட்டுமே கொடுப்பதன் மூலம் கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை சொல்லி விடுகிறார்.


இப்போது அந்தக் குற்றச்சாட்டை பார்ப்போம்.


பீட்டா ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான விலங்குகளை கருணைக் கொலை செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் அதனை மறைக்கவோ மறுக்கவோ செய்வதே இல்லை. இதை வைத்து பீட்டா விலங்குகளை கொன்று குவிக்கும் அசுர குலம் மாதிரி இங்கே பேசப்படுகிறது. ஆனால் அப்படி கருணைக் கொலை செய்வதற்கு இருக்கும் காரணங்கள்தான் இங்கே முக்கியம்.


ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பல்லாயிரக் கணக்கான விலங்குகளை தெருக்களில், வீடுகளில் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றுகிறார்கள். அப்படி பெறப்பட்ட விலங்குகளை தத்து எடுத்துக் கொள்ள பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி அழைப்பு விடுக்க வேண்டும், அவர்களே காப்பகத்தில் வைத்துக் காப்பாற்றலாமே என்று கேட்கலாம். நிறைய விலங்குகள், குறிப்பாக நாய் பூனை, இவை territorial animals என்று சொல்லப்படுபவை (3). அதாவது அவை பிறந்த, கொஞ்ச நாள் வளர்ந்த இடங்களை தங்கள் சொந்த வாழ்விடமாக பாவித்து அந்த இடத்தில் அடுத்த விலங்கை அனுமதிக்காது. அப்படி வேறு ஒரு விலங்கு அந்த இடத்துக்கு வந்தால் அதனை சண்டையிட்டு துரத்தி அடித்து விடும். இதை நீங்கள் நம் ஊர் தெரு நாய்களிடமும் பார்க்கலாம். ஒரு தெருவில் வசிக்கும் நாய் அடுத்த தெரு நாயை உள்ளே விடாது. அப்படி வாழ்ந்த நாய்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க முடியாது. அதனால்தான் நம் ஊர் கார்ப்பரேஷன் கூட தெரு நாய்களுக்கு கருத்தடை பண்ண எடுத்துக் கொண்டு போய் ஆபரேஷன் பண்ணி விட்டு திரும்பவும் அவர்களை எடுத்த தெருவிலேயே விட்டு விடுவார்கள். நாய்களின் இந்த குணம் தெரியாமல் நிறைய மக்கள் திரும்ப அவற்றை அவர்கள் தெருவில் விடுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அவர்களுக்கும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எல்லாம் வந்திருக்கிறது.


அந்த மாதிரி மக்கள் எதிர்ப்புக்கு பயந்து பூட்டான், ஜோத்பூர் இரண்டு ஊர்களிலும் அந்த ஊர் கார்ப்பரேஷன் தெரு நாய்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய மைதானத்தில் வேலிகள் கட்டி காப்பகம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே நாய்கள் கும்பல் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டு பலவீன நாய்கள் பெரும் காயங்கள் அடைந்திருக்கின்றன. வெற்றி பெற்ற நாய்கள் போடப்படும் உணவை தாங்களே எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க, அவற்றுக்கு பயந்து காப்பக ஊழியர்கள் வேலிக்கு வெளியில் இருந்தே உணவு மொத்தத்தையும் தூக்கிப் போட்டுப் போய் விட, யாரும் சுத்தம் செய்ய உள்ளே போகாமலே போய்  நாய்கள் எல்லாம் காயத்திலும், பட்டினியிலும், தங்கள் மல-ஜல சேற்றில் மூழ்கியும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கின்றன.(4)


எதற்கு இதை சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி இருக்கும் போது அந்த நாய்களை வைத்துக் காப்பாற்ற முடியாது. அவற்றை தனித் தனியாக வீடுகளில் தத்துக் கொடுப்பது மட்டுமே தீர்வு. அதுவும் பத்துப் பதினைந்து நாய்கள் என்றால் கூட சமாளித்து விடலாம். பீட்டா கையகப் படுத்தும் விலங்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் தத்து எடுக்க வருபவர்களோ டஜன் கணக்கில் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் அந்த நாய் பூனைகள் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சாவதற்கு இதுவே பரவாயில்லை என்று ஆகிறது.


அடுத்த வகை feral என்று அழைக்கப் படும் விலங்குகள். அதாவது காட்டு விலங்கு நிலையிலேயே இருப்பவை. பெரும்பாலான தெரு நாய்கள், தெருப் பூனைகள் இவ்வகையானவையே. இவற்றை தத்து எடுத்துப் போய் எல்லாம் வீட்டில் வளர்க்க முடியாது. இவற்றில் சில பெரும் ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். இப்படி இருப்பதால் இந்த விலங்குகளுக்கும் பிரச்சனை, அதை சுற்றி இருப்பவர்களுக்கும் ரிஸ்க்தான்.


அடுத்து, பெறப்பட்ட விலங்குகளில் நிறைய பெரும் நோயினால் காப்பாற்றும் நிலையை தாண்டியவை மற்றும் அவற்றை வைத்திருந்தவர்களால் கொடூரமாக நடத்தப் பட்டு மனிதர்களைக் கண்டாலே பயந்து நடுங்குபவை. இவற்றை வாழ வைத்திருப்பதை விட கருணைக் கொலை செய்வது பல மடங்கு நல்லது. மனிதர்களிலேயே quadriplegia மாதிரி வாத நோய் அல்லது காப்பாற்ற இயலாத, பெரும் வலி கொண்ட சிலவகை கான்சர் நோயுடையோரை கருணைக் கொலை செய்ய பெரும்பாலான மேலை நாடுகளில் சட்டம் அனுமதிக்கிறது. இந்தியாவிலும் இந்த கருணைக் கொலை பற்றிய விவாதங்கள் கோர்ட்டில் அடிக்கடி நடக்கின்றன.


இந்த மாதிரி விலங்குகள்தான் கருணைக் கொலை செய்யப் படுகின்றன. பீட்டா இது பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். இணையத்தில் கிடைக்கின்றன (5). அதற்கு பொறுமை இல்லாதவர்கள் அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவைப் பார்க்கலாம் (6).


விலங்கு உரிமை விவாதத்தில் இரு தரப்பு இருக்கின்றன. ஒரு தரப்பு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்பது.பீட்டா இந்த தரப்பு. இன்னொரு தரப்பு விலங்குகளை எந்த நிலையிலும் கொலையே செய்யக் கூடாது என்பது. No Kill Advocacy Centre மாதிரி இந்த இயக்கங்கள் இதனை முன்னெடுக்கின்றன. இந்த இயக்கம்தான் பீட்டாவின் கருணைக் கொலையை விமர்சித்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரைக்கு காரணமானவர்கள். இந்த இயக்கத்தின் விமர்சனம்தான் விகடன் கட்டுரை மற்றும் முகநூலில் பகிரப் பட்ட நிறைய பதிவுகளுக்கு மூலமாக கிடைத்திருக்கிறது.


என்னைப் பொறுத்த வரை இந்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரையை பீட்டா-வின் ‘கொடூர முகமாக’ பார்ப்பதை விட கருணைக் கொலை பற்றிய விவாதமாகவே பார்க்க வேண்டும் என்பேன். இரண்டு விலங்கு உரிமை இயக்கங்கள் தங்கள் கொள்கை நிலைப்பாட்டை விமர்சித்துக் கொள்கின்றன என்கிற நிலையில் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது.


நான் கருணைக் கொலையை ஆதரிக்கிறேனா என்பதை என்னால் இன்னமும் முடிவு செய்ய இயலவில்லை. மனிதனோ, மிருகமோ அவற்றை கருணைக் கொலை செய்வதை ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. ஆனால் மேற்சொன்ன எல்லாக் காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலையில் என்னை நிறுத்தினால் பீட்டா செய்வதையேதான் நானும் செய்வேனா என்பது தெரியவில்லை. இதில் பிரச்சனை என்னவென்றால் கொலை செய்யாமல் இருக்கும் கொள்கை கொண்டதினால் No Kill Advocacy Centre மிகக் குறைவான விலங்குகளையே தங்கள் காப்பகத்தில் ஏற்றுக் கொள்கிறது. பீட்டா உலகளாவிய இயக்கமாதலால் இவர்கள் மாதிரி அளவோடு நிறுத்த முடியாது. அப்படி அளவோடு ஏற்றுக் கொண்டால் ‘No Kill Advocacy Centre கையகப் படுத்தாமல் போன மற்ற விலங்குகள் கஷ்டப் படுவதை அவர்கள் அனுமதிப்பதாகத்தானே ஆகிறது?’ என்கிற பீட்டாவின் கேள்வி இங்கே முக்கியமானது (7).


இப்படி இரு விலங்கு உரிமை இயக்கங்கள் நடுவில் நடக்கும் சிந்தனாவாத விவாதத்தைதான் ஜல்லிக் கட்டு ஆதரவாளர்கள் எடுத்துக் கொண்டு பீட்டாவின் ‘முகமுடியை’ கிழித்து விட்டதாக பரபரகிறார்கள்.


விகடன் கட்டுரையின் அடுத்த விமர்சனம் கருத்தடை பற்றியது. விலங்குகளை கருத்தரிக்கவே செய்யாமல் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து விடுவதை பீட்டா பிரச்சாரம் செய்கிறது, அப்படி செய்வதன் மூலம் அந்த விலங்குகள் இயற்கையான வாழ்க்கை வாழ்வதை தடுத்து அவர்களை ‘கொடுமைப் படுத்துகிறது’  என்று விகடன் கட்டுரை குற்றம் சாட்டியது.


இந்தக் குற்றச்சாட்டை விட இந்தக் கட்டுரையாளரின் illiteracy என்னை மிகவும் பாதித்தது என்பதுதான் உண்மை.


தெரிந்தோ தெரியாமலோ பூனை, நாய் இவற்றை மனிதன் domesticate பண்ணி நம்மோடு வாழப் பழக்கி விட்டான். சில காலத்துக்கு முன்பு வரை அவற்றின் தேவை அவனுக்கு இருந்தது. இப்போது அந்தத் தேவை முடிந்து போய் விட்டதால் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் முடிந்து போய் விட்டதாக கருதுகிறோம். அப்படி செய்ததனால் இந்த இரண்டு விலங்கினங்களும் பெரும் கஷ்டத்தில் உழல்கின்றன. தெரு நாய்களின் கஷ்ட ஜீவனம் பற்றி நானே முன்பு ஒரு ப்லாக் எழுதியிருந்தேன் (8) இவை பல்கிப் பெருகி இன்னமும் பெரும் கஷ்டத்தில் முழுகுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு நம்மிடம் இருக்கும் தீர்வுகள் இரண்டு. ஒன்று: இந்த விலங்குகள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பமும் ஆளுக்கு ஒன்று என்று தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு: இந்த விலங்குகளுக்கு கருத்தடை பண்ணி அவை இன்னமும் பெருகாமல், அவற்றின் சனத்தொகை குறையும் படி செய்ய வேண்டும்.


பீட்டா இரண்டாவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிறது. இந்தக் கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன். ஆரோக்கியமான பூனைகள் அவர்கள் வாழ்நாளில் கிட்டத் தட்ட 100 குட்டிகள் போடும் சக்தி கொண்டவை. ஏற்கெனெவே நம்மிடையே இருக்கும் பூனைகளை காப்பாற்ற வழியில்லாத போது பிறந்த குட்டிகளை எப்படி வைத்துப் பாதுகாப்பது? தெரு நாய்கள் ஆறேழு குட்டி போட்டு விட்டு அவற்றுக்கு பால் கூட கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகின்றன. உங்களுக்கு எப்போதாவது நேரமிருந்தால் குட்டி போட்ட தெரு நாயை போய் கவனியுங்கள். உங்கள் இதயம் உடைபடும். அப்போது நீங்களும் இந்த வழிமுறையை வரவேற்க வாய்ப்பிருக்கிறது.


நம்மிடம் இன்றைக்கு இருக்கும் பிரச்சனை pet animals எனப்படும் செல்ல விலங்குகள் லட்சக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அவற்றை வளர்க்க ஆசைப்படும் மக்கள் ஆயிரத்தில் கூட இல்லை. அந்த மாதிரி சமயத்தில் இருப்பவற்றை முடிந்த அளவு காப்பற்ற வேண்டும், மற்றும் அவை பல்கிப் பெருகாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பீட்டாவின் நிலைப்பாடு. அதில் முழுமையாக நான் உடன்படுகிறேன். நான் முன்பு ஒரு பூனை வளர்த்து வந்தேன். அது வயதுக்கு வந்த உடனேயே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து விட்டேன். சென்னை கார்ப்பரேஷன் ப்ளூ க்ராஸ் சேர்ந்து தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்தார்கள். உண்மையில் இந்த சிந்தனைக்கு முன்னோடியாக இருந்ததற்காக பீட்டா-வுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்.


இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பீட்டா பற்றி விமர்சிக்கும் விதமான விஷயங்கள் எங்கே படித்தாலும் அதை நன்கு ஆராய்வது முக்கியம். Taking it with a pinch of salt என்று சொல்வார்கள். அது மாதிரி. ஏனெனில் பீட்டா-வுக்கு உலகெங்கிலும் சக்தி வாய்ந்த எதிரிகள் இருக்கிறார்கள். சும்மா ஜல்லிக் கட்டு என்கிற ஒரு விஷயத்தில் கை வைத்ததற்கே பாதி தமிழ் நாடு அவர்களுக்கு எதிராக கொதித்து எழுந்திருக்கிறது. ஆனால் பீட்டா கை வைத்த மற்ற விஷயங்கள் பில்லியன் டாலர் தொழில்கள் சம்பந்தப் பட்டவை. விலங்குகளை பரிசோதனைக்கு பயன்படுத்தும் மருந்து கம்பனிகள், அழகு சாதன க்ரீம்களை விலங்குகள் மேல் டெஸ்ட் செய்யும் காஸ்மெடிக் கம்பனிகள்,  இறைச்சி உற்பத்தி கம்பனிகள், தோல் பதனிடும் கம்பனிகள், ஹலால் இயக்கங்கள், திமிங்கலங்களை வேட்டையாடும் ஜப்பானிய அரசு  என்று பீட்டாவின் மேல் கறம் வைத்துக் கொண்டு ஆயிரம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். பீட்டாவின் மேல் ஒரு சிறிய புகார் வந்தாலும் அதனை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெளியிட பில்லியன் டாலரில் பட்ஜெட் வைத்துக் கொண்டு இவர்கள் தயார்.


இன்று பொதுக் கருத்தை ஒட்டி விகடன் மாதிரி, தி இந்து மாதிரி பத்திரிகைகளே கூட ஜல்லிக் கட்டு ஆதரவாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படியானால் உலக அளவில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இயக்கம் இது.

இவர்கள் முன்னெடுக்கும் விஷயங்கள் இன்று சிரிப்பாகவும், நடைமுறைக்கு ஒத்து வராததாகவும் தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நமக்கு கண்டிப்பாக தேவை என்பது என் கருத்து. இங்கே இப்போது பீட்டா நுழைந்ததனால் விலங்குகளை இதுவரை ஒரு பொருட்டாக மதித்திராதவர் கூட அதைப் பற்றி பேசும், கொஞ்சமாவது யோசிக்கும் நிலை தோன்றி இருக்கிறது. போன வருஷம் வரை சாராயம் ஊற்றிக் கொடுத்து, கூர் கத்தியால் மாட்டின் பின்னால் குத்து குத்தென்று குத்தி விட்டு, இன்றைக்கு ‘மாடும் மனிதனும் ஒன்றென வாழும் இனம் நாம்,’ என்று நம்மைப் பேச வைத்ததற்கே பீட்டா-வுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


தரவுகள்:
========
1)http://goo.gl/5NZeyW
2) http://goo.gl/614HKQ
3) https://en.wikipedia.org/wiki/Territory_(animal)
4) http://goo.gl/nX0uAW
5) http://www.peta.org/blog/euthanize/
6) https://www.youtube.com/watch?v=u3AxNgrU51o
7) http://www.peta.org/issues/companion-animal-issues/animal-shelters/
8) http://sriwritesintamil.blogspot.in/2015/10/blog-post_22.html