Monday 9 May 2016

யாருக்கு ஒட்டு?



யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. கட்சி சார்ந்து வரும் பதிவுகள் தவிர முக்கியமாக மெலிதாக சாதி சார்ந்த பதிவுகள் நிறைய தென்படுகின்றன. ‘எல்லாருமே திருடங்கதான்...இங்கே யாரு யோக்கியன்?’ என்கிற பதிவுகளும் நிறைய தெரிகின்றன. இப்படி பதிவிடுகிறவர்கள் கோபத்தில் சொல்கிறார்களா அல்லது நிம்மதிப் பெருமூச்சில் சொல்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

என் அனுமானத்தில் இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை இங்கே பகிர்கிறேன்.

நிறைய முறை போல இந்தத் தேர்தலிலும் யார் வரக் கூடாது என்பதுதான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது. விலக்க வேண்டியவர்களை விலக்கி அப்புறம் யார் மிஞ்சுகிறார்கள் என்று பார்ப்பதுதான் இங்கே வேலை செய்யும் என்பது என் கருத்து.

அந்த வரிசையில் என் லிஸ்டில் இருக்கும் முதல் கட்சி தேமுதிக. இப்போது தேர்தலில் இருக்கும் கட்சிகளிலேயே எந்தக் கொள்கையும் இல்லாத ஒரே கட்சி இவர்கள்தான் என்று உறுதியாக சொல்லி விடலாம். ஆனானப் பட்ட சீமானே, ‘தமிழ் நாஜி’ என்று இகழப் படுகிறவர், கூட தனக்கென்று கொள்கைகள் வைத்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகள் தயார் செய்திருக்கிறார். (அந்தக் கொள்கைகள் நிறைய ஆபத்தானவை என்பது வேறு விஷயம்.) ஆனால் கொள்கை என்று சும்மா பேருக்குக் கூட வைத்திராமல் இயங்கும் கட்சி தேமுதிக  மட்டுமே. அது தவிர தலைவர், முதல்வர் வேட்பாளர், என்கிற விஜயகாந்த் எப்படிப்பட்ட தரமானவர், மேடைகளில் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்த்து வருகிறோம். ஜெயலலிதாவாவது பத்திரிகைகளை சந்திப்பதே இல்லை. விஜயகாந்த் வெளிப்படையாக திட்டுகிறார். காறித் துப்புகிறார். அடிக்க எழுந்து ஓடுகிறார். இதெல்லாம் ஒரு ரவுடி கூட செய்யக் கூடாத காரியங்கள், ஆனால் முதல்வர் வேட்பாளர் செய்கிறார். மேலும் தெளிவாக சிந்தித்து ஒரு வாக்கியம் கூட பேசத் தெரியாத அவர் எப்படி அரசு சிக்கல்களை புரிந்து கொள்வார், எப்படிப்பட்ட தெளிவான நிர்வாக முடிவுகளை எடுப்பார் என்பது பெரிய கேள்வி. ஆகவே, என்னைப் பொருத்த வரை சட்டசபைக்குக் கூட அனுப்பப்படக் கூடாத மனிதர் அவர்.

அடுத்ததாக லிஸ்டில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இருப்பதில் திறமையானவராக உள்ளவர் திருமாவளவன் மட்டுமே. ஆனால் அவர் கட்சி மாநில அளவில் இன்னமும் வளராதது ஒரு பிரச்சனை என்பது தவிர மிக முக்கியமான பிரச்சனை இவர் இப்போது முதல்வர் போட்டிக்கு இல்லை. எனவே அவரையும் விட்டு விடுவோம்.

அடுத்ததாக லிஸ்டில் இருப்பது அதிமுக. ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் தலைவரைக் கொண்டது அந்தக் கட்சி. தான் ஒரு ஜனநாயக நாட்டின் மாநிலத்தில் முதல்வர் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியுமா என்பது சந்தேகம்தான். முதல்வர் ஆனது முதல் ஒரு சினிமா ரிலீஸ் பிரச்சனையை தாண்டி அவர் பத்திரிகைகளை சந்தித்ததே இல்லை. தன் மந்திரிகள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் ஆகியோருக்கு எந்த சுதந்திரமும் வழங்காமல் தன் ஆணைக்காக காத்திருக்க வைத்திருப்பவர். டிசம்பரில் அந்த ஆணை நேரத்துக்கு வராமல் போனதில் என்ன ஆனது என்பதைப் பார்த்தோம். பெருவெள்ளம் போன்ற ஒரு பேரிடர் நேரத்தில் மக்களோடு தொடர்பே இல்லாமல் விமர்சனங்கள் எல்லை மீறிப் போன பிறகு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் அனுப்பியதோடு சரி. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவச மற்றும் ஏற்கனவே இருக்கும் நலத் திட்டங்கள் தவிர்த்து கட்டுமான மற்றும் தொலை நோக்கு திட்டங்கள் என்ன என்ன நிறைவேற்றப் பட்டது என்பதை அவர்கள் சொல்வதே இல்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் மேல் அக்கறை இருக்கிறது என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவர் சர்வாதிகார எண்ணம் கொண்டவர் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என்னைப் பொருத்த வரை, மோசமான ஜனநாயகவாதியைக் கூட ஏற்றுக் கொள்வேன். ஆனால், கருணையுள்ள சர்வாதிகாரியை எந்நாளும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஏனெனில், அப்படிப்பட்டவர் மக்களுக்கு திட்டங்கள் தீட்டுவதாக நினைக்க மாட்டார்கள். மக்களுக்கு பிச்சை போடுவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தவிர, அவர்களால் ஜனநாயக அமைப்புகளுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட்டு தேசத்தின் அடிப்படையே குலைந்து போகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே இட்லி முதல் சிமெண்ட் வரை அம்மா பிராண்ட் எங்கெங்கும் விரவி இருக்கிறது. எனவே, ஜெயலலிதா தோல்வியுற்று தன் அகங்காரத்தின் எல்லைகளை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை அவருக்கு நாம் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் வழக்கு தோற்றால் சட்டமே அந்த வாய்ப்பையும் அவருக்கு வழங்கும்.

முக்கியமாக அவர்களின் தேர்தல் அறிக்கை, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் இலவசங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. கட்டமைப்பு பற்றியும் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றியும் இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்கிற accountabilityயே இல்லாதவர்கள் வெறுமனே மொபைல் ஃபோன் மற்றும் மோட்டார் சைக்கிள் மானியத்தோடு நிறுத்திக் கொண்டு விடுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

அடுத்தது பாமக. விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற விஷயங்களில் அன்புமணியின் அணுகுமுறை பாராட்டத் தக்கதாகவே இருக்கிறது. தன்னம்பிக்கையோடு பதவிப் பிரமாணத்தையே ட்ரைய்லர் காட்டியதில் இருந்து இலவசமே கிடையாது என்கிற தீர்மானத்தில் இருந்து நிறைய விஷயங்களில் இவர்களைப் பாராட்டலாம். அதுவுமின்றி இன்றைக்கு எல்லாரும் பேசிக் கொண்டு இருக்கும் மதுவிலக்கை ரொம்ப நாளாகவே வலியுறுத்திக் கொண்டு இருக்கும் ஒரே கட்சி அவர்கள்தான். மேலும் நிழல் பட்ஜெட் போடுவது போன்ற விஷயங்களில் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் செயல்படுவதில் இவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால் சாதிக் கட்சி என்கிற லேபிளை இன்னமும் இவர்கள் முழுமையாக துறக்கவில்லை. இளவரசன் சம்பவத்தில் இவர்கள் பேசிய பேச்சுக்களும் முரணான அணுகுமுறைகளும் உருவாக்கிய கசப்புணர்வு இன்னமும் தீரவில்லை. கடைசியாக வடமாவட்டங்களில், வன்னியப் பெரும்பான்மை இருக்கும் இடங்கள், தவிர்த்து இவர்கள் மற்ற இடங்களில் பெரிய இருப்பை நிலை நிறுத்தவில்லை என்பதால் இந்தத் தேர்தலில் இவர்களை விட்டு விடுவது உத்தமம்.

நாம் தமிழர் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆகவே அவர்களின் ஆபத்தான உளறல்களை இங்கே ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்ததாக நம்மிடம் இருக்கும் ஒரே ஆப்ஷன் திமுக. அது சென்ற ஆட்சியில் நிறைய தவறுகள் செய்து அதனால் போன தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த கட்சி. அதில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்பலாம். போன ஆட்சியின் தவறுகளுக்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுவரை இப்படி தமிழ்நாட்டில் செய்த ஒரே தலைவர் இவர்தான். சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து, தேசிய அளவிலேயே தங்கள் முந்தைய தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்ட இரண்டே கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி மட்டும்தான். தங்கள் தவறுகளை வெளிப்படையாக விளக்கி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்கவில்லைதான். ‘தெரிந்தோ தெரியாமலோ’ என்று கொஞ்சம் பூசி மெழுகித்தான் செய்திருக்கிறார். ஆனால் அதைத் தாண்டி  செய்வது நம் ஊரில்  ஆபத்தான விஷயம். செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது மேலை நாடுகளில் ஒருவரின் உளவியல் பலமாக பார்க்கப் படுகிறது. இந்தியாவில் அதுவே ஒருவரின் பலவீனமாக மக்களால் பார்க்கப் படுகிறது. எனவே இந்த அளவுக்கு ஸ்டாலின் இறங்கி வந்திருப்பதே, என்னைப் பொருத்த வரை, பாராட்டத் தக்க விஷயம்.

அடுத்தது, அவர்களின் தேர்தல் அறிக்கை. தமிழருக்குப் பிடித்த இலவசப் பொருட்களை கொஞ்சம் வைத்து, நிறைய நலத் திட்டங்களை சேர்த்து, மற்றபடி கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் பட்டிருப்பது நல்ல விஷயம்.

அடுத்தது, இருக்கும் முதல்வர் வேட்பாளர்களிலேயே உடல் ஆரோக்கியமான வேட்பாளர்கள் இருவர்: அன்புமணி மற்றும் ஸ்டாலின். கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப் பட்டிருக்கிறார் என்றாலும், வந்து ஓரிரு மாதங்களிலேயே ஸ்டாலின் முன்னுக்கு கொண்டு வரப்படுவார் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது.

அடுத்தது, இந்தத் தேர்தல் ஸ்டாலினுக்கு மிக முக்கியமான ஒன்று. அவரை முன் நிறுத்தி நடக்கும் இரண்டாவது தேர்தல் இது. திமுகவில் நாம் முகம் சுளிப்பது மாறன், அழகிரி போன்றோரின் குறுக்கீடுகள்தான். இப்போது ஸ்டாலின் ஜெயித்தால் திமுகவில் இருக்கும் இந்த சக்தி மையங்கள் பலவீனமடையும் வாய்ப்பு அதிகரிக்கும். தோற்றால் ஸ்டாலின் பலவீனப் பட்டு அழகிரி போன்றோரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அது திமுகவுக்கும், மாநிலத்துக்கும் நல்லதல்ல.

கடைசியாக இந்தத் தேர்தலில் ஜெயித்தால் அதிமுக போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு கட்சி அசுர பலம் பெரும். ஏற்கெனெவே அம்மா-வாக உருப் பெற்று, யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாமல் உலா வரும் ஜெயலலிதா மக்களிடம் இருந்து இன்னமும் தள்ளிப் போய் அமைச்சர்கள் இன்னமும்  அடிமைத்தனம் மிகுந்து நிர்வாகம் மேலும் சீர்கெடும் வாய்ப்பு அதிகரிக்கும். ஹோட்டலில் இட்லி போடுவதையே பிச்சை போடுவதாக காட்டிக் கொள்ளும் ஒரு கட்சி அரசியலில் இருந்து தூர வைக்கப் பட வேண்டும். இந்தத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வி அடைந்தால் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கை கொள்வேன்.

யாருக்குமே பெரும்பான்மை வராமல் போவது நல்லது என்கிற கருத்து இங்கே நிலவுகிறது. எனக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. அப்படி நடப்பது கொஞ்சம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஒரு செக் வைப்பது போல இருக்கும் என்றாலும், சிறு மற்றும் உதிரிக் கட்சிகளுக்கு குதிரை பேரம் நடத்துவது, எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவது, ஸ்டார் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களை பதுக்கி வைப்பது போன்ற 80களில் நடந்த ஜனநாயக விரோதக் காட்சிகள் அரங்கேறும். ஆட்சி இன்றைக்கு இருக்குமா நாளைக்குப் போகுமா என்று தெரியாமல் தொலைநோக்குத் திட்டங்கள் பெரிய அளவில் நிறைவேறாமல் தடை படும் வாய்ப்புகள் அதிகம்.

திமுகவுக்கோ அதிமுகவுக்கோ விஜயகாந்த் ஆதரவு தேவைப்படும் நிலை வருவது நல்லதல்ல என்று நினைக்கிறேன். எனவே இந்த தொங்கு சட்டசபை பற்றி எனக்கு கவலை இருக்கிறது. என்னைப் பொருத்த வரை, ஒரே கட்சி மட்டுமே ஆட்சிக்கு வருவது நல்லது. அது திமுகவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவைப்பட்டால் காங்கிரஸ் கொஞ்சம் தொகுதிகள் ஜெயித்து இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆட்சி செய்யலாம்.

கடைசியாக, அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரியும் ஆபத்து இந்தத் தேர்தலில் இருக்கிறது. அவை பிரியக் கூடாது. அதிமுக, குறிப்பாக அதன் தலைவியின், சர்வாதிகாரத்தனம் நமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இங்கே ஜெயலலிதா ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமே. மக்களின் ஒப்புதல் பெற்று அதன் மூலம் அரசு நிர்வாகம் செய்வதற்கு பணிக்கப் பட்டிருப்பவர் மட்டுமே; ஏழைத் தமிழர்களுக்கு தினமும் இட்லிப் பிச்சை போடும் மகாராணி அல்ல என்பதை அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தத் தேர்தல்.

ஜெயலலிதாவுக்கு மக்களாட்சி குறித்தோ மக்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தோ எந்தவொரு நினைவும் இல்லை. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வீசியதை வீசி எறிந்து விட்டால் ஓட்டைப் போட்டு தன்னை மீண்டும் கோட்டைக்கும் கொடநாட்டுக்கும் ஹெலிகாப்டரில் அனுப்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இப்போது அவருக்கு ஒரு பாடம் தேவையாக இருக்கிறது. கடந்த காலங்களில் செய்தது போலவே மக்கள் அந்தப் பாடத்தைப் புகட்ட வேண்டிய நாள் மே 16.