Monday 2 November 2015

மோடியின் இந்தியா - பாகிஸ்தானின் வாய்ப்பு



(ஆயாஸ் அமீர் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி. பஞ்சாப் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். The Newsல் அவர் எழுதிய இந்தக் கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்திருக்கிறேன்.)


இந்தியாவில் நிகழ்ந்தவற்றிலே பாகிஸ்தானுக்கு மிகவும் பிரயோசனமான என்றால் அது நரேந்திர மோடி பிரதமரானதுதான். ஜியா உல் ஹக் சமயத்தில் பாகிஸ்தான் எப்படி பார்க்கப் பட்டதோ அந்த மாதிரி மற்றவர்கள் இந்தியாவை பார்க்க வைத்திருக்கிறார் அவர்.

சுதந்திர சிந்தனைகள் மேல் தாக்குதல்கள், கருத்து சுதந்திரத்துக்கு எதிர் வரும் ஆபத்து, தன் நம்பிக்கைகள் காரணமாக தனி மனிதர்கள் கொல்லப் படுவது, வெறுப்பும், அடிப்படைவாதமும் தேசத்தின் மேல் உமிழப் படுவது, மத அடிப்படைவாத கருத்துக்கள் திணிக்கப் படத் துவங்குவது, அரசியலில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு மதம் நுழைவது...இது எல்லாமே பாகிஸ்தானில் நடக்க வேண்டியது.

இதில் விஷயம் என்னவென்றால் இது வரை இந்தியர்கள் தங்கள் தேசத்தின் பெருமையைப் பற்றி, ‘ஒளிரும் இந்தியாவைப்’ பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றம், எதிர்காலத்தின் சாத்தியக் கூறுகள் எல்லாமே விளம்பர ஏஜென்சிகளின் கனவு உலகம் போல இருந்தது. பாகிஸ்தானின் தோல்விகளோடு ஒப்பிடுகையில் அவை எங்கோ மேலே இருந்தது. பாகிஸ்தானியர்களோடு பேசும் போதெல்லாம் இந்தியர்கள் ஒரு பாசாங்குக் கவலையோடும், ‘நாங்கள் மிகவும் முன்னேறிய சமூகம் பார்’ என்கிற தோரணையோடுமே அணுகினார்கள்.

இது எல்லாம் போதாதென்று ‘நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு பார்’ என்றும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உலகத்துக்கு நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.  இதனால் உலகெங்கும் பொதுவான எண்ணம் ‘இந்தியா முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்க பாகிஸ்தான் மதத் தீவிரவாதிகளின் கையில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருக்கிறது,’ என்று நிலைத்தது.

அந்த மாதிரி சிந்தனைகள் நம்மை சோர்வடைய வைத்தாலும் அதை நிரூபிக்கும் வகையில்தான் பாகிஸ்தானில் நடந்து வந்து கொண்டிருந்தது.  யாராவது ஒரு ஏழை மத அவமதிப்பு கைது செய்யப் ஜெயிலில் போடப் படுவார், ஒரு கிறித்துவ சமூகத்தில் தாக்குதல் நடக்கும், இஸ்லாத்தின் ஒரு தனிப் பிரிவை சேர்ந்த ஒருவர் சுடப்படுவார், இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் நடக்கும், இவைதான் உலக செய்திகளில் முதல் பக்கத்தை பிடிக்கும். அதுவே பின்னர் பாகிஸ்தான் எப்போதுமே பிரச்சனை நிறைந்த நாடுதான் என்கிற எண்ணத்தை உலகுக்கு உறுதிப் படுத்தும்.

ஆனால் சென்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதும், அதன் மூலம் ஹிந்து அடிப்படைவாதத்துக்கு கிடைத்த உற்சாகமும், இந்தியா ஒரு ‘ஹிந்து தேசம்’ என்று திரும்ப திரும்ப நிரூபிக்க நடக்கும் முயற்சிகளும் ஆட்ட விதிகளை பெருமளவு மாற்றி விட்டன. இன்றைய தேதியில் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்படைவாதம் என்கிற குழியில் இருந்து மேலே வர பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அதற்கு எதிர் திசையில் வேகமாக பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

நியூ யார்க் டைம்ஸ்ஸில் பணி புரியும் இந்திய பத்திரிகையாளர் சோனியா ஃபலெரொ எழுதுகிறார்: ‘இன்றைய இந்தியாவில் மத சார்பற்ற சிந்தனையாளர்கள் கடும் சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 77 வயது கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். கோவிந்த் பனசாரே மும்பையில் கொல்லப் பட்டிருக்கிறார். நரேந்திர தாபோல்கர் கொல்லப் பட்டிருக்கிறார். இவர்கள் எல்லாருமே ஹிந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை சாடியவர்கள்.’  

கூடவே உபியில் ஒரு முஸ்லிம் பசுக்கறி வைத்து உண்டார் என்கிற சந்தேகத்தில் அடித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். இதனை எதிர்த்து நிறைய எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். ஷர்மிளா தாகூர் இன்றைய இந்தியாவை எமெர்ஜென்சியோடும் பாபர் மசூதி இடிப்பு நேரத்தோடும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். ஆனால் இவை எல்லாம் ஆங்காங்கே ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்கள்தான். சமூகத்தில் பொதுவாக பயமும் சகிப்பின்மையும்தான் நிலவுகிறது.

பிரதமரோ அமைதியாகவே இருக்கிறார். ஹிந்துக் கும்பல்கள் குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த போது அவர் காத்த அதே அமைதிதான் இப்போதும் அவரிடம் தென்படுகிறது. முதல்வர் மோடிக்கும் பிரதமர் மோடிக்கும் வித்யாசம் இருக்கும் என்று நிறையப் பேர் நம்பினார்கள். ஆனால் அவர் மாறவே இல்லை என்பது இப்போது புரிபடுகிறது. நரேந்திர மோடி ஹிந்துத்வா கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-ஸோடு மணம் புரிந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்துத்வாவும் ஒரு மாதிரியான நாஜி சிந்தனைதான். உள்ளூர் நாஜி அல்லது காவி நாஜி என்றும் அதனை அழைக்கலாம். இந்தியா ஹிந்துக்களுக்காகவே உள்ள தேசம், அதில் முஸ்லிம்களுக்கோ வேறு மதத்தினருக்கோ இடம் கிடையாது என்று நம்பும் ஒருவகையான இனவாதம் அது. ஆனால் இந்தியாவில் நிகழும் இந்தக் குழப்பத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. வெகு காலமாகவே நாம் மத அடிப்படைவாதத்திலும் சகிப்புத் தன்மையற்ற நிலையிலும் உழன்று கொண்டிருக்கிறோம். இப்போது இந்தியா ஒரு ஹிந்துப் பாகிஸ்தானாக ஆகத் துவங்கும் வேளையில் இந்தியாவின் நஷ்டம் பாகிஸ்தானின் லாபமாக மாற நாம் உழைக்க வேண்டும்.

ஆனால் இந்த லாபம் நல்ல பிரயோசனமான லாபமாகவும் பாகிஸ்தானிய சிந்தனைத் திறனை முன்னேற்றுவதாகவும் இருக்க வேண்டும். நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்: பாகிஸ்தானிய அடிப்படைவாதத்தின் பொற்காலம் முடிந்து போய் விட்டது. துப்பாக்கியை ஆட்டிக் கொண்டு இஸ்லாமிய தேசத்தை கட்டமைக்க உலவிய முல்லாக்கள் பெருமளவு அடக்கப் பட்டு விட்டார்கள்; முழுவதும் ஒழிக்கப் படவில்லைதான், ஆனால் அடக்கப் பட்டு விட்டார்கள். ஆனால் இந்த வெற்றியை இன்னமும் விரிவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நம் தேசத்தில் பெருமளவு விரவிக் கிடக்கும் ஊழல் ஒழிய வேண்டும். அடிப்படை சேவைகள் - நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை - போன்றவை சரி செய்யப் பட வேண்டும். சுகாதாரத்துக்கு நாம் தேவையான அளவு செலவிடுகிறோமா என்று பார்க்க வேண்டும். தேசம் முழுவதும் ஒரே கல்வி முறை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. எல்லா மாணவர்களுக்கு ஒரே புத்தகம் தேவை; அது நல்ல, அறிவார்ந்த புத்தகமாக இருக்க வேண்டும், சும்மா பாகிஸ்தானிய வரலாறு மாதிரி குப்பைகள் இருக்கக் கூடாது.

நம் ஒட்டு மொத்த பார்வையும், சிந்தனையும் பகுத்தறிவு மற்றும் நவீனவாதம் நோக்கிப் பயணிக்க வேண்டும். பழைய மூட சிந்தனைகளில் இருந்து நாம் வெளி வர வேண்டும். இந்தியா அடிப்படை வாதத்தை தழுவிக் கொண்டால் தழுவிக் கொள்ளட்டும். நாம் அந்த நிலையில் ஏற்கெனெவே இருந்திருக்கிறோம். அது நம்மை முன்னேற்றவில்லை. எனவே அதனை நாம் தூக்கி எறியவேண்டும். பகுத்தறியும் பண்புதான் கற்றலுக்கு முதல் தேவை. அந்தப் பண்பை நாம் வளர்க்க வேண்டும்.

மேற்கு தேசங்கள் எல்லாம் மதமே இல்லாத தேசங்கள் கிடையாது. அவற்றில் முக்கால்வாசி கிறித்துவ நம்பிக்கைகளை போற்றுபவை. நமது நம்பிக்கை இஸ்லாம், இந்த தேசத்தின் பெரும்பான்மையினரின் மதம். மேற்கு தேசங்களிலும் மதப் பிரச்சனைகள் தோன்றி மறைந்திருக்கின்றன. இப்போது தங்கள் மதத்தை  அவர்கள் சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதில்லை. அதே போல நாமும் நம் மதத்தை சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும்.

மசூதிகளில் தென்படும் ஒலிப்பெருக்கி துப்பாக்கிகளை விட அதிக நாசங்களை நம் சமூகத்தில் செய்ய வல்லவை. அவற்றை இப்போதுதான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரத் துவங்கியிருக்கிறோம். இன்னமும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத அவமதிப்பு சட்டத்தை வைத்து குழப்பம் விளைவிப்பது நிற்க வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பதில் ஏவுகணையோ ஒவ்வொரு அணுகுண்டுக்கும் பதில் அணுகுண்டோ நாம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நமக்கென்று ராக்கெட்டுகள், டாங்குகள், அணுகுண்டுகள் உள்ளன. இதுவே போதுமானது. வலிமையான தரைப் படையும் விமானப் படையும் நம்மிடம் உள்ளன. நமக்கு இப்போதைக்கு தேவை எல்லாம் நல்ல பள்ளிகள், கல்லூரிகள், அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமான ஞானம் இவையெல்லாம்தான். நம் மேல் பெரும் நம்பிக்கை வைத்து இந்தியா பற்றி குறைவாகப் பேசி இந்தியா பற்றிய பயத்தைக் குறைத்துக் கொண்டு வாழ முயல வேண்டும். அணுகுண்டு எண்ணிகையில் இந்தியாவை முறியடிக்க நினைக்காமல் சகிப்புத் தன்மையில், அறிவியல் அறிவில், பகுத்தறிவில், ஒருங்கிணைத்துச் செல்லும் மனநிலையில் இந்தியாவை விட உயர வேண்டும்... இசையிலும் கலையிலும் கூட அவர்களை மீற வேண்டும்.

நம் தேசத்து அறிவு ஜீவிகள் பாகிஸ்தான் தாலிபானை நம்மால் முறியடிக்கவே முடியாது என்று நினைத்தனர். கராச்சி பிரச்சனையை தீர்க்கவே முடியாது என்று எண்ணினர். அவர்கள் எண்ணம் தவறாகப் போனது. தாலிபான் மாதிரியான பெரும் சோதனைகளை பாகிஸ்தான் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது. மற்றவற்றையும் அப்படி கடக்க முடியாதா என்ன? மதுவிலக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம் மதுவை தடை செய்தாலும் ஒரு போன் செய்தால் எந்த ஊரிலும் உங்களுக்கு டெலிவரி கிடைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் இந்த மாதிரி பாசாங்குத் தன்மையிலேயே இருக்கிறோம். சட்டமும் நிஜ வாழ்க்கையும் ஒரே கோட்டில் இணைய வேண்டும். மதுவிலக்கு போன்ற பாசாங்குத் தனங்கள் ஒரு முன்னேறிய சமூகத்துக்கு ஒவ்வாதவை. அவை பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான பிம்பத்தை கட்டிக் காக்கவே உதவுகின்றன. கிரிமினல்களுக்கும் இந்த பாசாங்குத் தனங்கள் வசதியாக இருக்கின்றன. கள்ள மார்க்கெட்டுக்குப் போக வேண்டியது அரசு கஜானாவுக்கு போக வேண்டும். நமக்கு முன்மாதிரி துபாயாக இருக்க வேண்டும், சவுதியாக இருக்கக் கூடாது. நடைமுறை உண்மையை உணர்ந்து கொண்ட தேசமாக துபாய் இருக்கிறது, அதுவே அதன் பொருளாதார வெற்றிக்கும் காரணம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு இறைவன் கொடுத்த வரம். ஹிந்துத்வாவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும், காவி நாஜிகளுக்கு சேரும் வலிமைகளும் நமக்கு நல்லதுதான். நம்முடைய உள்நாட்டு பலவீனங்களை சரி செய்து கொண்டால், நம் சகிப்புத் தன்மையை, நம் பகுத்தறிவை நாம் வளர்த்துக் கொண்டால் யாரைப் பார்த்தும் எந்த நாட்டைப் பார்த்தும் பயந்து சாக வேண்டிய அவசியம் நமக்கு வராது.