Thursday 22 October 2015

கல்லடி படும் அரசு



'நாய்கள் மேல் யாராவது கல்லடித்தால் அரசாங்கம் பொறுப்பல்ல,' என்று தலித் குழந்தைகள் எரிப்பு பற்றி கருத்தளித்த ஜெனரல் விகே சிங் தலித்துகளை இழிவு படுத்தியிருக்கிறார் என்பது ஒரு முக்கியமான கருத்தாக பார்க்கப் படுகிறது. அது சரிதான் என்றாலும் பிராணிகள் மீதான அக்கறையின்மையும் அதை ஒட்டி உள்ள பெரும் பிரச்சனையும் இங்கே தென்படுகிறது. எனவே அவர் சொன்னதால் வெளிப்பட்டிருக்கிற உணர்ச்சிகளை கொஞ்ச நேரம் தள்ளி வைத்து விட்டு இந்தப் பிரச்சனையை பார்ப்போம்.


நம்மில் நிறையப் பேர் பொதுவாக தெரு நாய்கள் பற்றி கவலைப் படுவதில்லை. அவை என்ன சாப்பிடுகின்றன, எங்கே தூங்குகின்றன, மழை அல்லது கடும் வெயிலில் என்ன செய்கின்றன என்கிற கவலை நமக்கு பொதுவாக இருப்பதில்லை. உணவாவது குப்பை தொட்டியிலும், கசாப்பு மற்றும் டீக் கடைகளிலும் ஓரளவுக்கு கிடைத்து விடும். ஆனால் அவற்றுக்கு தண்ணீர் கிடைப்பதே இல்லை. பிஸ்கட் அல்லது இறைச்சி துண்டு போடுகிறவர்கள் கூட அவற்றுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை.


பொதுவாக குப்பங்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்விடங்களில்தான் நாம் நிறைய தெரு நாய்களை பார்க்கலாம். அவர்களில் நிறைய பேர் இந்த நாய்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க அங்கேதான் குப்பைகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன என்பதும் ஒரு காரணம். மும்பையில் மட்டும் தினமும் 500 டன் குப்பை அள்ளாமல் இரவில் விடப்படுகிறது என்று ஒரு தகவல் சொல்கிறது. இவை இந்த நாய்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கே  புணர்வில் ஈடுபடும், குட்டி போட்டு பாதுகாக்கும் அல்லது ரேபிஸ் போன்ற கொடும் வைரஸ் வந்து அவதியுறும் நாய்கள் மக்களை கடிக்க முயல்கின்றன. இதில் இருந்து தப்பிக்க மக்கள் அவற்றின் மேல் கல்லடித்து விட்டு தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார்கள்.


தெரு நாய்கள் உலவுதற்கு மூல காரணம் மனிதனின் தோல்விதான். Stray dogs எனப்படும் ஆதரவற்ற நாய்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல ரேபிஸ்-ஸால் ஏற்படும் மரணங்களிலும் நமக்குத்தான் முதலிடம். மும்பையில் மட்டும் ஆண்டுக்கு 80,000 பேர் நாய்க் கடி படுகிறார்கள்; 20,000 பேர் ரேபிஸால் இறக்கிறார்கள். ரேபிஸ் வைரஸ் உருவானதே இந்தியாவில்தான் என்று சார்லஸ் ரெப்ரெக்ட், அட்லாண்டாவை சேர்ந்த Centers for Disease Control and Preventionன் தலைவர், குறிப்பிடுகிறார்.


இந்தியாவில் நமக்கு இருக்கும் பொதுவான கருணையின்மையால் வளர்ப்பு நாய்களாக வாங்கப்படும் ஜாதி நாய்களையும்  முக்கால் வாசி நேரம் சரியாக கவனிக்க முடியாமல் துரத்தி விடுகிறோம். அதே போல நாய் விற்பனையாளர்களும் விற்காத நாய்க் குட்டிகளை துரத்தி விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் தெரு நாய்களோடு சேர்ந்து உணவுக்கும் வாழ்வுக்கும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டு விடுகின்றன.


சில பேர் தெரு நாய்களை பிடித்து கும்பலாக கொல்வதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால் பிரச்சனை நாய்கள் அல்ல; நம் ஊர் குப்பைகள். நாய்களை கொன்று தீர்த்து விட்டால் எலிகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஏன் போயஸ் கார்டனிலோ போட் கிளப்பிலோ தெரு நாய்களை பார்க்க முடியவில்லை என்றால் அந்த சாலைகள் துப்புரவாக இருக்கின்றன. அங்கே நாய்களுக்கு பெரிய தீனி கிடைக்காது.


ஆகவே நம் சாலைகளின் துப்புரவுக்கும், நம்முடைய சுகாதாரத்துக்கும், நாய்களின் பிரச்சனையை தீர்ப்பது ஒரு முக்கியமான தேவை. ஒரு தேசம் என்கிற அளவில் நாம் ஓரளவு முன்னேறுவதற்கும் நம் சாலைகள் பாதுகாப்பானதாக ஆவதற்கும் நாய்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டும்.  இது பிராணிகள் மீதான கருணை என்கிற அளவில் மட்டுமே நிற்பதல்ல. மனிதர்கள் மீதான கவலையும் கூட. சும்மா ஏதோ நாய் மேல் ஒருத்தன் கல்லடிக்கிறான் என்பதன் பின்னணியில் ‘நாய்கள் / குப்பைகள் / ரேபிஸ் / சாலை பாதுகாப்பு / துர்மரணம்’ என்கிற ஒரு வட்டம் இருக்கிறது.


நாய்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. குப்பை இல்லா தெருக்களை உருவாக்குவது, தெரு நாய்கள் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் குறைக்கும் வழிகளை கண்டறிவது, பிராணிகள் மீதான மக்களின் அக்கறையின்மையை போக்கும் வழிகளை கண்டறிவது, என்று அவர்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.  


எனவே தலித் குழந்தைகளோடு செய்யப்பட்ட அந்த அருவருக்கத் தக்க ஒப்பீட்டை கொஞ்சம் ஒதுக்கி  விட்டுப் பார்த்தால் கூட ஜெனரல் விகே சிங் சொன்னது தவறு. நாய்கள் மீது அடிக்கப்படும் கல் உண்மையில் சமூகத்தின் மீதும் அதனை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் செயலின்மை மீதும் அடிக்கப்படும் கல்தான். அதற்கு தான் பொறுப்பல்ல என்று அரசு சொல்லவே முடியாது. அந்த அப்பாவி விலங்குகள் மேல் எறியப்படும் கற்களை தடுப்பதில் நம் சமுதாயத்துக்கும் நம் அரசுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

Tuesday 13 October 2015

விருதுகளும் கேள்விகளும்



சாஹித்ய அகாதெமி அலுவலகத்தின் அலமாரிக்கு திரும்ப வந்து கொண்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட இருக்கும் இந்நிலையில் அதனை கிண்டல் அடித்தும் விமர்சித்தும் நிறைய கருத்துக்கள் வலது சாரி சிந்தனையாளர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் பண்டிட்கள் தாக்கப் பட்ட போது ஏன் திருப்பவில்லை, ஸ்ரீலங்காவில் போர் மூண்ட போது ஏன் செய்யவில்லை என்கிற மாதிரி கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அந்தக் கேள்விகளை கொஞ்சம் அலசலாம் என்றிருக்கிறேன்.


முந்தைய பிரச்சனைகளில் நயன்தரா சஹ்கல் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியாது. நான் இங்கே சொல்லப் போவது என்னை முன் நிறுத்தி மட்டுமே. நான் ஒரு விருதை திருப்பி அதற்கு இந்தக் கேள்விகள் எழும் பட்சத்தில் என்ன பதில் சொல்வது என்று மட்டுமே இங்கே யோசிக்கிறேன். அவ்வளவுதான்.


முதலில் காஷ்மீரி பண்டிட்கள் விஷயத்தைப் பார்க்கலாம். அதனை ஒரு இந்திய அரசியல் கட்சி முன் நின்று நடத்தவில்லை. அது காஷ்மீர் வெறியர்கள் நடத்திய செயல். ஜியா உல் ஹக் பாகிஸ்தானில்  கொண்டு வந்த இஸ்லாமியமயம் காஷ்மீரையும் பாதித்தது. அதில் பண்டிட்கள் பெருமளவு பாதிக்கப் பட்டார்கள். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம்கள் இதற்கு எதிராகவே இருந்தார்கள். இன்றும் கூட மிதவாத பிரிவினை அமைப்புகள் பண்டிட்களை திரும்பவும் குடியேற அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். (1) இன்றும் அங்கே நிறைய பண்டிட்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பகுதியில் பஞ்சாயத்து தலைவியாக ஒரு பண்டிட் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. (2)


அது ஒரு புறம் இருக்க அதை யாரும் கேட்கவில்லை என்று சொல்லவே முடியாது. 1989க்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தை மத்திய அரசு மிகக் கடுமையாக அணுகியிருக்கிறது. 1989ல் அங்கே 36,000 ராணுவ வீரர்கள் இருந்தார்கள் . இன்று ஆறு லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். அதாவது 15 காஷ்மீரிகளுக்கு ஒரு வீரர் என்கிற மேனிக்கு காஷ்மீர் ராணுவமயமாகி இருக்கிறது. 'Most militarised civilian zone in the word' என்கிற பெருமையை காஷ்மீர் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.(3) அங்கே அமுலில் உள்ள AFSPA என்கிற சட்டத்தை எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. அங்கே ராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாரண்டே இல்லாமல் கைது செய்யலாம். சித்ரவதை பண்ணலாம். கொலை கூட பண்ணலாம். இதுவரை பல்லாயிர கணக்கான காஷ்மீரிகள் அந்த மாதிரி 'காணாமல்' போயிருக்கிறார்கள். அங்கே ‘அரை விதவைகள்’, Half Widows, என்கிற பதம் மிகப் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதாவது கணவனை ‘விசாரணைக்கு’ ராணுவம் அழைத்துக் கொண்டு போய் அவன் காணாமல் போய் திரும்பியே வராமல் போய் விடுவான். அந்தப் பெண் விதவையாகி விட்டாளா இல்லையா என்பது தெரியாமலே அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். (4) அப்படி நூற்றுக்கணக்கான அரை விதவைகள் அங்கே இருக்கிறார்கள். எனவே 1989க்குப் பின் சில ஆண்டுகள் நடந்த கலவரங்களுக்கான விலையை காஷ்மீர் மக்கள் இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பது பெரும் பொய். சொல்லப் போனால் காஷ்மீரில் நம் இந்திய அரசு செய்யும் அட்டூழியங்களை எதிர்த்து வேண்டுமானால் விருதை திருப்பித் தந்திருக்கலாம்.


அடுத்தது சீக்கியர் பிரச்சனை. அது இந்திரா காந்தி தன் சுய லாபத்துக்காக உருவாக்கியது. அதற்கு விலையாக தன் உயிரரையே கொடுத்தார். அவருக்குப் பிறகு அதுவும் பெருமளவு வன்முறையினாலேயே ஒடுக்கப் பட்டது. கேபிஎஸ் கில் பஞ்சாபில் பெரும் முயற்சிகள் செய்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த முயற்சிகளில் பெரும் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்கிற குற்றச் சாட்டுக்கள் இன்றளவும் தொடர்கின்றன.(5) அதுவுமின்றி இன்று வரை ராணுவம் புகுந்த ஒரே வழிபாட்டுத் தலம் சீக்கியர்களின் பொற்கோயில் என்கிற அவமான சின்னத்தை தாங்கியே அது நிற்கிறது. சீக்கியர் கலவரத்துக்கு சோனியா, மன்மோகன் ஆகியோர் பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது நயன்தரா சஹ்கல் அகாதெமி விருது வாங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்திரா காந்தியை பெரிதும் விமர்சித்தே வந்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.


அடுத்தது, இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள் பற்றி சொல்லப் பட்டது. அதையும் யாரும் கேட்கவில்லை என்பது சரியல்ல. அந்த மாதிரியான நிகழ்வுகளால் அந்த சமூகம் படும் கஷ்டம் சொல்லி மாளாது. நிறைய ஊர்களில் முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பதில் தொடங்கி அன்றாடம் நிறைய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். முக்கியமாக, undertrials என்று சொல்லப்படும், சிறைப்பிடிக்கப்பட்டு வெறும் விசாரணை நிலையில் மட்டுமே சிறையில் வாடும் மூன்று லட்சம் பேரில் 21 சதவிகிதம் பேர்  முஸ்லிம்கள். (6) தலித்/பழங்குடியினருக்கு அடுத்த இடம் இவர்களுக்குத்தான். அதிலும் இந்தக் கைதிகளில் 17 சதவிகிதம் பேர் மேல்தான்   குற்றம் நிரூபிக்கப் படுகிறது. அதாவது 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் அப்பாவிகள். எனவே, யாரோ பத்துப் பதினைந்து தீவிரவாதிகள் செய்யும் அநீதிகளுக்கு மொத்த சமூகமும் பெரும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆகவே இந்தப் பிரச்சனைகளில் யாருமே கேள்வி கேட்கவில்லை. எந்த நடவடிக்கையுமே வரவில்லை என்கிறவர்கள் ஒன்று விவரம் தெரியாதவர்கள், அல்லது பொய் சொல்பவர்கள்.


(இலங்கையில் நடந்த போரை எதிர்த்து ஏன் யாரும் விருதை திருப்பி அனுப்பவில்லை என்கிற ஒரு பதிவையும் பார்த்தேன். அது கொஞ்சம் குழப்பமாக இருந்தது.சரி, இலங்கை எழுத்தாளர்களைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று அந்தப் பதிவைக் கடந்து விட்டேன்!)


ஆனால் ‘இதைக் கேட்டார்களா?’, ‘அதைக் கேட்டார்களா?’ என்று முஸ்லிம்கள் மேல் குற்றம் சாட்டும் இவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பிடுவதே இல்லை.


முதல் விஷயம், சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) புத்தகம் ராஜீவ் அரசால் தடை செய்யப் பட்டது. கருத்து சுதந்திரத்துக்கு இந்தியாவில் அடிக்கப்பட்ட மிக முக்கியமான சாவுமணி அது. இன்று 'மாட்டுக்கறி சாப்பிடுவது என் உரிமை,' என்று கூக்குரல் விடும் நிறைய முஸ்லிம்கள் அன்று அந்தத் தடையை ஆதரித்து குரல் விடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் நபிகள் நாயகத்தை மிகவும் கண்ணியக் குறைவாக சித்தரித்திருந்தது என்பது உண்மைதான் எனினும் தங்கள் மதத்துக்கு ஒவ்வாத ஒரு புத்தகத்தை தேசம் முழுமைக்கும் தடை செய்ய வேண்டும், அதாவது  அதை மற்ற மதத்தவரும் படிக்கக் கூடாது என்று போராடியது முஸ்லிம் இயக்கத்தவர்கள் செய்த தவறு. முஸ்லிம்களில் நிறைய முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்தத் தடையை கண்டித்திருந்தாலும் அப்போது எழுந்த பெரும் கூக்குரல்களில் அவர்களின் குரல்கள் அடிபட்டுப் போய் விட்டன. அதிலும் முற்போக்குவாதியான குஷ்வந்த் சிங் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதலாமவர்.(7)


ஆனால் ருஷ்டி சம்பவம் உலகளாவிய பிரச்சனையாக மாறிய ஒன்று. அப்போது மும்பையில் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். அந்த நாவலை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்தவர் குத்திக் கொல்லப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் ஆயதொல்லா கொமேனியின் ஆணையை சிரமேற்கொண்டு ருஷ்டியை கொல்ல நிறைய பேர் அவரைத் தேடி அலையோ அலை என்று அலைந்தார்கள். (8)


இரண்டாவது, ஷா பானோ வழக்கு. கணவனால் விவாகரத்து செய்யப் பட்ட ஷா பானோ ஜீவனாம்சம் கோரி கோர்ட்டுக்கு சென்றார். ஹை கோர்ட்டில் அவர் வெற்றி பெறவே அவர் கணவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். அங்கும் ஷா பானோ வெற்றி பெற்று விடவே பிரச்சனை பெரிதானது. விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய ஷரியா சட்டப்பட்டி விவாகரத்து நடந்து 90 நாட்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் கொடுத்தால் போதுமானது. இதனை சுட்டிக் காட்டி முஸ்லிம்கள் தேசமெங்கும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் பயந்து போன மத்திய அரசு அந்த ஷரியா சட்டத்தை உள்ளடக்கி புதிய சட்டம் ஒன்றை இயற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியாவில் இருந்த எல்லா முஸ்லிம் பெண்களின் உரிமையும் ஒரே நாளில் சட்ட ரீதியாக பறிக்கப் பட்டது. இதனை எதிர்த்து எந்த எழுத்தாளரும் பிரச்சனை பண்ணவில்லை. சொல்லப் போனால் வினோத் மேத்தா போன்ற கருத்து சுதந்திர காவலர்கள் இந்த புதிய சட்டத்தை வரவேற்று ‘இதன் மூலம் முஸ்லிம்கள் கலவரத்தை நிறுத்துவார்கள் என்றால் இந்த சட்டம் வருவதில் தவறில்லை’ என்றே எழுதினார். (9)


என்னைக் கேட்டால் ஸல்மான் ருஷ்டி மற்றும் ஷா பானோ வழக்கு இந்த இரண்டும்தான் செக்யூலரிசம் பலவீனமடைய காரணமாக இருந்தவை. இந்த இரண்டு விஷயங்களில் கோபமுற்றிருந்த ஹிந்துத்வா இயக்கங்களை மனம் குளிர்விக்க வேண்டி அயோத்தியில் பாபர் மசூதியை ராமர் பூஜைக்காக ராஜீவ் காந்தி திறந்து கொடுத்தார். அதன் பிறகு நடந்ததை நாடறியும். அதற்குப் பிறகு ஹிந்துத்வவாதிகள் தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்கள், சினிமாக்கள், டிவி சீரியல்கள் போன்றவற்றை தடை செய்யக் கோரும் போதெல்லாம் அவர்களுக்கு வசதியாக ருஷ்டி சம்பவம் பயன்பட்டது.


ஆனால் ஒன்று. இவை எல்லாவற்றையும் விட இன்று நடக்கும் சமாச்சாரங்கள் மிக மோசமானவை. ஏனெனில் இன்றைய பிரச்சனை என்னவென்றால் மத்திய அரசே முன் நின்று ஹிந்துத்வா சிந்தனைகளை, அதன் அடிப்படையற்ற தாத்பரியங்களை பரப்பும் பெருமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான். இங்கே சிறுபான்மையினரின் தேசபக்தி அதிகம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறைகள் மீது தொடர்ந்து சிந்தனாவாத தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கூடவே ஹிந்து மதத்தின் பன்முக படிவங்கள் ஒடுக்கப் பட்டு ஹிந்துத்வவாதிகள் மனதில் மட்டுமே இருக்கும் ஒரு கற்பனையான ஹிந்து மதம் நடை முறைப் படுத்தப்படும் முயற்சிகள் அரங்கேறுகின்றன. பாடப் புத்தகங்கள் ‘சுத்திகரிக்கப்’ படுகின்றன. வரலாறு ‘சுத்தம்’ பண்ணப் படுகிறது. பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகர்கள் மீது மிரட்டல்கள் விடப்படுகின்றன. நம் பண்டைய வரலாறு பற்றிய கற்பனையான விஷயங்கள் புகுத்தப் படுகின்றன. ஹிந்து அரசர்கள் ஹீரோக்களாகவும் இஸ்லாமிய அரசர்கள் வில்லன்களாகவும் மாற்றப் பட்டு வருகின்றனர்.


இவை எல்லாமே பாகிஸ்தானில் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் நிகழ்ந்தவை. அப்போது பாக் அதிபராக பொறுப்பேற்ற ஜியா உல் ஹக் அங்கே இஸ்லாமியவாதத்தை கொண்டு வந்தார். ஷரியா விதிகளை சட்டங்களாக்கினார். பாடப் புத்தகங்களை இஸ்லாம் மயமாக்கினார். இன்று பாகிஸ்தானில் பெரும்பான்மை இளைஞர்கள் இந்தியாவை வெறுக்கும் மனநிலையில் இருப்பதற்கும் இஸ்லாமிய தீவிரவாதம் அங்கே பெருகியதற்கும் ஜியா உல் ஹக்கின் இந்த முயற்சிகள்தான் காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். (10)


அதே மாதிரியான முயற்சிகள் இங்கே ஆரம்பித்திருக்கின்றன. மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்களே இப்படி நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார்கள். முக்கியமான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களுக்கு தகுதியே இல்லாத ஹிந்துத்வா அபிமானிகள் தலைவர்களாக நியமிக்கப் பட்டு வருகிறார்கள் (11) இந்த விஷயங்களை விளக்கவோ, இந்த குறுந் தலைவர்களை கண்டிக்கவோ, அல்லது இவர்களால் நமக்கு வரும் கவலைகளை போக்கவோ ஓரிரு வார்த்தைகளையாவது சொல்ல பிரதமர் தயாராக இல்லை. ஹிந்துத்வவாதம் சம்பந்தமாக அவரிடம் இருந்து கனத்த மவுனம்தான் நமக்கு கிடைக்கிறது. உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் நடிகர்கள் வரை எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்களில் நிறைந்து கிடக்கும் நம் பிரதமர் இதுவரை இந்த எந்த விஷயத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு ட்விட்டர் கூட பதியவில்லை. இதைப் பார்க்கும் போது அவரின் சம்மதம் அல்லது ஆசியுடனேயே இவை எல்லாம் நடக்கின்றன என்றுதான் கருத  வேண்டி இருக்கிறது.


இதற்கு எதிராக பெருமளவிலான உரத்த குரல்கள் தேவைப்படுகின்றன. மனம் நொந்து விருதுகளை திருப்பி அனுப்பும் எழுத்தாளர்களின் ஈனக் குரல்கள்தான் இப்போதைக்கு ஒலித்து வருகின்றன. அவை கிண்டல்களாலும் கேலிகளாலும் அலட்சியப் படுத்தப் படுகின்றன. ‘விருது சரி, வாங்கிய பணத்தை கொடுத்தியா?’ என்று எக்காளங்கள் கேட்கின்றன.


இந்த வழியிலேயே இவர்களை போக விட்டால் இவர்கள் ஒரு ஹிந்து தேசத்தை கட்டமைக்காமல் நிறுத்த மாட்டார்கள். ஹிந்து தேசம் என்பது உண்மையில் ஒரு நரக உலகம்தான். தங்களுக்கென ஒரு இஸ்லாமிய தேசம் அமைத்து நரகத்தில் உழலும் பாகிஸ்தானுக்கு போட்டியாக இவர்கள் உருவாக்கும் ஹிந்து நரகம்தான் அது. இப்போதைக்கு அந்த நரகத்துக்கு கடைக்கால்கள் நடப்பட்டு வருகின்றன. நாம் யாரும் கண்டுகொள்ளாமல் போனால் கூடிய விரைவில் நரகத்தின் திறப்பு விழாவிற்கு நமக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்படும்.


References:
---
1) Separatists ask Pandits to return: http://goo.gl/qL9NUR
2) Kashmiri Pandit woman wins Panchayat poll: http://goo.gl/2ZHVX5
3) Most Militarised Zone: https://goo.gl/Nj2lHo
4) Kashmir's Half Widows: http://goo.gl/IpEfeT
5) Punjab Counterinsurgency: http://goo.gl/2tJzCP
6) Undertrials: http://goo.gl/GCRSJf
7) Satanic Verses Controversy: http://goo.gl/47wsuL
8) Salman Rushdie's run for his life is depicted in his autobiography Joseph Anton
9) Mehta supporting  Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986: From the book 'Mr Editor, How Close are you to the PM?' by Vinod Mehta
10) Jia and his Islamisation: From the book 'Pakistan: Eye of the Storm' by Owen Bennett Jones
11) On NDA's academic appointments: http://goo.gl/zNcba1