Monday 22 June 2015

யோகா



யோகா இன்றைக்கு மிகப் பெரிய வணிக நிறுவனமாகி விட்டது. அமெரிக்காவில் மட்டுமே இன்றைய தேதிக்கு ஒன்றரைக் கோடிப் பேர் யோகா பயில்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இன்று உலக யோகா தினம் கொண்டாடப் படுகையில் டெல்லி இந்தியா கேட் அருகே பிரதமரே கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் யோகப் பயிற்சிக் கூட்டம் கின்னஸ் சாதனை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறது.

இந்த உலக யோகா தினத்துக்கு போவதில் கொஞ்சம் பிரச்சனைகளும் இல்லாமலில்லை. மத்திய அரசு பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் யோகா செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் இருந்து கொஞ்சம் எதிர்ப்பு எழுந்து, யோகா ஹிந்து மதத்தை சேர்ந்ததா இல்லையா என்பதில் கொஞ்சம் விவாதங்கள் நடந்து, யோகா எத்தனை புராதனமானது, எவ்வளவு புனிதமானது என்கிற அளவுக்கு போயிருக்கிறது. குறிப்பாக மத்திய தர முன்னேறிய சாதியினர் ‘யோகா பற்றி தவறாக பேசினால் கையை ஒடிப்பேன்,’ என்று பாயத் துவங்கி விட்டனர்.

ஆகவே யோகா-வின் பழைமை வரலாறு பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று யோசித்தேன்.

சிலர் யோகா சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் (கிமு 3500). அங்கே கிடைத்த சில சித்திரங்களில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் உருவங்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கின்றன என்பது மட்டுமே இதற்கு ஆதாரம். அது நம் இந்தியர்கள் சாதாரணமாக அமரும் நிலைதான் என்பது ஒருபுறம் இருக்க இந்த தியரி ஒரு ஆதார தவறை செய்கிறது. அதாவது யோகா என்பது ‘ஆசனங்கள்’ மட்டுமே என்கிற சிந்தனையின் பேரில் வரும் தியரி இது. யோகா என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமே என்கிற நிலை வந்தது 19ம் நூற்றாண்டில்தான்.

யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.

பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.

யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

கடைசியாக இன்றைய யோகா-வுக்கு ஆதாரமாக பெரும்பாலும் எல்லாரும் குறிப்பிடுவது பதஞ்சலியின் யோக சூத்திரம் எனும் புத்தகம்தான் (கிபி 300). ஆனால் இதிலும் இன்றைய ஆசனங்கள் பற்றியெல்லாம் பெரிய அளவு விளக்கங்கள் இல்லை. தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி செய்பவர் சகஜமான நிலையில் உட்கார வேண்டும் என்று மட்டும்தான் பதஞ்சலி குறிப்பிடுகிறார்.

அதாவது சிந்தனைப் கட்டுப் பாட்டில் தியான நிலை என்கிற அர்த்தத்தில்தான் யோகம் என்கிற வார்த்தை பெரும்பாலும் அப்போது பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் உடலை போஷிப்பதையே  பதஞ்சலி தூற்றுகிறார். உண்மையான யோகிகள் உடலை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று சொல்கிறார். அது உண்மைதான். அவர் காலத்தில் யோகிகள் என்று அறியப்படுபவர்கள் உடல் என்கிற கட்டுப் பாடுகள் இல்லாத காரியங்கள் செய்வார்கள் (என்று நம்பப் பட்டது). அதாவது யோகிகள் தண்ணீரில் நடப்பார்கள், பறப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் உலாவுவார்கள்.

இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யோகிகள் என்கிற வார்த்தை பண்டைய காலத்தில் நிறைய அர்த்தங்களை குறித்தது. சில யோகிகள் மேற்சொன்ன ‘சித்து வேலைகள்’ செய்வார்கள். சிலர் போதை மருந்துகளை உட்கொண்டு கடவுளர் பற்றிய மாயத் தோற்றங்களை காண்பார்கள். (எல்.எஸ்.டி. சாப்பிட்டு நிறையப் பேர் அமெரிக்காவில் இயேசு கிறிஸ்துவை பார்த்து பேசியெல்லாம் இருக்கின்றனர்!).

இவர்கள் வணங்கும் கடவுள் ருத்ரன் எனப்படும் வேதக் கடவுள். (இந்த ருத்ரன் பிற்காலத்தில் சிவனின் ஒரு வடிவமாக ஆக்கப்பட்டு விட்டார். இவரின் இன்னொரு பெயர்தான் யோகேஸ்வரன் - அதாவது யோகிகளின் ஈஸ்வரன்.)

இதே யோகிகள் பிற்காலத்தில் இந்த ‘உடலை வெறுக்கும்’ வேலையை கொஞ்சம் ஓவர்-ஆகவே செய்து காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது இவர்கள்தான் உடலை  ‘மலம், மூத்திரம், சீழ் இவற்றால் ஆன கலவை’ என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தவர்கள். உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெரும் குளிரில் பாதுகாப்பே இல்லாமல் நடப்பார்கள். உடைகள் அணியாமல் நிர்வாணமாக உலவுவார்கள். மண்டையோட்டை தட்டாக வைத்து சாப்பாடு போட்டு சாப்பிடுவார்கள். (நிறையப் பேர் மனிதக் கழிவை உண்டு நாளைக் கடத்துவதும் உண்டு.) இவர்கள் செய்யும் ஒரே ‘ஆசனம்’ ஒற்றைக் காலில் தவமிருப்பதுதான். இந்த ஒற்றைக் கால் தவசி யோகிகள் மக்களின் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார்கள். (மாமல்லபுரத்தில் - இதே கிண்டலில் செய்யப் பட்ட - ஒற்றைக் காலில் தவமிருக்கும் பூனையின் சிற்பம் ஒன்று உள்ளது.)

இந்த மாதிரி எல்லாம் செய்ததால், அப்போது (5 முதல் 10ம் நூற்றாண்டு) யோகிகள் பொதுவாக பைத்தியக் காரர்கள் அல்லது மந்திரவாதிகள் என்றுதான் மக்களால் கருதப் பட்டார்கள். இவர்களைப் பார்த்து நிறையப் பேர் பயந்தார்கள். யோகிகள் எனப்படுபவர்கள் பொதுவாக சம்பிரதாய வழிபாட்டு முறைகளுக்கு எதிரானவர்கள் என்கிற தோற்றமே பெரும்பாலும் இருந்தது. யோகிகள் ‘மந்திர சக்தி’ வாய்ந்தவர்கள் என்று நம்பியதால் அவர்கள் மேல் பாலியல் ரீதியான பயமும் இருந்தது. சில ‘நல்ல யோகிகள்’ வாழ்த்தினால் அவர்களின் ‘செலவிடாமல் சேமித்து வைத்த விந்து சக்தியால்’ பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. இதே போர்வையில் சில ‘போலி யோகிகள்’ தங்களை அண்டிய பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதும் அப்போதே நடந்திருக்கிறது. பின்னர் 12 முதல் 15ம் நூற்றாண்டுகளில் இந்த தாந்திரீக முறைகளும் சேர்ந்து கொண்டதால் யோகிகளுக்கு இருந்த கெட்ட பெயர் இன்னும் மோசமானது. இந்த காலகட்டத்தில் தான் ‘ஹட யோக ப்ரதீபிகா’ என்கிற புத்தகம் பிரபலமானது. ‘ஹட’ என்றால் force என்று அர்த்தம். இந்த புத்தகத்தில்தான் குண்டலினி என்கிற முறையில் முதுகுத் தண்டின் கீழ் உறங்கிக் கிடக்கும்  பாம்பு போன்ற ஒன்றை யோக முறையில் மேலே ஏற்றி ஏற்றி மூளைக்கு கொண்டு செல்லும் முறை குறிப்பிடப் பட்டிருந்தது. இதிலும் ஒரு  பெண்ணுடன் கலவி கொள்ளும் யோகி அவளின் ‘சக்தி’ முழுவதையும் உறுஞ்சி தனதாக்கிக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு பாலியல் ரீதியான பயமுறுத்தும் விஷயங்கள் நிறைய இருந்தன . இவை நிலைமையை இன்னும் மோசமாக்கின.

ஆதி சங்கரரின் சீடர்கள் இந்த உடல் ரீதியான யோகா முறைகளை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தக் கால கட்டத்தில் படித்த ஹிந்துக்கள் யோகிகளை முழுவதுமாக ஒதுக்கி விட்டனர். ‘ஹட யோக ப்ரதீபிகா’ புத்தகம் ஹிந்துக்களுக்கு ஒரு அவமானமாச் சின்னமாகவே இருந்தது. 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய, சுவாமி தயானந்த சரஸ்வதி ஹட யோகா ப்ரதீபிகா புத்தகத்தை ஆற்றில் விட்டெறிந்த ஒரு கதையும் இருக்கிறது.

சுவாமி விவேகானந்தரும் ஹட யோகத்தை அறவே ஒதுக்கி தானே ராஜ யோகம் என்கிற யோக வழியை பின் பற்ற வலியுறுத்தினார். பல்வேறு ஹிந்து தத்துவ வழிகளில் இருந்து கலந்து எடுக்கப் பட்ட இந்த வழியே எல்லா யோகத்திலும் உயர்ந்தது என்று கருதினார் (எனவேதான் அந்தப் பெயர்.)

இந்த மாதிரி சங்கடகரமான விஷயங்களால் பிரிட்டிஷாரும் கூட யோகிகள் என்பவர்களை வெறுத்தனர். மேற்சொன்ன பிரச்சனைகள் போதாதென்று பிரிட்டிஷ் அரசை வன்முறை ரீதியாக எதிர்த்த ‘தீவிரவாதக்’ குழுக்கள் நிறைய  யோகா நிலையங்கள் என்கிற போர்வையில்தான் இயங்கின. இதனால் யோகா நிலையங்களையே சட்ட விரோதமாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

அந்தக் கால கட்டத்தில் யோகா-வும் பாலியலும் கூட கலந்தே பார்க்கப் பட்டது. பண்டைய காலத்து சிந்தனையான யோகிகளின் ‘பாலியல் சக்தி’யும்  மத்திய காலத்து தாந்திரீக முறைகளும் கலந்து யோகிகள் அல்லது யோகா என்றாலே செக்ஸ் என்னும் பார்வையும் மக்களிடம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சர் ரிச்சர்ட் பர்ட்டன் 1883ல் பதிப்பித்த காம சூத்ரா என்னும் புத்தகத்தில் ‘ஆசனங்கள்’ பற்றி குறிப்பிடுகிறார். 1902ல் தாமஸ் எடிசன் எடுத்த Hindu Fakir என்னும் ஆவணப் படத்தில் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக யோகா செய்யும் படங்கள் அமெரிக்காவில் பிரசித்தி பெற்றன.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ‘நவீன’ யோகா உருப் பெற ஆரம்பித்தது. கொஞ்சம் பிரிட்டிஷ் உடற்பயிற்சி முறைகள், அமெரிக்க transcendentalism, ஸ்வீடனின் ஜிம்னாஸ்டிக்ஸ், YMCA-வின் பயிற்சிகள் இவற்றை சேர்த்து ஒரு  கலவையாக உடற்பயிற்சி முறைகள் உருவாகின. இந்த முறை யோகா உருவாக ஐரோப்பியர்கள், பிரிட்டிஷ் அரசு மற்றும் தேசியவாதப் போராட்ட வீரர்கள் மூவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷார் அவர்களின் உடற்பயிற்சி முறைகளை இதனுள் புகுத்த, தேசியவாதிகள் உடலை வலிமைப் படுத்தும் வழியாக யோகாவை மாற்றும் முயற்சியில் இந்த மாறுதல்கள் நிகழ்ந்தன.




ஆகவே, இன்று நாம் யோகா என்று புரிந்து கொள்ளும், பயிற்சி செய்யும் கலை உண்மையில் பல்வேறு மூலங்களில் இருந்து வந்து சங்கமித்த ஒரு விஷயம். முக்கியமாக டி. கிருஷ்ணமாசார்யா என்பவர் 1930 முதல் 1950 வரை உருவாக்கிய உடற் பயிற்சி முறைகள் மைசூர் அரச ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் இருந்து எடுக்கப் பட்டது. இவையும் யோகாவில் சேர்ந்து கலந்தன.



மேலும் பி.கே.எஸ். ஐயங்கார் 1966ல் பதிப்பித்த Light On Yoga புத்தகத்தில் இருந்த பயிற்சி முறைகள் நிறைய 1930லேயே மேற்கத்திய பயிற்சி முறைகளில் வழக்கத்தில் இருந்தன. அவை பெரும்பாலும் மேற்கத்திய பெண்களுக்கான ‘மென்மையான’ உடற்பயிற்சியாக பழக்கத்தில் இருந்தவைதான். இந்தப் புத்தகங்கள் மற்றும் யோகா மேற்கு நாடுகளுக்கு போன பிறகு இந்தப் பயிற்சிகள் ‘பெண்களுக்கான யோகா’ என்று ஆகி விட்டன. (ஆண்கள் இதற்கு மாறாக ‘கடுமையான’ உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.) இன்றும் கூட பார்த்தால் ஆண்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பெண்களே யோகா பயிற்சி செய்கின்றனர்.

விவேகானந்தர் ஹட யோகாவை புறந்தள்ளி விட்ட பிறகு இந்திய ‘யோகிகள்’ ஹட யோகத்தில் இருந்த ‘சங்கடகரமான’ விஷயங்களை விட்டு விட்டு ஆங்காங்கே இருந்த சகஜ ஆசனங்கள், பண்டைய இந்தியாவில் இருந்த மூச்சுக் கட்டுப்பாடு (பிராணாயாமம்) என்று பலவற்றை கட்டுக் கலந்து ஒரு யோகா-வை உருவாக்கினார்கள். இதில் பண்டைய இந்தியாவில் இருந்த ‘சங்கட’ யோகா-வை விட்டுத் தள்ளி நவீன யோகா-வில் இருந்த நல்ல விஷயங்களை சேர்த்து இதுதான் பண்டைய யோகா என்று ஒன்று உருப் பெற்றது. அதாவது பழைய விஷயத்தில் புதிய விஷயங்கள் புகுந்து ஆனால் அதுதான் பழைய விஷயம் என்று ஆகி விட்டது. இந்த மாதிரி நடப்பதற்கு ஆங்கிலத்தில் palimpsest என்று சொல்வார்கள்.

பின்னர் இந்த ‘நவீன யோகா’-வுக்கு நிறைய குருமார்கள் உருவாகி 1950 மற்றும் 60களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பிரபலமடைய வைத்தார்கள். ஹென்றி தொரோ என்னும் அமெரிக்க யோகி கொஞ்சம் பதஞ்சலி, கொஞ்சம் தாந்திரீகம் என்று கட்டுக் கலவையாக ஒரு யோகா உரையை நிகழ்த்த ‘யோகா’ பண்டைய இந்தியக் கலை என்கிற எண்ணம் இன்னும் வலுப் பெற்றது.

கடைசியாக, இன்றைய யோகா என்று நாமெல்லாரும் புரிந்து கொள்ளும் ஆசனங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் உபநிஷதங்களுக்கும் ஹட யோகத்துக்கும் ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு விஷயம். இரண்டு நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தில் பல்வேறு கலைகள், பழக்கங்கள் கலந்து புதிய கலை உருவாகி அதுவே பண்டைய கலையாக உருமாறிய மாயம்தான் யோகா. கண்டிப்பாக பண்டைய இந்தியாவில் யோகா என்று ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் அது சுத்தமாக வேறு ஒரு விஷயம். இந்தியா கேட்டில் 35,000 பேர் பண்ணியது நவீன யோகா. அதனை ஐரோப்பியர்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அதனை மெருகேற்றி நிறைய பங்களித்து ஒரு ‘சங்கடகரமான’ விஷயத்தை பெருமையான விஷயமாக மாற்றித் தந்திருக்கிறார்கள். யோகா ஐரோப்பியக் கலை அல்ல. முழுமையான இந்தியக் கலையும் அல்ல. முதல் முதலில் உலகமயமான, வணிகமயமான உலகக் கலை.

-----------------------
தரவுகள்:

On Hinduism – Wendy Doniger, Penguin India
Rig Veda – Wendy Doniger
Raja Yoga – Swami Vivekananda
Eight Upanishads – Swami Gambhiranandha
Not as Old as You Think - Meera Nanda

Thursday 18 June 2015

‘ஜுகாட்’



ஒரு வேலையை எவ்வளவு சுருக்கமாக, மலிவாக செய்ய முடியும் என்று யோசிப்பதற்கு ஹிந்தியில் ஜுகாட் (Jugaad) என்று அழைக்கப் படுகிறது. இந்தியர்கள் ஜுகாடில் பெரும் விற்பன்னர்கள் என்று பெருமையாக நிறைய கட்டுரைகளில் எழுதுவார்கள். மார்ஸ்-க்கு சாட்டிலைட் அனுப்பியதில் கூட அந்த விண்கலத்தை எவ்வளவு மலிவாக தயாரித்தோம் என்று பெருமை அடைந்தோம். இன்று கூட ஒரு புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணர் மரணமடைந்ததற்கு ஹிண்டு-வில் அவர் ஜுகாட் கட்டிட டிஸைன்-களில் பெரும் விற்பன்னர் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த ஜுகாட் பற்றி எனக்கு நிறைய குழப்பம் இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்த வரை ‘இந்த அளவு தரம் போதும்’ என்று நிறுத்திக் கொள்வதற்கோ அல்லது தரக் குறைவான வேலையை ‘சட்டு புட்டென்று’ செய்து முடிப்பதற்கு நமக்கு நாமே பெருமையாக வைத்துக் கொண்ட பெயர் போலத்தான் தெரிந்தது. அது இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற ஊர்களில் பணி புரியும் போது தெளிவடைந்தது.

இங்கிலாந்தில் ஒரு ப்ராஜக்ட்-டில் பணி புரியும் போது ஹெல்த் அண்ட் சேஃப்டி (Health and Safety) பற்றி நிறைய படித்தேன். சுகாதாரத்துக்கும், மனிதர்கள் பாதுகாப்புக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், அதனை திரும்ப திரும்ப எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வலியுறுத்துவதை அவர்கள் ரொம்பவும் முக்கியமாக செய்வதை பார்க்கும் போது சில சமயம் ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என்று சிரிப்பே கூட வரும்.

எந்தக் கம்பனியில் இருந்தாலும் வேலை செய்யும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சுகாதார மற்றும் பாதுகாப்பு விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இது பற்றி பயிற்சி திட்டங்கள் வைத்து கம்பனியில் யாருக்கேனும் ட்ரைனிங் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தால் அந்தக் கம்பனிக்கு அரசாங்கம் பெரும் அபராதம் விதிக்கிறது.

அந்த விவரங்கள் சில இங்கே கொடுக்கிறேன். உயரமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு தனி லைசென்ஸ் இருக்கிறது. அப்படி வேலை செய்பவர் பாதுகாப்பாக வேலை செய்ய உபகரணங்களை நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும். அப்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டு விட்டால் அதற்கான மொத்தப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொண்டு பெரும் நஷ்ட ஈடு தர வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு உங்கள் அலுவலகத்தில் ஒரு வயர் சும்மா தரையில் நீட்டிக் கொண்டிருந்து அதில் தடுக்கி நீங்கள் விழுந்து உங்களுக்கு அடி பட்டு விட்டால் உங்கள் மருத்துவ செலவு முழுவதையும் அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு சும்மா மேல்காயம் பட்டால் கூட 10,000 பவுண்டுகள் முதல்  நஷ்ட ஈடு தர வேண்டியிருக்கும். அங்கே வேலை செய்பவர்களுக்கே அப்படி என்றால் அந்தக் கம்பனியின் சுகாதார மற்றும் பாதுகாப்பு அலட்சியத்தால் பொது மக்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நஷ்ட ஈட்டுடன் அவர்களின் பாதுகாப்பு கண்ட்ரோல் அரசிடம் வந்து விடும் அபாயமும் இருக்கிறது.

இந்த மாதிரி எல்லாம் இருப்பதால் அவர்கள் பெரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஒரு சாலை போடுவதாய் இருந்தால் அந்த இடத்தை முழுவதும் மூடி அங்கிருந்து ஒரு தூசி கூட வெளியே வராமல் வேலையை முடிக்கிறார்கள். கட்டிடம் கட்டும் வேலை செய்பவருக்கு தக்க பயிற்சி, ஹெல்மெட் போன்ற உபகரணங்கள், சஸ்பெண்டர் பெல்ட், பாதுகாப்பு வலை என்று தேவைக்கு மேலேயே ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு யாருக்காவது உடல் உபாதை வந்து விடக் கூடாது என்பதற்காக சுகாதார ஏற்பாடுகள் கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகவே கூட  நடக்கின்றன.

அந்த மாதிரி தேச அளவில் நடப்பதால் அங்கே எல்லோருக்குமே பொதுவான ஒரு விழிப்புணர்வும், கவனமும், எச்சரிக்கை சிந்தனையும் இயல்பாகவே ஊறி விடுகிறது. ‘வேலை சட்டு புட்டென்று முடிய வேண்டும்’ அல்லது ‘வேலை சீப்-பாக முடிய வேண்டும்’ என்பதை விட ‘வேலை பாதுகாப்பாக, யாருக்கும் பாதிப்பின்றி நடக்க வேண்டும்’ என்பதில்தான் கவனம் இருக்கிறது.

அந்த மாதிரி பாதுக்காப்பு பற்றிய சிந்தனை நமக்கு இயல்பாகவே இல்லை என்பது மட்டுமல்ல, பொதுவாக அப்பேர்ப்பட்ட விழிப்புணர்வும் நம்மில் கிடையாது. அரசாங்கம் முதல் தனிப்பட்ட குடிமகன் உள்பட ஜுகாட் பற்றித்தான் யோசிக்கிறோம். யாருக்காவது தலையில் ஒரு பாலத்தில் இருந்து கம்பி உடைந்து விழுந்த பிறகுதான் நமக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் இனம் புரியாததாக, யார் மேல் என்று தெரியாமல் சிலருக்கு முதலமைச்சர் மேலும் சிலருக்கு அதிகாரிகள் மேலும் சிலருக்கு பொதுவாக சமுதாயத்தின் அவல நிலை மேலும் வருகிறது. ஓரிரு நாளில் அது மறந்து போய் விடுகிறது.

இந்த மெட்ரோ ரயில் ப்ராஜக்ட்-டில் நடக்கும் முதல் விபத்து இது அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இது வரை எத்தனை அரசு குடியிருப்புகள் இடிந்து விழுந்திருக்கின்றன? இது வரை எத்தனை கட்டிடங்களில் தீ விபத்து நிகழ்ந்து உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்திருக்கின்றன?

நேற்று  மெட்ரோ ரயில் பாலத்தின் அடியில் விபத்து நடந்த அதே நேரம் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்த ஒரு பெங்களூர் ரயில் தடம் புரண்டிருக்கிறது. யாருக்கும் பெரிய காயம் இல்லை. தண்டவாளம் சரியாக மெயிண்டைன் பண்ணப் படாததால் இது நடந்திருக்கிறது என்று ஏதோ வானிலை அறிவிப்பு மாதிரி சொன்னதோடு அதிகாரிகள் பொறுப்பு முடிந்து விட்டிருக்கிறது. சென்ட்ரல் மாதிரி ஒரு முக்கியமான ஸ்டேஷனில் எப்படி இவ்வளவு அக்கறையின்மை நடக்கலாம் என்று யாரும் கேட்கவில்லை. ஒருவேளை கிரிதரன் நேற்று ஒழுங்காக அலுவலகம் போய் சேர்ந்திருந்தால் இந்த சென்ட்ரல் செய்தி கொஞ்சம்  முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் அபார்ட்மெண்டில் மெயிண்டனன்ஸ் வேலை செய்யும் ஒரு ப்ளம்பர் இரண்டாவது மாடியில் வேலை செய்யும் போது ஏணி முறிந்து விழுந்து இறந்து விட்டார். அவர் வயது முப்பது. ‘அவருக்கு இன்ஷியூரன்ஸ் இருக்கா?’ என்று நான் கேட்டபோது எங்கள் மெயிண்டனன்ஸ் மேனேஜர் என்னை மேலும் கீழும் பார்த்தார். இப்போது அந்த ப்ளம்பரின் குடும்பம் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் வீட்டில் முன்பு வேலை செய்து கொண்டிருந்த ஒரு சமையல் பெண்மணி 44 வயதானவர். அவரின் திருமணம் கட்டிடக் கலை செய்யும் ஒருவருடன் 17 வயதில் நடந்து இரண்டே வருடங்களில் அவர் கணவர் வேலை செய்யும் போது சாளரம் முறிந்து விழுந்து இறந்து விட அவர் வாழ்க்கையே தலைகீழ் ஆனது. இன்று வரை வீடுகளில் சமையல் மற்றும் இதர வேலை செய்து தன் குடும்பத்தை ஒட்டி வருகிறார். இந்த மாதிரி எத்தனை எத்தனை குடும்பங்களின் நிலைமை தலைகீழாக மாறிப் போயிருக்கிறது என்று நமக்குத் தெரியாது.

விபத்துகள் பற்றி இருக்கும் புள்ளி விபரங்கள் அளவு கூட இந்த மாதிரி வேலை சம்பந்தமான விபத்துகள் மற்றும் பாதுகாப்பு பற்றி நம்மிடம் பெரிதாக தகவல் இல்லை. இந்த மாதிரி சும்மா anecdotal evidence  லெவலில் மட்டும்தான்  இருக்கிறது. நம் சாலைகள், நம் வேலை இடங்கள், குறிப்பாக அரசு அலுவலகங்கள், நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் என்று எல்லாவற்றிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய எந்த அக்கறையுமே இல்லாமல்தான் இருக்கிறோம். இது முதலமைச்சர் என்றில்லை. நாமே நாளைக்கு ஒரு வேலை கான்ட்ராக்ட் கொடுத்தால் கூட ‘இது எவ்வளவு சீப்-பாக முடியும்’ இதில் எப்படி ‘ஜுகாட்’ செய்வது என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். அந்த ஜுகாடில் முதல் பலியாவது பாதுகாப்பு ஏற்பாடுகள்தான். ஏனெனில் நமக்கு அசம்பாவிதம் பற்றி பேசுவது அபசகுனம் என்றுதான் படுகிறது. கொஞ்ச நாள் முன்பு சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே நுழைந்த போது ‘இங்கே ஒருவேளை தீ விபத்து நடந்தால் என்ன ஆகும்?’ என்று தோன்றியதை கொஞ்சம் சத்தமாகவே கேட்டு விட்டேன். ‘சீ, உள்ளே நுழையும் போதே ஏன் இப்படி பேசற, வாயை மூடு’ என்று கூட வந்தவரிடம் இருந்து பதில் வந்தது. அங்கே நான் தேடிய எந்த இடத்திலும் தீயணைப்பு கருவி தென்படவில்லை. எல்லாப் புறமும் மூடி இருந்ததால் தீ விபத்து வந்தால் வெளியேறும் Fire Exitகள் எங்கும் இல்லை.

பல்லாவரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தில் சாளரத்தை பொருத்தும் போது ஒருவேளை யாராவது ‘இது ஒருவேளை கீழே அறுந்து விழுந்தால் என்ன ஆகும்?’ என்று கேட்டிருக்கலாம். அதற்கு அடுத்த ஆள் ‘சீ, அபசகுனமா பேசாதே, வாயை மூடு’ என்று பதில் சொல்லியிருக்கலாம்.