Sunday, 22 April 2018

புத்தகங்களின் அழிவு


புத்தங்கள் படிப்பது அழிந்து வருவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு சோகரசம் சொட்டும் நீள் பதிவு ஒன்றை ஒருவர் எழுத, அதில் Amudhan Shanthi என்னை டேக் செய்திருந்தார். அந்தப் பதிவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அங்கே பின்னூட்டம் இட இயலவில்லை. எனவே இங்கே பதில் சொல்கிறேன்.
புத்தகம் எனும் வடிவம் கூடிய விரைவில் அழிந்துதான் போகப் போகிறது. அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அது குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. புத்தகம் என்பது ஒரு கருவிதான். அறிவைக் கடத்துவதற்கு, நிகழ்வுகளை பதிவிடுவதற்கு, தகவல் தொடர்புக்கு, மனமகிழ்விற்கு (entertainment), புரட்சியை துவக்குவதற்கு என்று நிறைய வேலைகள் செய்வதற்கு நாம் உருவாக்கிய கருவி, அவ்வளவே. இவை எல்லாவற்றுக்கும் புத்தகத்தை விட பன்மடங்கு வீரியம் மிகுந்த வேறு கருவிகளை மானுடகுலம் உருவாக்கிக் கொண்டு வருகிறது. அவை நிலை கொண்டதும் புத்தகம் முழுவதுமாக நமக்கு தேவைப்படாமல் போய் விடும்.
புத்தகங்களும் ஒன்றும் பத்தாயிரம் வருடமாக நம்மிடையே இல்லை. அவை சுமார் 500 ஆண்டுகளாகத்தான் உலவுகின்றன. அதற்கு முன்பு ஓலைச்சுவடி, ஸ்க்ரோல், கல்வெட்டுகள் என்று பல்வேறு கருவிகளை பயன்படுத்தி வந்தோம். அதற்கும் முன்பு வாய்வழி கடத்தல் எனும் (Oral Tradition) மரபை பின்பற்றி வந்தோம். என்ன, அவை அனைத்தையும் விட புத்தகம் மாபெரும் சக்தி வாய்ந்த கருவி. குறைந்த முயற்சியில் ஆயிரக்கணக்கான பிரதிகள் எடுக்க முடிந்தது என்பதுதான் அதன் தாக்கம். தோற்றுவித்து பத்திருபது ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் முழுவதும் புத்தகம் ஊடுருவ அதுதான் காரணம்.
இப்போது அதை விட அதிக சக்தி மற்றும் வீரியம் கொண்ட கருவிகள் நம் பயன்பாட்டுக்கு வந்து இருக்கின்றன. அமேசானின் கிண்டில் படிப்பான் (Kindle Reader) கருவியில் 1000க்கும் அதிகமான புத்தகங்களை நாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய லைப்ரரியையே நம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியும். (நான் கிண்டில் வாங்கிய புதிதில் அதில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் வேறு புத்தகம் ஒன்று பற்றிய குறிப்புகள் வரவே ஆர்வ மிகுதியில் அப்போதே கிண்டில் ஸ்டோர் போய் தேடினேன். அந்தப் புத்தகம் கிடைத்தது. உடனே ‘வாங்கு’ எனும் பட்டனில் சுட்ட, புத்தகம் டவுன்லோடு ஆகி இரண்டே நிமிடங்களில் அந்த அடுத்தப் புத்தகமும் என் கையில். அப்போது நினைவுகள் பின்னோக்கி ஓடின. எண்பதுகளில் சில புத்தகங்களின் பெயர் மட்டுமே கேள்விப்பட்டு வாரக்கணக்கில் தெருத்தெருவாக தேடி அலைந்த நாட்கள் நினைவுக்கு வரவே கண்ணீர் மிகுந்தேன்.)
அதே போல பொழுதுபோக்கிலும் மனமகிழ்விலும் புத்தகம் பெரும் பங்கு வகித்திருந்தது. துப்பறியும் நாவல்கள், காதல் கதைகள், அரச/கடவுள் கதைகள், சரோஜாதேவி வரை நமக்கு கொண்டு வந்தது. இப்போது எல்லாமே வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. வீடியோ கேம்கள், யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் என்று கணக்கே இல்லை. சரோஜாதேவிக்கும் மாற்றாக தெள்ளத் தெளிவான, பன்மடங்கு சுவாரஸ்யமான போர்னோகிராஃபி பரவி விரவிக் கிடக்கிறது.
கல்விக்கும் இப்போது ஆயிரம் செயலிகள் இருக்கின்றன. யூ டியூபில் கொட்டிக் கிடக்கின்றன. எட்எக்ஸ், கோர்ஸெரா, கான் அகாதெமி போன்ற இணைய தளங்கள் கல்வியில் புரட்சி செய்து வருகின்றன. கல்வியை எப்படி உள்வாங்குகிறோம் என்கிற அடிப்படை சித்தாந்தமே ஆட்டம் கண்டு கொண்டு வருகிறது. முன்னர் குருகுலம் என்று பாடசாலையில் பல ஆண்டுகள் தங்கிப் படித்த நிலை மாறி மான்டிசோரி என்று வகுப்புகள், முறையான பாடத்திட்டங்கள் என்று ஒரு புதிய முறைமை வந்து கல்விப் புரட்சி செய்தது. அந்த மாதிரி ஒழுங்குபடுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு முறைகள் எனும் பழைய கல்வி முறை இனி மாறி கணினி மற்றும் செயலிகள் மூலம் நாளைய தலைமுறை கல்வி கற்கும் நிலை வரும். மற்றுமொரு கல்விப் புரட்சி சத்தமில்லாமல் இப்போது நடந்து வருகிறது.
எனவே புதிய தலைமுறை புத்தகம் படிப்பதே இல்லை என்றெல்லாம் அங்கலாய்ப்புகள் தேவையில்லை என்று நம்புகிறேன். அவர்கள் புத்தகம் பெரிதும் படிப்பதில்லை என்பது உண்மைதான் எனினும் அவர்கள் அறிவை வேறு தளங்களில் தேடிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘அந்தக் காலம்’ என்று பொதுவாக சொல்லப்படும் எண்பதுகளிலேயே கூட எல்லாரும் நல் இலக்கியங்களை படித்துக் கொண்டு இருக்கவில்லை. ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்தான் படித்துக் கொண்டு இருந்தோம். நிறைய பேர் புஷ்பா தங்கதுரை, இன்னும் நிறைய பேர் சரோஜாதேவி. அப்போதே ‘ஜேஜே சில குறிப்புகள்’ படித்த ஆசாமிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்போதே அறிவுத்தேடலில் ஈடுபடும் இளைஞர்கள்/இளைஞிகள் குறைந்த அளவிலும் பொழுதுபோக்கை நாடுவோர் அதிக அளவிலும்தான் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தகவல் தொடர்பு புரட்சியால் அறிவுத்தேடல் என்பது இப்போது வசீகரமான விஷயமாக (a cool thing) மாறி அந்த விகிதாச்சாரம் அதிகரித்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். தவிர தொழில் நுட்பம் விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.
அதன் ரிசல்ட் தெரிகிறது. அன்றைய காலத்தை விட இன்று அதிக அளவில் பத்தாவது, பனிரெண்டாவது தேர்ச்சி அடைகிறார்கள். மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. முதுகலை பட்டதாரிகள் எண்ணிக்கையில் உலகிலேயே முதல் தேசமாக இந்தியா மாறுவதற்கு சில காலங்களே பாக்கி இருக்கிறது. கல்வி சாதனைகளில் பெண்கள் ஆண்களை போட்டுத் தாக்கி வருகிறார்கள்.
போலவே ஆய்வு பல்கலைக் கழகங்கள் அதிகரித்து வருகின்றன. கூகுள் முதல் பிலிப்ஸ் வரை இந்தியாவில் ஆய்வு நிலையங்கள் கட்டமைத்து வருகிறார்கள். இவை யாவும் நம் புதிய தலைமுறை இளைஞர்களை நம்பியே நடக்கிறது. ஆரம்பக் கல்வி விகிதமும் அதிகரித்து வருகிறது. கற்றல் பற்றி முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்ச்சி மற்றும் சக அழுத்தம் பரவி வருகிறது.
அது ஒரு புறம் இருக்க, ஞாபக சக்திதான் அறிவு என்று ஒரு நிலை இருந்தது. ‘எல்லாத் திருக்குறளையும் ஒப்பிப்பான்’, ‘எல்லா முகலாய மன்னர் பெயரையும் சொல்வாள்!’ என்பதெல்லாம் அறிவாளிக்கு அடையாளம் என்ற காலம் ஒன்று இருந்தது. கூகுள், இணையம் போன்றவை வந்து ஞாபக சக்திக்கு பெரிய தேவை இல்லாமல் செய்து விட்டது. நம் ஃபோனை கேட்டால் எல்லா முகலாய மன்னர்கள் பெயரையும் நொடியில் லிஸ்ட் போட்டு கொடுத்து விடுகிறது. எனவே நம் மூளை அதைவிட முக்கியமான விஷயங்களான Logic, Analytical thinking, Synthesis, Emotional Intelligence போன்ற திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி வந்து விட்டது. அதாவது மனிதர்களுக்கான அறிவின் சவால்களும் அதிகரித்து விட்டன.
அந்த சவால்களை புதிய தலைமுறை பாராட்டத் தக்க வகையிலேயே எதிர்கொண்டு வருகிறது. எனவே அந்தத் தலைமுறைக்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துக் கொண்டு நம்பிக்கையுடன் நம் நாளையை எதிர்கொள்வோம்.

No comments:

Post a Comment