Sunday, 22 April 2018

வந்தே மாதரம்


.
(25th July 2017)
வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் இட்ட உத்தரவு இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்பார்த்தபடியே இந்த முடிவை பாஜக வரவேற்று இருக்கிறது. ‘வந்தே மாதரம்தான் நம்முடைய உண்மையான தேசிய கீதம். ஜன கண மன-வோ வெறுமனே அரசியல் சாசனம் குறிப்பிட்ட கீதம்தான்,’ என்று சில மாதங்கள் முன்பு கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் பய்யா ஜோஷி பேசியது நமக்கெல்லாம் நினைவிருக்கும்.
இரண்டில் எதுவாக இருந்தால் என்ன? இரண்டுமே நல்ல பாடல்கள்தானே என்று நமக்கு கேள்வி வரலாம். பார்ப்போம்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய 1882ல் எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில் வந்த பாடல்தான் வந்தே மாதரம். ரவீந்திர நாத் தாகூரால் முதலில் பொதுவெளியில் பாடப்பட்டது; பாரதி முதல் படேல் வரை சுதந்திரப் போராட்ட வீரர்களை ஈர்த்தது; மகாத்மா காந்திக்கு மனதுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது; சுதந்திரப் போராட்டத்தின் உதய கீதமாக இருந்தது என்று இதற்கு பல பெருமைகள் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பெரும் புகழ் பெற்ற பாடல்கள் என்று 2002ல் பிபிஸி நடத்திய கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடத்தில் வந்த பாடல். 1997ல் ஐம்பதாம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ ஆல்பம் பெரும் ஹிட் அடித்தது. தேசிய கீதமாக இல்லாவிட்டாலும் அதற்கு சம அந்தஸ்தில இந்தப் பாடல் இருக்கிறது.
ஆனால் சில பிரச்சனைகள் இல்லாமலில்லை. ‘ஆனந்த மடம்’ நாவல் ஹிந்து ராஷ்டிர சிந்தனையின் ஆணிவேர்களில் ஒன்றாக கருதப் படுகிறது. ஹிந்து சந்நியாசிகள் குழு ஒன்று பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் புரிவதுதான் கதையின் கரு. அந்த சந்நியாசிகளில் ஒருவர் பாடும் பாடல்தான் இது. இந்த நாவலில் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. வந்தே மாதரம் என்பதே துர்க்கை அம்மனைக் குறிப்பதாகவே வருகிறது. அதாவது துர்க்கை அம்மனை இந்தியத் தாயாக உருவகப் படுத்தி ‘உன்னை வணங்குகிறேன்,’ அல்லது ‘உனக்கு அடிபணிகிறேன்,’ என்று பாடுகிறது.
இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிவது கூடாது. நபிகள் நாயகத்தைக் கூட மரியாதையாக பார்ப்பார்களே தவிர அவரை வணங்க மாட்டார்கள். (அப்படி தப்பித்தவறி யாராவது செய்து விடுவார்களோ என்று அஞ்சியே அவரை உருவகப் படுத்துவது தடை செய்யப் பட்டிருக்கிறது.) ஐரோப்பாவில் மன்னராட்சி இருந்த காலங்களில் மன்னருக்கு மண்டியிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்ததில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் வந்திருக்கின்றன. யோகா சர்ச்சையிலேயே கூட உண்மையான பிரச்னை ‘சூரிய நமஸ்காரம்’ பயிற்சியில் இருந்த சூரியனை வணங்குவது என்ற கருத்துதான் என்பது நமக்கெல்லாம் நினைவிருக்கும்.
சுதந்திரப் போராட்ட காலத்திலேயே கூட வந்தே மாதரம் பாடுவதில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள், ஆட்சேபங்கள் இருந்திருக்கின்றன. ரஹ்மான் ஆல்பம் வந்த போது ‘ஒரு முஸ்லீம் போய் இந்த ஆல்பத்தைப் பாடி வெளியிட்டு இருக்கிறாரே!’ என்று ஆச்சரியப் பட்டும் சிலாகித்தும் அவுட்லுக் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.
இந்தப் பின்னணியால்தான் தேசிய கீதம் எது என்கிற விவாதத்தின் போது நேரு ஜன கண மன பக்கம் நின்றார். அதுவுமின்றி சுதந்திரத்துக்கு சற்று முன்புதான் ஐ.நா. சபையில் ஜன கண மன இசைக்கப் பட்டு பெரும் பாராட்டுகளை குவித்திருந்தது. ராணுவ ஆர்கெஸ்ட்ரா மாதிரி இடங்களில் வாசிப்பதற்கு ஜன கண மன ஏதுவானது. கம்பீரமானது. வந்தே மாதரம் கொஞ்சம் சோகப்பாட்டு மாதிரி இருக்கும். ஆர்கெஸ்ட்ராவில் இசைத்தால் கம்பீரமாக வெளிவராது.
தவிர வந்தே மாதரத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சர்ச்சை பற்றி நேருவுக்கு தெரிந்தே இருந்தது. ‘வந்தே மாதரம் பாடுவதில் சிலருக்குப் பிரச்னை இருக்கலாம்,’ என்று அரசியல் சாசனக் கமிட்டியில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்.
இது போன்ற காரணங்களால் ஜன கண மன-வை தேர்ந்தெடுத்தார்கள். கூடவே வந்தே மாதரப் பிரியர்களை திருப்திப் படுத்த அதனை தேசிய கீதத்துக்கு சம அந்தஸ்து உள்ள பாடலாக அறிவித்து சமரசம் செய்து விட்டார்கள்.
நேரு குறிப்பிட்ட அதே காரணத்தையே சென்னை ஐகோர்ட்டும் குறிப்பிட்டு ‘இந்தப் பாடலைப் பாடுவதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர்கள் பாட வேண்டிய அவசியமில்லை,’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. (இந்தத் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன்.)
நேரு-வுக்கும் ஐகோர்ட்டுக்கும் தெரிந்திருந்த அதே வரலாற்றுப் பின்னணி ஆர்.எஸ்.எஸ்-சுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்ப காலத்தில் இருந்தே ஜன கண மன-வை தேசிய கீதமாக அவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஷாகா-க்கள் மற்றும் கூட்டங்களில் எல்லாம் வந்தே மாதரம் மட்டுமே பாடப்பட்டு வருகிறது. இப்போது இந்தப் பிரச்சனையை கிளப்புவதால் முஸ்லிம்களை தனிமைப் படுத்த முடியும். முஸ்லீம்கள் நாங்கள் இந்தப் பாடலை பாட மாட்டோம் என்றால் ‘பார்த்தீர்களா இவர்களுக்கு தேசப்பற்றே கிடையாது,’ என்று பிரச்சாரம் செய்ய முடியும். இந்தப் பாடலின் வரலாற்றுப் பின்னணி தெரியாத முக்கால்வாசி பொது மக்கள் ‘அதுதானே? இவர்களுக்கு என்ன பிரச்னை? காந்தியே பாடிய, பாரதியே பாடிய தேசபக்திப் பாடலை பாட மாட்டேன் என்று சொல்வது என்ன திமிர்? அப்போ இவர்களுக்கு தேசப்பற்றே இல்லையா?’ என்று கேள்வி கேட்க வைக்க முடியும்.
அதற்கு இந்த ஐகோர்ட் தீர்ப்பு உதவும்.

No comments:

Post a Comment