கட்டுரைக்கு முன்
====================
மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் உடற்பயிற்சி வாட்சுக்கான விளம்பரம்:
ஒரு இளைஞன் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். ஒரு இளைஞி, அவளும் உடற்பயிற்சி முடித்து வியர்வை வழிய, அவனிடம் 'என்ன எக்சர்சைஸ் முடிஞ்சுதா?' என்று கேட்கிறாள்.
அவன் தன் மணிக்கட்டு பேண்டில் செக் பண்ணி களைப்புடன் 'இன்னும் அம்பது கலோரி எரிக்க வேண்டி இருக்கு!' என்கிறான்.
அவள் 'அதுக்கு நான் வேணா ஹெல்ப் பண்ணவா?' என்று சொல்லி விட்டு குறும்பாக சிரிக்கிறாள்.
-------
-------
==========================================================================
.
கட்டுரை==========
உடற்பயிற்சி கடிகார விளம்பரம் குறித்து நான் எழுதிய பதிவில் இருந்த ஹேஷ்டேக் நிறைய பேரை யோசிக்க வைத்திருக்கிறது. புரியாதவர்கள் ‘அதற்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டிருக்கின்றனர். புரிந்தவர்கள் ‘ஆபாசமாக நடந்து கொள்வதுதான் பெண்ணியமா?’ என்று கேட்கின்றனர். அது பற்றி விளக்கலாம் என்று யோசித்தேன்.
ஒரு உதாரணம் பார்ப்போம்: பழைய திரைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். சிவாஜியும் கேஆர் விஜயாவும் டூயட் பாடுகின்றனர். இடையில் இருவரும் ஒரு புதருக்குப் பின் மறைகின்றனர். இரண்டு ரோஜாப்பூக்கள் உரசுவது காட்டப் படுகிறது. அடுத்த காட்சியில் கேஆர் விஜயா வெட்கி எழுந்து ஓடுகிறார். சிவாஜி பெருமையுடன் தன் உதட்டை விரலால் நீவி விட்டுக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்.
இதே காட்சியில் வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போம். ரோஜாக்கள் உரசியதும் கேஆர் விஜயா உதட்டை நீவி விட்டு பெருமையுடன் வெளியே வருகிறார். அதைப் பார்த்ததும் என்ன நினைத்திருப்பீர்கள்?
அடுத்த உதாரணம்: முதலிரவுக் காட்சி. நாயகி தலைகுனிந்து பால் டம்ளரை எடுத்து அறைக்கு உள்ளே நுழைகிறாள். நாயகன் அந்த டம்ளரை வாங்கி அலட்சியமாக சைடு டேபிளில் வைத்து விட்டு சிரித்துக் கொண்டே அவளை இழுத்து கட்டிலில் தள்ளுகிறான். இந்தக் காட்சியை இந்திய சினிமாவில் ஆயிரம் தடவை பார்த்திருப்போம்.
இந்தக் காட்சியை மணமகள் கணவனை இழுத்து தள்ளுவது மாதிரி யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியை எப்படி எதிர் கொண்டிருப்பீர்கள்?
இதில் என்ன தெரிகிறது? பாலியல் ரீதியாக தன்னை, தன் ஆசை, ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று நம்புகிறோம். சினிமாவில் கூட துரத்தித் துரத்தி காதலிக்கும் உரிமை ஹீரோவுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு ‘தெய்வீகக் காதல்’ என்று வேறு (சரக்கடித்துக் கொண்டே) விளக்கம் தருவார்கள். ஆனால் அதே பெண் ஆண் மேல் விழுந்தால் அவள் கண்டிப்பாக லோலாயியாகத்தான் இருப்பாள். ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ வகை பாடல் மும்தாஜுக்குதான் கொடுக்கப் படும். ‘தூள்’ படத்தில் விக்ரம் மேல் விழுந்து புரளும் ரீமா சென் ‘ஐட்டம்’ என்றுதான் பார்க்கப் படுவாள். கடைசியில் ‘குடும்பப் பாங்கினி’ ஜோதிகா பாத்திரத்தைத்தான் ஹீரோ கைப்பிடிப்பான்.
நவீன சிந்தனைகளோடு படம் எடுக்கிறேன் என்று வரும் கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் கூட விழுந்து விழுந்து காதலிக்கும் நாயகி பொறுப்பில்லாதவள் என்றுதான் சித்தரிக்கப் படுகிறாள். (இந்தப் படம் பற்றி விவாதித்த ஒரு கட்டுரை என் புத்தகத்தில் இருக்கிறது.)
அதாவது நம் சிந்தனை என்ன? சிவாஜி செய்ததோ, முதலிரவில் நாயகன் செய்ததோ நமக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அதையே ஒரு பெண் செய்வதாக சித்தரித்தால் ஆபாசம் தோன்றி விடுகிறது. போர்னோகிராஃபி பற்றிக் கூட ஒரு ஆண் முகநூல் மாதிரி பொதுத் தளத்தில் பதிவுகள் போட்டு விட்டு தன் பிம்பத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடந்து விட முடிகிறது. ஆனால் தன் ‘பாலியல் உணர்வை’ அடக்கி ஒடுக்கிக் கொண்டுதான் ஒரு பெண் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஸல்மா மாதிரி பாலியல் உணர்வுகளை முன் நிறுத்தும் கவிதைகள் எழுதும் பெண்கள் மோசமான தாக்குதல்களுக்கு பொதுவெளியில் ஆளாகிறார்கள்.
இந்த சூழலில் தன் பாலியல் உணர்வை நிலை நிறுத்தும், அதனை தைரியமாக வெளிக்காட்டும் உரிமையை மீட்க வேண்டிய தேவை பெண்களுக்கு இருக்கிறது. தனக்கும் பாலியல் உணர்வுகள் இருக்கின்றன. எந்தக் கவலையும் இன்றி, எந்த எடைபோடுதலும் இன்றி ஆண்கள் அதனை வெளிப்படுத்த வசதி இருப்பது போல, பெண்களும் அதனை செய்யும் வழிவகை வரவேண்டும். படிக்க வைப்பது, வேலைக்குப் போவது, பொதுவெளியில் ஆண்களுக்கு சமமாக வாழ்வது இவை எல்லாம் மட்டும் பெண்ணியத்தின் அடையாளங்கள் அல்ல. இவை வெறும் துவக்கம்தான். பெண் உரிமையின் இறுதி இலக்கு அவள் தன் சுயத்தை, தன் தேவைகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆண்களுக்கு நிகராக வெளிப்படுத்தும் சூழல் வர வேண்டும். அதனை ஆண்கள் ஏற்றுக் கொண்டு அப்படி செய்ய முயலும் பெண்களை ‘ஐட்டம்’, ‘லோலாயி’ என்றெல்லாம் பிம்பங்களை கட்டமைக்காமல் சரிசமமாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான பெண் உரிமையை உறுதி செய்யும் இறுதிக் கட்டம்.
இந்த மாற்றங்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள், பாடல்கள் இவை மூலம்தான் வர முடியும். பாரதி, பெரியார், பாலச்சந்தர் போன்றோர் செய்த முயற்சிகள்தான் நாம் ஓரளவாவது பெண்ணுரிமையை தமிழ் நாட்டில் மீட்க முடிந்ததற்கு காரணம். ஆனால் அதையே சொல்லி பழைய புராணம் பாடிக் கொண்டு இராமல், அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய அவசியம் வந்து விட்டது.
தொண்ணூறுகளின் இறுதியில் ஃபெமினா விளம்பரம் ஒன்று வந்தது. முதலிரவில் ஆண் அறையின் உள்ளே நுழைய, திருமண முக்காடு போட்டுக் கொண்டு பெண் கட்டிலில் அமர்ந்திருப்பாள். ஆண் அவள் அருகில் நிற்க அவள் திரும்பி முக்காட்டை கழட்டி வீசி எறிந்து அவனை தன்னருகில் இழுத்து கட்டிலில் தள்ளி சிரித்துக் கொண்டே அவனருகில் செல்வாள். ‘அடுத்த தலைமுறை பெண்களுக்கான பத்திரிகை’ என்று தலைப்புடன் விளம்பரம் முடியும்.
அடுத்த தலைமுறை பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் தயாராக இல்லை. அது நடக்க வேண்டும். அதற்கான எந்த முனைப்பையும், அது கவிதையோ, விளம்பரமோ, திரைப்படமோ, அதனை நாம் கொண்டாட வேண்டும்.

No comments:
Post a Comment