.
(7th July 2017)
மோடிக்கு மற்ற இந்திய மதங்கள் மீது அக்கறை இருக்கிறதா என்று நான் எழுப்பிய கேள்வி கொஞ்சம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இஸ்லாம், கிறித்துவம் எல்லாம் இந்திய மதங்களா என்று கேள்வி வந்தது.
என்னைப் பொருத்த வரை, அவை இரண்டும் இந்திய மதங்கள்தான். இந்தியா என்கிற நவீன தேசம் உதயமான போது இந்த மதங்கள் இங்கே வேர் கொண்டு இருந்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் கிளைகளுக்கு எந்த அளவு அந்தஸ்து இங்கே இருக்கிறதோ அதே அளவுக்கு அந்தஸ்து இங்கே இந்த இரண்டு மதங்களுக்கும் இங்கே உள்ளது.
அதெல்லாம் இல்லை, சுதந்திரத்துக்குப் பிறகு நடந்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஹிந்து மதம் இங்கே பிறந்தது, மற்றவை இங்கே பிறக்கவில்லை அதுதான் முக்கியம் என்று சொல்லக் கூடும். அப்போது ‘இங்கே’ என்றால் ‘எங்கே’ என்று கேள்வி வரும். வேதங்கள் இயற்றப் பட்டது சிந்து நதிக்கு கொஞ்சம் கிட்டே இன்றைய பாகிஸ்தானில்தான். நூலின் சில பகுதிகள் வடமேற்கு ஹரியானா அருகே இயற்றப் பட்டிருக்கின்றன. அப்படியானால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் இன்றைய பாகிஸ்தானில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை போற்றுகிறீர்கள். ஒரு முஸ்லீம் அதற்கு சில நூறு மைல்கள் தள்ளி இன்னொரு பிரதேசத்தில், அரேபியாவில், எழுதப்பட்ட இன்னொரு புத்தகத்தை போற்றுகிறார். இதில் என்ன பெரிய வித்தியாசம்?
சரி, அது முக்கியமில்லை, அந்த மதங்கள் இந்திய துணைக்கண்டத்தில் எந்த அளவுக்கு பழமையானவை, எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கின்றன என்பதுதான் முக்கியம் என்று கேள்வி எழுப்பலாம்.
இந்தியாவின் முதல் சர்ச் புனித தாமஸ் சைரோ மலபார் சர்ச். இது கேரளாவில் பலையூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. இது முதலாம் நூற்றாண்டில் (52ம் வருடம்) எழுப்பப்பட்டது என்று நம்பப் படுகிறது. இதனோடு ஒப்பிட்டால் இங்கிலாந்தின் முதல் சர்ச் கேன்டர்பரியில் இருக்கும் புனித மார்ட்டின் சர்ச், ஐந்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. கத்தோலிக்க மதத்தின் தலைநகரமாக கருதப் படும் வாடிகனில் உள்ள புனித பீட்டரின் பசிலிகா எனும் சர்ச்சின் முதல் கட்டிடமே நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப் பட்டது.
அதாவது இங்கிலாந்து மற்றும் ரோமாபுரிக்கு போவதற்கு முன்பே இந்தியாவில் கிறித்துவம் வேர்கொண்டு விட்டது.
அதே போல இந்தியாவின் முதல் மசூதி சேரமான் ஜும்மா எனும் மசூதி அதே கேரளாவின் மெத்தலா கிராமத்தில் உள்ளது. இது 7ம் நூற்றாண்டில் (629) எழுப்பப் பட்டது. 2016ல் சவூதி பயணித்த பிரதமர் மோடி இந்த மசூதியின் மாடலை சவுதி அரசர் சல்மானுக்கு பரிசளித்திருக்கிறார். இதனோடு ஒப்பிட்டால் உலகிலேயே இரண்டாவது மசூதி மெதினாவின் குபா மசூதி 622ல் எழுப்பப்பட்டது. அதாவது அரேபியாவில் இஸ்லாம் துவங்கிய காலகட்டத்திலேயே பண்டைய இந்தியாவிலும் அதன் வரலாறு ஆரம்பித்து விட்டிருக்கிறது.
இந்த இரண்டு மதங்களும் அவைகளின் பிறப்பில் இருந்தே ஏறக்குறைய இந்தியாவில் வேர்கொண்டு இருப்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு மதங்களின் வரலாறும் தொடர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் இதர மதங்களினூடே வளர்ந்தே இருக்கின்றன. எனவே அவை இந்திய மதங்களில் ஒன்று என்று ஒப்புக் கொள்வதில் நமக்கு தயக்கம் இருக்கத் தேவையில்லை. ஹிந்து மதம் மட்டுமே இந்திய மதம், மற்றவை எல்லாம் அதில் சேர்த்தி இல்லை என்று சொல்ல முடியாது.
தவிர ஹிந்து மதத்தின் ஆதாரமான வேத சிந்தனைகளே கூட ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்ததுதான் என்கிற தாத்பரியம் வலுப் பெற்று வருகிறது. சமீபத்தில் அதற்கான மரபணு ஆதாரங்கள் பற்றிய ஒரு பதிவை நான் எழுதி இருந்தேன். ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். அதை விட அரேபியா நமக்கு கொஞ்சம் அருகில்தான். எனவே தூரக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் லாஜிக் கொஞ்சம் உதைக்கவே செய்கிறது.
எனவே, என்னைப் பொருத்தவரை இந்தியாவில் இருக்கும் எல்லா நம்பிக்கைகளுமே மதிக்க வேண்டிய நம்பிக்கைகள்தான். இது இந்திய மதம், இது ரஷ்ய மதம், இது ஆஸ்திரேலிய மதம் என்று மதங்களுக்கு விஸா ஸ்டாம்ப் ஓட்டும் உரிமை நம்மில் எவருக்குமே கிடையாது.

No comments:
Post a Comment