Monday 25 May 2015

பாஸ், பிஃப்டி பிஃப்டி


ஒரு வருடம் என்பது இந்தியா மாதிரியான ஒரு சிக்கலான அமைப்புகள் கொண்ட நாட்டில் கொஞ்சம் குறுகிய காலம்தான். எனவே மத்திய அரசின் ஒரு வருட ஆட்சி என்பதை எடை போடுவது சரியா என்கிற கேள்வி வந்து கொண்டே இருந்தது. எப்படியும் எல்லாரும் செய்யப் போகிறார்கள், அதைப் பற்றி விவாதிக்கப் போகிறார்கள் என்பதால் நானும் களத்தில் இறங்கி விட்டேன்.

என்னைப் பொறுத்த வரை மோடியின் முக்கியமான சாதனை என்பது முலாயம் சிங், லாலு பிரசாத், மாயாவதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களை பிரதமர் ஆகாமல் தடுத்ததுதான். இன்றும் கூட அவரிடம் நிறைய புகார்கள் இருந்தாலும் இப்போது ஆட்சியில் அவர்தான் இருக்கிறார், மேற்குறிப்பிட்டவர்கள் இல்லை என்பதற்காகவே நான் ஆசுவாசப் பட்டுக் கொள்கிறேன்.

அதை விடுத்துப் பார்த்தால், மோடி எப்படியும் முதலாளித்துவ  வழியில்தான் நடப்பார் என்பது நாம் எல்லாரும் எதிர் பார்த்ததுதான். அவர் குஜராத்தில் கூட அப்படித்தான் இருந்தார். அவர் சார்ந்திருக்கும் பிஜேபி ஒரு வலது சாரி கட்சி. உலகமெங்கும் வலது சாரிகள் கேபிடலிஸ்ட்-ஆகத்தான் இருக்கிறார்கள். எனவே அவர் நடவடிக்கைகளில் நமக்கு அதிர்ச்சியோ, புகாரோ இருக்கக் கூடாது. தனக்கு நன்றாக தெரிவதை, தான் சார்ந்திருக்கும் கட்சியின் அடிப்படை நம்பிக்கையின்படி அவர் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதை சரியாகவே செய்து வருகிறார். அதில் ‘இந்த குறிப்பிட்ட தொழிலதிபருக்கு பரிந்து செய்கிறார்,’ என்கிற முணுமுணுப்புகள் இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அப்படிப்பட்ட சார்பு நிலையையும் அது ஒட்டி எழும் புகார்களை தவிர்க்க இயலாது. எனவே எனக்கு அதில் பெரிய வருத்தம் இல்லை.

அதை விட்டுப் பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகளில் நிலவிய ‘கொள்கை பாரிச வாயு’ (Policy Paralysis) முற்றிலும் விலகி இருக்கிறது. அவையில் கிடைத்த பெரும்பான்மையினால் எந்த உதிரிக் கட்சிகளையும் நம்பாமல் தான் நம்பிய பாதையில் அரசு பயணிக்கத் துவங்கி இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் பற்றிய சர்ச்சையில் ‘இதெல்லாம் கூட்டணி தர்மம்’ என்று மன்மோஹன் சிங்  அங்கலாய்த்தார். அந்த மாதிரி எல்லாம் இவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரும் ஆறுதல். Moody போன்ற கணிப்பு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தி அறிக்கை கொடுத்துள்ளன. நாராயண மூர்த்தி முதல் டாடா வரை தேசத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதற்கான நிறைய முன்னெடுப்புகளை இந்த அரசு எடுத்துக் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தது சமூகப் பாதுகாப்பு திட்டங்கள். ஜன் தன் யோஜனா துவங்கி முத்ரா, இன்ஷூரன்ஸ் திட்டம் என்று நிறைய social security திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஒரு விஷயம், இந்த மாதிரி நிறைய திட்டங்கள் முந்தைய அரசுகளில் கூட வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு அவர்களால்  இந்த திட்டங்களை விளம்பரப் படுத்த இயலவில்லை. அதற்கு இயல்பாகவே மோடிக்கு இருக்கும் PR திறமை காரணம் எனலாம். அந்தத் திறமையை நிறையப் பேர் கிண்டல் செய்கிறார்கள். நான் அதனை ஒரு வலிமையாகத்தான் (strength) பார்க்கிறேன். இந்தத் திட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வெகு குறுகிய காலத்தில் சென்றடைந்து இருக்கின்றன. (வடக்கே நிறைய கிராமங்களில் ஜன்-தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவக்குவதற்கு மக்களை ஊக்குவிக்க ‘மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ஐந்து லட்சம் டெபாசிட் செய்யப் போகிறது. அப்போது உங்களுக்கு வங்கிக் கணக்கு வேண்டும்,’ என்று கட்சிக்காரர்கள் சொல்லி திறக்க செய்திருக்கிறார்கள். இது தனி கதை.)

அடுத்த் தங்கம் சேமிப்பு திட்டம். சென்ற ஆட்சியில் ‘தங்கத்தை குறைத்து வாங்குங்கள். தங்கம் வாங்காதீர்கள்’ என்றெல்லாம் சிதம்பரம் வேண்டிக் கொண்டே இருந்தார். அது எப்படியென்றால் ரஷ்யர்களைப் பார்த்து ‘வோட்கா குடிக்காதீர்கள்,’ என்று கேட்டுக் கொள்வதற்கு சமம். அப்போதே குருமூர்த்தி ‘தங்கம் வாங்குவது நம் கலாசாரத்தின் ஒரு அங்கம். அது நம் strength . அதனை எப்படி exploit பண்ணுவது என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று எழுதினார் . இப்போது அவர் மோடியின் ஆலோசகர்களில் ஒருவர். இந்த தங்கம் சேமிப்பு திட்டம் கண்டிப்பாக அவர் ஐடியாவாகத்தான் இருக்கும். அது கொஞ்சம் அப்படி இப்படி மாறுதல் கண்டு விரைவில் நல்ல பலன் அளிக்கும் என்பது என் நம்பிக்கை.

மோடியின் ஆட்சியிலேயே மிக அதிகமாக கிண்டல் அடிக்கப் பட்டது அவரின் வெளிநாட்டு பயணங்கள் தான். ஆனால் அதனை அவரின் கடும் முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். இப்படி வித்யாசமான timezone களில் தொடர்ந்து பயணித்து பெரிய அளவில் ஒய்வு இல்லாமல் தொடர்ந்து காமிரா கண்காணிப்பிலேயே இருப்பது எவ்வளவு கடினமான செயல் என்று ஒரே ஒரு முறை வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு தெரியும். அப்படி மோடி பயணம் செய்ததில் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பெருமளவு உயர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். .(Time பத்திரிகையில் மோடியின் அட்டைப் படக் கட்டுரை இதற்கு ஆதாரம். இதே பத்திரிகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்மோஹன் சிங்-கின் படம் போட்டு அவரை செயல்படாத பிரதமர் என்று விமர்சித்து வந்த கட்டுரையையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.)

கூடவே பெரும் அளவிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் எட்டப் பட்டிருக்கின்றன. இவை எல்லாம் இன்னும் இந்தியாவுக்கு முழுமையாக வரவில்லை. அதில் சொன்ன முழுமையும் வராதுதான். ஆனால் பெருமளவு வரும். அதற்கு இந்த அரசின் தொடர்ந்த செயல்பாடுகளும் காரணங்களாக இருக்கும்

சீனாவுடனான நட்புறவை மேம்படுத்த பெரும் முயற்சிகளை மோடி எடுத்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய முதலீடுகள் நிறைய வணிக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. ஆனால் ஆயிரம் இருந்தாலும் அவர்களுடன் இருக்கும் எல்லைப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்காமல் எந்த உறவும் நிலைத்து நிற்காது. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அவரை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.

அடுத்து தூய்மை இந்தியா என்கிற திட்டம். அதனை அவர் துவங்கிய விதம் அதற்கு செய்த பிரச்சாரங்கள், ஒதுக்கிய நிதி ஆதாரங்கள் எல்லாமே மோடி இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார் என்பதை பறை சாற்றியது. இதனை ஒரு அரசு திட்டமாக மட்டும் எடுத்துச் செல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அவர் முனைவது தெரிகிறது. அதில் அவர் பெரும் வெற்றி உண்மையில் மக்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது என்றாலும் அரசு அளவில் தொலை நோக்கு கொள்கை வடிவங்கள் வைப்பது தேவை. அவற்றுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று நம்புகிறேன்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் தன் திட்டங்களுக்கு மாநிலங்களை சேர்த்து செயல்படும் ஆர்வம்தான். Fedaralism என்கிற வார்த்தையை மோடி பல முறை பயன்படுத்தி விட்டார். கூடவே மாநில முதல்வர்களையும் தன் பயணங்களில் சேர்த்து அழைத்து செல்கிறார். முந்தைய மத்திய அரசு ஜெயலலிதா ஆட்சியிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது நமக்கெல்லாம் தெரியும். அந்த மாதிரி விரோத குணமெல்லாம் வளர்க்காமல் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு இணைந்து செல்ல முடியுமோ அந்த அளவுக்கு செல்ல நினைப்பது சந்தோசமான விஷயம்.

குறிப்பாக மோடி ஆட்சியிலேயே எனக்குப் பிடித்தது ஆதார் எண்ணுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்தான். எதிர்க் கட்சியாக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதே முறைப்பில் இல்லாமல் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்று யோசித்து செயல்படுத்த நினைப்பதை மனமாரப் பாராட்டுகிறேன். இந்தியாவின் எதிர்காலம் ஆதார் என்பதையும் அது முழுமையாக வந்து விட்டால் மற்ற அரசாங்க அட்டை எல்லாம் தேவைப்படாமல் ஆகி விடும் என்பதையும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு பாதை போட முயலும் மோடி அரசுக்கு என் பாராட்டுகள்.

இவையெல்லாம் மோடியின் ஆட்சியில் நல்ல விஷயங்கள் என்று நான் நம்புபவை. இனி பிரச்சனை விஷயங்களுக்கு வருவோம்.

பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் ஹிந்துத்வா-வை கையில் எடுப்பார்கள் என்பது நாம் எல்லாரும் எதிர் பார்த்ததுதான். ஆனால் இந்த ஒரு வருடத்திலேயே இப்படி ஆட்டம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பிஜேபி எம்பிக்களே நிறைய மோசமாக பேசி அவற்றில் பட்டும் படாமல் கொஞ்சம் எதிர்த்தும் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்து மத்திய அரசு செய்வது அவர்களுக்கே வினையாக முடியும் என்று நினைக்கிறேன். இதை நாங்கள் செய்யவில்லை. அந்தக் குழுவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றெல்லாம் பிஜேபி சொல்வது அரதப் பழைய சால்ஜாப்புகள். சென்ற ஆட்சியில் இந்தக் குழுக்கள் இப்படி எல்லாம் ‘இல்லம் திரும்புதல்’, ‘கோட்சேக்கு சிலை’ என்று எல்லாம் ஏன் முயற்சி செய்யவில்லை? ஏன் சர்ச்-கள் உடைக்கப் படவில்லை என்பதற்கு இவர்களிடம் பதில் இருக்காது. ‘எனக்கு பதினைந்து வருடங்கள் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்.’’ என்று மோடி மக்களிடம் கேட்டார். அதனை உண்மையில் அவர் தன் ஹிந்துத்வா அடிபொடிகளிடம் தான் கேட்க வேண்டும்.

அடுத்தது பாடத் திட்டங்கள். இவையும் ஹிந்துத்வாவில்தான் சேரும் என்றாலும், நாளைய இளைஞர்களையும் ஹிந்து வெறியர்களாக ஆக்கும் முயற்சி இன்றே துவக்குவது ஆபத்தானது என்று நினைக்கிறேன். இன்றைக்கு பாகிஸ்தானில் மத வெறிக் குழுக்கள் தலை வெறித்தாடுவதற்கு அவர்கள் பாடத் திட்டங்கள்தான் காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்தப் பாடத் திட்டங்கள் 70களில் ஜியா உல்-ஹக்-கால் ஆரம்பிக்கப் பட்டன. அவை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் ஊறி இன்றுதான் ‘பலன்’ தரத் துவங்கி உள்ளன. அதே மாதிரி இந்தப் பாடத் திட்டங்கள் நம் சமூகத்தில் ஊறி இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியா ஒரு ‘ஹிந்து பாகிஸ்தான்’ஆக மாறும் ஆபத்து இருக்கிறது. (ஆனால் இந்தத் திட்டம் முழுமையாக வேலை செய்யாமல் நம் செக்யூலர் சக்திகள் தடுத்து விடும் என்று இப்போதும் நம்புகிறேன்.)

அடுத்தது மத்திய அரசு என்றால் மோடி மட்டுமே காட்சி தருவது. ஒரு சாமானிய மனிதனுக்கு மோடியைத் தவிர்த்து அருண் ஜெட்லி மட்டுமே கண்ணுக்குத் தெரிவார். அந்த அளவுக்கு தன் சுயம் மட்டுமே முக்கியம் என்று செயல்படுவது கொஞ்சம் ஆயாசத்தைக் கொடுக்கிறது. சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெயருக்கு மட்டும்தான் இருக்கிறார். மோடியின் எந்த வெளிநாட்டுப் பயணத்திலும் அவர் பங்கெடுக்கவில்லை. வெளிநாடுகளில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்கும் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்திக் கொண்டு இருக்கிறார். ரவி ஷங்கர் பிரசாத் மாதிரி திறமையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் ஒரு அரசு ஓடிக் கொண்டிருப்பது நீண்ட கால பலனைத் தராது.

சென்ற ஆட்சியில் நிறைய குறைகள் இருந்தாலும் பல்வேறு விதமான சமூக நலத் திட்டங்கள் கொண்டு வரப் பட்டன. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி பெரும் உரிமை போன்றவை மிகப் பிரமாதமான திட்டங்கள். நிறைய பலனும் தந்தவை வேறு. அவற்றை எல்லாம் பலவீனப் படுத்தும் முயற்சியில் இந்த அரசு இறங்கி இருக்கிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஏற்கெனெவே முக்கால்வாசி கை விடப் பட்டு விட்டது. அதன் மூலம் கிராமங்களில் பசி, பட்டினி போன்றவை பெருமளவு குறைந்து வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்று ழான் த்ரே என்கிற பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஆதார பூர்வமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனை நாசம் பண்ணியது ரொம்பவே வருத்தம் தரும் விஷயம்தான்.

கடைசியாக நிலக் கையகப்படுத்தும் திட்டம். இந்தத் திட்டத்தால் பலன் நிறைய கிடைக்கும் என்று அரசு கூறினாலும், இதனை உண்மையில் ‘நில அபகரிப்பு சட்டம்’ என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கையகப் படுத்தப் பட்ட நிலங்கள் இருந்த ஊர்களில் மறு குடியேற்றம், தகுந்த compensation போன்றவை தருவதில் நம் முந்தைய அரசுகளின் ரெகார்ட் படு மோசம். இந்த ரெகார்ட் தொடராது என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இந்த புதிய அரசில் இருந்து வரவில்லை. முதலீடுகள் வருவதற்கு இந்த சட்டம் நிறைவேறுவது முக்கியம்தான், என்றாலும் ஒரு 10,000 பேரின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து அதில் வரும் தொழிற் சாலையில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டமாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்த சட்டம் நிறைவேற்றுவதில் நிறைய சிக்கல்கள் இந்த அரசுக்கு வந்திருக்கின்றன என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.

அறுபதுகளில் ஜானி வாக்கர் என்று ஒரு நகைச்சுவை நடிகர் ஹிந்தி-யில் இருந்தார். ஒரு படத்தில் அவர் எந்தக் கேள்வி கேட்டாலும் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’ என்பார் (50/50). இன்று மழை வருமா என்றால் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’ என்பார். அந்தப் பெண் என்னைக் காதலிப்பாளா என்றால் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’தான். அது போல மோடியின் ஓராண்டு ஆட்சி எப்படி என்றால், ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’.

Saturday 23 May 2015

மலட்டு மொழிகள்


கவி இளவல் தமிழ் எழுதிய ‘யாதுமாகி நின்றேன்’ கவிதைத் தொகுப்பு  வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அதில் நன்றியுரையில் பேசிய கவிஞர் ‘ஆங்கிலம், மலையாளம் இவை எல்லாம் மலட்டு மொழிகள். தமிழ் உயிர்ப்பான மொழி.’ என்றார். அதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் ‘கம்ப்யூட்டருக்கு தமிழில் கணினி என்று ஒரு வார்த்தையை நாம் உருவாக்கி பயன்படுத்த முடிகிறது. காருக்கு மகிழுந்து என்று பெயர் வைக்க முடிகிறது. அந்த மாதிரி புதிய வார்த்தைகளை தமிழில் உருவாக்க முடிகிற அளவுக்கு ஆங்கிலத்திலோ மலையாளத்திலோ உருவாக்க முடியாது,’ என்றார்.


இந்த வாதத்தில் மொழியியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் பிரச்சனைகள் இருப்பதால் கொஞ்சம் இதனை விளக்கலாம் என்று தோன்றியது. முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கில மொழியை சாடும் வகையில் இது இருப்பதால் சற்றே மன வருத்தமும் சேர்ந்து கொண்டு விட்டது.


(நிற்க: எனக்கு மலையாளம் தெரியாது, எனவே அது பற்றி பேசப் போவதில்லை. அது மலட்டு மொழியா இல்லையா என்பதற்கான பதிலை லாலேட்டனோ மம்மூக்காவோ தரட்டும்.)


முதலில், மொழியியல் ரீதியாக இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இது கம்பேர் பண்ணுவதே இரண்டு வேறுபட்ட மொழிகளை. பொதுவாக மொழிக் குடும்பங்களை இரண்டு விதமாக பிரிப்பார்கள்: proto language  மற்றும் derivative language. ப்ரோடோ என்பது மிக மிக ஆரம்ப காலத்தில்  எந்த மொழி இருந்ததோ அதனைக் குறிக்கும். அதாவது Sino-Tibetan, Latin, Indo-European , Dravidian என்று போகும். Indo-European க்கு மிக அருகாமையில் இருக்கும் மொழி சமஸ்க்ரிதம்.  Dravidian க்கு மிக அருகில் இருக்கும் மொழி தமிழ். இவை மிகவும் பழைய மொழிகள். அதாவது கிமு 5000 ல் கோதாவரி நதிக் கரையில் பெயரில்லாத ஒரு திராவிட மொழி பேசிக் கொண்டிருந்த ஒரு குழுவினரில் கொஞ்சம் பேர் கிமு 3000ல் தமிழில் பேச ஆரம்பித்தார்கள். மீதிப் பேர் பேச ஆரம்பித்தது வேறு மாதிரி இருந்தது; அது கொஞ்சம் கொஞ்சமாக கன்னடம் என்றானது. அதே மாதிரி கிமு 2500ல் ஆரிய மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள் இந்தியா வந்து சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி புதிய மொழியை, சமஸ்க்ரிதம், பேசத் துவங்கினார்கள்.

அதனால்தான் இவை கிளாசிகல் மொழிகள் என்று அழைக்கப் படுகின்றன.


இந்த மாதிரி மொழிக் குடும்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிளை மொழிகள் பரவத் துவங்கின. அப்படி Indo European ல் வந்ததுதான் ஜெர்மானிய மொழி. அப்படி வித்யாசமான இரண்டு ஜெர்மானிய மொழிகளை பேசிக் கொண்டிருந்த ஆங்கில்ஸ் மற்றும் சாக்ஸன்ஸ் என்னும் இரண்டு பூர்வ குடிகள் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தவுடன் அங்கிருந்த கெல்ட் என்னும் இனத்துடன் சேர்ந்து அவர்கள் மொழி கொஞ்சம் மருவி மாறியது. ஆங்கில்ஸ் இடம் இருந்து வந்ததால் அதற்கு ஆங்கிலம் என்ற பெயர் வந்தது. (இங்கே ஒரு குறுந் தகவல்: நிறையப் பேர் ஆங்கிலத்தை இலத்தீனிய மொழி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு ஜெர்மானிய மொழி.)


பின்னர் நார்மன் என்கிற பிரெஞ்சு இனம் ஒன்று இங்கிலாந்தை ஆக்ரமிக்க, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிரெஞ்சு வார்த்தைகள் ஆங்கிலத்துக்கு இடம் பெயர்ந்தன. பின்னர் ரோமானியர்கள் இங்கிலாந்துக்கு குடியேறிய வுடன் இலத்தீனிய மொழியும் சேர்ந்து கொண்டது.


எனவே ஆங்கிலம் என்று நாம் இன்று அழைப்பது ஜெர்மானிய வடிவம் உள்ள, இலத்தீனிய இலக்கணம் கொண்ட, பிரெஞ்சு வார்த்தைகள் முக்கால்வாசி சேர்ந்த ஒரு கலவைதான். நாம் ஆங்கிலம் என்று பயன்படுத்தும் நிறைய வார்த்தைகள் உண்மையில் பிரெஞ்சுதான். கம்ப்யூட்டர், சிக்கன், மட்டன் இவை எல்லாம் பிரெஞ்சு வார்த்தைகள்தான்.


ஆங்கிலம் ஒரு derivative language . அதாவது ஒரு கிளை மொழி, பற்பல நூற்றாண்டுகள் மாற்றம் கண்டு பலப்பல உருவெடுத்ததில் வந்த ஒரு உருவம்தான் ஆங்கிலம். தமிழ் வேருக்கு மிக அருகில் உள்ள மொழி.


நான் சொல்ல வந்த பாய்ண்ட் இதுதான்: ஒரு கிளாசிகல் மொழியையும் இன்னொரு கிளாசிகல் மொழியையும் ஒப்பிட்டு ஆராய முடியும். ஒரு derivative மொழியையும் இன்னொரு derivative மொழியையும் ஒப்பிட்டு ஆராய முடியும். ஆங்கிலத்தையும் ஹிந்தி அல்லது ஸ்பானிஷ் மொழிகளோடு ஒப்பிடலாம். தமிழை சமஸ்க்ரிதம், கிரேக்கம் அல்லது இலத்தீனிய மொழிகளோடு ஒப்பிடலாம்.


அடுத்த விஷயம், ஒப்பிடும் வார்த்தைகள் பற்றியது. மகிழுந்து என்கிற வார்த்தையையும் Car என்கிற வார்த்தையையும் ஒப்பிடுவது எப்படி சரி என்று எனக்கு தெரியவில்லை. இன்றைக்கு எத்தனை பேர் நம் பேச்சு வழக்கில் ‘நான் ஒரு புது மகிழுந்து வாங்கப் போறேன்,’ என்று சொல்கிறார்கள்? அல்லது ‘வாடகை மகிழுந்துக்கு போன் பண்ணியிருக்கேன். இப்போ அவங்க வர்ற நேரமாச்சி,’ என்று சொல்கிறார்கள்? பேச்சில் விடுங்கள், எழுத்தில் கூட கடந்த இரண்டு வருட ஆனந்த விகடனோ, குமுதமோ தினமலரோ எடுத்துப் பார்த்தால் மகிழுந்து என்கிற பிரயோகம் எங்காவது பிரயோகப் படுத்தப் பட்டிருப்பதை காட்ட முடியுமா? (ஆனால் கணிப்பொறி, இணையம் என்பவை வேறு; அவற்றை நாம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டோம்.)


எனவே சொந்த மொழியிலேயே பயன்பாட்டில் இல்லாத, வலுக்கட்டாயமாக திணிக்கப் பட்ட ஒரு வார்த்தையை ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமல்லாத எல்லா தேசத்திலும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தையோடு ஒப்பிடுவது எப்படி சரியாகும்?


அடுத்தது, புது வார்த்தைகள் ஆங்கிலத்தில் வர முடியாது என்கிற basic premise லேயே எனக்கு பிரச்சனை இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்ட் இணைய தளத்தில் அவர்களே குறிப்பிட்டிருப்பது இதுதான்: ஆண்டுக்கு சராசரியாக 1000 புதிய வார்த்தைகள் ஆங்கில அகராதியில் சேர்க்கப் படுகின்றன. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். இந்த புதிய வார்த்தைகள் மகிழுந்து, குளம்பி மாதிரி, யாரோ யோசித்து உருவாக்கிய, பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் அல்ல. எந்தப் புதிய வார்த்தை பொதுவாக மக்களால் பயன்படுத்தப் படுகிறது என்பதை ஒரு கமிட்டி கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. எந்த வார்த்தை இப்போது எல்லா மக்களாலும் ஏற்கப் பட்டு விட்டது என்று அவர்கள் கருதுவதற்கு தெளிவாக வரையரைக்கப் பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அதில் வெற்றி பெற்று விட்டால் அந்த வார்த்தை அகராதியில் சேர்ந்து விடுகிறது. ஒரு முக்கிய உதாரணம் ஸெல்ஃபி (Selfie).     


இந்தப் பின் வரும் பாரா-வைப் பாருங்கள்:


Picture this. You’ve just uploaded a selfie to your favourite social media website using your phablet when your FIL (that’s your father-in-law) shares a supercut of a srslymortifying twerking session. You immediately unlike his page because there isn’t an emoji capable of expressing your desire to vom: apols, but it’s time for a digital detox.


இங்கே தடித்த எழுத்துக்களில் உள்ள யாவுமே இந்தக் காலத்தில் பரவலாக உபயோகப் படுத்தப்படும் வார்த்தைகள்தாம்.


ஆனால் ஒன்று, இதில் சேரும் நிறைய வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒரிஜினலாக உருவாகியவை அல்ல. கம்ப்யூட்டர் என்கிற பதமே பிரெஞ்சு மொழியின் காம்-புதேர் (சேர்த்து கணக்கிடுதல்) என்கிற பதத்தில் இருந்து வந்ததுதான். இரண்டு வருடம் முன்பு சமோசா என்கிற வார்த்தையை ஆங்கில அகராதியில் சேர்த்திருக்கிறார்கள். சிக்கன் டிக்கா-வில் உள்ள டிக்கா இப்போது ஆங்கில வார்த்தை. இந்த மாதிரிதான் உண்மையில் ஆங்கிலம் வளர்ந்தது. Catamaran கட்டுமரம் என்பதில் இருந்து வந்தது.  Sugar இன் மூலம் சக்கரை. பெருச்சாளியை குறிக்கும்  Bandicoot க்கு மூலம் தெலுங்கு பண்டிகூடம். அவ்வளவு ஏன் Father , Mother க்கு மூலமே சமஸ்க்ரித பிதரஹ, மாதரஹ-தான்.


அந்த மாதிரி கொண்டு வரப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நிலைக்கின்றன. இன்று நாம் யாரும் தலைகீழாக நின்றாலும் தமிழ்ச் சமுதாயத்தை மகிழுந்து என்கிற வார்த்தையை பொது வெளியில் பயன்படுத்த வைக்க முடியாது. டீக்கடையில் போய் ‘ரெண்டு கப் குளம்பி குடுப்பா?’ என்று கேட்க வைக்க முடியாது. (காபி என்கிற வார்த்தை கூட அரபி மொழியில் இருந்து வந்ததுதான்.)


இதில் என்ன விஷயம் என்றால் நாம் தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிறைய வார்த்தைகளின் மூலம் வேறு மொழி. கஞ்சி-க்கு மூலம் ஜப்பானிய மொழி. Robotக்கு ஷங்கர் உருவாக்கிய தமிழ்ப் பதம் எந்திரன் உண்மையில் சமஸ்க்ரிதன்தான். (யந்த்ர என்பதே எந்திரன் ஆனது. இன்னொன்று, Robot என்கிற பதத்தின் மூலம் செக்கொஸ்லோவிய மொழி.) அவ்வளவு ஏன் தமிழ் உணர்வாளர்கள் பெரும்பாலும் பிரயோகப் படுத்தும் ‘திராவிடம்’ என்பதே சமஸ்க்ரித வார்த்தைதான். பல்லவ காலம் முதல் தமிழில் சேர்ந்து கொண்டு வந்திருக்கும் ‘ஆரிய’ வார்த்தைகளை நீக்க ஆரம்பித்தால் நாம் பாதிப் பேர் தமிழே பேச முடியாது.


அடுத்தது நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான ஒரு வார்த்தை தமிழில் கிடையாது. Condescending, Irredentism, Fissiparous,, Cantenkerous
போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமான தமிழ்ப் பதம் யாராவது சுட்ட முடிந்தால் பிரயோஜமாக இருக்கும். (இதற்கு ஒரு விதி: நீங்கள் இதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளைத்தான் சொல்ல வேண்டும். புதிதாக ஒன்றை உருவாக்க முயலக் கூடாது.)


வார்த்தைகளை விட்டு விடுங்கள். நாம் இப்போது பரவலாக பயன்படுத்தும் கமா, நிறுத்தக் குறி, ஆச்சரியக் குறி, கேள்விக் குறி போன்றவை கூட நம்முடைய ஒரிஜினல் அல்ல. ஆனால் அவற்றுக்கு மாற்றாக தூய தமிழில் யாரும் கமாவோ, கேள்விக் குறியோ கொண்டு வர இன்னமும் முயற்சிக்கவில்லை.


மொழி என்பது ஒரு organic entity . யாரும் ஓரிரண்டு பேர் உட்கார்ந்து உருவாக்குவது அல்ல. தானாக சமூகத்தால் உருவாவது. ‘மொக்கை’ என்பதையோ, ‘தெறி’ என்பதையோ ‘கலாய்த்தல்’ என்பதையோ யாரும் மொழியியல் நிபுணர்கள் உருவாக்கவில்லை. சனங்களின் மத்தியில் தானாகவே உருவானவைதான் இவை. இலக்கணம் மட்டும்தான் நிபுணர்கள் வரையறுத்து உருவாக்குகிறார்கள். அப்படித்தான் உலகில் எல்லா மொழிகளும் உருவாகியிருக்கின்றன. இலக்கணம் கூட மாறுதல்களுக்கு உட்பட்டது. மக்களுக்கு பிடிக்கவில்லை அல்லது ஒத்து வரவில்லை என்றால் அவர்களே தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி விடுவார்கள்.


அடுத்து சமூக ரீதியான பிரச்சனை என்ன வென்றால் இந்த மாதிரி ‘தூய’ வார்த்தைகள் உருவாக்குவதுதான். அதனை எனக்குத் தெரிந்து உலகில் எந்த மொழிக் குழுவும் செய்வதில்லை. ஜப்பானில் கார் என்றால் கார் தான். ஸ்பானிஷில் கம்ப்யூட்டர் என்றால் கம்ப்யூட்டர் தான். ரஷ்யாவில் சிபியு, பிராசசர் எல்லாம் அதேதான். அதற்காக யாரும் 'மெல்ல ரஷ்ய மொழி இனிச் சாகும்' என்று அங்கலாய்ப்பதில்லை. இதை மாற்ற முயலும் ஒரே இனம் பிரெஞ்சு மக்கள்தான். அவர்கள்தான் ஒரு கமிட்டி வைத்து ஒவ்வொரு புதிய ஆங்கில டெக்னிகல் வார்த்தைகளுக்கும் சமமான வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரெஞ்சு ஆங்கில இனங்களிடையே இருந்த ஆயிரம் ஆண்டு கால போட்டி மற்றும் பகைமை. கலாசார ரீதியாக ஆங்கிலேயரை விட தாங்கள் உயர்ந்தவர்கள், தங்கள் மொழி உயர்வானது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பிரெஞ்சு சமூகத்தின் ஒரு முயற்சி. ஆனால் அப்படி அந்த கமிட்டி செய்தாலும் அவர்களின் புதிய வார்த்தைகள் நிறைய  மக்களிடையே நிலைப்பதில்லை.


குறைந்த பட்சம் பிரெஞ்சு மக்கள் அப்படி செய்வதற்கான வரலாற்று காரணம் புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது. தமிழர்கள் அப்படி செய்வதன் காரணம்தான் புரியவில்லை. நாம் ஏன் மகிழுந்து, குளம்பி என்றெல்லாம் குழம்பிக் கொண்டு இருக்க வேண்டும்; தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் அப்படி என்ன பகை? அந்த அளவுக்கு insecure ஆக தமிழ் இருக்க வேண்டுமா? என்கிற என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.



கடைசியாக, இந்த மாதிரி எல்லாம் ஒப்பீடு செய்துதான் தமிழின் உயர்வை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் நல்ல வேளையாக தமிழுக்கு இல்லை. ஒரு மாபெரும் இலக்கியக் களஞ்சியத்தை கொண்ட மொழி. பெரும் சமூக, தத்துவ, ஆன்மீக, கலாசார சிந்தனைகளை முன் வைத்த அற்புதமான மொழி இது. அதனை அப்போது போற்றி வளர்த்த வள்ளுவர், ஆழ்வார்கள், சங்கப் புலவர்கள் முதல் இன்று அதனை செறிவூட்டிய சுஜாதா, சுந்தர ராமசாமி, வைரமுத்து, மனுஷ்ய புத்திரன் வரை மாபெரும் இலக்கியவாதிகள் அதில் பணி புரிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட மொழியை போற்றி, பாடி பணிவது ரொம்ப முக்கியம். ஆனால் அடுத்த மொழியை சுடும் சொற்களால் வசை பாடித்தான் என் மொழியின் பெருமையை நான் பேச வேண்டும் என்பது அந்த சமூகத்துக்கு அழகல்ல. மேலும் ஒரு மொழிக்கு பெருமை சேருவது அந்த மொழியின் இலக்கியங்கள், இலக்கணங்களை விட அது கொடுக்கும் சிந்தனைகள்தான். திருக்குறளின் பெருமை அது பயன்படுத்திய வார்த்தைகளின் வீச்சத்தில் அல்ல, அது சொன்ன அற்புதமான சிந்தனைகளால்தான். அதே போல ஒரு மொழிக் குழு உயர்வது அந்த மொழி பேசுவோரின் வாழ்க்கை முறை, அவர்கள் கண்ட சமூக பொருளாதார சாதனைகளால்தான். ஆங்கிலத்தை விட எத்தனையோ விதத்தில் உயர்வாக இருந்தாலும் பிரெஞ்சு மொழி இன்று உலக அளவில் பயன்பாட்டில் இல்லை. ஆங்கிலத்துக்கு இருக்கும் மதிப்பு உண்மையில் ஆங்கிலேயருக்கும் அவர்கள் சாதனைக்கும் இருக்கும் மதிப்புதான். தமிழின் பெருமையை உயர்த்த வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு தமிழனும் மரியாதைக்கு உரிய அளவில் நடந்து கொள்ளவும், சமூகத்தில் நேர்மை, உழைப்பு, திறமை வளரவும், நாம் சார்ந்திருக்கும் துறைகளில் முடிந்த அளவு சாதனைகள் புரியவும் முனைவோம். தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.

Saturday 9 May 2015

கிரீன் பீஸும் பொருளாதார முன்னேற்றமும்

கிரீன் பீஸ் உலகளாவிய அளவில் தங்கள் போராட்டங்களை நடத்தி வரும் ஒரு அமைப்பு. அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் நன்கொடைகள் பெற்று வந்திருக்கிறார்கள் என்று நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அப்படியே இருந்தாலும் எங்கிருந்து அவர்களுக்கு அந்த நன்கொடைகள் வந்தன, அவை ஏன் ஆட்சேபத்துக்கு உரியவை என்கிற எந்தத் தகவலும் அரசின் தரப்பில் இருந்து தரப்படவில்லை.


கிரீன் பீஸ் பொருளாதார முன்னேற்ற திட்டங்களை முடக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு முன்-வைக்கப் படுகிறது. அது ஓரளவுக்கு உண்மையாகவே இருக்கக் கூடும். ஆனால் அந்த மாதிரி ஒரு தடைக் கல் இல்லா விட்டால் இந்நேரம் இந்தியாவின் முக்கால் வாசி காடுகள் அழிக்கப் பட்டிருக்கும். கனிம வளங்களின் மத்தியில் குடியிருக்கும் எல்லா ஆதிவாசிகளும் இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள். அந்த மாதிரி ஆகாமல் இன்னும் கொஞ்ச நஞ்சம் மிச்ச்சமிருப்பதற்கு கிரீன் பீஸ் மாதிரி நிறைய இயக்கங்கள்தான் காரணம்.


சுதந்திரமடைந்தது முதல் இந்தியாவில் 'முன்னேற்றத் திட்டங்கள்' என்கிற பெயரில் கிட்டத் தட்ட 60 மில்லியன் மக்கள் மறு குடியேற்றம் எதுவும் இல்லாமல் தத்தம் கிராமங்களில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. அதாவது மூன்று ஆஸ்திரேலியாவே அல்லது ஒரு இங்கிலாந்தே காணமல் போயிருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் பாதிக்கப் படும் மக்களுக்கு rehabilitation வழங்குவதில் இந்திய அரசாங்கங்களின் ரெகார்ட் படு மோசம். 2010ல் உலகின் 10 அடர்ந்த காடுகள் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 367 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காடுகள் அழிக்கப் பட்டுள்ளன என்று Forest Survey of India-வின் அறிக்கை பயமுறுத்துகிறது. இதிலும் இந்திய அரசாங்கங்களிடம் இருந்து எந்த தெளிவான திட்டமும் தெரியவில்லை. இப்போதோ செம்மரக் கடத்தல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர்கள் பெயர் எல்லாம் அடிபடுகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் என்று கனிம வள முறைகேடுகள் எங்கே நடந்தாலும் அங்கே அந்தந்த ஊர் மந்திரிகள், அரசியல்வாதிகள் பெயர் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் கொஞ்சம் சன்னமாகவாவது ஒரு எதிர் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பது அவசியமாகிறது. கிரீன் பீஸ் மாதிரி இயக்கங்கள்தான் இதை செய்ய முடியும். இதையும் அடைத்து விட்டால் பிரச்சனை இல்லாமல் பொருளாதாரம் முன்னேறுகிறதோ இல்லையோ, காடுகளும் கனிம வளங்களும் பிரச்சனையே இல்லாமல் திருடப்படும் நிலை தோன்றி விடும்.


கிரீன் பீஸ் மாதிரி இயக்கங்கள் ஏதாவது நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதனை ஆதாரங்களுடன் வெளிக் கொணர வேண்டியது அரசுகளின் கடமை. அதே சமயத்தில் தொண்டு நிறுவனங்களை நன்கொடை விபரங்களை வெளியிட வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அதே சமயம் தொண்டு நிறுவனங்களின் குடையில் ஒளிந்து கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை, தங்கள் நிதி விபரங்களை வெளியிட வேண்டும். அப்படி செய்யாமல் இந்த மாதிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டும் குறி வைத்தால் இதில் அரசியல் உள் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்கிற முடிவுக்கு மக்களாகிய நாம் வர வேண்டும். சமீபத்தில் கூட டைம் பத்திரிகையின் பேட்டியில் ‘’ஸப்கா ஸாத், ஸப்கா விகாஸ்’, எல்லோரையும் சேர்த்து எல்லோருக்கும் முன்னேற்றம், என்கிற தன் தேர்தல் கோஷத்தை மோடி நினைவு கூர்ந்தார். அந்த ‘ஸப்’-பில் இந்த தேசத்து ஆதிவாசிகளும் சேர்த்தி என்பதை அவருக்கு யாராவது நினைவு படுத்த வேண்டும்.     


குறிப்பு: நம் தேசத்தின் மறு-குடியேற்றம் பற்றிய எளிமையான அறிமுகத்துக்கு பின் வரும் புத்தகங்களை புரட்டவும்.