Saturday 18 April 2015

ஓ காதல் கண்மணி


மணி ரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’தான் காதலர்கள் மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்வதைப் பேசும் முதல் தமிழ்ப் படமா என்பது தெரியவில்லை. அப்படித்தான் என்று நினைக்கிறேன். மணத்துக்கு முன்பு உடலுறவு என்பது இதற்கு முன்பே வந்து விட்டிருக்கிறது. கமலின் ‘நம்மவர்’ 1995லேயே அதனை செய்து விட்டது. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே, ஏன் திருமணம் பற்றியே யோசிக்காமல், சேர்ந்து வாழ முடிவு செய்வது என்பது நமக்கு கொஞ்சம் புதிய, புரட்சிகரமான விஷயம்தான். இன்றைய தமிழ் சமூகத்துக்கு குறிப்பாக ரொம்பவும் தேவைப்படும் சிந்தனை. அந்த மட்டிலும் இதனை கையில் எடுத்துக் கொண்டதற்கு மணி ரத்னத்துக்கு முழு மதிப்பெண்கள்.

அது வரை சரிதான். ஆனால் ஒரு திரைப்படம் நம்மிடம் அடைவதற்கு சுவாரஸ்யமான ஒரு வரி (ப்ரிமைஸ் என்று சொல்வார்கள்) மட்டுமே போதாது. நன்கு கட்டமைக்கப் பட்ட ஒரு கதை, ஒரு மத்திய பிரச்சனை, நம்மை ஒன்ற வைக்கும் ஒரு திரைக்கதை, முப்பரிமாண பாத்திரங்கள் இவையெல்லாம் தேவை. இவை எல்லாம் கூட வெறும் entertainment என்கிற லெவலில்தான் இருக்கும். பார்வையாளனை இன்னும் உள்ளே இழுக்க sub-plot என்கிற உட்-கதைகள் மற்றும் படம் முழுக்க விரவி நிற்கும் சமூக அல்லது உணர்வு பூர்வமான ஒரு பிரச்சனை இதெல்லாமும் தேவை.

இது எதுவுமே தேவை என்று மணி ரத்னம் நினைத்ததாக தெரியவில்லை. படத்தில் மத்திய பிரச்சனை என்று ஒன்றுமே இல்லை. (அப்படி ஒன்று இருந்தால்தான் படத்தின் பாத்திரங்கள் மேல் நமக்கு அக்கறை வரும்) கதை மாந்தர் ஆண், பெண் இருவருமே படித்த, ஓரளவு பண வசதி கொண்டவர்கள். தத்தம் துறைகளில் வெற்றிகரமாக செயல்படுபவர்கள். அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போவதற்கு முன்பு சும்மா சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அவன் ஒரு வீடியோ கேம் ப்ரோக்ராமர்; அவனின் அடுத்த கட்டம் அமெரிக்கா போவது. அவள் ஒரு ஆர்கிடெக்ட்; அவளின் அடுத்த கட்டம் பிரான்ஸ் போவது. தற்போது  அவர்களிடம் கைவசம் சில மாதங்கள் இருக்கின்றன. அப்புறம் என்ன, கொஞ்சம் ஜாலியாக இருக்கலாமே. எப்படியும் அவர்களுக்கு பணப் பிரச்சனை எதுவும் வரப் போவதில்லை. இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் அம்மா ஒரு பெரிய தொழிலதிபர். அவர்கள் பெரும் பணக்காரர்கள், சொந்தமாக விமானம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் போல. இருவருக்குமே பெரிய சமூக அக்கறை எதுவும் கூட  இருப்பதாக தெரியவில்லை.

எனவே அவர்களுக்கு பிரச்சனை என்றால் உணர்ச்சி சம்பந்தமாகத்தான் வர வேண்டும். அவர்களின் உறவு, சேர்ந்து வாழ்தல் சம்பந்தமாக எதாவது குழப்பங்களை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். சேர்ந்து வாழும் தம்பதியருக்கு திருமணமானவர்களுக்கு வரும் அதே பிரச்சனைகள் வருமா? அவன் குறட்டைவிடுவானா? கழிப்பறை ஸீட்டை மூடாமல் வைத்திருப்பானா? மூக்கை நோண்டுவானா? மாலை வேளையில் வீட்டு வேலையில் உதவி செய்வானா அல்லது பியர் குடித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டு இருப்பானா? அந்தப் பெண் வீடு முழுக்க பெண்மை மிளிரும் பொருட்களை வைத்து நிரப்புவாளா? அவன் லேட்டாக வந்தால் சந்தேகப் படுவாளா? அவனை சில விஷயங்களில் மாற்ற முயல்வாளா? அவர்கள் இருவரும் பண விஷயம் பற்றி பேசுவார்களா?

நமக்கு எதுவுமே தெரியாது. இந்தப் படத்திலோ இருவரும் நிறைய டான்ஸ் ஆடுகிறார்கள், சின்ன விஷயத்துக்கெல்லாம் சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். பைக்கில் ஊர் முழுக்க சுற்றுகிறார்கள். உடலுறவு கொள்கிறார்கள். நிறைய.

பிரச்சனை என்னவென்றால் நாம் அவர்களோடு சிரித்து, டான்ஸ் ஆட முடிவதில்லை. அல்லது அவர்கள் ஊர் சுற்றுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைய முடிவதில்லை. அதற்கு அவர்களோடு ஒன்ற நமக்கு ஒரு மத்திய பிரச்சனை தேவைப்படுகிறது. (இங்கு ஒரு முக்கிய விஷயம்: நான் ‘சேர்ந்து வாழ்தலுக்கு’ எதிரி அல்லன். பெண்ணுரிமை குறித்த என் முந்தைய ஒரு பதிவில் பெண்களின் முன்னேற்றத்தும், சமூக விடுதலைக்கும் ‘சேர்ந்து வாழ்தல்’ என்பது ஒரு  முக்கியமான வழி என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.)

தவிர, ஒரு மத்திய பிரச்சனை எதுவும் தேவை இல்லாமலேயே ஒரு படம் இயங்க முடியும். உதாரணத்துக்கு ‘Before Sunrise’ படம் கதையே இல்லாமல் போகும். ஆனால் அழுத்தமான பாத்திரங்கள், தெறிக்கும் வசனங்கள் மூலம் படத்தை கொஞ்சம் கூட போர் அடிக்காமலேயே பார்க்க வைத்து விடுவார்கள். ஸத்யஜித் ரே-வின் நாயக் படம் ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகனின் இரவு ரயில் பயணம் மட்டுமே. ஆனால் அதிலும் ஆழமான வசனங்கள் படம் முழுக்க நம்மை கட்டிப் போடும். ஹிந்தியில் ‘டயலாக்பாஸி’ என்று சொல்வார்கள். இந்த மாதிரி தெறிக்கும் பதில் வசனம்தான் மணி ரத்னத்தின் ட்ரேட் மார்க்-காக ஒரு காலத்தில் இருந்தது. ஓகே கண்மணியில் அந்த மாதிரி எதுவுமே இல்லை. சொல்லப் போனால் ஒரே ஒரு வரியில்தான் நான் ‘அட, மணி ஈஸ் பேக்’, என்று நிமிர்ந்தேன். (அது கூட இப்போது மறந்து விட்டது.)

இது எதுவுமே இல்லாததால் படம் பற்பல மியூசிக் வீடியோக்களின் தொகுப்பாக மட்டுமே ஆகி விட்டது. நடுவில் கொஞ்சம் அசுவாரஸ்யமான காட்சிகள் வந்து வந்து போகின்றன. மொபைலில் அடிக்கடி நேரம் பார்த்துக் கொண்டு ‘இந்த ரெண்டு பசங்களுக்கும் வாழ்க்கையில என்னதான் பிரச்சனை?’ என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.

இதில் என்னை சஞ்சலப் படுத்திய விஷயம், ‘சேர்ந்து வாழ்தல்’ என்கிற முக்கியமான பிரச்சனையையே கூட மணி ரத்னம் குழப்பி விட்டார் என்று தோன்றியதுதான். உலகம் முழுக்க ‘சேர்ந்து வாழ்தல்’ என்பது அன்பில் ஒற்றிய இரண்டு பேர் எடுக்கும் முக்கியமான முடிவு. முடிவில் அவர்கள் மணம் புரிகிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் ‘சேர்ந்து வாழ்தல்’ அதை நோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல். சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுப்பதன் மூலம் அவர்கள் இன்னொருவருக்கு சொல்வது இதுதான்: ‘உன்னோடு சேர்ந்து வாழும் அளவுக்கு உன்னை எனக்கு இப்போது  பிடித்திருக்கிறது. ஆனால் உன்னை மணம் புரியும் அளவுக்கு இன்னமும் பிடிக்கவில்லை. நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு சகித்துக் கொள்ள முடியும் என்று இந்த முயற்சியில் தெரிய வந்து விடும். அதை வைத்து நாம் மண வாழ்க்கைக்கு தயாரா என்று முடிவெடுக்கலாம்.’

மணி ரத்னத்தின் விளக்கம் இது அல்ல. ஓகே கண்மணியில் அவர்கள் சொல்வது இதுதான்: ‘நம்மிடம் சில மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பிறகு நாம் அவரவர் திசையில் சென்று விடுவோம். அது வரை சேர்ந்து ஜாலியாக இருக்கலாமே. இதோ பார், வாடகை கூட மிச்சமாகிறது.’

===============================

பி. கு. இந்தப் படத்தின் விமர்சனம் எழுதுவதற்கு ஒருவருக்கு தகுதி வேண்டும் என்று வரையறை இருப்பதால், என் தகுதியை இங்கே குறிப்பிடுகிறேன்.

நான் திரைக் கலையின் மாபெரும் ரசிகன், பகுதி நேர ஆய்வாளன். டைம் பத்திரிகையின் 100 ஆகச் சிறந்த படங்கள், ரோஜர் ஈபர்ட்-டின் 100 சிறந்த படங்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். உலக சினிமா பிதாமகர்களான பிரான்ஸ்வா த்ரூஃபோ, அகிரா குரோசோவா, ஸத்யஜித் ரே, ஐசன்ஸ்டைன், ஃபெலினி, ஹாவர்ட் ஹ்யூக்ஸ், அலெசான்றோ கோன்சலிஸ், ஸ்டான்லி க்யூப்ரிக், போன்றவர்களின் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். இங்கிலாந்தில் படித்த மாஸ்டர்ஸ் டிகிரியில் எலெக்டிவ்-வாக Narration Technques In Classical Hollywood Cinema எடுத்துப் படித்தேன். அதில் ப்ராஜக்ட்-டாக  சொமெர்செட் மாம்-மின் ஒரு நாவலை திரைக்கதையாக வடித்து அதில் வகுப்பில் முதலாவதாக வந்து அந்த எலெக்டிவ்-வில் distinction எடுத்தேன். இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக திரை விமர்சங்கள் எழுதி வருகிறேன். நான் வாழ்வில் விமர்சனம் எழுதிய முதல் படம் நாயகன் என்பதை சுஹாசினி அவர்களுக்கு தெரியப் படுத்திக் கொள்கிறேன். நான் பள்ளியில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு அந்த விமர்சனம் எழுதினேன். (ஆம், நாயகனை பெரிதும் சிலாகித்து எழுதினேன்.)