Sunday 29 April 2018

வரலாற்றை தத்தெடுத்தல்


.
மத்திய அரசு 'வரலாற்றை தத்தெடுத்தல்', Adopt a Heritage எனும் திட்டத்தை துவக்கி இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வரலாற்று சின்னத்தையும் ஒரு தனியார் நிறுவனம் 'தத்தெடுத்துக்' கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட வருடங்களுக்கு அந்த சின்னத்தை பராமரித்து காப்பாற்றுவது அவர்கள் வேலை. அதற்கு பதிலாக அவர்களுக்கு அந்த சின்னங்களை சுற்றி தங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்யும் வாய்ப்பு கிட்டலாம்.

இதன் முதல் படியாக தில்லி செங்கோட்டையை டால்மியா சிமெண்ட் நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 25 கோடிகள் அங்கே செலவழிப்பார்கள். இன்னும் 22 சின்னங்கள் தத்தெடுப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக கண்டித்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்திருக்கிறது.

நான் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறேன். நம் வரலாற்று சின்னங்கள் இன்றைக்கு எந்த லட்சணத்தில் உள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும். அரசின் பராமரிப்பில் அரசாங்க அலுவலங்கள் போலவே புழுதி படிந்து, அழுக்கு மல்கி, பெரும் சோகம் வடியவே இவை காட்சி அளிக்கின்றன. இதனை வரலாற்று சின்னங்கள் மேல் நாம் தொடுக்கும் போர் என்று வர்ணித்து நான் முன்னர் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.+++

இங்கே எல்லாம் ஒன்று பராமரிப்பு இருப்பதில்லை. அல்லது பராமரிப்புக்கு தேவைப்படும் துறை அறிவு இல்லை. அல்லது பராமரிப்புக்கு ஒதுக்கிய பணம் வேறு யார் பாக்கெட்டுக்கோ போய் விடுகிறது.

இந்தப் பின்னணியில் தனியார் நிறுவனங்கள் இப்படி தத்தெடுப்பது அந்த சின்னங்கள் புனரமைப்பில் மற்றும் பெருமையில் பெரிதும் உதவும். என்னைக் கேட்டால் தாஜ்மகால், செங்கோட்டை என்று பெரிய, புகழ் வாய்ந்த சின்னங்கள் மட்டுமின்றி சிறு, குறு சின்னங்களும் தத்துக்கு கொடுக்கப் பட வேண்டும். காஞ்சீபுரம் முழுக்க ஆயிரம் ஆண்டுப் பழைய கோயில்கள் டஜன் கணக்கில் உள்ளன. இவற்றில் நிறைய சோகவடிவாகக் காட்சி அளிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக கன்னிமரா நூலகத்தில் உள்ள பண்டைய புத்தகங்களை தனியார் தத்தெடுத்துப் பராமரிக்கலாம். மியூசியத்தில் உள்ள பொருட்களை தனியார் நிறுவனங்களோ, தனி மனிதர்களோ தத்தெடுத்து அதன் பராமரிப்புக்கு நிதி உதவி அளிக்கலாம். .இந்த திட்டத்தில் இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற அந்நிய நிறுவனங்கள் பங்கெடுக்கலாம். பிரிட்டிஷ் மியூசியம், ஆக்ஸ்போர்ட் ஆஷ்மோலியன்,  அமெரிக்கன் காங்கிரஸ் லைப்ரரி போன்றவற்றை இதில் அனுமதிக்கலாம்.

ஆகவே அரசின் இந்தத் திட்டத்தை முழுமனதோடு ஆதரித்து, இதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுகிறேன்.
.
.
.
வரலாற்று சின்னங்கள் பற்றிய என் முந்தைய பதிவு: https://www.facebook.com/sridharfc/posts/10154216671581473


Saturday 28 April 2018

வெற்றிகள்



.
(29 ஏப்ரல் 2017)

பாகுபலி வெறும் சினிமா, அதற்குப் போய் இவ்வளவு அலப்பறையா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சினிமாவும் நம் பொதுக் கலாச்சாரத்தின் அங்கம்தான், என்பது ஒரு புறம் இருக்க, முக்கியமாக நான் பாகுபலியின் வெற்றியை கவனிக்கிறேன். அது அவர்களுக்கு எளிதாக வாய்க்கவில்லை. வங்கியைக் கொள்ளையடித்தோ அல்லது ஈமு கோழி திட்டம் தீட்டியோ ராஜமவுலி அந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை. அவரின் வெற்றிக்குப் பின்னால் தன்னம்பிக்கை, பெரும் கற்பனைத் திறன், கடும் உழைப்பு மற்றும் அதீத துணிச்சல் இருந்திருக்கிறது. நான் அதனைக் கொண்டாடுகிறேன்.
யோசித்துப் பார்த்தால் சாதனை படைக்கும் எல்லா வெற்றிக்குப் பின்னும் இந்த நான்கும் இருந்திருக்கிறது. மும்பையில் நல்ல வேலையை விட்டு விட்டு மனைவின் நகைகளை விற்று பெங்களூரில் ஒரு சிறிய ஃபிளாட்டில் இன்போஸிஸ் ஆரம்பித்த நாராயண மூர்த்தியிடம் அது இருந்திருக்கிறது. ' கடனை எல்லாம் அடைக்க வேண்டாம். திவால் நோட்டிஸ் கொடுத்து தப்பித்து விடலாம்,' என்று தன்னிடம் அறிவுரை சொல்லப்பட்ட போது அப்படி செய்யக் கூடாது என்று முடிவெடுத்த அமிதாப் பச்சனிடம் அந்த நான்கும் இருந்திருக்கிறது. எல்லாரும் கைவிட்டு, இது வேலைக்கே ஆகாது, இந்த ஆள் ஒரு பைத்தியக்காரன் என்று ஸ்டூடியோக்களே விலகிப் போன பிறகும் பிடிவாதமாக தன் சொந்தப் பணத்தை எல்லாம் போட்டு டைட்டானிக் படத்தை எடுத்து முடித்த ஜேம்ஸ் கேமரானிடம் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு வெற்றியையும் கூர்ந்து நோக்குங்கள். பொச்சரிப்பு, பொறாமை, எரிச்சல், போலி கம்யூனிஸம் இதெல்லாம் இல்லாமல் அவர்களைப் பெருமையுடன் பாருங்கள். மனம் லேசாகும். வெற்றி பெற்றவர்கள்தான் இந்த உலகத்தை அருமை மிகுந்ததாக ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டாடுவதன் மூலம் நாமும் அந்த அருமைமிகு உலகில் ஐக்கியமாகலாம். இந்த உலகில் மல்லையாக்கள் தினகரன்கள் மட்டும் இல்லை, நாரயண மூர்த்திகள், ராஜமவுலிகள், ஜேம்ஸ் கேமரான்கள், ஸ்டீவ் ஜாப்ஸ்கள் இவர்களும் கூட இருக்கிறார்கள், என்பது பெருமளவு பாதுகாப்பாக நம்மை உணர வைக்கலாம். நமக்கு ரோல் மாடல்கள் எங்கே தேடுவது என்று குழம்பாமல் இருக்க வைக்கலாம்.
எல்லார் வெற்றிகளையும் கொண்டாடுங்கள். அது நாளை நம்முடைய வெற்றிக்கும் கிரியா ஊக்கியாக அமையலாம்.

இரு நல்ல செய்திகள்


.
இன்று காலை ஹிண்டு பேப்பரை திறந்ததுமே தென்றல் வந்து தீண்டியது போன்ற ஒரு சுகம். ஒரு புறம் வடதென் கோரிய அதிபர்கள் கை கோர்த்து கல்லூரி நண்பர்கள் போல நடக்க, இன்னொரு புறம் மோடியும் ஜின்-பிங்கும் சிரித்த முகத்துடன் அளவளாவும் படங்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

ஐம்பதுகளின் இரு தேசங்களிடை நடந்த கொடும் போருக்குப் பின் தென் கொரியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன். இவரும் தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி அணு ஆயுதத் தடுப்பு, அமெரிக்காவுடன் நட்பு, இருபுறமும் ஆயுதக் குறைப்பு போன்றவற்றை பேசி சில ஒற்றுமைகளை அணுகி இருக்கிறார்கள். உலக சமாதான வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இந்த சந்திப்பு இருக்கப் போகிறது.

இரண்டாவது மோடியும் சீன அதிபரும் சந்தித்து முறை பேசியது. முறையான அஜெண்டா எதுவும் இதற்கு இல்லை. ராகுல் காந்தியும் இதனை குறிப்பிட்டு கிண்டல் அடித்து இருக்கிறார். ஆனால் பரம்பரை விரோதிகள் திடீரென்று தங்கள் பிரச்சனைகளை தீர்க்க முடிவெடுத்து சந்தித்துக் கொண்டால் ‘எப்படிய்யா இருக்கே? பொண்டாட்டி புள்ளைங்க சௌக்கியமா?’ என்றுதான் பேச வேண்டும். ‘போன வருசம் அந்த வடக்கு தோட்டத்தை உன் மச்சானுக்கு எழுதி வெச்சியே! அதை எப்போ என் பேருக்கு மாத்தப் போறே?’ என்று ஆரம்பிக் கூடாது. போலவே இந்தியா சீனா இது போல பல்வேறு முறைசாரா சந்திப்புகளை நடத்த வேண்டும். Thawing of relationship என்று சொல்வார்கள். ஃப்ரீசரில் இருக்கும் சிக்கனை எடுத்து அப்படியே அடுப்பில் போட மாட்டோம். இரண்டு மணி நேரம் வெளியே சிங்க்கில் வைத்து ஐஸ் கரைந்ததும்தான் சமைக்கத் துவங்குவோம். அதற்கு thawing என்று பெயர். அது போலவே சீன இந்திய உறவும் கொஞ்சம் கொஞ்சமாக thaw ஆக வேண்டும். இப்போதுதான் பிரதமர் சிக்கனை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார். கூடிய விரைவில் பிரியாணி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

எது எப்படியோ, இந்த இரண்டு சந்திப்புகளும் ஒரு உண்மையை உணர்த்துகின்றன. நாகரீக உலகில் வன்முறைக்கு இனி இடம் இல்லை. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல ஒட்டு மொத்த மானுடமும் வன்முறையை முற்றிலும் துறப்பதற்கு இன்னும் 100-150 வருடங்கள் பிடிக்கலாம். ஆனால் அதற்கான முனைப்புகள் இந்த நூற்றாண்டிலேயே  நடக்கத் துவங்கி உள்ளன. நான் எதிர்பார்ப்பது மாதிரி பாகிஸ்தான் விஷயத்திலும் thawing விரைவில் துவங்கி பத்துப் பதினைந்து ஆண்டுகளில் காஷ்மீர் விஷயத்திலும் ஒரு சமாதானத் தீர்வு எட்டப்பட்டு விடும் என்று நம்புகிறேன்.

அதற்கான முனைவுகளில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்கு நன்றியுடன் இந்தக் காலை விடிகிறது.

Sunday 22 April 2018

குற்றமும் தண்டனையும்


.
சிறார் வல்லுறவு குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது பற்றி நான் எழுதி இருந்த பதிவில் நிறைய வருத்தமான, கோபமான கமெண்டுகள் வந்திருந்தன. ‘சிறார் மேல் பாலியல் ஆர்வம் கொள்வது peadophilia எனப்படும் மனநோய். இது ஒரு வகையான சைக்கோத்தனம்தான், இது வேறு, பெண்கள் மேல் தொடுக்கப்படும் பாலியல் வல்லுறவு வேறு,’ என்று ஹரி வேறு விளக்கி இருந்தார். அது உண்மைதான்.
ஆனால் சைக்கோ என்றதும் 'சிகப்பு ரோஜாக்கள்' அல்லது 'The Silence of the Lambs' ரேஞ்சுக்குத்தான் யோசிப்போம். கத்துவா சம்பவத்தை வைத்தும் அப்படிதான் யோசிக்கத் தோன்றும்.
இந்த பீடஃபைல் சைக்கோக்கள் பொதுவாக அப்படி இருக்க மாட்டார்கள். நம் வீட்டில் மாமா, சித்தப்பா அல்லது மாடி வீட்டு அங்கிள் இப்படித்தான் இருப்பார்கள். நைச்சியமாக வீட்டில் இருந்து கொண்டே நம் குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே வேலையை நடத்திக் கொண்டு இருப்பார்கள். தேசிய குற்றவியல் ஆய்வுக் கழகத்தின் 2016 அறிக்கையின் படி தேசத்தில் அரங்கேறும் சிறார் பாலியல் குற்றங்களில் 94.6 சதவிகிதம் சம்பந்தப்பட்ட சிறுமியின் உறவினர் அல்லது குடும்ப நண்பர் இவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.
யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் மாமா இப்படி செயகிறார் என்று தெரிய வந்தால், அவரை மாட்டி விட்டால் அவருக்கு மரணம் சாத்தியம் என்றால், என்ன செய்வீர்கள்? நீங்கள் கோபத்தில் புகார் கொடுக்க எத்தனித்தாலும் அத்தை மற்றும் இதர உறவினர்கள் விடுவார்களா? மாடி வீட்டு அங்கிள் மாட்டினால் மாடி வீட்டு ஆன்டி எப்பாடு பட்டாவது அதனை தடுக்கப் பார்க்க மாட்டார்களா? எனவே இந்த அவசர சட்டம் குற்றத்தை வெளிக்கொணர்வதற்குப் பதில் மறைக்கத்தானே உதவும்?***
இதையே சிறைத்தண்டனை என்றாலும் அப்படி நடக்கலாமே என்று வாதிடலாம். ஒருவர் சிறைக்குப் போவார் என்றால் நம் அணுகுமுறை வேறு, அதே நேரம் தூக்கில் தூங்குவார் என்றால் வேறு. உங்கள் புகாரால் ஒருவர் சாகும் நிலை வந்து அந்தக் கறை உங்கள் கைகளில் படர நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ‘அவனை வெட்டு, குத்து’, ‘அந்த நாட்டின் மீது அணுகுண்டு வீசு!’ என்றெல்லாம் முகநூலில் பதிவிடுவது சுலபம். நம் கண் முன்னால் ஒரே ஒரு ஆள் கையை வெட்டினால் அடுத்த பத்து ஆண்டுகள் நம்மால் சரியாக தூங்க முடியாது.
அப்போது என்ன செய்வோம்? அந்த மாமாவையோ அங்கிளையோ நாலு சாத்து சாத்திவிட்டு, ‘ஏரியாப் பக்கமே வராதே!’ என்று சொல்லி துரத்தி விடுவோம். அந்த மாமாவோ வேறு ஏரியாவுக்குப் போய் தன் ஹாபியை செவ்வனே தொடருவார்.
எனவே இந்த அவசர சட்டம் உண்மையில் ஒரு அவசரக் கோலம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிறைய பொய்க்கேஸ்கள் போடப்படும் என்பதில் துவங்கி நிறைய சம்பவங்கள் வீட்டுக்குள்ளேயே போட்டுப் புதைக்கப் பட்டு விடும் சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆகவே இந்த சட்டம் தவறு என்கிறேன்.
அது ஒரு புறம் இருக்க, இதில் நமக்கும் ஒரு கடமை இருக்கிறது.
நம்மில் இன்னும் நிறையப் பேருக்கு பீடஃபைல் பற்றிய விழிப்புணர்வு இல்லை. நமக்கு கிடைத்த அறிவெல்லாம் ஹாலிவுட் சைக்கோ படங்கள் மூலம்தான். அது மாறவேண்டும். பீடஃபைல் பற்றியும் அதன் உடனடியான ஆபத்து பற்றியும் நமக்குத் தெரிய வேண்டும். நம் பிள்ளைகள் இதற்கு ஆட்பட்டுக் கொண்டு இருந்தாலும் உடனே சொல்ல மாட்டார்கள். அது பற்றிய குற்றவுணர்வு, வெட்கம், புரிதலின்மை போன்றவை அவர்களை தடுக்கும். கூடவே ‘நம்ம மாமாதானே!’ என்னும் அந்நியோன்னியமும் சேர்ந்து அந்தப் புரிதலின்மையை அதிகரிக்கும். ஆனால் வருடங்கள் கூடக் கூட அந்த அனுபவம் அவர்கள் மனதில் ஆறா வடுவை விதைத்து பெரும் உளவியல் பிரச்சனைகளை எதிர்காலத்தில் விளைவிக்கும்.++++
எனவே சும்மா ‘வெட்றா அவனை!’ என்று சதா விறைப்பாகவே அலையாமல் பிரச்சனையை ஆழப் புரிந்து கொண்டு நாம் அதற்கான நடைமுறை தீர்வுகளை தேட வேண்டும். அந்த மாமனை விட அந்தச் சிறுமியின் எதிர்காலத்தை யோசிக்க வேண்டும். அந்த வடு ஆறுவதற்குத் தேவையான கவுன்சிலிங் மற்றும் உளவியல் தெரபியை அந்தச் சிறுமிக்கு வழங்க வேண்டும். நம் உறவினர்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் பிள்ளைகளிடம் நேரும் அதீத மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கடைசியாக இந்த மாதிரி விஷயங்களில் தெளிவான தீர்வுகளை கொடுக்கும் திறமையோ அறிவோ நம் அரசுகளிடம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
.
.
.
*** - இது பற்றி புரிந்து கொள்ள மீரா நாயர் இயக்கிய Monsoon Wedding படத்தைப் பாருங்கள்.
++++ - அமீர் கான் தயாரித்த சத்யமேவ ஜெயதே தொடரில் இது பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதனைப் பார்க்க இங்கே சுட்டவும்.

வந்தே மாதரம்


.
(25th July 2017)
வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் இட்ட உத்தரவு இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்பார்த்தபடியே இந்த முடிவை பாஜக வரவேற்று இருக்கிறது. ‘வந்தே மாதரம்தான் நம்முடைய உண்மையான தேசிய கீதம். ஜன கண மன-வோ வெறுமனே அரசியல் சாசனம் குறிப்பிட்ட கீதம்தான்,’ என்று சில மாதங்கள் முன்பு கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் பய்யா ஜோஷி பேசியது நமக்கெல்லாம் நினைவிருக்கும்.
இரண்டில் எதுவாக இருந்தால் என்ன? இரண்டுமே நல்ல பாடல்கள்தானே என்று நமக்கு கேள்வி வரலாம். பார்ப்போம்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய 1882ல் எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில் வந்த பாடல்தான் வந்தே மாதரம். ரவீந்திர நாத் தாகூரால் முதலில் பொதுவெளியில் பாடப்பட்டது; பாரதி முதல் படேல் வரை சுதந்திரப் போராட்ட வீரர்களை ஈர்த்தது; மகாத்மா காந்திக்கு மனதுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது; சுதந்திரப் போராட்டத்தின் உதய கீதமாக இருந்தது என்று இதற்கு பல பெருமைகள் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பெரும் புகழ் பெற்ற பாடல்கள் என்று 2002ல் பிபிஸி நடத்திய கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடத்தில் வந்த பாடல். 1997ல் ஐம்பதாம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ ஆல்பம் பெரும் ஹிட் அடித்தது. தேசிய கீதமாக இல்லாவிட்டாலும் அதற்கு சம அந்தஸ்தில இந்தப் பாடல் இருக்கிறது.
ஆனால் சில பிரச்சனைகள் இல்லாமலில்லை. ‘ஆனந்த மடம்’ நாவல் ஹிந்து ராஷ்டிர சிந்தனையின் ஆணிவேர்களில் ஒன்றாக கருதப் படுகிறது. ஹிந்து சந்நியாசிகள் குழு ஒன்று பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் புரிவதுதான் கதையின் கரு. அந்த சந்நியாசிகளில் ஒருவர் பாடும் பாடல்தான் இது. இந்த நாவலில் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. வந்தே மாதரம் என்பதே துர்க்கை அம்மனைக் குறிப்பதாகவே வருகிறது. அதாவது துர்க்கை அம்மனை இந்தியத் தாயாக உருவகப் படுத்தி ‘உன்னை வணங்குகிறேன்,’ அல்லது ‘உனக்கு அடிபணிகிறேன்,’ என்று பாடுகிறது.
இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிவது கூடாது. நபிகள் நாயகத்தைக் கூட மரியாதையாக பார்ப்பார்களே தவிர அவரை வணங்க மாட்டார்கள். (அப்படி தப்பித்தவறி யாராவது செய்து விடுவார்களோ என்று அஞ்சியே அவரை உருவகப் படுத்துவது தடை செய்யப் பட்டிருக்கிறது.) ஐரோப்பாவில் மன்னராட்சி இருந்த காலங்களில் மன்னருக்கு மண்டியிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்ததில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் வந்திருக்கின்றன. யோகா சர்ச்சையிலேயே கூட உண்மையான பிரச்னை ‘சூரிய நமஸ்காரம்’ பயிற்சியில் இருந்த சூரியனை வணங்குவது என்ற கருத்துதான் என்பது நமக்கெல்லாம் நினைவிருக்கும்.
சுதந்திரப் போராட்ட காலத்திலேயே கூட வந்தே மாதரம் பாடுவதில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள், ஆட்சேபங்கள் இருந்திருக்கின்றன. ரஹ்மான் ஆல்பம் வந்த போது ‘ஒரு முஸ்லீம் போய் இந்த ஆல்பத்தைப் பாடி வெளியிட்டு இருக்கிறாரே!’ என்று ஆச்சரியப் பட்டும் சிலாகித்தும் அவுட்லுக் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.
இந்தப் பின்னணியால்தான் தேசிய கீதம் எது என்கிற விவாதத்தின் போது நேரு ஜன கண மன பக்கம் நின்றார். அதுவுமின்றி சுதந்திரத்துக்கு சற்று முன்புதான் ஐ.நா. சபையில் ஜன கண மன இசைக்கப் பட்டு பெரும் பாராட்டுகளை குவித்திருந்தது. ராணுவ ஆர்கெஸ்ட்ரா மாதிரி இடங்களில் வாசிப்பதற்கு ஜன கண மன ஏதுவானது. கம்பீரமானது. வந்தே மாதரம் கொஞ்சம் சோகப்பாட்டு மாதிரி இருக்கும். ஆர்கெஸ்ட்ராவில் இசைத்தால் கம்பீரமாக வெளிவராது.
தவிர வந்தே மாதரத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சர்ச்சை பற்றி நேருவுக்கு தெரிந்தே இருந்தது. ‘வந்தே மாதரம் பாடுவதில் சிலருக்குப் பிரச்னை இருக்கலாம்,’ என்று அரசியல் சாசனக் கமிட்டியில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்.
இது போன்ற காரணங்களால் ஜன கண மன-வை தேர்ந்தெடுத்தார்கள். கூடவே வந்தே மாதரப் பிரியர்களை திருப்திப் படுத்த அதனை தேசிய கீதத்துக்கு சம அந்தஸ்து உள்ள பாடலாக அறிவித்து சமரசம் செய்து விட்டார்கள்.
நேரு குறிப்பிட்ட அதே காரணத்தையே சென்னை ஐகோர்ட்டும் குறிப்பிட்டு ‘இந்தப் பாடலைப் பாடுவதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர்கள் பாட வேண்டிய அவசியமில்லை,’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. (இந்தத் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன்.)
நேரு-வுக்கும் ஐகோர்ட்டுக்கும் தெரிந்திருந்த அதே வரலாற்றுப் பின்னணி ஆர்.எஸ்.எஸ்-சுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்ப காலத்தில் இருந்தே ஜன கண மன-வை தேசிய கீதமாக அவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஷாகா-க்கள் மற்றும் கூட்டங்களில் எல்லாம் வந்தே மாதரம் மட்டுமே பாடப்பட்டு வருகிறது. இப்போது இந்தப் பிரச்சனையை கிளப்புவதால் முஸ்லிம்களை தனிமைப் படுத்த முடியும். முஸ்லீம்கள் நாங்கள் இந்தப் பாடலை பாட மாட்டோம் என்றால் ‘பார்த்தீர்களா இவர்களுக்கு தேசப்பற்றே கிடையாது,’ என்று பிரச்சாரம் செய்ய முடியும். இந்தப் பாடலின் வரலாற்றுப் பின்னணி தெரியாத முக்கால்வாசி பொது மக்கள் ‘அதுதானே? இவர்களுக்கு என்ன பிரச்னை? காந்தியே பாடிய, பாரதியே பாடிய தேசபக்திப் பாடலை பாட மாட்டேன் என்று சொல்வது என்ன திமிர்? அப்போ இவர்களுக்கு தேசப்பற்றே இல்லையா?’ என்று கேள்வி கேட்க வைக்க முடியும்.
அதற்கு இந்த ஐகோர்ட் தீர்ப்பு உதவும்.

சிலைகளின் உணர்வுகள்


.
(7th March 2018)

திரிபுராவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் வெற்றிக்களிப்பில் பாஜக தொண்டர்கள் சேர்ந்து ஒரு கல்லூரி வாயிலில் இருந்த லெனின் சிலை ஒன்றை அகற்றி இருக்கிறார்கள். அதே போல வேறொரு இடத்தில் இருந்த இன்னொரு லெனின் சிலை ஒன்று உடைப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் குதூகலத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா அதே போல தமிழகத்தில் வெற்றி பெற்றால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று ஒரு ட்வீட் பதிய பெரும் சர்ச்சை எழுந்து அவர் அந்த டீவீட்டை நீக்கும் நிலைக்குப் போயிற்று.
எனக்கு இதில் முதல் ஆச்சரியம் பெரியார் வழித்தோன்றல்கள் ஒரு சிலைக்காக இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதுதான். ஒரே ஒரு பெரியார் சீடராவது ‘ஒரு கற்சிலையில் என்ன இருக்கிறது? வேண்டுமானால் உடைத்துக் கொள்ளுங்கள்!’ என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். யாரும் பேசவில்லை. ஏறக்குறைய அந்த அர்த்தத்தில் பேசிய கமலையும் கூட ஸ்லீப்பர் செல் என்று கலாய்த்து விட்டனர். பகுத்தறிவு வழி நடப்பவர்களுக்கே சிலைகள் அத்தனை உணர்வுபூர்வமாக இருக்கிறது என்றால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களுக்கு கோயிலில் உள்ள சிலைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கலாம்.
ஆனால் இதை விட முக்கியம் லெனின் சிலை வீழ்ந்த போது பாஜக அபிமானிகள் அடைந்த புளகாங்கிதம்தான். பெரியார் பற்றிய ராஜா ட்வீட் வந்ததும் உடனே பெரியார் பற்றிய அவதூறுகளும் இணைந்தே துவங்கி விட்டன. சிகரம் வைத்தாற்போல சிலர் ரஷ்யாவில் சோவியத் ஆட்சி நொறுங்கியதும் அங்கே இருந்த லெனின் சிலைகள் சில வீழ்த்தப்பட்ட படங்களைப் பகிர்ந்து ரஷ்யாவிலேயே லெனின் சிலைகளை உடைத்திருக்கின்றனர் பாருங்கள் என்று வாதிடுகின்றனர்.
ரஷ்யாவில் நடந்ததால் இந்தியாவில் நடப்பது சரி என்கிறீர்களா? ஆம் என்றால் அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு கொள்கை தோற்று அதன் ஆட்சி முடிவடைந்து வேறொரு ஆட்சி வந்தால் அந்த முந்தைய கொள்கையின் சின்னங்கள் அகற்றப்பட, உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜக அபிமானிகளின் நிலைப்பாடா? அப்படியானால் உலகெங்கிலும் நிறைய இடங்களில் இப்படி சிலைகள் உடைக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்றதும் அங்கிருந்த மாபெரும் பாமியான் புத்தர் சிலை குண்டுகள் வீசி தகர்க்கப் பட்டது. சிரியாவில் ஐஎஸ் வெற்றி பெற்றதும் அங்கிருந்த பண்டைய பால்மைரா கோயில்களை தகர்த்திருக்கின்றனர். இவை எல்லாம் நியாயமான நடவடிக்கைகள் என்று பாஜக அபிமானிகள் கருதுகிறீர்களா?
சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம். பண்டைய இந்தியாவிலேயே இஸ்லாமிய சுல்தான்கள் வெற்றி பெற்று சாம்ராஜ்யங்களை கைப்பற்றியதும் கோயில்களை இடித்து அங்கிருந்த சிலைகளின் முகங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர். முந்தைய ஆட்சி தோற்று புதிய ஆட்சி வென்றதன் வெளிப்பாடு அது. இப்போது திரிபுராவில் லெனின் சிலைகள் உடைபடுவது சரிதான், நாளை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் அல்லது உடைக்கப்படும் என்று நீங்கள் வாதாடினால் கோயில் சிலைகளை சேதப்படுத்தியதும் சரிதான் என்று அலாவுதீன் கில்ஜி சார்பில் வாதாட முடியும் அல்லவா? அப்புறம் பாபரின் சேனாதிபதி அயோத்தியில் செய்த காரியத்தை நீங்கள் எப்படி தவறென்று விமர்சிக்க முடியும்?
விஷயம் இதுதான்: ஜனநாயகத்தில், மனித உரிமைகளில், பன்மைக் கலாச்சார வாழ்வியலில் நம்பிக்கை உள்ளவர்கள் கலாச்சார சின்னங்களை வரலாற்றின் அங்கமாகவே கொள்வார்கள். அந்த சின்னங்களை போற்றிப் பாதுகாப்பார்கள். கலாச்சார சின்னங்கள் அகற்றப்படுவது, நாசப்படுத்தப் படுவது என்பது உண்மையில் ஃபாசிசத்தின் வெளிப்பாடு. உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் மட்டுமே இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் நாஜிகள், மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், சவுதியில் வஹாபிகள், சீனாவில் கம்யூனிஸ்டுகள், இலங்கையில் சிங்கள வெறியர்கள் என்று இவர்கள்தான் இந்தக் காரியத்தைப் போற்றிப் புகழ்வார்கள். ஊக்குவிப்பார்கள். உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் வென்றதும் அவர்களின் முதல் குறி பிந்தைய கலாச்சாரத்தின் சின்னங்கள் மற்றும் இலக்கியங்கள் இவைதான். முதலில் இவற்றை அழிப்பார்கள், எரிப்பார்கள். அவை தீர்ந்து போனதும் மனிதர்களை எரிக்கத் துவங்குவார்கள்.
இந்தியாவில் இப்போது கலாச்சார சின்னங்கள் மேல் கவனம் துவங்கி இருக்கிறது. அடுத்ததாக...

எனக்குத் தெரியாது


.
(25th March 2018)
மைசூரில் ஒரு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடுகையில் ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை.
'என்சிசி பயிற்சியாளர் சி சான்றிதழ் தேர்வில் தேறி விட்டால் அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும்?' என்று அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு ராகுல் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
இது சர்ச்சையாகி விட்டிருக்கிறது. இதில் ராகுலை விமர்சித்து பாஜக தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்சிசி பற்றி பிரதமர் மோடி பேசிய ஒரு பேச்சை பதிவிட்டு 'இதோ மோடியிடம் என்சிசி பற்றி கேட்டு தெரிந்து கொள்!' என்று கிண்டல் அடித்து இருக்கிறது.
மோடியின் அந்தப் பேச்சு என்ன என்று பார்த்தால் என்சிசி இயக்க மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு அது. அதாவது பிரதமராக, அதிகாரபூர்வமாக பேசிய பேச்சு. அந்த நிகழ்ச்சி பற்றி அவருக்கு முன்னமே தெரிந்திருக்கும். நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமரின் அலுவலகத்தில் அவர் உதவியாளர்கள் தகவல்கள் திரட்டி ஒரு பேச்சை தயாரித்து வைத்திருப்பார்கள். அதில் இருந்துதான் மோடி குறிப்புகள் எடுத்து பேசி இருந்திருப்பார். அதில் பெரிய திறமை இல்லை.
ஆனால் ராகுல் அந்த மாதிரி ஒரு கேள்வி அந்த மாணவி கேட்பார் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதில் ராகுல் மேல் தவறு காண இடமில்லை. அதுவுமின்றி கேள்வி கேட்ட உடனே 'எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஆகவே பதில் அளிக்க இயலவில்லை,' என்று அவர் சொன்னது பாராட்டத் தக்கது. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
இதற்கு முன்பு இதே மாதிரி வேறு ஒரு மாணவிகள் கூட்டத்தில் மோடி கலந்து கொண்ட போது ஒரு மாணவி உலகம் வெப்பமயமாதல் குறித்து ஒரு கேள்வி கேட்டார். அப்போது மோடி சம்பந்தமே இல்லாமல் ஒரு பதில் சொன்னார். அப்போது உண்மையிலேயே மோடிக்கு நேர்மை இருந்திருந்தால் 'எனக்குத் தெரியாது!' என்று சொல்லி இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்த விஷயத்தில் பாஜக எதிர்பார்ப்பது மாதிரி உண்மையிலேயே மோடியை ராகுலுடன் ஒப்பிட வேண்டுமானால் பிரதமர் ஒரு நிருபர் கூட்டம் நடத்த வேண்டும். முன்னமே தயாரிக்கப் பட்ட கேள்விகள் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் டாண் டாண் என்று திறமையாக பதில் சொன்னால் உண்மையிலே அவர் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.
பி. கு.: தான் பிரதமரான நாள் முதல் இன்று வரை நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி அப்படி ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

புராணங்களும் வரலாறும்


.
.

(28th March 2018)

மத்தியில் புதிய அரசு வந்ததில் இருந்து பண்டைய இந்துப் புராணங்கள் எல்லாமே உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் என்கிற விவாதம் துவங்கி தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் பதவி ஏற்ற கையோடு ‘ராமாயணம் ஒரு வரலாற்று சம்பவம்,’ என்று பேசி கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் உத்தரகண்ட் அரசு அனுமார் கொய்து வந்த சஞ்சீவி மலையைத் ‘தேட’ நிதி ஒதுக்கியது. இது பற்றி என் புத்தகத்திலேயே ஒரு கட்டுரை இருக்கிறது. பின்னர் புராணங்கள் எல்லாம் வரலாறுதானா என்று ஆராய்ந்து ‘நிரூபிக்க’ ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது.
இது பற்றி பேசுகையில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்: முந்தைய ஆட்சியில் பாபர் மசூதி வழக்கில் அயோத்தி பற்றிய ஒரு வாதத்துக்கு பதில் அளிக்கையில் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் ‘ராமாயணம் கற்பனையாக புனையப்பட்ட ஒரு காவியம் மட்டுமே,’ என்று அஃபிடவிட் சமர்ப்பித்து சர்ச்சைக்கு உள்ளானது.
அது இருக்கட்டும்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்த சம்பவம், ராமர் என்று ஒருவர் ராவணன் எனும் கொடிய அரக்க குணம் கொண்டவனை வதம் செய்து வாழ்ந்து மறைந்தார் என்று ஆன்மீகவாதிகள் நம்புவதில், அவரை தொடர்ந்து வணங்குவதில், யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கத் தேவையில்லை. ஆனால் அது வரலாறு என்று சொல்ல வந்தால் கேள்விகள் எழும்.
பண்டைய சமூகங்களில், நாகரிகங்களில் வரலாறுக்கும், காப்பியங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. அந்த மாதிரி தனியான வகைமுறைகள் அவர்களுக்கு தேவைப்படவில்லை. ஆனால் நவீன சமூகத்தில், விஞ்ஞான அணுகுமுறையில், வாழ முனையும் ஒரு சமூகத்துக்கு அந்த வித்தியாசம் தேவை. ஏனெனில் வரலாறு என்றது எதைக் கருத வேண்டும் என்பதற்கு கடுமையான விதிமுறைகள் இன்றைக்கு உள்ளன. அதற்கு முதல் விதியே ‘இலக்கியங்களை’ விலக்கி விட்டுப் பார்க்க வேண்டும்,’ என்பதே. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தை வைத்து கண்ணகி என்று ஒருத்தி வாழ்ந்தாள் என்று சொல்ல மாட்டார்கள். உலக இலக்கியங்கள் எல்லாமே புனைவுகள் சேர்த்து, நிறைய மிகைப்படுத்தல்கள் வைத்து வடிக்கப்பட்டவைதான். ஆகவே அதை நோண்டி அதில் எது உண்மை, எது மிகைப்படுத்தல் என்று கண்டுபிடிப்பது வேலையற்ற வேலை. ஆகவே வரலாற்று அறிஞர்கள் அங்கே போவதில்லை.
அவர்களுக்கு நிரூபிக்கப்படும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. Empirical Evidence என்று சொல்வார்கள். அவற்றில் முக்கியமானது அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள். சிவபெருமான் என்று ஒருவர் வாழ்ந்ததற்கோ அல்லது அயோத்தியில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் இருந்ததற்கோ இதுவரை எந்த அகழ்வாராய்ச்சி ஆதாரமும் நமக்கு கிட்டவில்லை. அவை மிகவும் பண்டைய காலத்தவை, ராமர் 8,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார் அதனால்தான் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. டைனோசார்கள் வாழ்ந்ததற்கு நமக்கு இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இதுவரை கிடைத்ததிலேயே பழமையான டைனோசார் எலும்புக் கூடு 23 கோடி ஆண்டுகள் முந்தையது. அதாவது கோடிக்கணக்கான ஆண்டுகள் முந்தைய உயிரினங்கள், வாழ்வியலுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னர் பற்றி ஆதாரங்கள் இல்லை என்பது நம்ப இயலாத விஷயம். அந்த ஆதாரங்களை எல்லாம் யாரோ அழித்து விட்டார்கள் என்று சொன்னால் யார் எப்போது அழித்தார்கள், அப்படி சொல்லும் ஆளுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று கேள்வி வரும். அந்த ‘அழித்த’ சம்பவத்துக்கும் ஆதாரம் தேவைப்படும்.
ராமரோ, சிவனோ, முருகரோ இவர்கள் இங்கே வாழ்ந்து மறைந்த காக்கும் கடவுள்கள் என்று ஆன்மீகவாதிகள் நம்ப முயல்வது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதனை ஒரு அரசு தன் கொள்கையாக வரித்து பரப்ப முனைவது ஆபத்தானது. Scientific Temper எனப்படும் அறிவியல் அணுகுமுறை நம் மக்களிடம் இல்லாமல் போவதற்கு இந்த மாதிரி முயற்சிகள்தான் காரணமாக அமைகின்றன. இதன் பக்க விளைவுதான் டார்வின் தியரி பொய், ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி நம் வேதத்திலேயே உள்ளது என்னும் ஜல்லியடிகள் எல்லாம்.
ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவை நம் பண்டைய சமூகங்களின் மாபெரும் சாதனைகளில் அடங்குபவை. கிரேக்க காப்பியங்களை விட பன்மடங்கு நீளமான, சிக்கலான காப்பியம் மகாபாரதம். நம் நவீன இந்திய சமூகத்தை இன்று வரை பாதித்து நம் கலாச்சாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் காவியங்கள் இவை. இவற்றை அப்படியே விடுவது அவற்றுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வைத் தொடரட்டும். ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஆதாரம் கிட்டினால் பார்க்கலாம்.
அதுவரை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை கடவுளாக வழிபட்டு உய்யட்டும். நம்பிக்கை அற்றவர்கள் இவற்றை இலக்கியங்களாக மதித்து ரசித்து மகிழ்வோம்.
நடுவில் குட்டையைக் குழப்பும் இந்த போலி வரலாற்று அறிஞர்களை புறக்கணித்து, அவர்களை ஊக்குவிக்கும் இந்த அரசின் திட்டத்தை உணர்ந்து அதனையும் புறக்கணிப்போம்.
.

இந்திய மதங்கள்


.
(7th July 2017)
மோடிக்கு மற்ற இந்திய மதங்கள் மீது அக்கறை இருக்கிறதா என்று நான் எழுப்பிய கேள்வி கொஞ்சம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இஸ்லாம், கிறித்துவம் எல்லாம் இந்திய மதங்களா என்று கேள்வி வந்தது.
என்னைப் பொருத்த வரை, அவை இரண்டும் இந்திய மதங்கள்தான். இந்தியா என்கிற நவீன தேசம் உதயமான போது இந்த மதங்கள் இங்கே வேர் கொண்டு இருந்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் கிளைகளுக்கு எந்த அளவு அந்தஸ்து இங்கே இருக்கிறதோ அதே அளவுக்கு அந்தஸ்து இங்கே இந்த இரண்டு மதங்களுக்கும் இங்கே உள்ளது.
அதெல்லாம் இல்லை, சுதந்திரத்துக்குப் பிறகு நடந்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஹிந்து மதம் இங்கே பிறந்தது, மற்றவை இங்கே பிறக்கவில்லை அதுதான் முக்கியம் என்று சொல்லக் கூடும். அப்போது ‘இங்கே’ என்றால் ‘எங்கே’ என்று கேள்வி வரும். வேதங்கள் இயற்றப் பட்டது சிந்து நதிக்கு கொஞ்சம் கிட்டே இன்றைய பாகிஸ்தானில்தான். நூலின் சில பகுதிகள் வடமேற்கு ஹரியானா அருகே இயற்றப் பட்டிருக்கின்றன. அப்படியானால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் இன்றைய பாகிஸ்தானில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை போற்றுகிறீர்கள். ஒரு முஸ்லீம் அதற்கு சில நூறு மைல்கள் தள்ளி இன்னொரு பிரதேசத்தில், அரேபியாவில், எழுதப்பட்ட இன்னொரு புத்தகத்தை போற்றுகிறார். இதில் என்ன பெரிய வித்தியாசம்?
சரி, அது முக்கியமில்லை, அந்த மதங்கள் இந்திய துணைக்கண்டத்தில் எந்த அளவுக்கு பழமையானவை, எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கின்றன என்பதுதான் முக்கியம் என்று கேள்வி எழுப்பலாம்.
இந்தியாவின் முதல் சர்ச் புனித தாமஸ் சைரோ மலபார் சர்ச். இது கேரளாவில் பலையூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. இது முதலாம் நூற்றாண்டில் (52ம் வருடம்) எழுப்பப்பட்டது என்று நம்பப் படுகிறது. இதனோடு ஒப்பிட்டால் இங்கிலாந்தின் முதல் சர்ச் கேன்டர்பரியில் இருக்கும் புனித மார்ட்டின் சர்ச், ஐந்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. கத்தோலிக்க மதத்தின் தலைநகரமாக கருதப் படும் வாடிகனில் உள்ள புனித பீட்டரின் பசிலிகா எனும் சர்ச்சின் முதல் கட்டிடமே நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப் பட்டது.
அதாவது இங்கிலாந்து மற்றும் ரோமாபுரிக்கு போவதற்கு முன்பே இந்தியாவில் கிறித்துவம் வேர்கொண்டு விட்டது.
அதே போல இந்தியாவின் முதல் மசூதி சேரமான் ஜும்மா எனும் மசூதி அதே கேரளாவின் மெத்தலா கிராமத்தில் உள்ளது. இது 7ம் நூற்றாண்டில் (629) எழுப்பப் பட்டது. 2016ல் சவூதி பயணித்த பிரதமர் மோடி இந்த மசூதியின் மாடலை சவுதி அரசர் சல்மானுக்கு பரிசளித்திருக்கிறார். இதனோடு ஒப்பிட்டால் உலகிலேயே இரண்டாவது மசூதி மெதினாவின் குபா மசூதி 622ல் எழுப்பப்பட்டது. அதாவது அரேபியாவில் இஸ்லாம் துவங்கிய காலகட்டத்திலேயே பண்டைய இந்தியாவிலும் அதன் வரலாறு ஆரம்பித்து விட்டிருக்கிறது.
இந்த இரண்டு மதங்களும் அவைகளின் பிறப்பில் இருந்தே ஏறக்குறைய இந்தியாவில் வேர்கொண்டு இருப்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு மதங்களின் வரலாறும் தொடர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் இதர மதங்களினூடே வளர்ந்தே இருக்கின்றன. எனவே அவை இந்திய மதங்களில் ஒன்று என்று ஒப்புக் கொள்வதில் நமக்கு தயக்கம் இருக்கத் தேவையில்லை. ஹிந்து மதம் மட்டுமே இந்திய மதம், மற்றவை எல்லாம் அதில் சேர்த்தி இல்லை என்று சொல்ல முடியாது.
தவிர ஹிந்து மதத்தின் ஆதாரமான வேத சிந்தனைகளே கூட ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்ததுதான் என்கிற தாத்பரியம் வலுப் பெற்று வருகிறது. சமீபத்தில் அதற்கான மரபணு ஆதாரங்கள் பற்றிய ஒரு பதிவை நான் எழுதி இருந்தேன். ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். அதை விட அரேபியா நமக்கு கொஞ்சம் அருகில்தான். எனவே தூரக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் லாஜிக் கொஞ்சம் உதைக்கவே செய்கிறது.
எனவே, என்னைப் பொருத்தவரை இந்தியாவில் இருக்கும் எல்லா நம்பிக்கைகளுமே மதிக்க வேண்டிய நம்பிக்கைகள்தான். இது இந்திய மதம், இது ரஷ்ய மதம், இது ஆஸ்திரேலிய மதம் என்று மதங்களுக்கு விஸா ஸ்டாம்ப் ஓட்டும் உரிமை நம்மில் எவருக்குமே கிடையாது.

பத்மாவதி


.

(18th November 2017)

சஞ்சய் லீலா பன்சாலி என்கிற பிரபல ஹிந்தி இயக்குனர் படைப்பில் ‘பத்மாவதி’ என்கிற படம் வெளிவர இருக்கிறது. இது தடை செய்யப்பட வேண்டும் என்கிற கூக்குரல்கள் ராஜ்புத் சமூகத்தினரால் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக மிகவும் வெளிப்படையாகவும் காங்கிரஸ் ஓரளவு தயங்கித் தயங்கியும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இது பற்றி பார்ப்போம்.
ராஜஸ்தானில் உள்ள சித்தோர் என்கிற சமஸ்தானத்தில் ரத்னசேனன் என்கிற அரசனின் மனைவி பத்மாவதி பற்றிய படம் இது. சின்ஹால் எனும் ஊரில் வசிக்கும் பத்மாவதி எனும் பெண்ணின் பேரழகு பற்றி ஒரு பேசும் கிளி மூலம் ரத்தினசேனன் கேள்விப்படுகிறான். அதிலேயே அவள் மேல் பெரும் மையல் கொண்டு அவளை அடைய எல்லாவற்றையும் துறந்து வீரர் குழு ஒன்றுடன் புறப்படுகிறான். அவனுக்கு ஏற்கெனெவே நாகமதி எனும் மனைவி இருக்கிறாள். ரத்தினசேனன் நடத்தையைக் கண்டு அவள் பெரும் வருத்தமுறுகிறாள். ஆனாலும் அவன் பயணத்தை தொடர்ந்து பெரும் துயரங்களுக்குப் பின் பத்மாவதியை கண்டடைகிறான். அவளை மணமுடித்து சித்தோருக்கு கூட்டி வருகிறான். அப்போது ரத்தினசேனனால் அரண்மனையை விட்டு நீக்கப்பட்டிருந்த ஒரு அமைச்சர் அவனை பழி வாங்க வேண்டி தில்லி சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் பத்மாவதியின் பேரழகினை விவரிக்கிறான். அந்த விவரணையில் மயங்கிய கில்ஜி பத்மாவதியை அடைய வேண்டி படைகளுடன் சித்தோர் விரைகிறான். அங்கே நடக்கும் போரில் ரத்தினசேனன் காயமுற்று இறக்கிறான். பத்மாவதியும் நாகமதியும் தன் கணவனின் சிதையில் புகுந்து உயிர்த்தியாகம் செயகிறார்கள். கில்ஜி அரண்மனை புகும் நேரம் அவனுக்கு பத்மாவதியின் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது.
இதுதான் பத்மாவதி. ஒரு கூடுதல் விஷயம், இது தமிழிலும் படமாக வந்திருக்கிறது. ‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற தலைப்பில், சிவாஜி, பதமினி, நம்பியார் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தியிருக்கிறார்கள். ஹிந்தியிலும் 'மஹாராணி பதமினி' என்ற பெயரில் பதமினியே நடித்து வெளிவந்திருக்கிறது
இந்த சர்ச்சையில் ராஜ்புத் சமூகத்தினருக்கு இருக்கும் புகார்கள் இரண்டு: ஒன்று பன்சாலி வரலாற்றை திரித்து விட்டார். இரண்டு, பத்மாவதி எனும் மானமிகு ராணியின் பெருமையை குலைத்து விட்டார்.
முதல் புகாரை பார்ப்போம். கில்ஜி சித்தோரை தாக்கியது 13ம் நூற்றாண்டில். மேற்சொன்ன சம்பவங்கள் மாலிக் முஹம்மது எனும் ஒரு சூஃபி துறவி எழுதிய ‘ப்ரேமாக்யான்’ என்கிற கவிதை இலக்கியத்தில் இருக்கிறது. அது எழுதப் பட்டது 16ம் நூற்றாண்டில். அதாவது பத்மாவதி என்கிற பாத்திரம் முதன் முதலில் அறிமுகமானது ஒரு கற்பனைப் படைப்பில்தான். அதற்கு முந்தைய எந்த வரலாற்று எழுத்துகளிலும் இந்த ராணி பற்றிய குறிப்புகள் இல்லை. சொல்லப்போனால் பத்மாவதி என்கிற ஒரு ராணி சின்ஹாலில் பிறந்து சித்தோரில் வாழ்ந்து மரித்ததற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. கில்ஜி இந்த ராணியை தேடிப் போனதற்கும் ஆதாரம் இல்லை.
இது வரலாறே இல்லை எனும் போது திரிப்பதற்கு முகாந்திரமும் இல்லை. ஒரு படைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு பாத்திரம் இன்னொரு படைப்பாளியின் கற்பனையில் சிறிய மாற்றங்கள் கொள்வதில் ஆச்சரியமோ தவறோ இல்லை. சொல்லப் போனால் மாலிக் எழுதிய காலத்தில் இருந்து பத்மாவதி பெரும் மாற்றங்கள் கொண்டே வந்திருக்கிறாள். வடஇந்தியாவில் பெரும் பிரசித்தி பெற்று விட்ட இவள் கதை பெர்சியன், பெங்காலி, குஜராத்தி, ஜெயின் இலக்கியங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு எழுதப் பட்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டில் வேறொரு கதையில் ரத்தினசேனன் மேவார் சமஸ்தான அரசனாக மாறிப் போகிறான்.
ஜேம்ஸ் டாட் என்கிற, ராஜபுதன சமஸ்தானத்தில் பணியில் இருந்த, ஆங்கில அதிகாரி 19ம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தில் ராஜபுதனர்களை முஸ்லிம்களுக்கு எதிராக வீரமாக போராடிய தியாகிகளாக சித்தரித்திருந்தார். இதில்தான் முதல் முறையாக பத்மாவதியின் தியாகம் முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துக்களின் போராட்டமாக உருவகப் பட்டிருந்தது. அதுவரை வெறும் கதையாக வழங்கப் பட்டிருந்த ராணி இந்தக் கட்டத்தில்தான் ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையின் தியாகச் சின்னமாக மாறிப் போனாள்.
எனவே வரலாற்றை திரித்து விட்டார்கள் என்கிற புகாரே அர்த்தமற்றது.
இரண்டாவது புகாருக்கு வருவோம்: பத்மாவதியின் மானம் குலைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். மானம் என்றால் இங்கே என்ன குறிக்கப் படுகிறது? அவள் கற்பு. அதாவது கணவன் இறந்ததும் தானும் சிதையில் புகுந்தது வீரச் செயல். கணவனைத் தாண்டிய வேறு வாழ்வை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று பெண்களுக்கு அறிவுறுத்த பத்மாவதி பயன்படுகிறாள். ரத்தினசேனன் முதல் மனைவியையும் தன் ராஜ்ஜியத்தையும் விட்டு விட்டு வேறொரு அழகியைத் தேடி போனது இங்கே பிரச்சனையே இல்லை. கில்ஜி செய்தது பிரச்னை, ஏனெனில் அவன் முஸ்லீம். பத்மாவதி உயிரோடு இருந்திருந்து அவனால் கவரப் பட்டிருந்தால் அது பத்மாவதிக்கு நடந்த அநீதி இல்லை; ராஜபுதன சமூகத்துக்கு நடந்த அநீதி. அதாவது பத்மாவதியின் யோனியில் ராஜபுதன மானம் புதைந்து கிடக்கிறது.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு பெயர் போன மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கருவில் பெண் குழந்தைகளை கொலை செய்வது, வரதட்சணை பிரச்னை, பெண் ஆண் குழந்தைகளிடம் உள்ள கல்வி இடைவெளி இவை ராஜஸ்தானில் இருக்கும் பெரிய பிரச்சனைகள். இப்போதே இப்படி என்றால் 13ம் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். ரத்தினசேனன் பெரிய பெண்ணியவாதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே ரத்தினசேனன் நல்லவன், கில்ஜி கெட்ட மனிதன் என்கிற வாதம் அங்கே எடுபடாது. ஹிந்து முஸ்லீம் இரண்டு அரசர்களும் பற்பல மனைவிகள், அந்தப்புர அழகிகள் என்று வாழ்ந்து வந்த காலம். பெண்கள் ஒரு போகப் பொருளாகவும் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப் பட்ட காலம். எனவே, அங்கே பத்மாவதி நிகழ்த்திய தியாகம் என்று சொல்லப் படுவதுதான் பெண்களை அவமானப் படுத்தும் விஷயம். ஆனால் இன்றைக்கு ராஜ்புத் சாதியினர் நடத்தும் போராட்டத்தின்படி சிதையில் புகுந்து சாவதுதான் பெண்களுக்கு பெருமை. அதுவும் சாதி மாறாமல், மதம் மீறாமல் இருப்பதுதான் பெருமை என்கிற அர்த்தம் புலப்படுகிறது.
பத்மாவதி ஹிந்து முஸ்லீம் போரின் சின்னமல்ல. அவள் சாதிக் கட்டுப்பாட்டின் சின்னம். ஆணாதிக்கத்தின் சின்னம். Patriarchy எனப்படும் தந்தை-வழிக் குல முறையின் சின்னம். இதெல்லாம் 16ம் நூற்றாண்டுக் கதையில் வெளிப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஏனெனில் அந்தக் காலம் அப்படி. ஆனால் இன்றைய தேதியில், பெண்ணியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில், பெண் மீதான அடக்குமுறையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு சமூகம் தங்கள் தியாகச் சின்னத்துக்கு ஆதரவாக போராடுவதுதான் இங்கே முக்கிய பிரச்சனையாக கருதப் பட வேண்டும்.
ஆகவே, ஒரு கற்பனைப் பாத்திரத்துக்கு தன் சுய கற்பனையால் மேலும் மெருகூட்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் முயற்சி எந்த விதத்திலும் ஆட்சேபிக்கத் தக்கதல்ல. படம் பார்த்து அதில் எதாவது விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால் படமே கூடாது என்பது இந்த மாதிரி போக்கிரித்தனங்களை ஊக்குவிக்கவே பயன்படும்.
கடைசியாக, ‘வரலாற்றை திரிப்பது’ பற்றி. பத்மாவதி மாதிரி ஒரு கதைநாயகியை ‘திரிப்பதே’ இவர்களுக்கு ஆட்சேபிக்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் ‘தேஜோமய பாரத்’ என்கிற புத்தகம் குஜராத் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. அதில் வேதகாலத்தில் மோட்டார் கார்கள் இருந்தன. மரபணு தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்தது என்றெல்லாம் எழுதப் பட்டிருக்கிறது. இவை இரண்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. (இந்தப் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதி இருக்கிறார்.) ராமாயணம் உண்மையாக நடந்த வரலாற்று சம்பவம் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் கூறுகிறார். சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு ஒரு வரலாற்று ஆதாரம் கூட யாரும் இதுவரை கொடுக்கவில்லை. சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தை வேவு பார்க்க நேரு உளவாளிகளை நியமித்து இருந்தார் என்று பாஜகவினர் சொல்லி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பிரதமரே வெளியிட்ட போஸ் ஆவணங்கள் எதிலும் இது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தாஜ்மகால் முன்னர் ஒரு சிவன் கோயிலாக இருந்தது என்று பாஜக எம்எல்ஏக்களே சொல்லிக் கொண்டு இதுவரை ஒரு சான்று கூட தராமல் இருக்கிறார்கள்.
இவையெல்லாம்தான் வரலாற்றுத் திரிப்புகள். இவை எல்லாம் எந்தக் கவனிப்பும் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு படைப்பாளியின் கற்பனை காவியம் சாதியவாதிகளால் தாக்கப் படுகிறது. மதவாத வலதுசாரி அரசியல் அதற்கு துணை போகிறது.

கிழக்கும் மேற்கும்


.
(17th March 2018)

'ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உருவாக்கிய ரிலேட்டிவிட்டி தியரி பற்றிய குறிப்புகள் நம் பண்டைய வேதத்திலேயே இருக்கின்றன. சொல்லப் போனால் ஐன்ஸ்டைன் தியரியை விட வேதத்தில் உள்ள தியரி மேன்மையானது என்று மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.'
இப்படி பேசி இருப்பவர் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன். மறைந்த விஞ்ஞானி பற்றி நிருபர்களிடம் பேசுகையில் இப்படி சொல்லி இருக்கிறார். 'வேதத்தில் எந்த இடத்தில் ரிலேட்டிவிட்டி பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது?' என்று ஒரு நிருபர் கேட்டார். 'ஹாக்கிங் எப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பேசினார்?' என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலாக 'நீங்கள் போய் தேடிப் பாருங்கள்; கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கா விட்டால் அப்புறம் நான் ஆதாரம் தருகிறேன்,' என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
நவீன விஞ்ஞானத்தின் சாதனைகளையும் பண்டைய நாகரிகங்களின் சாதனைகளையும் ஒப்பிடும் முயற்சிகள் இதற்கு முன்பே நிறைய நடந்திருக்கின்றன. பிரிஜாஃப் காஃப்ரா என்பவர் எழுதிய 'Tao of Physics ' என்பது இதில் முக்கியமான புத்தகம். எரிக் வான் டானிகன் எழுதிய 'Chariots of the Gods? இன்னொன்று. தமிழில் கூட சுஜாதா எழுதிய ‘கடவுள்’ எனும் புத்தகத்தில் ஆழ்வார் பாசுரங்களையும் சிவ புராண சுலோகங்களையும் குவாண்டம் மெக்கானிக்ஸ் தத்துவங்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து எழுதி இருப்பார்.
எதனால் இப்படிப்பட்ட ஒப்பீடுகளும், பண்டைய சிலாகிப்புகளும் நடக்கின்றன என்பது சரிவரப் புரியவில்லை. ஆனால் ஒன்று, பொதுவாக இந்த மாதிரி புத்தகங்கள் அடிப்படைவாதிகளுக்கு பெரும் ஊக்குவிப்பை தருகின்றன. தாவோ புத்தகத்தை மேற்கோள் காட்டாத ஆர்எஸ்எஸ் தொண்டரை நான் இதுவரை பார்த்ததில்லை. குரானில் இல்லாத வாழ்வியல் நெறிகள் வேறு எங்கும் இல்லை; அதைத் தாண்டி எதுவும் நான் யோசிக்க வேண்டியதில்லை என்பதுதான் இஸ்லாமியவாதிகளின் முக்கிய கொள்கை.
நான் நிறைய தடவை குறிப்பிட்டு உள்ளது போல பண்டைய நாகரிகங்கள் எல்லாமே நிறைய சாதனைகளைப் புரிந்து உள்ளன. இந்தியாவின் வேத நாகரிகம், மெசபடோமியா, எகிப்து, தென் அமெரிக்கா என்று எல்லாமே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி விட்டுத்தான் போயிருக்கின்றன. அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில்தான் நாம் எல்லாரும் பெருமையுடன் வீற்றிருக்கிறோம். ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதைத் தாண்டி யோசிக்க எதுவுமே இல்லை என்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.
கடவுள் புத்தகத்தில் சுஜாதாவே குறிப்பிடுவது மாதிரி, இப்படி எல்லாம் ஒப்பிடுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி தெரிந்திருந்தது, ப்ரோட்டான் துகளை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் உட்டாலக்கடி. ஆனால் நிறைய யோசித்து இருக்கிறார்கள். நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆனால் புரியாதவை, புலனுக்கு எட்டாதவற்றை கடவுள் என்று பிராண்ட் பண்ணி விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் முன்னேற இயலாமல் போயிருக்கிறது.
மேற்கு நாகரிகம் அந்தக் கட்டத்தை தாண்டி முன்னேறி இருக்கிறது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நியால் ஃபெர்குசன் எனும் ஆய்வாளர் Civilisations எனும் தன் புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கிறார். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கிய காரணம் மத அடிப்படைவாதம். அரேபிய நாகரிகமும் சரி, இந்திய நாகரிகமும் சரி ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேறாமல் போனதற்குக் காரணங்களில் ஒன்று மதவாதிகளின் ஆளுமை, குறுக்கீடுகள் என்று அவர் வாதிடுகிறார். மேற்கத்திய சமூகம் மதவாதத்தை தள்ளி வைத்ததால் அறிவியலுக்கும், நிரூபணம் தேவைப்படும் ஆய்வுகளுக்கும் (empirical research) முன்னுரிமை தந்ததில் பெருமளவு முன்னேற முடிந்திருக்கிறது, என்று ஃபெர்குசன் எழுதுகிறார்.
இதனை நேரு புரிந்து வைத்திருந்திருக்கிறார். Scientific Temper என்று பொதுவாக சொல்லப்படும் அறிவியல்ரீதியான சிந்தனைதான் தேசத்தை முன்னேற்றும் என்று பெருமளவு நம்பினார். தன் புத்தகம் Discovery of Indiaவில் இந்தப் பதத்தை முதன் முதலில் பயன்படுத்துகிறார். பின்னர் சுதந்திரத்துக்குப் பின் தொடர்ந்து இதனை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். நேரு அளவுக்கு இந்தப் பதத்தை பயன்படுத்திய வேறு அரசியல்வாதி கிடையாது. அரசியல் சாசனத்திலேயே இந்திய மக்களின் கடமைகளில் ஒன்றாக ‘To develop scientific temper, humanism and the spirit of inquiry and reform’ என்பது உள்ளது.
சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியதற்கே கூட மதங்களின் அடிப்படைவாதங்களை விட்டு விலகி பெருமளவு நவீனக் கண்டுபிடிப்புகளையும், நவீன சிந்தனாவாதங்களையும் பின்பற்றத் துவங்கியதேதான் காரணம் என்று சொல்லலாம். இதர காலனிய ஆதிக்க நாடுகள் பெருமளவு பிரச்சனைகளில் உழல்வதற்கு அவர்கள் அப்படி செய்யாததுதான் காரணம் என்றும் சொல்லலாம். பாகிஸ்தானில் குரான் பற்றி கேள்வி கேட்டால் தூக்கில் போடுகிறார்கள். பங்களாதேஷில் ப்ளாக் எழுதினால் கொலை செய்கிறார்கள். இலங்கையில் பன்மைக் கலாச்சாரத்தை வேரெடுக்கவே விடமாட்டேன் என்கிறார்கள். அதன் பலன்களை அந்த நாடுகள் அனுபவிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தியாவிலும் சமீப காலங்களில் இது துவங்கி இருக்கிறது. பகுத்தறிவுவாதிகள் கொலை செய்யப் படுகிறார்கள். டார்வின் ஒரு வேஸ்ட் என்கிறோம். ஹாக்கிங் வேதம் படித்து சிலாகித்தார் என்கிறோம். வேத காலத்தில் பிளேன் ஒட்டினோம், பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினோம் என்கிறோம். எப்படி இருந்த நாம் இப்படி ஆகி விட்டோம் என்கிறோம். ராமாயணம் உண்மையில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம் என்று வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் ‘அறிவிக்கிறார்’. ஆயுர்வேதம் மிகவும் உயர்ந்தது என்று அதற்கு ஒரு துறை அமைக்கப் படுகிறது. அதன் கீழ் நடக்கும் ஜல்லியடி ஆய்வுகள் சிலாகிக்கப் படுகின்றன. இதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. சுதந்திரத்துக்குப் பின் வந்த மாற்றங்கள், செக்யூலரிஸம், இட ஒதுக்கீடு, பல்-சமய, பன்மைக்-கலாச்சார சூழல் எல்லாமே கேள்விக்கும, விமர்சனத்துக்கும் உள்ளாக்கப் படுகிறது. இவற்றைப் போற்றிய நேரு கேவலப் படுத்தப் படுகிறார்.
இந்த மாபெரும் அலையில் இடையில் வந்து மாட்டிக் கொண்ட ஹாக்கிங்-கும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

நேருவும் பெண்களும்


.

(30th July 2017)

நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப் படுகிறார்.
நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை.
சொல்லப் போனால் அவருக்கு விருப்பமே இல்லாமல் நடந்த கட்டாயக் கல்யாணத்தைக் கூட அவர் உதறி விடவில்லை. காச நோயால் அவதிப்பட்ட கமலா-வை குணப்படுத்த எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸ்விட்சர்லாந்து போய் மாதக்கணக்கில் அவருக்கு மருத்துவம் பார்க்க உடனிருந்து கவனித்துக் கொண்டவர். அவரின் இறுதிக்காலங்களில் அவருக்கு பணிவிடைகள் செய்தவர். அவரின் உடல் மோசமாவதைக் குறித்து தன் குடும்பத்துக்கு பெரும் சோக ரசம் சொட்டும் கடிதங்கள் எழுதியவர். கமலா இறக்கும் வரை வேறு பெண்ணை ஏறெடுத்தும் பாராதவர்.
எட்வீனாவையும் அவரையும் குறித்து கூறப்படும் கதைகள் கட்டுக்கதைகள் அல்ல என்று நம்புபவன் நான். அது பற்றி நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது நேரு ஒரு விடோயர். மனைவியை இழந்து பல ஆண்டுகள் தனியாக இருந்தவர். எனவே என்னைப் பொறுத்தவரை அதில் நேரு தரப்பில் தவறேதும் இல்லை. நேருவுக்கு முன்பே எட்வீனாவுக்கு ‘தோழர்கள்’ இருந்திருக்கின்றனர். அவை எல்லாவற்றையும் பற்றி மவுண்ட் பேட்டனுக்கு தெரிந்தே இருந்தது. அவர்கள் திருமணம் ஒரு வசதித் திருமணம். Marriage of Convenience. ராஜகுலத்தில் பிறந்திருந்தாலும் ராயல் பட்டத்தை இழந்தவர் மவுண்ட் பேட்டன் (அது தனிக் கதை). எட்வீனாவை திருமணம் புரிவதன் மூலம் அவருக்கு ராஜகுல பட்டம் திரும்பக் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே சுதந்திரப் பறவையாக இருந்த எட்வீனாவுக்கு அந்த சுதந்திரம் தொடர மவுண்ட் பேட்டன் அனுமதித்தார். எனவே அங்கும் தவறு காண (என்னைப் பொறுத்த வரை) இடம் இல்லை. ‘அய்யய்யோ கல்யாணம் பண்ணிக்காமல் காதலா! அபச்சாரம்!’ என்று கத்துபவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என்பதை கொஞ்சம் காலண்டரைப் பார்த்து தயவு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது நேரு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு சிகரெட் பற்ற வைக்கும் ஃபோட்டோ. இதனை ஆயிரம் தடவையாவது முகநூலில் பார்த்திருப்பேன். அது எட்வீனா இல்லை. அந்தப்பெண் ஒரு பிபிஸி நிருபர். நேருவின் ராஜரீகப் பயணங்களில் கூடப் பயணித்த ஊடகக் குழுவில் ஒருவர். அவருக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும் காட்சி எனக்குப் பிடித்த நேரு போட்டோக்களில் ஒன்று. ‘அய்யய்யோ ஒரு பொம்பளை சிகரெட் பிடிக்கலாமா? அபச்சாரம்’ என்பவர்களில் நீங்கள் ஒருவர் என்றால் திரும்பவும் ஒருமுறை காலண்டரைப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெண்ணியத்தில், பெண் விடுதலையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் நேரு. சொல்லப் போனால் எனக்குத் தெரிந்து வெளிப்படையாக பெண்ணியம் பேசிய வேறு பிரதமர் கிடையாது. விவாகரத்து உரிமை, மறுமணம், சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை என்று இன்றைக்கு நாம் பார்க்கும் நிறைய சீர்திருத்தங்கள் அவர் கொண்டு வந்ததுதான். அப்போதைய ஹிந்துத்துவா இயக்கங்களான ஹிந்து மஹா சபா, ஆரஎஸ்எஸ் போன்றவை அவரின் சீர்திருத்த முயற்சிகளை கடுமையாக எதிர்த்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நேரு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அந்த சட்ட வடிவங்களை நுழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதில் தாமதம் ஏற்பட்டது. அந்த தாமதத்தை பொறுக்க மாட்டாமல் அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விலகினார். ஆனால் அது நடந்து சில மாதங்களிலேயே (அம்பேத்கர் விரும்பிய) அந்தத் சட்ட வடிவங்களை எல்லாம் நேரு கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
அந்த அளவுக்கு பெண்கள் பற்றியும் இந்தியாவில் பெண்கள் நிலை பற்றியும், அது சம்பந்தமாக நிலவும் பிற்போக்குத்தனம் பற்றியும் நேரு கவலைப்பட்டு தன்னால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பெண்கள் பற்றிய அவர் கவலைகள் மிகவும் நவீனமாக, அறிவியல் பூர்வமாகவே இருந்திருக்கிறன.
ஆனால் அப்படி அவரைக் கரித்துக் கொட்டும், எட்வீனா விஷயத்தில் கிண்டல் அடித்துக் கொண்டிருப்பவர்கள் கையில் அப்போது அதிகாரம் இருந்திருந்தால் இன்றைக்கும் கூட விதவைகளை மொட்டை அடித்து காசிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கலாம்.

முத்தலாக் எனும் குற்றம்


.
(16 December 2017)
முத்தலாக் பயன்படுத்தி மனைவியை விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்ட வடிவம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. இது அவையில் நிறைவேறி விட்டால் முத்தலாக் பயன்படுத்துவோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
இது தேவையற்ற செயலாக எனக்குப் படுகிறது. முத்தலாக் சட்ட விரோதம் என்றும் மத ரீதியாகக் கூட அதற்கு அங்கீகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் அறுதிபட கூறியாகி விட்டது. அப்படி இருக்கும் போது ஒருவர் தன் மனைவியிடம் மும்முறை தலாக் அறிவித்தால் அது செல்லுபடி ஆகாது. ஒரே ஒரு முறை தலாக் கூறியதாகத்தான் எடுத்துக் கொள்ளப் படும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இஸ்லாமிய சமூகத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினாலே போதுமானது.
முத்தலாக் என்பது ஏறக்குறைய மனைவியை திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு துரத்துவது போன்றது. அது இதர மதத்தவரிடமும் நடக்கிறது. அப்போது அவர்களும் சிறைக்கு செல்ல வேண்டியதுதானா?
மூன்று வருடம் சிறை என்பது கலவரம் செய்பவர்களுக்கு, சில வகை கொலைகளுக்கு வழங்கப்படும் தண்டனை. அதனை இன்ஸ்டன்ட் விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு வழங்க முனைவது பெருந்தவறு. இஸ்லாமிய சமூகத்தின் மேல் இந்த அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது.
சரி, மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டை போவது குற்றம் என்றால், சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி அப்புறம் 'எனக்கு மனைவியே இல்லை,' என்று அஃபிடவிட் கொடுப்பதை அதை விடப் பெருங்குற்றம் என்று பொருள் கொள்ளலாமா? அதற்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்?

==========================================================

முத்தலாக் பற்றிய பதிவில் பிரதமரை வம்புக்கு இழுத்திருக்கிறேன் என்று கமெண்டுகள் வருகின்றன. வெறும் லைக்-குகளுக்காக அல்லது மதச்சார்பின்மையை நிரூபிப்பதற்காக அப்படி செயகிறேன் என்றும் கமெண்டுகள்.
என் லைக்குகளை நான் கணக்கு செய்து கொண்டிருப்பவன் அல்ல. மேலும் இவ்வளவு வருடம் கழித்து புதிதாக என் மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, பிரதமரின் மணவாழ்வு அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நம்புகிறவன். அந்த சர்ச்சை வெளிவந்த போது கூட பிரதமரை இந்த விஷயத்தில் நெருக்கக் கூடாது என்று பதிவு எழுதியவன். பிரைவசியின் தேவையில் பெரும் நம்பிக்கை உடையவன்.
ஆனால் பிரதமருக்கு இருக்கும் அதே உரிமை, அதே பிரைவசி தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். முத்தலாக் சட்டம் அந்த உரிமையை பறிக்கிறது. உரிமையை குற்றமாக்கி அவனை சிறைக்கு தள்ளுகிறது. இது தவறு என்று வாதிட என்னிடம் இருந்த குறிப்புகளில் சக்தி வாய்ந்த குறிப்பு பிரதமர்தான். பிடிக்காத மணத்தில் இருந்து தானே வெளிவந்த பிரதமருக்கு முத்தலாக்கை குற்றமாக்குவது தவறு என்று சொந்த அனுபவத்தால் புரிந்திருக்க வேண்டும். அது புரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினேன்.
அவ்வளவுதான்.

முத்தலாக் தீர்ப்பு


.
(22nd August 2017)

இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ‘முத்தலாக்’ எனும் உடனடி விவாகரத்து முறைமையை சட்டவிரோதம் என்று அறிவித்து இருக்கிறது. அதே நேரம் இது தாற்காலிக தடைதான் என்றும் நீண்ட கால அடிப்படையில் இதையொட்டி ஒரு சட்டவடிவத்தை நாடாளுமன்றம் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு என்று கருதுகிறேன். நான் பலமுறை முத்தலாக் பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அது ஒரு பண்டைய கால மூடத்தனம்தான் என்றாலும் இன்றைக்கு இஸ்லாத்தில் மிகவும் நவீனமாக உபயோகிக்கப் படும் விஷயங்களில் அதுவும் ஒன்று. நாளிதழ் விளம்பரங்கள் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. எஸ்.எம்.எஸ், ஸ்கைப், ஏன் வாட்ஸ்அப் மூலம் கூட மூன்று முறை தலாக் பிரயோகித்து மனைவியை கழட்டி விட்ட சம்பவங்கள் நடைமுறையில் இருக்கின்றன துருக்கி, மலேசியா, பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய பெரும்பான்மை மக்கள் வசிக்கும் நாடுகளிலேயே இது தடையில் இருக்கிறது. ஏன், பாகிஸ்தான் மாதிரி ஷரியா சட்டங்கள் நடைமுறையில் உள்ள தேசத்திலேயே கூட முத்தலாக்-குக்கு அங்கீகாரம் இல்லை.
காரணம் ‘தலாக்-ஏ-பிதா’ (Talaq-e-Bid’ah) எனும் முத்தலாக் இஸ்லாமிய சமூகங்களில் பண்டைய காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்தாலும் இஸ்லாத்தில் அதற்கு அங்கீகாரம் இல்லை. குர்ஆனில் முத்தலாக் கிடையாது. நபிகளும் அதனை அங்கீகரித்ததில்லை. அவரின் உடனிருந்த ருக்கான்-பின்-யாஸித் என்பவர் ஒரு முறை முத்தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் நபிகளிடம் அது பற்றி வருந்திக் கூறிய போது நபிகள் ‘எதை வைத்து உன் மனைவியை விவாகரத்து செய்ததாக நினைக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு யாஸித் ‘அவளிடம் மூன்று முறை தலாக் கூறினேன்,’ என்றார். ‘ஒரே நேரத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்வது ஒரே ஒரு முறை தலாக் சொல்வதற்குதான் சமம்; உன் விவாகரத்து முடிவடையவில்லை. எனவே, அவளை திரும்ப உன்னிடம் அழைத்துக் கொள்வதில் தடையேதும் இல்லை.’ என்று நபிகள் அறிவித்தார்.
இந்த சம்பவத்தை ஒட்டி மூன்று முறை தொடர்ந்து தலாக் சொல்வது ஒரே ஒரு முறை சொல்வதாகத்தான் உலகெங்கும் இஸ்லாமிய அறிஞர்களால் கருதப் படுகிறது. எனவேதான் முத்தலாக்கை ஆதரித்த முஸ்லீம் சட்ட வாரியமே கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிவிட்டில் ‘முத்தலாக் இஸ்லாத்தில் ஒரு பாவம்,’ என்றே குறிப்பிட்டு இருக்கிறது.
இஸ்லாமிய அறிஞர்களை உச்ச நீதிமன்றம் தீர கலந்தாலோசித்தே இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைஸி ‘இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பெரும் பாடாக இருக்கும்!’ என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். இஸ்லாமிய விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வராது. தவிர முஸ்லிம்கள் கெட்டோ (ghetto) என்று சொல்லப்படும் உள்ளடங்கிய, தனித்துவ சமூகங்களாக பெருமளவு வாழ்வதால் அங்கே நடக்கும் குடும்ப சச்சரவுகள் அதிகம் வெளியே வராது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக படித்த பெண்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் உள்ள போராளிகள் அத்துமீறல்களை வெளியே கொண்டு வந்து சர்ச்சையை கிளப்பி இந்த வழக்கத்தை பெருமளவு கட்டுக்குள் வைக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்தத் தீர்ப்பு வந்த உடனே அடித்துப் பிடித்து இதனை வரவேற்று ட்வீட் செய்திருக்கிறார். அது சரிதான்; ஆனால் ‘இது முஸ்லீம் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!’ என்று டீவீட்டில் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கான அப்பாடக்கர் தீர்ப்பா இது என்பது தெரியவில்லை. கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது; அவ்வளவுதான். என்னைப் பொருத்த வரை முஸ்லீம் பெண்கள் நலனில் இது ஒரு துவக்கம், அவ்வளவே. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தப் பயணத்தை முஸ்லீம் ஆண்கள் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, ‘முத்தலாக் தீர்ப்பை கொடுத்த உச்ச நீதிமன்றம் சபரி மலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் இதே மாதிரி முடிவு எடுக்குமா?’ என்று கேட்டு பதிவுகள் முஸ்லிம்களிடம் இருந்து பார்க்கிறேன்.
சபரி மலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் பெண்களை அனுமதிக்கும் விதமாக தீர்ப்பு வரும், வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் முத்தலாக் விஷயத்தில் மத-ரீதியாகத்தான் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதிலும் மதரீதியாக முடிவெடுக்க எத்தனித்தால் பெண்களுக்கு இருக்கும் தடையை தொடரத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். (பல நூறு ஆண்டுகளாக அய்யப்பன் கோயிலில் வயது வந்த பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இல்லை என்று தேவஸ்தான போர்ட் குறிப்பிட்டு உள்ளது. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.) ஆகவே சபரிமலை விஷயத்தில் ‘முத்தலாக்கில் செய்தது மாதிரியே மத ஆதாரங்கள் சார்ந்து முடிவெடுக்காமல் மதம் தாண்டிய ‘பெண்ணுரிமையை’ கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடைசியாக, இப்படி ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. ‘குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுகிறாயே? காஷ்மீர் பண்டிட் பற்றி பேசினாயா? சீக்கியர் கலவரம் பற்றி பேசினாயா?’ என்று ஹிந்துத்துவ அபிமானிகள் கேட்கிறார்களே, அதற்கும் ‘முத்தலாக் வேண்டாம் என்கிறாயே, சபரிமலை விஷயத்தில் என்ன சொல்கிறாய்?’ என்று கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப் போனால் ஹிந்து மதத்தில் பெண்கள் விஷயத்தில் சீர்திருத்தங்கள் துவங்கப் பட்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகின்றன. சுதந்திர இந்தியாவில் ஹிந்துப் பெண்களுக்கு நிறைய உரிமைகள் வழங்கும் முக்கியமான சட்ட வடிவமான Hindu Code Bill ஐ கொண்டு வர நேருவும் அம்பேத்கரும் கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த ஹிந்துத்துவ அபிமானிகள் (ஹிந்து மகாசாபா போன்றோர்) இதே சீர்திருத்தங்களை ஹிந்துப் பெண்கள் என்றில்லாது இந்தியா முழுக்க கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அதனை முஸ்லீம் தலைவர்கள் எதிர்த்தார்கள். பிரிவினையின் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பெரும் பாதுகாப்பின்றி உணர்ந்ததால் அப்போது இந்த சட்டங்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டது.
இப்போதும் புதிய அரசின் முஸ்லீம் விரோதக் கொள்கைகளால் அந்த பாதுகாப்பின்மை நிலைமை கொஞ்சம் திரும்பி வந்திருக்கிறது என்பது உண்மைதான் எனினும் 1948ல் இருந்த அளவு மோசமான நிலை இப்போது இல்லை என்று உறுதியாகவே சொல்லலாம். எனவே, இப்போது இதனை எதிர்க்காமல், ஹிந்துப் பெண்களுக்கு செய்தாயா, கிருத்துவர்களுக்கு செய்தாயா என்றெல்லாம் எதிர்வாதங்கள் புரியாமல் இந்திய முஸ்லீம் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்தக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவைஸி விடுத்த எச்சரிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு இந்த நீதிமன்ற உத்தரவை நடைமுறையில் அமுல்படுத்தி ஹிந்துத்துவ பிரச்சாரத்தின் பல்லைப் பிடுங்க இந்திய முஸ்லிம்கள் உதவுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் இந்த உத்தரவை மனதார ஆதரித்து உச்ச நீதிமன்றத்துக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடுங்கோல் மன்னர்கள்


.
‘பத்மாவத்’ பற்றிய என் பதிவில் அலாவுதீன் கில்ஜி பற்றிய கமெண்டுகளில் ‘அவன் கொடுங்கோலன். அவனை அப்படித்தானே சித்தரிக்க முடியும்?’ என்று கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன.
கில்ஜி கொடுங்கோலனாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் பிரச்னை அதுவல்ல. ராஜபுத்திர அரசன் ராஜா ரத்தின சேனன் கருணை மிகுந்த, நேர்மையான, மென்மையாகப் பேசும் நல்லவனாக சித்தரிக்கப் படுகிறான். அதுதான் பிரச்சனை. அவன் அமைச்சரவையிலும், ராணுவத்திலும் கூட நேர்மை மிகுந்த நல்லவர்களே இருக்கிறார்கள். கூட இருக்கும் ஒரே கெட்டவன் ஒரு பிராமண பண்டிதன்.அவனின் உண்மை ரூபமும் கூட கதையின் துவக்கத்திலேயே வெளியாகி ரத்தின சேனனால் நாடு கடத்தப் பட்டு விடுகிறான். அப்போது கூட ராஜா அந்தப் பண்டிதனுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் (பிரம்ம ஹத்தி தோஷம்) தனக்கு வரக்கூடாது என்று கூறுகிறான்.
ஆனால் கில்ஜி மட்டுமல்ல, கில்ஜியின் அமைச்சரவையில் எல்லாருமே தீயவர்கள். அவனருகில் இருக்கும் சுமாரான நல்ல மானுடம் அவன் மனைவி மட்டுமே. அதுவும் அவள் நல்லவள் என்று சொல்லவியலாது. கில்ஜியை பழிவாங்க அவளுக்கு ஒரு பழைய கணக்கு இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் அவளும் இவர்களோடு சேர்ந்தே இயங்கி இருக்கக் கூடும்.
அதிலும் ரத்தின சேனனும் கூட ஏற்கெனவே திருமணமாகி இன்னொரு பெண் மேல் மையல் கொண்டு அவளை மணந்து கொண்டு வருகிறான். கில்ஜியும் அதையே செய்ய முற்படுகிறான். ஆனால் இருவருக்கும் என்ன வித்தியாசம்! ஒருவன் மகா காதலன்; இன்னொருவன் காமாந்தகாரன்.
என்னைப் பொறுத்தவரை ராஜபுத்திரர்களாகட்டும், சோழ பாண்டியார்களாக இருக்கட்டும், மௌரியர்களாக இருக்கட்டும். எல்லாருமே பெருமளவுக்கு கொடுங்கோலர்களாக, ஆணாதிக்கவாதிகளாகவே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சொல்லப் போனால் 12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் ராஜபுத்திரர்களை விட அதிகமாக பெண்களுக்கு உரிமைகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. விதவை மறுமணம், விவாகரத்து உரிமை போன்றவற்றை எல்லாம் இந்திய சமூகம் கேள்விப்படும் முன்பே இஸ்லாம் கொண்டு வந்திருக்கிறது.
ஏன், இன்றைக்குமே கூட, இத்தனை முன்னேற்றங்களுக்குப் பிறகும் கூட, பெண்கள் வளர்ச்சியில் பின்னணியில் இருக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முக்கிய இடம் வகித்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது இதே சமூகம் 12ம் நூற்றாண்டில் பெண்களுக்கு பெரிய மரியாதை செய்தது என்று நம்ப இயலவில்லை. இன்றைக்கு இருக்கும் மனித வளக் குறியீடுகளில் எதிலுமே ராஜபுத்திர அரசர்கள் பங்களித்ததாக வரலாறு இல்லை. தில்லி சுல்தான்கள் போல, முகலாயர்கள் போல இவர்களும் அதிகாரத்துக்காக மாமன் மச்சான் சண்டை, அரண்மனை சதிகள், மர்மமான அரச குடும்ப கொலைகள் என்றுதான் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். எத்தனை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தின் மக்களை சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்ற முயற்சிகள் மற்றும் கொள்கை முனைப்புகள் எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கில்ஜிகளுக்கும் இதர அரசர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக, மற்ற ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து அவர்கள் சொத்துகளை, கோயில்களை கொள்ளையடிப்பதில் கூட இந்து மற்றும் முஸ்லீம் அரசர்களுக்குள் பெரிய அளவு வித்தியாசம் இருக்கவில்லை.
கூடவே எல்லா அரசர்களும் தங்கள் சுய முக்கியத்துவத்தை போற்றுவதையே வேலையாக கொண்டிருந்தார்கள். திரைப்படத்தில் தன் பெயர் இல்லாத வரலாற்றுப் பக்கங்களை கில்ஜி கிழித்து நெருப்பில் வீசும் காட்சி ஒன்று வரும். அதே போல நிறைய அரசர்கள் கூட செய்து கொண்டு இருந்தார்கள். பண்டைய இந்திய வரலாற்றிலேயே கூட நிறைய காலி பக்கங்கள் இருக்கின்றன. நபிகள் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே கூட, அதாவது இஸ்லாம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்பே கூட இந்த காலி பக்கங்கள் இருக்கின்றன. ஆகவே வரலாறுகள் ‘காணாமல் போனதற்கு’ இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டும் காரணம் அல்ல. இந்து அரசர்களும் நிறைய ‘பங்களித்து’ இருக்கிறார்கள்.
அடுத்தது சட்டம் ஒழுங்கைப் பேணுதல். கில்ஜி தாறுமாறாக உத்தரவுகளை இடுவான். அதன் சாதக பாதகங்களை யோசிக்கவே மாட்டான். இதுவும் எல்லா அரசர்களும் செய்ததுதான். பாகுபலியில் ராஜமாதா சிவகாமி அடிக்கடி கூறும் வசனம் ஒன்று வரும். ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்.’ அதன் சரியான அர்த்தம் என்ன? ‘நான் வெச்சதுதான் இங்க சட்டம்.’ அதுதானே?
அப்படித்தான் எல்லா அரசர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லா அரசர்களும் படையெடுப்பாளர்கள்தான். எல்லா அரசர்களும் ஒரு வகையில் கொடுங்கோலர்கள்தான். இவன் கெட்டவன், இவன் ரொம்பக் கெட்டவன் என்று வேண்டுமானால் வித்தியாசப் படுத்தலாம், அவ்வளவுதான்.
இந்த வரைமுறையை மீறி பெருங்கருணையுடன், ஓரளவு சட்ட திட்டங்களை வடிவமைத்து அதன் அடிப்படையில் ஆட்சி செய்த அரசர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.
எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் உலகெங்கும் ஜனநாயகம் போற்றப்படுவதற்கு காரணம் இதுதான். ஒரு ஓட்டை ஜனநாயக அரசு சாதித்ததில் பத்து சதவிகிதம் கூட ‘கருணை மிக்க அரசர்’ ஒருவர் சாதிக்கவில்லை. இந்தியாவிலும் ஜனநாயகம் வந்த பிறகுதான் சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் சாதாரண மனிதனை சென்றடைந்தது. வறுமைகள் குறைந்து, பட்டினி சாவுகள் நீங்கி, மருத்துவ வசதி அதிகரித்து, கல்வியறிவு பரவி, கருத்து சுதந்திரம் பெருவாரியாக கிடைத்து பொதுவான வாழ்க்கைத்தரம் பெருகியது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களை தவறாக சித்தரிக்கிறோம். அவர்கள் இங்கே படையெடுத்தார்கள். இங்கே மதமாற்றம் செய்தார்கள். இங்கே மசூதிகள் கட்டினார்கள் என்கிறோம். உண்மைதான். அதனை மோசமாக சித்தரிக்கிறோம்.
ஆனால் சோழர்கள் இந்தோனேஷியாவில் படையெடுத்தது, அதில் தோற்றுப் போன மன்னர்களையே கல் சுமக்க வைத்து இந்துக் கோயில் கட்டியது எல்லாம் பெருமையாக பேசப்படுகிறது. இஸ்லாமிய சுல்தான்கள் செய்ததற்கும் சோழப் படையெடுப்பார்கள் செய்ததற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஆனால் ஒருவர் செய்தது கொடுமையாகவும் அடுத்தவர் செய்தது பெருமையாகவும் பார்க்கப் படுகிறது. ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரே காரணம்தான். ‘நம்மாளு’ ஜெயிக்கிறான். ‘நம்மாளு’ தோற்கிறான். ‘’நம்மாளு’ ஜெயித்தால் அவன் வீரன். ‘நம்மாளு’ தோற்றால் ‘எதிரி’ ஒரு கொடுங்கோலன். நம்மாளு வேற்று தேசத்து பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்து கூட்டி வந்தால் அவன் கில்லாடி. ‘எதிரி’ நம் பெண்ணை அப்படி செய்ய முயற்சித்தால் அவன் காமாந்தக்காரன்.
இதுதான் நாம் எழுதிக் கொண்டு இருக்கும் வரலாறு.

உழைக்கும் வர்க்கம்


.
வேலை நிறுத்த ஆதரவு பதிவுகளில் 'உழைக்கும் வர்க்கம்' என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது உடலால் வேலை செய்வதுதான் உழைப்பு. மீதி எல்லாமே உழைப்பு இல்லை என்கிற சிந்தனாவாதம். இதுவும் எம்ஜியார் காலத்து சிந்தனைதான். நான் வாரத்துக்கு 70 மணி நேரம் அலுவல் வேலைகளை செயகிறேன். மீதி நேரம் என் நாவல், சில கன்சல்டன்சி, என் துறை பற்றிய தொடர் படிப்பு, என் விருப்பமான சப்ஜெக்ட்கள் பற்றிய படிப்பு என்று பிசியாக இருக்கிறேன். இதெல்லாம் உழைப்பு கேட்டகிரியில் வராதா?
உடல் உழைப்பு என்பது என்பதை பெருமையாகவும், முக்கிய சேவையாகவும் பார்க்கப்பட்டது அந்தக்காலம். இன்று மூளை உழைப்பின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரிந்து விட்டது. ஒருவர் எவ்வளவு உழைக்கிறார் என்பதை விட அவரின் உழைப்பின் திறமையின் மதிப்பு, productivity, இப்போது முக்கியமாக பார்க்கப் படுகிறது. அதாவது ஒருவர் 8 மணி நேரம் போடும் உழைப்புக்கு 100 ரூபாய் சம்பாதிக்கலாம். அடுத்தவர் அதே 8 மணி நேரத்தில் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம். சமூகத்துக்கு இரண்டாமவர்தான் முக்கியமானவராக இருப்பார். இருக்க வேண்டும். முதலமாவர் மேல் கருணை அல்லது பரிதாபம் வரலாம். ஆனால் 100 ரூபாய் உழைப்பாளியை 10 ஆயிரம் உழைப்பாளியை விட பெரிதும் மதித்தால் நாம் தவறான கண்ணோட்டத்தை கொண்ட சமூகத்தை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.விஜயகாந்த் ஒரு படத்தில் எம்ஏ படித்து முடித்து விட்டு ஆனால் வேறு ஆபீஸ் வேலை எதுவும் செய்யாமல் ரிக்ஷா ஓட்டுவார். 'உழைப்பின் முக்கியத்துவத்தை' சமூகத்துக்கு உணர்த்த வேண்டி அப்படி செய்வதாக நியாயப் படுத்துவார். அந்த மாதிரி நகைச்சுவை அவலம்தான் சமூகத்தில் நிலவும்.
தவிர, நான் முன்பே 'ரஹ்மான் ரோபோ' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டது மாதிரி ஆட்டோமேஷன் துறையின் முன்னேற்றங்கள் நம் எல்லார் வேலைக்கும் உலை வைக்கப் போகின்றன. அதில் முதலில் காலியாகப் போவது 'உடல் உழைப்பு' சம்பந்தப்பட்ட வேலைகள்தான். ஏனெனில் அதுதான் ரோபோட்கள் சுலபமாக செய்ய முடிந்தவை. இப்போதே driverless cars பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பாதி ரயில்கள் இன்றைக்கு ட்ரைவர் இல்லாமல் இயக்கப் படுகின்றன. தில்லி மெட்ரோவில் ஒரு லைனில் அடுத்த வருடம் முதல் ட்ரைவர் இருக்கப் போவதில்லை. இன்னும் பத்து வருடங்களுக்குள் ட்ரைவர் தேவைப்படாத பஸ், கார், ரயில்கள் உலகெங்கும் வந்து விடும். இந்தியாவிலேயே அவற்றின் சாத்தியக்கூறுகள் சோதிக்கப் பட்டு வருகின்றன. டாடாவின் எல்க்ஸி நிறுவனம் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றது கொஞ்ச நாளைக்கு வேலைகளை பாதுகாக்கிறோம் என்று அரசு இந்த வண்டிகளை தடை செய்யலாம். ஆனால் இவை வந்தே தீரும். அதே போல விவசாயம், தொழிற்சாலைகளில் assembly line வேலைகள் இவை யாவையும் ரோபோட்டுகள் கையகப் படுத்தி விடும்.
அப்போது உழைக்கும் வர்க்கம் என்று சிட்டி வகையறாக்களை கட்டிப் பிடித்துக் கொண்டுதான் எம்ஜியார் பாடல்களை பாட வேண்டிவேண்டி இருக்கும்.