Friday 8 March 2019

பரியேறாத அம்பாள்



.
சமீபத்தில்தான் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்து முடிக்க முடிந்தது. படம் சொல்லும் கதை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ காலத்தில் இருந்து சொல்லப்பட்டதுதான் என்றாலும் அப்போது ஆணவக் கொலைகள் பற்றிய செய்திகள், விவாதங்கள் இத்தனை பரவலாக வரவில்லை என்பதால் அதன் வீரியம் என்னை இந்த அளவு தாக்கவில்லை. அதுவுமின்றி இயல்பாகவே பள்ளிக்கூடக் காதல்கள் பற்றிய படங்கள் மேல் எனக்கு இருக்கும் சின்ன ஒவ்வாமை அந்தப் படத்தின் பின்னிருந்த சமூகப் பிரச்சனையை கவனிக்க முடியாமல் செய்து விட்டது.
ஆனால் பரியனிடம் அந்தப்பிரச்சனை இருக்கவில்லை. பரியன் மற்றும் ஜோ இருவரிடமும் மலர்வது காதல் என்ற அளவில் கூட இயக்குனர் மாரி செல்வராஜ் காண்பிக்கவில்லை என்பது படத்திலேயே பெருத்த ஆறுதலாக இருந்த விஷயம். ஜோ-விடம் தனக்கு இருந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில் பரியனுக்கு இருந்த பிரச்சனையை இறுதியில் அவன் விளக்குவது புரிந்து கொள்ளத்தக்க வகையிலேயே இருந்தது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது.
படத்தில் கருப்பியை வைத்து செய்யப்படும் குறியீடு முக்கியமானது என்று நினைக்கிறேன். பண்டைய இந்திய இலக்கியங்களில் தலித் மற்றும் நாய் ஒப்பீடுகள் பரவலாக இருக்கின்றன.++ மாரி செல்வராஜ் அதனை தெரிந்தே பயன்படுத்தி இருக்கிறார் என்று நம்புகிறேன்.
அதையும் விட என்னை மிகவும் பாதித்தது பரியனின் தந்தை பாத்திரம் வரும் காட்சிகள்தான். அவரை அறிமுகப்படுத்திய விதமாகட்டும், பின்னர் கல்லூரியில் அவர் அவமதிக்கப் படும் காட்சியாகட்டும் அவை உணர்வு-ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட இனத்தில் ஒருவராக இருப்பதே ஒரு கொடும் பிரச்சனையாக இருக்கும் பொழுது அதில் உள்ளே மேலும் ஒடுக்கப்படும் குழுவில் ஒருவராக இருப்பது எவ்வளவு பெரிய பிரச்னை என்பது முகத்தில் அறைந்தாற்போல காட்டப்படுகிறது.
படம் நெடுகவும் போராடுவது, தன் உரிமையை நிலை நாட்ட வன்முறையை கையில் எடுப்பது பற்றி பேசப்படுகிறது. ‘அவனை அப்படியே அனுப்பிட்டீங்க? அவன் வெளிய போய் திரும்ப சண்டை போடப்போறான் சார்!’ என்று அவன் ஆசிரியை முதல்வரிடம் கவலை கொள்கிறார். அதற்கு முதல்வர் ‘ரூம்ல போய் தூக்கு போட்டுக்கிட்டு சாவறத விட சண்டை போட்டுக்கிட்டு சாவட்டும்,’ என்று பதில் சொல்கிறார். படம் முடிவைத்தாண்டி தொடர்ந்து என்னை பாதித்த வரி இதுதான். ஒடுக்கப்படும் சமூகங்கள் பற்றி, போராடுதலை தீர்வாக எடுப்பது பற்றி, இயலாமையின் விளைவாக எழும் வன்முறை பற்றிய நிறைய கேள்விகளை என்னுள் இந்த வரிகள் எழுப்பின. சுய வன்முறை அல்லது சமூக வன்முறை இரண்டுதான் இருக்கும் ஆப்ஷன்களா, என்று தோன்றியது.
ஆனால் மூன்றாவது ஆப்ஷனும் அந்தக்கல்லூரி முதல்வர் வழி பேசப்படுகிறது. ‘பேய் மாதிரி படிச்சேன்,’ என்று சொல்கிறார். பரியனின் தாத்தா மூலமும் அதே வேட்கை வெளிப்படுத்தப் படுகிறது. அப்பாவை அவமானப் படுத்திவர்களை வெட்டிப் போட பரியன் உத்தேசித்துக் கொண்டு இருக்கையில் அவன் அம்மாவும் அதையே குறிப்பிடுகிறார். அதே காட்சியில் பரியன் ஆங்கிலத் தேர்வில் பாஸ் ஆகிவிட்ட சேதி வருவது முக்கியக் குறியீடாக இருக்கிறது. தன் இருத்தலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஆங்கிலம் முக்கிய மைல்கல்லாக அங்கே இருக்கிறது. சேதி கேள்விப்பட்டு அவன் கன்னத்தை கிள்ளி அம்மா ஒரு முத்தம் தருகிறார். அரிவாளை விட சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை தன் மகன் கையில் எடுத்து விட்டான் என்ற தைரியம் அங்கே வெளிப்படுகிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சாதி, சமூகக் கட்டமைப்புகள் தாண்டியும், படம் முன்னெடுக்க விரும்பிய விவாதங்கள் தாண்டியும், என்னை பாதித்த ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் ஜோ-வின் பாத்திரம். அவளை மையமாக வைத்துதான் கதை நகர்கிறது என்றாலும் கதையின் திசையில், பேசப்படும் சமூக மாற்றத்தில் அவளுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. அவள் பரியனை காதலிக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அவள் தந்தைக்கோ, குடும்பத்துக்கோ எந்த அக்கறையும் இருக்கவில்லை. பரியனும் கூட தனக்கு நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறையை, அவமதிப்பை அவளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அவளிடம் அதை சொன்னால், அவள் தந்தை மேல் அவளுக்கு இருக்கும் அன்பு போய் விடும் என்று பயப்படுகிறான். ஆனால் அந்த முடிவை அவள்தானே எடுத்திருக்க வேண்டும்? ஜோ தன் அப்பாவை விரும்புவதா அல்லது வெறுப்பதா என்பதை முடிவு செய்ய பரியன் யார்?
அவள் தந்தையும் கூட பரியன் மேல் தன் சமூகம் நிகழ்த்திய வன்முறை பற்றி அவளிடம் பேசுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு பரியன் மேல் சாதிய வன்மம் பெரிதாக இல்லை என்பது தெரிகிறது. ஆனால் தன் குடும்ப ‘மானம்’ மற்றும், முக்கியமாக, பெண்ணின் உயிர் பற்றிய கவலை இருக்கிறது. பரியன் பற்றி வெளியே தெரிய வந்தால் தன் மகளையும் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறார். அதற்கான அறிகுறிகளும் வெளிப்படுத்தப் படுகின்றன. காதலித்ததால் வீட்டில் அடி உதை வாங்கி மயங்கிய ஒரு பெண் தூக்கில் தொங்க விடப்படுகிறாள். இன்னொரு பெண் மொட்டை அடிக்கப்பட்டு அனுப்பப்படுகிறாள். சாதிய வன்மத்தில் பெண்கள் collateral damage-ஆகவே கருதப்படுகின்றனர். ‘தங்கள் குடும்ப மானம் தன் வீட்டுப் பெண்களின் யோனியில்தான் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர்,’ என்று என் புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பேன். இங்கே சாதியும் கூட பெண்களின் யோனியில்தான் குடியிருக்கிறது. ஆனால் அது பற்றிய கருத்தியல் அவர்களுக்கு இருப்பதில்லை. அதற்கான அனுமதியும் கூட அவர்கள் கொடுக்க வேண்டியதில்லை. தங்கள் யோனியில் குடியேற்றப்பட்டிருக்கும் சாதியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பில் தாங்கள் இருக்கிறோம் என்பது கூட அவர்களுக்கு அறிவுறுத்தப் படுவதில்லை. அந்த யோனிக்கான சாவியையும் கூட ஆண்களேதான் வைத்திருக்கின்றனர்.
வக்கீலுக்குப் படிக்கலாம் என்று தன் பெண்ணுக்கு ‘அனுமதி’ அளித்த அவள் தந்தை அவள் யாருடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதில் அந்த அனுமதிக்கு எல்லையை வகுக்கிறார். தனக்கு நிகழ்ந்த வன்முறையை அவளிடம் இருந்து மறைப்பதன் மூலம் தன் தந்தை பற்றிய எந்த விதமான அபிப்ராயத்தை அவள் கொண்டிருக்க வேண்டும் என்பதை பரியன் முடிவு செய்கிறான். இந்த இரண்டிலும் அவள் முடிவோ, அவள் கருத்தோ இருவருக்குமே தேவைப்படுவதில்லை. தன்னை சுற்றி பெரும் சாதிய வன்மம் தினம் தினம் தொடர்ந்து கட்டவிழ்க்கப் பட்டு வருகிறது என்பது பற்றி அவளுக்கு தெரிவதே இல்லை என்பது போல காட்டப்படுகிறது. அது உண்மையாகவும் கூட இருக்கக் கூடும். தந்தை மற்றும் நெருங்கிய நண்பன் இருவருமே அவளை அந்த வன்மத்தில் இருந்து பாதுகாக்கவே முயல்கிறார்கள். அப்படி முயல்வதன் மூலம் மூன்று விஷயத்தை அந்த ஆண்கள் உறுதி செய்கிறார்கள்.
1) உண்மையை அறிந்து கொண்டு அதன் மூலம் தெளிவான முடிவெடுக்கும் திறமை பெண்களுக்கு கிடையாது.
2) சாதிய வன்மம் மற்றும் அது சார்ந்த வன்முறை ஆண்கள் தங்களுக்கென்று உருவாக்கி தாங்களே தொடர்ந்து கொண்டிருக்கும் அவலம். பெண்களுக்கு அது பற்றிய கவலையோ, கருத்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
3) பெண்களை சமூக அவலங்களில் இருந்து பாதுகாப்பதோ அல்லது, தேவைப்பட்டால், அந்த அவலத்தில் இருந்து ‘நீக்குவதோ’ ஆண்களின் முக்கிய கடமை.
இத்தனைக்கும் ஜோ மற்ற படங்களில் வருவது போன்ற ஒரு ‘லூசுப்பெண்’ எல்லாம் கிடையாது. நன்றாகப் படிக்கும், சட்டக்கல்லூரி சேர்ந்திருக்கும் திறமை வாய்ந்த பெண். பரியனுக்கே டியூஷன் எடுத்து அவனை பாஸ் பண்ண வைக்கிறாள். விதிவிலக்கின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துகிறாள். கல்மிஷமின்றி தொடர்ந்து உண்மை பேசுகிறாள். அவளுக்கு ஒரு சிறிய பிரச்னை வரும்போது அதனை எதிர்த்து நிற்கவும் செய்கிறாள். நிறைய விஷயங்களில் அவள் தன் தந்தை அல்லது பரியன் இருவரையும் விட தெளிவாகவும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ள முடியும் என்பதையும் காட்டுகிறாள். பரியன் கல்லூரிக்கு அழைத்து வரும் நாடகத் தந்தையிடம் அவள் மன்றாடும் காட்சி இதற்கு ஒரு முக்கிய உதாரணம்.
ஆயினும் அவளை ‘பாதுகாக்கவே’ வேண்டும் என்றுதான் அவள் சம்பந்தப்பட்ட ஆண்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். கதையிலும் பரியன் மட்டுமே victim ஆக நமக்கு தென்படுகிறான். ஆனால் ஜோ-வும் கடும் மனத்துயருக்கு ஆளாகிறாள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, பரியன் ஏன் தன்னை விட்டு விலகி ஓட வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை. அது அவளுக்கு பெரும் துன்பத்தைக் கொடுக்கிறது. ஆனால் அது அவள் தந்தைக்கோ, பரியனுக்கோ பொருட்டாக இல்லை. பரியனின் நண்பன் மட்டுமே அதனை ஓரிரு முறை குறிப்பிட்டு ஆதங்கப் படுகிறான். சாதி வன்மத்தின் target முக்கியமாக பெண்கள் என்பது படம் பார்க்கும் நமக்கும் தெரிவதில்லை. அதன் தீர்வும் கூட அவர்களிடமேதான் இருக்கிறது என்பதும் புரிவதில்லை.
இதை வேறு வகையில் புரிந்து கொள்ள, கதையை கொஞ்சம் திருப்பி யோசித்துப் பார்ப்போம். பெண்ணை collateral damage-ஆக இரு சமூகங்களும் நினைப்பதில்லை. அவள் தந்தை மற்றும் நண்பன் இருவருமே அவளை தங்களுக்கு ‘சமமாக’ நடத்தி அவளிடம் உண்மையை பேச விழைகிறார்கள். அதற்கான ‘முதிர்ச்சி’ அவளுக்கு இருப்பதாக நம்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? நாம் இப்போது பார்க்கும் வகையிலேயே படம் இருக்காது. பெண்களுக்கு சுய முடிவு எடுக்க உரிமை இருக்கும் சமூகங்களில் சாதிய வன்முறைகளுக்கு அல்லது ஆணவக்கொலைகளுக்கு அவசியம் இருக்காது. சாதியே இருக்காது என்று சொல்ல முடியாது. படம் விவாதிக்கும் வேறு பிற பிரச்சனைகள் தொடரலாம். தொடராமல் போகலாம். அது வேறு விஷயம்.
சொல்லப்போனால் பரியனின் தந்தைக்கு நிகழும் கொடுமையும் கூட பெண்கள் பற்றிய நம் கண்ணோட்டத்தையே வெளிக்காட்டுகிறது. 'பெண்மை' என்பதை இழிவாகக் கருதும் மனப்போக்கு இருந்திராவிடில் அந்தத் தந்தைக்கு அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
மேஜர் வயதை எட்டிய பெண்ணுக்கு தன் வாழ்வு மற்றும் தேவைகளை தானே தீர்மானித்துக் கொள்ள இயலும். ஏன் தன் கருத்தியலைக் கூட சொந்தமாக உருவாக்கிக் கொள்ள இயலும். அவளுக்கு எந்த விதமான ‘சமூகப் பாதுகாப்பும்’ ஆண்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அவளை சமூகத்தின் அவலங்களில் இருந்து தள்ளி, ‘பொத்தி’ எல்லாம் வளர்க்க வேண்டியதில்லை என்று இருந்திருந்தால் காதல் சம்பந்தப்பட்ட நிறைய சாதிய வன்முறைகள் அரங்கேற மேடையே இருக்காது. சொல்லப் போனால் பெண்களைப் பாதிக்காமல் இருக்க ஆண்கள் முயற்சி செய்யும் இந்த அவலங்கள் முக்கால்வாசி ஆண்கள் தாங்களே உருவாக்கியதுதான். படத்தில் ஆணவக்கொலைகளை முன்னின்று நடத்திக் கொடுக்கும் ஒரு பெரியவர் சாதிக்கட்டுக்களை மீற முயற்சிக்கும் சேவலையும் கோழியையும் ‘அறுத்துப் போடுவதை’ குலசாமிக்கு செய்யும் சேவையாக கருதி அதற்கு பணம் பெற மறுக்கிறார். பிறப்பால் உருவாகும் ஏற்றத்தாழ்வோ, அதனை மீறுவதை குலசாமி விரும்பாது என்பதோ ஆண்கள் தங்களுக்குத் தாங்களே இட்டுக்கட்டிக் கொண்ட கற்பனை உலகம்தானே? தாங்களே ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த உலகத்தை தாங்களே கட்டிக்காத்து அந்த உலகத்தின் அவலங்களில் இருந்து பெண்களை ‘பாதுகாக்க’ தொடர்ந்து முயன்று கொண்டே வருகிறோம். அந்த உலகத்தைப் பற்றிய பெண்களின் கருத்து எதுவும் நமக்குத் தேவையாகக் கூட இருப்பதில்லை.
இறுதியிலும் அதேதான் நடக்கிறது. நான் சமீபத்தில் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த climax இதுதான் என்பேன். ‘பம்பாய்’ படத்தில் வருவது மாதிரி எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்தன, சுபம் என்று இருவரும் கை கோர்த்து ‘மலரோடு மலரிங்கு’ என்று பாடல் பாடி முடிக்கவில்லை. ‘காதல்’ மாதிரி ஒரு மெலோட்ராமா கொடுத்து நம்மை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்த முயலவில்லை. Light at the end of the tunnel மாதிரி ஒரு சமாதான உடன்படிக்கை தெரிகிறது. அதுவும் கூட கொஞ்சம் தயக்கத்துடனும் கவலையுடனுமே பகிரப்படுகிறது.
ஆனால் அந்த தயக்கமான உடன்படிக்கையிலும் அந்தப்பெண்ணுக்கு சம்பந்தமோ, சம்மதமோ இல்லை. அவளுக்கு அது தெரியக்கூட இல்லை. அவளுக்கான முடிவையும் அவள் வாழ்வில் இருக்கும் ஆண்களே முடிவு செய்து விடுகிறார்கள். வழக்கம் போல அவர்கள் இருவருக்கும் டீ கொண்டு போய் கொடுப்பதுடன் அவள் வேலை முடிந்து விடுகிறது.
பெருமாள் குதிரை ஏறிவிட ஒரு தயக்கமான அனுமதி கிடைத்து விட்டது. ஆனால் அம்பாள் இன்னமும் பின்னே நடந்துதான் வருகிறாள்.
.
.
.
(Disclaimer: கட்டுரையில் முன்வைக்கப்படும் பெண்ணிய வாதங்கள் படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்போது இருப்பதை விட வேறு எந்த வகையிலும் அந்தப்பெண்ணின் பாத்திரம் அமைக்கப் பட்டிருக்க முடியாது என்றே நம்புகிறேன். சொல்லப்போனால் அந்தப்பாத்திரம் உண்மைத்தன்மையுடனேயே அமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன். ஆனால் சாதியத்துக்கும் பெண்ணியத்துக்கும் உள்ள தொடர்பையும் முடிச்சையும் விவாதிக்க நினைத்தேன். அதற்கு இந்தப்படம் ஏதுவாக கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவுதான்.)
.
.
.
++ Refer to the chapter ‘Dogs as Dalits in Indian Literature’, from the book ‘On Hinduism’ by Wendy Doniger

No comments:

Post a Comment