Thursday 11 April 2019

தேச பக்தர்களின் கடமை

இந்தியாவுக்கு 2019ல் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக அமையப்போகிறது. அது இரண்டு பிரதமர் வேட்பாளர்களுக்கான தேர்தல் அல்ல. இரண்டு கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் அல்ல. 

இரண்டு சிந்தனாவாதங்களுக்கு இடையேயான தேர்தல். சுதந்திரம் அடைந்த போது இந்தியா பாகிஸ்தான் இரண்டு தேசங்களும் இரண்டு தனித்த உணர்வுகளை மையமாக வைத்து தங்கள் தேசங்களை கட்டமைக்கத் துவங்கின. பாகிஸ்தான் இந்தியா மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்பை மையமாக வைத்து தன் பயணத்தை துவக்கியது. இந்தியா எல்லா மதத்தவரையும் இணைத்து செல்லும் அன்பை முன்வைத்து தன் பயணத்தை துவக்கியது. 

எழுபது ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் பெரும் துன்பத்தில், பொருளாதார சிக்கலில், பிற்போக்குவாதத்தில், தீவிரவாதத்தில் உழல்கிறது. இந்தியா ஜனநாயகம், படிப்பறிவு, ஐடி, பொருளாதார முன்னேற்றம் என்று முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 

2014 தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘குஜராத் மாடல்’ எனும் பிம்பத்தை முன்வைத்து பிரச்சாரத்தை நடத்தினார். பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி, வேலை வாய்ப்பு, அந்நிய முதலீடு, எல்லாரையும் அரவணைத்து முன்னேற்றம் (ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்) என்ற கோஷம் முன்வைக்கப் பட்டது. இந்தியாவை வல்லரசாக்கும் தலைவராக மோடி முன்னிறுத்தப் பட்டார். 

ஐந்து ஆண்டுகள் கழிந்தன. பொருளாதார முன்னேற்றம் பற்றிய விவாதத்தில் ஜிடிபி கணக்கீட்டை தனக்கு வசதியாக மாற்றிக் கொண்டதுதான் முன் நிற்கிறது. வேலைவாய்ப்பு பற்றி பேசவே மறுக்கிறது இந்த அரசு. பண மதிப்பிழப்பு ஊரக இந்தியாவில் எப்பேர்ப்பட்ட பாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது என்பது பற்றிய எந்த ஆய்வும் இந்த அரசால் மேற்கொள்ளப்படவில்லை. ஜிஎஸ்டி கொண்டு வந்ததில் சிறு குறு நிறுவனங்கள் எப்படி சிதிலமாகின என்பது பற்றி  அதிகாரபூர்வமற்ற பல்வேறு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்திய ஃபிரன்ட்லைன் இதழில் இந்தியா முழுவதும் எப்படி இந்தத்துறையை ஜஎஸ்டி நசித்தது என்பது குறித்து விரிவான கட்டுரை வந்திருக்கிறது.

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு இரண்டு பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றைக்காட்டுகிறது. மக்கள் இதனால் பட்ட அவதிகள் பற்றி தெரிந்து கொள்ளும் அக்கறை கொஞ்சம் கூட இவர்களிடம் இல்லை. அதே போல விவசாயிகள் தற்கொலை பற்றி தொடர்ந்து பதிப்பித்து வந்த அறிக்கைகளை 2016ல் நிறுத்தி விட்டிருக்கிறது இந்த அரசு.

ஆனால் தேசபக்தி பற்றி மட்டும் அலுக்காமல் எல்லாருக்கும் பாடம் எடுக்கிறார்கள். வந்தே மாதரம் பாடாமல் இருப்போர் தேச விரோதிகள். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதவர்கள் தேச விரோதிகள். பாரத மாதாவுக்கு ஜே போடாதவர்கள் தேச விரோதிகள்.

இவையெல்லாம் உண்மையில் தேசபக்தி கிடையாது. இவையெல்லாம் ஒரு மாபெரும் நோக்கத்தை வைத்து மக்களை ஒருங்கிணைக்கும் கருவிகள் மட்டுமே. சுதந்திரப்போராட்ட காலத்தில் மக்களை ஒருங்கிணைக்க, உணர்ச்சிப்படுத்த போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கருவிகள் மட்டுமே இவை. அதைத்தாண்டி இவற்றுக்கு பெரிய உபயோகம் கிடையாது. 

ஆகவே, தேசபக்தி என்ற வார்த்தையில் இருக்கும் ‘பக்தி’ என்பது அந்த மண்ணின் மீதான பக்தி அல்ல. அந்த மண்ணில் வாழும் மக்களின் மீதானது. அவர்களின் நலவாழ்வின் மீதானது.  உண்மையான தேசபக்தி கொண்ட ஒரு தலைவர் அந்த அக்கறையை கொண்டிருப்பார். தன் தேசத்தில் வாழும் மக்களின் நிலைமை குறித்து மேலும் மேலும் தேர்ந்து கொள்ளும் ஆர்வத்தில், அக்கறையில்தான் இருப்பார். 

ஆனால் பிரதமர் மோடியிடம் அந்த ஆர்வம் கொஞ்சமும் இருப்பதாக தெரியவில்லை. பாரதமாதாவின் புதல்வர்கள் புதல்விகள் வேலையில்லாமல் இருக்கிறார்களா? பாரதமாதாவின் புதல்வர்கள் தேசத்தின் 85 சதவிகித பணம் செல்லாததாக ஆனவுடன் பாதிப்புக்கு உள்ளானார்களா? பாரத சமுதாயம் ஜிஎஸ்டியினால் நசிந்ததா? பாரத மாதாவின் கணக்கற்ற விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை? அவர்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

பாரதமாதாவின் மேல் பற்றுக்கொண்டவர் உண்மையில் இந்தக்கேள்விகளையே கேட்பார். ஆனால் இந்த எந்தக்கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்றவர், இருக்கும் கொஞ்ச நஞ்ச தரவுகளையும் மறைப்பவர் தன் தேசத்தின் மீது பக்தி கொண்டவர் அல்ல. சொல்லப்போனால் அப்படிப்பட்டவர் தேசத்தின் முதன்மை விரோதி என்றே கருதப்பட வேண்டும்.

அதே போல உண்மையான தேசபக்தர் தன் தேசத்தின் மக்களை பிளவுபடுத்த முனைய மாட்டார். அப்படி செய்ய முயல்பவர் தேசவிரோதியாகவே இருப்பார். பாகிஸ்தானின் இன்றைய சோகமான நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று பார்த்தால், அந்த சமூகத்தில் மதத்தை திணிக்க முயன்றவர்கள்,  பெரும்பான்மை சுன்னி அடிப்படைவாதத்தை புகுத்தியவர்கள், சிறுபான்மை இந்து மற்றும் கிறித்தவர்களை, ஷியா மற்றும் அஹமதி பிரிவினரை தனிமைப்படுத்தி ஒடுக்கியவர்கள் ஆகியோர்தான். இவர்கள் எல்லாருமே அந்த தேசத்தின் பக்தர்கள்தான். பாகிஸ்தான் மீது தேசபக்தி  மற்றும் இஸ்லாம் மீது மதப்பற்று என்ற பெயரில்தான்  அவர்கள் அத்தனை அட்டூழியத்தையும் செய்தார்கள். அந்த அட்டூழியங்கள்தான் அந்த தேசத்தின் பொருளாதாரம் நாசமாக காரணம். அது தீவிரவாதிகளின் கூடாரம் ஆகக் காரணம். இஸ்லாம் என்ற மதத்தின் மீது உலகம் முழுக்க நிறைய பேருக்கு கசப்புணர்வு வரக்காரணம். அவர்களை  பாகிஸ்தானின் தேசபக்தர்கள் என்று நாம் சொல்ல முடியுமா என்ன? பாகிஸ்தானின் முதன்மை தேச விரோதிகள்தானே அவர்கள்?

எழுபதுகளில் பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தை துவக்கிய போது இன்னும் முப்பது ஆண்டுகளில் ‘இஸ்லாம் என்றாலே தீவிரவாதம்’ என்று உலகில் நிறைய பேர் யோசிப்பார்கள் என்று ஜியா உல் ஹக் யோசித்திருப்பாரா? பள்ளிப்பாடங்களை இஸ்லாமிய மயமாக்கிய போது, அந்தப்பாடத்திட்டத்தை துவக்கியவர்கள் பாகிஸ்தானின் அருமைகள், இஸ்லாத்தின் பெருமைகள் சிறுவர்களுக்கு தெரிய வேண்டும் என்றுதானே கருதி இருப்பார்கள். ஆனால் அந்தப் பாடத்திட்டங்கள்தானே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறக்காரணம்? 

அதேதான் இந்தியாவிலும் நடக்கிறது. இங்கே பெரும்பான்மை இந்து மதவாதம் பேசுபவர்கள், சிறுபான்மையினரை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் அவர்கள் ‘இடத்தில்’ வாயை மூடிக்கொண்டு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். பண்டைய இந்து மதத்தில்தான் உலகில் உள்ள எல்லாப்பிரச்சினைகளுக்கும் விடைகள் உள்ளன என்று நம்புபவர்கள்….

இவர்களுக்கும் பாகிஸ்தானிய ‘தேசபக்தர்களுக்கும்’ என்ன வித்தியாசம்? என்னைப்பொருத்தவரை அப்படிப்பட்ட இந்துத்துவ சிந்தனையை ஊக்குவிக்கும் கட்சியினரைப்போன்ற தேசத்துரோகிகள் இந்தியாவிலேயே கிடையாது. இந்தியாவின் கொடூரமான தேசத்துரோகிகள் இந்துத்துவ சிந்தனையாளர்கள்தான். சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்தியா கண்ட வளர்ச்சிக்கு இந்துத்துவ சிந்தனைகளை தெளிவாக ஒதுக்கி வைத்ததுதான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கல்வியில், பொருளாதாரத்தில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் நாம் கண்ட எல்லா வளர்ச்சிகளும் மதங்களை ஒதுக்கி வைத்து மக்களை முன்னே வைத்ததால், அறிவியலை முன்னெடுத்தால், அனைத்து சாதி மதத்தினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்க முனைந்ததால் வந்த வளர்ச்சிகள். 

பாகிஸ்தான் இன்று பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டத்துக்கு, வெறும் மில்லியன்களுக்கு வேண்டி அமெரிக்காவிடம் கையேந்திக் கொண்டு இருப்பதற்கு காரணம் மதத்தை முன்னிறுத்தி, பெரும்பான்மைவாதம் பேசிய இஸ்லாமியவாதிகள் காரணம். அதாவது இந்துத்துவர்களின் கண்ணாடி பிம்பங்கள். இந்தியாவின் இந்துத்துவர்களுக்கும் பாகிஸ்தானின் இஸ்லாமியவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால்தான் இருவரும் சதா சர்வகாலமும் ஒருவர் இன்னொருவரைப்பற்றிய நினைவிலேயே காலத்தை கழிக்கின்றனர்.

இந்த அரசு தங்களின் கொள்கை முடிவுகளால் மக்களுக்கு நிகழும் அவதிகள் பற்றிய கவலை எதுவுமின்றி இருக்கிறது. ஆகவே இந்த அரசு மக்களுக்கு எதிரானது. . 

இது ஜனநாயக அடித்தளங்களை கண்டமேனிக்கு உடைத்து முன்னேற முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்களை துச்சமாக மதிக்கிறது. எனவே இந்த அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது.  

இது நவீன சிந்தனைகளான கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், மதசார்பின்மை, அறிவியல் சிந்தனாவாதம் போன்றவற்றை எள்ளி நகையாடி, போட்டு மிதிக்கிறது. எனவே இந்த அரசு முன்னேற்றத்துக்கு எதிரானது. 

இது முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்து மறுக்கிறது. மாநில மொழிகளை, உரிமைகளை அவமதிக்கிறது. பெரும்பான்மை மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை ஒட்டு மொத்த தேசத்தின் மீது திணிக்க முயல்கிறது. எனவே இந்த அரசு சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. 

இது பொய்யான பண்டைய பெருமைகளை புகழ்கிறது. பொய்யான நிரூபணங்களற்ற பண்டைய நம்பிக்கைகளை உண்மையென மக்கள் மீது திணிக்க முயல்கிறது. எனவே இது அறிவியலுக்கு எதிரானது. 

நவீன, அறிவியல் சமூகத்துக்கு கொஞ்சமும் ஒவ்வாத அரசு இப்போதைய அரசு. அறிவியல்- சார்ந்த அணுகுமுறை (Scientific Temper), தரவுகள்-சார்ந்த கொள்கை முடிவுகள் (Empirical Approach), நவீன சிந்தனாவாதங்கள் அனைத்துக்கும் எதிரானது. வன்முறைகளை, ஒடுக்குதலை, அறிவற்ற நிலையை போற்றுவது. கேள்விகள், விமர்சனங்களை எதிர்ப்பது. பாசிச சிந்தனைகளை ஊக்குவிப்பது.

இந்த அரசும் இது ஊக்குவிக்கும் இந்துத்துவ சிந்தனைகளும் தேசத்தை அழிவுப்பாதைக்கு இட்டுசெல்ல வல்லவை. இந்திய தேசத்தை, அதன் பல்வேறு கலாச்சாரங்களை, மொழிகளை, மதங்களை, மக்களை, அவர்கள் நல்வாழ்வை துச்சமாக மதிக்கும் இந்துத்துவர்கள்தான் உண்மையான, அக்மார்க் தேசத்துரோகிகள். இவர்களை புகழும், போற்றும், ஊக்குவிக்கும் இந்த அரசு விடைபெற வேண்டும். 

சமத்துவத்தை, அமைதியை, வளர்ச்சியை, அறிவியலை மதச்சார்பின்மையை விரும்பும் இந்தியாவின் உண்மையான தேசபக்தர்கள் இந்த தேசவிரோத அரசுக்கு, பாகிஸ்தானின் கண்ணாடி பிம்பமாக இந்தியாவை மாற்ற முனையும் இந்த தேசத்துரோக அரசுக்கு ஒரு முடிவு எட்ட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடும் வாய்ப்பு இருக்கும் சிறு, குறு கட்சிகளை ஒதுக்க வேண்டும். அவர்கள் நாளைக்கு வளர்ந்து கொள்ளட்டும். தேசத்தின் வளர்ச்சி, மாட்சிமை மற்றும் எதிர்காலம் எல்லாவற்றையும் விடப்பெரிது.

இந்தியாவை உளமார நேசிக்கும் ஒவ்வொரு தேசபக்தனின் கடமை இது.

No comments:

Post a Comment