by ராமச்சந்திர குஹா
=================================================
முதன் முதலில் காங்கிரஸ் தலைமையில் யூபிஏ அரசு 2004ல் வந்த போது மூத்த அமைச்சர் ஒருவர் ஒரு மூத்த பத்திரிகையாளரை லஞ்ச் சந்திப்புக்கு அழைத்திருந்தார். மிகவும் மரியாதை வாய்ந்த வரலாற்று ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பதவி ஒன்று காலியாக இருந்தது; அதற்கு தகுந்த நபர்களை அந்த அமைச்சர் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பத்திரிகையாளர் பரிந்துரைத்த முதல் பெயர் என்னுடையது. ‘குஹாவா? அவர் இந்திராஜி-யை பெரிதும் விமர்சித்திருக்கிறாரே,’ என்றார் அந்த அமைச்சர். ‘அவரை நியமிக்க இயலாதே!’
அந்த பத்திரிகையாளர் சொன்ன அடுத்த பெயர்: பார்த்தா சாட்டர்ஜி, மிகவும் திறமை வாய்ந்த அரசியலியல் அறிஞர். ‘ஆனால் சாட்டர்ஜி நேருவைப் பற்றி விமர்சனங்களை செய்திருக்கிறாரே,’ என்றார் அந்த அமைச்சர்.’அவரையும் நியமிக்க முடியாதே.’
இது வேலைக்காகாது என்று அந்த பத்திரிகையாளர் கவனத்தை திருப்பி மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்றைக்கு ஏதோ மோடி அரசுதான் கல்வி மற்றும் ஆராய்ச்சி பதவிகளுக்கு அரசியல் ரீதியாக ஆட்களை நியமிக்கிறார்கள் என்கிற ரீதியில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தாலும் அவர்களும் தங்கள் ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நியமித்திருக்கிறார்கள். இரண்டாவது காரணம்: மற்ற விஷயங்களில் எப்படியோ, ஆனால் காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்ந்த அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் படிக்கிறார்கள்! (அப்படி படிப்பது அவர்கள் கட்சியின் முதன்மைக் குடும்பத்தைப் பற்றி என்ன விமர்சனங்கள் எழுதப் படுகின்றன என்று தெரிந்து கொள்வதற்காகவே இருந்தாலும் கூட, அது பரவாயில்லைதானே.)
ஆனால் இந்த மாதிரி நியமனங்கள் எல்லாம் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடப்பதுதான். கலாசார மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் சுதந்திரத் தன்மையை பாதிக்கும் வேலைகளை அப்போதே மத்திய அரசு செய்யத் துவங்கி விட்டது. முக்கியமாக காங்கிரசைச் சேர்ந்த இரண்டு கல்வி அமைச்சர்கள், நூருல் ஹசன் மற்றும் அர்ஜுன் சிங் இருவரும் சோஷலிச மற்றும் மார்க்ஸிய சிந்தனைகள் மட்டுமே கொண்ட அறிஞர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கினார்கள்.
ஆனால் ஒன்று, இவர்கள் இருவரும் இருப்பதிலேயே சிறந்த அறிஞர்களை நியமித்தார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் இருப்பதிலேயே மோசமானவர்களை நியமிக்கவில்லை. ஆனால் பிஜேபி தலைமையில் நடக்கும் இந்த என்டிஏ ஆட்சியில் நியமித்த ஆட்கள் அவர்கள் துறைகளில் உள்ள மற்றவர்களால் நிசமாகவே வெறுக்கப் படுகிறவர்கள். இதில் இருப்பதிலேயே அதிர்ச்சிகரமான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒய் சுதர்ஷன் ராவை குறிப்பிடலாம். இவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுத் துறையின் (ICHR) சேர்மனாக சமீபத்தில் நியமிக்கப் பட்டார். இவர் வரலாற்றில் என்ன ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார், எந்த புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார் என்பனவெல்லாம் சக வரலாற்று அறிஞர்களுக்கு கூட தெரியாத விஷயம்; அதே போல கஜேந்திர சௌஹான் என்பவர், இந்திய திரைப்பட மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் (FTII) சேர்மனாக நியமிக்கப் பட்டவர், இவரும் இந்தத் துறைகளில் செய்த சாதனைகள் என்று சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லை.
1998 முதல் 2004 வரை நடந்த முந்தைய பிஜேபி ஆட்சியிலும் கூட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளே நியமிக்கப் பட்டார்கள். ஆனால் மிகவும் மரியாதைக்குரிய பதவிகளுக்கான நியமனங்களில் மட்டும் கொஞ்சமாவது சம்பந்தப் பட்டவரின் அறிஞத்திறமையை (scholarly credentials) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்கள். வாஜ்பாய் அரசில் இந்திய மேம்பட்ட ஆய்வுகள் (Indian Institute of Advanced Studies) நிறுவனத்துக்கு சேர்மனாக சிஜி பாண்டே நியமிக்கப் பட்டார். இவர் பண்டைய இந்தியா பற்றி மிக முக்கியமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். ICHRன் சேர்மனாக நவீன வரலாற்று அறிஞர் எம்ஜிஎஸ் நாராயணன் நியமிக்கப் பட்டார். இந்திய சமூகவியல் ஆய்வுக் கழகத்தின் (ICSSR) சேர்மனாக முன்னாள் தூதராக இருந்து பின் கல்வியாளராக மாறிய எம்.எல். சோந்தி நியமிக்கப் பட்டார்.
இந்த அறிஞர்கள் யாருமே மார்க்சிஸ சிந்தனை கொண்டவர்கள் இல்லை. அதுவும் இதில் இரண்டு பேர் வெளிப்படையாகவே மார்க்ஸியவாதிகளை எதிர்த்தவர்கள் என்பது பிஜேபிக்கு முக்கியமான தகுதியாக இருந்திருக்கிறது. ஒன்றும் ஆச்சரியமில்லை. விஷயம் என்னவென்றால் பாண்டே மற்றும் நாராயணன் இருவருமே தங்கள் துறைகளில் மிகத் தீவிரமக இயங்கும் அறிஞர்கள். சோந்தியோ தேசத்தின் மிக முக்கியமான சர்வதேச ஆய்வுத் துறையில் ப்ரொபசர்-ஆக இருந்திருக்கிறார்.
கால ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் முன்னால் போவோம். தேவே கவுடா பிரதராகவும் எஸ் ஆர் பொம்மை கல்வி அமைச்சராகவும் இருந்த போது ICHR சேர்மனாக எஸ். செட்டரும் ICSSR தலைவராக டி. நஞ்சுண்டப்பா-வும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் இருவருமே கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது வேறு விஷயம், ஆனால் செட்டர் ஹொய்சாலா கோவில்கள் பற்றி மிகவும் தனித் துவமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர். நஞ்சுண்டப்பா புகழ் பெற்ற ஒரு ஆசிரியர் என்பது மட்டுமின்றி பொதுக் கொள்கை வடிவமைப்புகளில் மிகத் தீவிரமாக பங்களித்தவர்.
மேற்சொன்ன விஷயங்கள் மூன்று விஷயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் போன்ற விஷயங்கள் கல்வி மற்றும் கலாச்சார நியமனங்களை ஆட்டுவிக்கின்றன. இரண்டு, முந்தைய அரசுகள் தங்கள் கொள்கை மற்றும் சிந்தனைக்கு வேண்டிய ஆட்களுக்கு பதவிகள் கொடுத்தாலும், அவர்கள் மக்கள் மன்றத்தின் முன் மரியாதை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அளவுக்காவது குறைந்த பட்சம் யோசித்திருக்கின்றனர்.
மூன்றாவது, இப்போது இருக்கும் என்டிஏ அரசு அப்படிப்பட்ட குறைந்த பட்ச மரியாதையைக் கூட காற்றில் பறக்க விட்டு விட்டது.
இந்த மூன்றாவது விஷயம்தான் இப்போது நடக்கும் நியமனங்களை முடிவு செய்கிறது. அந்த மாதிரியான இன்னொரு நியமனம், தேசிய புத்தக கழகத்தின் (NBT) சேர்மனாக பல்தேவ் ஷர்மா நியமிக்கப் பட்டிருப்பது. இவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகார பூர்வ பத்திரிகையான பாஞ்சஜன்யா-வுக்கு கொஞ்ச காலம் ஆசிரியராக இருந்தார் என்பதைத் தவிர இலக்கியத்துக்கோ ஆராய்ச்சிக்கோ அவரின் பங்களிப்பு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
முன்பு NBT-க்கு சேர்மனாக இருந்தவர்கள் பெயரை இவரோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்: வரலாற்றறிஞர் சர்வபள்ளி கோபால், விமர்சகர் சுகுமார் அழிக்கொட், எழுத்தாளர் யு ஆர் அனந்த மூர்த்தி. இவர்கள் எல்லாருமே கொஞ்சம் இடது சாரி சிந்தனை உடையவர்கள்தான், ஆயினும் அவர்களின் புத்தகங்கள் பரவலாக படிக்கப் பட்டு, பேசப்பட்டு விவாதிக்கப் பட்டவை.
இப்போதைய என்டிஏ ஆட்சி இந்த விஷயத்தில் முந்தைய என்டிஏ ஆட்சியை விட மகா மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? மூன்று காரணங்கள் சொல்லலாம். ஒன்று, வாஜ்பாய் அரசில் இருந்த சில அமைச்சர்கள் ஆய்வரிஞர்களுடனும், அறிவு ஜீவி-களுடனும் ஓரளவுக்கு தொடர்பில் இருந்தார்கள். இன்றைய அரசுக்கு அப்படிப்பட எந்த தொடர்பும் இல்லை. இரண்டாவது, குஜராத்தின் முதல்வராக இருந்த போதே கூட நரேந்திர மோடிக்கு அறிவு ஜீவிகளிடமும் கலாச்சார சிந்தனையாளர்களிடமும் பெரிய மரியாதையே இருந்ததில்லை. அப்போது குஜராத்தில் இருந்த நிலை இப்போது மத்திய அரசுக்கு இடம் மாறி விட்டிருக்கிறது, அவ்வளவுதான். மூன்றாவது, இந்த மாதிரி சமூக, வரலாற்று மற்றும் கலாசார ஆய்வுகள் சம்பந்தப் பட்ட வேலைகளை மொத்தமாக ஆர்எஸ்எஸ்-ஸிடம் மோடி தத்துக் கொடுத்து விட்டார். ஆகவே அந்த விஷயங்களில் அவர் தலையிடுவது இல்லை. அவருக்குப் பிடித்த பொருளாதாரம் மற்றும் அயலுறவுக் கொள்கை விஷயங்களில் அவர்கள் தலையிடக் கூடாது அல்லவா?
காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அரசு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்களை மிகத் துச்சமாக மதிக்கிறது என்பதுதான் நடப்பு நிலை.இந்தத் துறைகளில் அவர்கள் நியமித்த ஆட்களைப் பார்க்கும் போது இந்த சோகமான முடிவுக்குத்தான் வேறு வழியில்லாமல் வர வேண்டி இருக்கிறது.
===
(இந்தக் கட்டுரையை புகழ் பெற்ற வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதி இருந்தார். இதனை அவர் அனுமதியுடன் நான் மொழி பெயர்த்து இங்கே p.)

No comments:
Post a Comment