Thursday, 22 October 2015

கல்லடி படும் அரசு



'நாய்கள் மேல் யாராவது கல்லடித்தால் அரசாங்கம் பொறுப்பல்ல,' என்று தலித் குழந்தைகள் எரிப்பு பற்றி கருத்தளித்த ஜெனரல் விகே சிங் தலித்துகளை இழிவு படுத்தியிருக்கிறார் என்பது ஒரு முக்கியமான கருத்தாக பார்க்கப் படுகிறது. அது சரிதான் என்றாலும் பிராணிகள் மீதான அக்கறையின்மையும் அதை ஒட்டி உள்ள பெரும் பிரச்சனையும் இங்கே தென்படுகிறது. எனவே அவர் சொன்னதால் வெளிப்பட்டிருக்கிற உணர்ச்சிகளை கொஞ்ச நேரம் தள்ளி வைத்து விட்டு இந்தப் பிரச்சனையை பார்ப்போம்.


நம்மில் நிறையப் பேர் பொதுவாக தெரு நாய்கள் பற்றி கவலைப் படுவதில்லை. அவை என்ன சாப்பிடுகின்றன, எங்கே தூங்குகின்றன, மழை அல்லது கடும் வெயிலில் என்ன செய்கின்றன என்கிற கவலை நமக்கு பொதுவாக இருப்பதில்லை. உணவாவது குப்பை தொட்டியிலும், கசாப்பு மற்றும் டீக் கடைகளிலும் ஓரளவுக்கு கிடைத்து விடும். ஆனால் அவற்றுக்கு தண்ணீர் கிடைப்பதே இல்லை. பிஸ்கட் அல்லது இறைச்சி துண்டு போடுகிறவர்கள் கூட அவற்றுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை.


பொதுவாக குப்பங்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்விடங்களில்தான் நாம் நிறைய தெரு நாய்களை பார்க்கலாம். அவர்களில் நிறைய பேர் இந்த நாய்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க அங்கேதான் குப்பைகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன என்பதும் ஒரு காரணம். மும்பையில் மட்டும் தினமும் 500 டன் குப்பை அள்ளாமல் இரவில் விடப்படுகிறது என்று ஒரு தகவல் சொல்கிறது. இவை இந்த நாய்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கே  புணர்வில் ஈடுபடும், குட்டி போட்டு பாதுகாக்கும் அல்லது ரேபிஸ் போன்ற கொடும் வைரஸ் வந்து அவதியுறும் நாய்கள் மக்களை கடிக்க முயல்கின்றன. இதில் இருந்து தப்பிக்க மக்கள் அவற்றின் மேல் கல்லடித்து விட்டு தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார்கள்.


தெரு நாய்கள் உலவுதற்கு மூல காரணம் மனிதனின் தோல்விதான். Stray dogs எனப்படும் ஆதரவற்ற நாய்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல ரேபிஸ்-ஸால் ஏற்படும் மரணங்களிலும் நமக்குத்தான் முதலிடம். மும்பையில் மட்டும் ஆண்டுக்கு 80,000 பேர் நாய்க் கடி படுகிறார்கள்; 20,000 பேர் ரேபிஸால் இறக்கிறார்கள். ரேபிஸ் வைரஸ் உருவானதே இந்தியாவில்தான் என்று சார்லஸ் ரெப்ரெக்ட், அட்லாண்டாவை சேர்ந்த Centers for Disease Control and Preventionன் தலைவர், குறிப்பிடுகிறார்.


இந்தியாவில் நமக்கு இருக்கும் பொதுவான கருணையின்மையால் வளர்ப்பு நாய்களாக வாங்கப்படும் ஜாதி நாய்களையும்  முக்கால் வாசி நேரம் சரியாக கவனிக்க முடியாமல் துரத்தி விடுகிறோம். அதே போல நாய் விற்பனையாளர்களும் விற்காத நாய்க் குட்டிகளை துரத்தி விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் தெரு நாய்களோடு சேர்ந்து உணவுக்கும் வாழ்வுக்கும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டு விடுகின்றன.


சில பேர் தெரு நாய்களை பிடித்து கும்பலாக கொல்வதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால் பிரச்சனை நாய்கள் அல்ல; நம் ஊர் குப்பைகள். நாய்களை கொன்று தீர்த்து விட்டால் எலிகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஏன் போயஸ் கார்டனிலோ போட் கிளப்பிலோ தெரு நாய்களை பார்க்க முடியவில்லை என்றால் அந்த சாலைகள் துப்புரவாக இருக்கின்றன. அங்கே நாய்களுக்கு பெரிய தீனி கிடைக்காது.


ஆகவே நம் சாலைகளின் துப்புரவுக்கும், நம்முடைய சுகாதாரத்துக்கும், நாய்களின் பிரச்சனையை தீர்ப்பது ஒரு முக்கியமான தேவை. ஒரு தேசம் என்கிற அளவில் நாம் ஓரளவு முன்னேறுவதற்கும் நம் சாலைகள் பாதுகாப்பானதாக ஆவதற்கும் நாய்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டும்.  இது பிராணிகள் மீதான கருணை என்கிற அளவில் மட்டுமே நிற்பதல்ல. மனிதர்கள் மீதான கவலையும் கூட. சும்மா ஏதோ நாய் மேல் ஒருத்தன் கல்லடிக்கிறான் என்பதன் பின்னணியில் ‘நாய்கள் / குப்பைகள் / ரேபிஸ் / சாலை பாதுகாப்பு / துர்மரணம்’ என்கிற ஒரு வட்டம் இருக்கிறது.


நாய்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. குப்பை இல்லா தெருக்களை உருவாக்குவது, தெரு நாய்கள் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் குறைக்கும் வழிகளை கண்டறிவது, பிராணிகள் மீதான மக்களின் அக்கறையின்மையை போக்கும் வழிகளை கண்டறிவது, என்று அவர்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.  


எனவே தலித் குழந்தைகளோடு செய்யப்பட்ட அந்த அருவருக்கத் தக்க ஒப்பீட்டை கொஞ்சம் ஒதுக்கி  விட்டுப் பார்த்தால் கூட ஜெனரல் விகே சிங் சொன்னது தவறு. நாய்கள் மீது அடிக்கப்படும் கல் உண்மையில் சமூகத்தின் மீதும் அதனை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் செயலின்மை மீதும் அடிக்கப்படும் கல்தான். அதற்கு தான் பொறுப்பல்ல என்று அரசு சொல்லவே முடியாது. அந்த அப்பாவி விலங்குகள் மேல் எறியப்படும் கற்களை தடுப்பதில் நம் சமுதாயத்துக்கும் நம் அரசுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment