இந்தப் படத்தை யோசித்த போதே எஸ் எஸ் ராஜமவுலி இதனை ஒரு மாபெரும் வரலாற்றுக் காவியமாகவே உருவாக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார். இது கண்களுக்கு பெரும் விருந்தாக அமைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தப் போகிறோம் என்பதில் தெளிவாகவே இருந்திருக்கிறார். எண்ணிய போலவே அது நன்றாகவே நடந்தேறி இருக்கிறது. பாகுபலி திறமையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட காட்சி விருந்து. ஆமாம், ஆமாம், ராஜமவுலி கண்டிப்பாக அவதார், 300, லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறார்தான். ஆனால் இதை எல்லாம் நாம் எல்லோருமேதானே பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் அளவுக்கு உள்ளூர் ருசியுடன் பரிமாற நிறையப் பேரால் முடியவில்லையே. ஒரு டிவி சீரியல் போல கிராஃபிக்ஸ் போட்ட தசாவதாரத்தை பார்த்தோம். ஆசை காட்டி மோசம் பண்ணின கோச்சடையான் பார்த்தோம். அப்படித்தானே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது! சொல்லப் போனால் கோச்சடையான் ஒரு பாகுபலி-யாக இருந்திருக்க வேண்டியது. ஒரு தெலுங்கு இயக்குனர், பெரிய ஸ்டார் நடிகரே இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பட்ஜெட்-டை பெற முடியும் என்றால் ரஜினி, ரஹ்மான் போன்றவர்களை வைத்து எப்படியெல்லாம் செய்திருக்க இயலும்!
நிற்க. இது கோச்சடையான் பற்றிய விமர்சனம் அல்ல. பாகுபலி பற்றியது. சொல்ல வந்தது என்னவென்றால் எங்கெல்லாம் கோச்சடையான் கோட்டை விட்டாரோ அங்கெல்லாம் பாகுபலி பெருமிதத்துடன் வென்று காட்டி இருக்கிறார். ஓரிரு இடங்கள் தவிர வேறெங்கிலும் நம்மால் கிராஃபிக்ஸ்ஸை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உண்மைக் காட்சியும் கிராஃபிக்ஸ்ஸும் இயைந்து இணைந்து ஒரு இசை போல இயங்குகின்றன. ராஜமவுலி எதிர்பார்த்த பிரம்மாண்டம் பிரேமுக்கு பிரேம் தெளிவாக உருவெடுக்கிறது. நம்மையே அறியாமல் நாம் கண்கள் விரிய காட்சிகளை உள்வாங்குகிறோம். அந்த நீர் வீழ்ச்சிகளை நாம் அவதாரில் பார்த்திருக்கிறோம். கோட்டை கொத்தளங்களை லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்-ல் பார்த்திருக்கிறோம். 120 அடி சிலைகளை லாஸ்ட், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்-ல் எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பாகுபலி-யில் பார்க்கும் போது அவை புது உருவம் எடுக்கின்றன. அந்த நீர் வீழ்ச்சியே ஒரு பாத்திரமாக மாறுகிறது. அந்த சிலை கலோசஸ் ஆஃப் ரோட்ஸ் மாதிரியான கிரேக்க மிரட்டல் விடுக்கிறது.
அதே போல அந்த பனிச் சரிவுகளையும் முன்பே பார்த்திருக்கிறோம். இங்கே அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அதையும் சந்தோஷமாகவே பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக அந்த இறுதிப் போர், சுமார் 40 நிமிடங்கள் ஓடுகிறது. நமக்கு அது பற்றிய சிந்தனையே இல்லாமல் போரில் மூழ்கிப் போகிறோம். அதில் காட்சியின் பிரம்மாண்டம் மற்றும் காரணம் அல்ல. அந்தப் போரில் ஈடுபட்ட பாத்திரங்களோடு நாம் ஒன்றியதால் வந்த விளைவு அது.
இந்த காவியத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை திரைக்கதை அமைப்புதான். கதை வழக்கமான ராஜா ராணி கதைதான். அந்த கிரேக்க பிரம்மாண்டத்துக்கு அடியில் எட்டிப் பார்த்தால் நம் வழக்கமான தெலுங்கு படம்தான். ஹீரோயின் உடை களையப் பட்டு மழையில் நனைவிக்கப் படுகிறாள். ஹீரோ யாராலும் தோற்கடிக்க இயலாமல் எங்கு தேவைப் படினும் அங்கு வந்து காப்பாற்றுகிறான். ஏன், ஒரு ஐட்டம் பாடல் கூட இருக்கிறது. அதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் சில வெகு அடிப்படையான திரைக் கதை தவறுகள் படத்தில் இருக்கின்றன. சில பாத்திரங்கள் திடீரென தோன்றுகின்றன. சில காட்சிகள் திடீரென உருவெடுக்கின்றன. அவை ஏன் நடக்கின்றன என்பது வேறு ஒரு பாத்திரம் ‘விளக்கிய’ பிறகுதான் புரிகிறது. இதெல்லாம் ராஜமவுலி ‘கண்டுக்காதது’ கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை தன் விமர்சனத்தில் ‘ராஜமவுலி ஒரு பிரம்மாண்ட வரலாற்றுக் காவியத்துக்கு தேவையான எல்லா விஷயங்களையும் ஒரு லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டு டிக் அடித்துக் கொண்டே வருகிறார்.’ என்று கூறியிருக்கிறது. மாபெரும் நீர்வீழ்ச்சி - டிக், காட்டு விலங்குகளோடு சண்டை - டிக், பனி மலையில் சரிவு - டிக், மிக உயரமான கிரேக்க சிலை - டிக், அடிமைகள் - டிக், இறுதிப் போர் - டிக்.
ஆனால் இவ்வளவு செய்தவர் திரைக் கதை விஷயங்களுக்கு ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டிருந்தாரா என்ற கேள்வி எனக்கு எழுந்தது. ஆனால் என்ன, அந்தக் கேள்விகள் எல்லாம் திரைக் கலை விற்பன்னர்களுக்கு தான் தேவை. எழுத்தில் வந்த குறைகளை காட்சியில் மொத்தமாக சரிக் கட்டி விட்டார். ஸ்க்ரீன் சைஸ் பத்தவில்லையே என்று யோசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட செட்-கள் என்று காட்சிக்கு காட்சி மலைக்க வைக்கிறார். சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என்று இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க, சாபு சிறில் ஒவ்வொரு செட்-டையும் பார்த்து பார்த்து வடிக்க ஒரு பைபிள் காவிய அனுபவத்தை ராஜமவுலி நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒரு பெரிய பட்ஜட் படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு புது இலக்கணத்தை பாகுபலி இந்தியாவுக்கு தந்திருக்கிறது. படம் ஒரு பெரும் சஸ்பென்ஸில் முடியும் போது அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஏங்க வைத்து விட்டார். அந்த சஸ்பென்ஸே தேவை இல்லாமலே நாம் அடுத்த பாகத்துக்கு ஏங்குவோம். அந்த நீர் வீழ்ச்சியை மீண்டும் காண வேண்டும், அந்த கோட்டையை மீண்டும் காண வேண்டும், சிவா-அவந்திகா இடையில் உருப் பெரும் அந்தக் காதலை மீண்டும் காண வேண்டும். பாகம் 2-க்கு எல்லாம் காத்திருக்க முடியாது. பாகம் 1-ஏ திரும்ப பார்க்க வேண்டியதுதான்.

பிரம்மிக்க வைத்து விட்டார் ராஜமௌலி...
ReplyDeleteபிரம்மிக்க வைத்து விட்டார் ராஜமௌலி...
ReplyDeleteபாகுந்தி-பாகுபலி,
ReplyDeleteஉங்கள் விமர்சனம் -கிரீடம்
பாகுந்தி-பாகுபலி,
ReplyDeleteஉங்கள் விமர்சனம் -கிரீடம்
பாகுபலி முதல் நாள் பார்த்தபின்னர்
ReplyDeleteஏமாற்றிவிட்டார் ராஜமவுலி
ஈ யில் அருமையான திரைகதை இருந்தது