பி.ஹெச்.டி-க்கு அரசு கொடுக்கும் உதவிப் பணத்தை கிண்டலடித்தும், விமர்சித்தும் பதிவுகள் பார்த்தேன். இதில் நிறையப் பேர் பிஜேபி அபிமானிகள் என்பதில் சந்தேம் இல்லை. இன்போசிஸ் கம்பனியின் முன்னாள் நிதி இயக்குனர் மோகன்தாஸ் பை கூட இதைக் கேள்வி கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் (1).
உலக அளவில் பி.ஹெச்.டி படிப்பு என்பதை வேலையாகவே பார்க்கிறார்கள். அதாவது, அந்த மாணவர் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் வேலை செய்கிறார் என்றுதான் அர்த்தம். அதுவுமின்றி, பி.ஹெச்.டி என்பது மாஸ்டர்ஸ் (முதுகலைப்) பட்டத்துக்கு அப்புறம் படிக்க வேண்டிய படிப்பு. முதுகலைப்பட்டத்தை முடிக்கும்போது ஒரு மாணவனோ மாணவியோ 25 வயதை எட்டி இருப்பார்கள். அவர்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களுக்கு உதவி ஊதியம் கொடுக்கப்படாவிடில், மேலே படிக்கும் ஆர்வம் இருக்கிற இளைஞர்களும் அப்படி செய்யாமல் வேறு வேலை தேடிக் கொள்ள நேரிடும். அதனாலேயே பி.ஹெச்.டி படிப்புக்கு மாதா மாதம் உதவி ஊதியம் கொடுக்கப் படுகிறது.
அது சரி, அப்படியே அவர்கள் வேலை தேடிக் கொள்ளட்டுமே? அரசாங்கம் ஏன் பி.ஹெச்.டியை ஊக்குவிக்க வேண்டும் என்றால் பதில் இருக்கிறது.
பி.ஹெச்.டி-க்கு செலவு செய்வது ஒரு தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. பிரிட்டன் அரசின் ஒரு துறை நடத்திய ஆய்வில் எந்த தேசத்திலும் பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியும் (GDP) அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் (2). மேற்கத்திய தேசங்கள் மேற்படிப்புக்காக கொள்கை அளவிலான நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அமெரிக்காவில் நிறைய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் பி.ஹெச்.டி படிக்கும் போது வேறு வேலை செய்வதற்கே கூட தடை விதிக்கப் பட்டிருக்கிறது. வேறு சில தேசங்களில், அப்படி செய்யும் வேறு வேலை வாரத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறைகள் உள்ளன. (3)
அடிப்படை எழுத்தறிவு அதிகரிப்பது சமூக முன்னேற்றத்துக்கு அறிகுறியாக கருதப்படுவது போல, பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப் படுகிறது. பெர்னார்ட் லீவிஸ் என்னும் அமெரிக்க வரலாற்று அறிஞர் 9/11க்கான பின்னணிக் காரணங்களை ஆய்ந்து What Went Wrong என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் வளைகுடா நாடுகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகையில் அங்கே பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது என்கிற தகவலையும் ஒரு முக்கியப் பிரச்சனையாக குறிப்பிடுகிறார்(4). வெண்டி ஸ்டாக் மற்றும் ஜான் செக்ஃபிரைட் பதினைந்து வருடங்கள் அமெரிக்காவின் மேற்படிப்பு பற்றிய ஆய்வில் அமெரிக்காவில் பி.ஹெச்.டி முடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் அமெரிக்கர் அல்லாதவர் என்பதை கவலையுடன் குறிப்பிடுகிறார்கள் (5).
அதே ஆய்வுக் கட்டுரையில் பொதுவாக பி.ஹெச்.டி முடிக்க எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம் ஆய்வுத் தலைப்புகளின் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருவதும், ஒரிஜினல் ரிசர்ச் என்று சொல்லப் படும், புதிய சிந்தனைகளை ஆய்வில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருக்கும் அழுத்தங்களும்தான் காரணம் என்று நம்புகிறார்கள். படிக்க வருபவர்களில் 40% பேர் படிப்பை முடிக்க இயல்வதில்லை என்று இதே ஆய்வில் தெரிகிறது. ஆகவே அரசு உதவிப் பணம் பெற்று படிப்பவர்கள் முடிக்க இயலாமல் போவதில் ஆச்சரியமோ கோபமோ படுவதிற்கில்லை.
எனவே பி.ஹெச்.டி படிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இருக்கிறது. இப்போது செலவு செய்வதை விட அதிகமாகவே செலவு செய்ய வேண்டுமே தவிர குறைப்பது பிரச்சனையில்தான் கொண்டு விடும். இந்தியாவில் நடத்தப் படும் பி.ஹெச்.டி-யின் தரம் சரியில்லை என்றால் அதை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மொத்தமாக அரசின் உதவிகளையே நிறுத்துவது. சரியல்ல
அது ஒரு புறம் இருக்க, இந்திய அரசு பி ஹெச் டி-க்காக எவ்வளவுதான் செலவிடுகிறது? நேச்சர் எனும் அறிவியல் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் படி அரசு ஒரு பி.ஹெச்.டி மாணவன் / மாணவிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் 16,000 ரூபாயும் அடுத்த மூன்றாண்டுகள் மாதம் 31,330ம் உதவி ஊதியமாக வழங்குகிறது (6). இதுவே சென்ற ஆண்டு உயர்த்தப் பட்டதற்குப் பிறகு கிடைப்பது. டைம்ஸ் ஆஃப் இந்தியா-வின் ஒரு கட்டுரையின் படி இந்தியாவில் 77,798 பேர் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறார்கள் (7). இதை வைத்துக் கணக்கிட்டால் வருடத்துக்கு சுமார் 2,664 கோடி வருகிறது.
இது அதிகமான செலவுதான். இதை ‘வேஸ்ட்’ என்று நிறுத்தி விட்டால் அந்தப் பணத்தை வேறு பற்பல கட்டுமானப் பணிகளுக்கு செலவிடலாம்தான். ஆனால், ‘வேஸ்ட்’ பற்றி பேசும் போது வேஸ்டாகப் போகும் மற்றப் பணத்தையும் பார்ப்போம்.
ஆட்டோமொபைல் துறையை ‘ஊக்குவிக்க’ 2014ல் அரசு விற்பனை வரிகளை குறைத்தது. அதில் வருடத்துக்கு 22,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் வந்தது (8). இதில் கவனிக்க வேண்டியது, இந்த வரிக் குறைப்பு செடான் மற்றும் எஸ்.யூ.வி எனப்படும் சொகுசுக் கார்களுக்கும் கிடைத்தது. அதாவது பென்ஸ் கார் வாங்குபவரும் அரசின் வரிச் சலுகையை அனுபவித்தார். இந்த மாதிரி சொகுசுக் கார்களுக்கு கொடுத்த வரிச் சலுகையில் வந்த நஷ்டம் சுமார் 1,800 கோடிகள்.(9)
தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப் படும் மறைமுக வரிச் சலுகைகளில் ஆண்டுக்கு 7,500 கோடி அரசு இழக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதி வரியை அரசு தள்ளுபடி செய்ததில் 65,000 கோடி இழப்பு; ‘வாராக் கடன்’ போல ‘வாரா வரி’ என்று அரசு முழுக்குப் போட்டதில் 76,000 கோடி ரூபாய்கள். இதில் முக்கிய விஷயம் இந்த முழுக்குப் போட்டது பெருந்தொழிற் சாலைகள் என்று இருப்பவைகளில் இருந்து போனதுதான். இந்த மாதிரி பெருந் தொழிற்களுக்கு வரிச் சலுகைகள் கொடுப்பதை இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியே கூட விமர்சித்து இருக்கிறார் (10).
இந்த மாதிரி தொழிலதிபர்களிடம் இருந்து அரசுக்கு வராமல் போனதும், அரசே தள்ளுபடி மற்றும் சலுகைகள் கொடுத்தது எல்லாம் சேர்த்து கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்கள் (11).
சரி, எந்த ‘வேஸ்ட்’ பற்றி இப்போது நாம் பேசலாம்? எதனை அரசு நிறுத்த வேண்டும் என்று போராடலாம்? பி.ஹெச்.டி படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கும் ஊதியம் 2,600 கோடிகளை நிறுத்த சொல்லலாமா? அல்லது பென்ஸ் கார் மாதிரி வாங்குபவர்களுக்கு கொடுக்கும் வரிச் சலுகையை நிறுத்த சொல்லலாமா? அல்லது மொத்தமாக ஆட்டோமொபைல்-களுக்கு தரும் 22,000 கோடி ரூபாய்களை நிறுத்தலாமா? சரி, இந்த 30 லட்சம் கோடி இருக்கிறதே அந்தக் கடலில் கொஞ்சம் கை விட்டு அள்ளலாமா? இல்லையேல் அதெல்லாம் முடியாது என்று இந்த பி.ஹெச்.டி மாணவர்களின் 16,000 ரூபாயில் கை வைக்கலாமா?
தரவுகள்:
- SUV கார்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகையின் மூலம் உண்டாகும் இழப்பின் உண்மையான புள்ளி விபரம் கிடைக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது, கடந்த வருடங்களின் விற்பனையில் இந்த வரிச் சலுகை சதவீதத்தைப் போட்டு செய்திருக்கும் ஒரு குத்துமதிப்பான கணக்குதான்

சிந்தனைக்கு உரிய விசயங்கள்.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றிய தரவுகள் இருந்தால் வெளியுடுங்கள்.
ReplyDelete