‘ஒரு முதலமைச்சரை எப்படி மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க முடியும்?’
‘தினமும் நான் பார்க்க முடிகிற ஆளைத்தான் சி.எம் ஆக்க வேண்டுமென்றால் எங்க எதிர் வீட்டு சிந்துவை-தான் முதல்வராக்கணும்!’
‘முதல்வரை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? ஒரு சால்வை போர்த்தி விட்டு வந்து விடுவீர்கள். அவ்வளவுதானே?’
செய்தித் தாள்களில் திமுக வெளியிட்ட முதல் பக்க விளம்பரத்துக்கு பதிலாக இந்த மாதிரியான பதிவுகள் பார்க்கிறேன். அந்த விளம்பரத்தை அவர்கள் ரொம்பவும் literal ஆக அர்த்தம் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. அதற்கு இரண்டு விதங்களில் விளக்கம் அளிக்கலாம் என்று யோசித்தேன்.
ஒரு முதல்வர் அல்லது பிரதமர் என்பவர் ராஜா அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் மக்களின் ‘பிரதிநிதி’ அவ்வளவுதான். ஒரு பிரச்சனை அல்லது ஒரு தேவை என்று வரும் போது மக்களோடு மக்களாக கை கோர்த்து நிற்பது அவரின் முதல் கடமை.
இங்கிலாந்தில் 2011ல் போலீஸ் தவறுதலாக ஒரு கறுப்பின மனிதரை சுட்டு அவர் இறந்து விட கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில் கலவரம் மூண்டது. லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு எல்லாம் சென்றார்.
ஒவ்வொரு மணி நேர இடைவெளிக்கும் பத்திரிகைகளுக்கு கலவரத்தை அடக்கும் முயற்சிகள் பற்றிய அப்டேட் அளித்துக் கொண்டே இருந்தார். முடிந்த அளவு டிவி விவாத நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு கறுப்பின ஏரியாவுக்கு மிக அருகில் வசித்துக் கொண்டிருந்த என் மாதிரி ஆட்களுக்கு ஜான்சன் எங்கள் வீட்டுக்கே வந்து ஆறுதல் செய்தது மாதிரி இருந்தது.
அதற்குப் பிறகும் கூட போரிஸ் ஜான்சனை இரண்டு முறைகள் டியூப் ரயிலில் (மெட்ரோ) பார்த்திருக்கிறேன். ஒரு முறை செல்பி கூட எடுத்துக் கொண்டேன்.
சென்ற டிசம்பர் தமிழ் நாட்டில் வெள்ளம் வந்த அதே நேரம் இங்கிலாந்தின் வட பிராந்தியங்களிலும் வெள்ளம் வந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அந்த ஊரிலேயே ஒரு வீடு எடுத்து தங்கி தினமும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு போய் நிவாரணப் பணிகளை மேற்பார்வை இட்டும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல்கள் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் வெள்ள எச்சரிக்கை வந்ததுமே ராணுவமும், பேரிடர் குழுவும் அந்தந்த ஊர்களில் முகாமிட்டு வெள்ளம் வரும் முன்பே மக்களை இடம் பெயர்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒருத்தர் கூட சாகவில்லை. பொருட்சேதமும் குறைவுதான். ஆயினும் கேமரான் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
நாங்கள் விம்பிள்டனில் குடி பெயர்ந்த போது ஒரு நாள் யாரோ கதவை தட்ட யார் என்று கேட்டால் ‘உங்கள் ஏரியாவின் எம்பி நாந்தான்!’ என்றார் அவர். உள்ளே வரச் சொல்லி காபி கொடுத்து பேசிக் கொண்டு இருந்தோம். ‘என்ன வேலை செய்கிறீர்கள்?’, ‘உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா?’, ‘ஏரியா உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?’ என்றெல்லாம் பேசி விட்டு காபி குடித்து விட்டு புறப்பட்டு விட்டார். அதற்குப் பிறகும் அவரை சில முறை தெருவில் பார்த்த போது சிரித்து விட்டு ‘ஹவ் ஆர் யூ?’ என்று தலை ஆட்டி விட்டு போவார்.
மக்களை சந்திப்பது என்றால் இதுதான். இந்த அளவுக்கு நெருக்கமாக மக்களோடு வாழ்வதுதான் மக்களாட்சி. சரி இந்த மாதிரி எல்லாம் இங்கே எம்பிக்கள், மேயர்கள் இருக்க முடியாது. பாதுகாப்பு பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன என்றே வைத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?
கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறை கூட முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. மேலே சொன்ன மாதிரி பிரச்சனைகளில் மக்களோடு ஆதரவாக கூட நின்றதில்லை. பொருளாதாரம், மது விலக்கு, மாநில நிதிப் பற்றாக்குறைகள், போன்ற முக்கியமான பிரச்ச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரியாது. கோவன் கைது, சசி பெருமாள் மரணம், டிராபிக் ராமசாமி தாக்குதல், அவதூறு வழக்குகள் போன்ற விஷயங்களில் அவர் என்ன நினைத்தார் என்றே நமக்கு தெரியாது. மந்திரிகள் அடிமைகள் போல் நடந்து கொள்வது, அவர் சிறையில் இருந்த போது நடந்த அலகு குத்திய, யாகம் செய்த அவலங்கள் பற்றி எல்லாம் அவர் என்ன நினைக்கிறார் என்றே நமக்கு தெரியாது.
எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக வெள்ள நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார், ஏன் எங்கேயும் தென்படவே இல்லை, ஏன் ஒரு நிருபர் கூட்டம் கூட நடத்தவில்லை, ஏன் ஒரு தரம்குறைந்த ஒரு வாட்ஸ் அப் ஆடியோ மூலம், அதுவும் வெள்ளம் வடிந்து பல நாட்கள் கழித்து, மக்களோடு அவர் பேச வேண்டிய அவசியம் வந்தது என்பதற்கு எல்லாம் அவர் பதில் சொல்லவே இல்லை. அப்படி செய்யவில்லை என்பதை விட, பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட அவர் நினைக்கவில்லை என்பதுதான் பெரிதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஜனநாயக ரீதியில் நிர்வாகம் நடத்தும் முதல்வர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. உப்பரிகையில் இருந்து கொண்டு அரசாளும் மகாராணி போல மட்டுமே நடந்து கொள்ளும் மனநிலை அவரிடம் தென்படுகிறது.
வெள்ள நேரத்தில் அவருக்கு உடம்பு சரியில்லை; ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு இருந்தார் என்று சிலர் வாதம் செய்கின்றனர். அது வாதம் இல்லை, வெறும் வதந்தி மட்டுமே. அவருக்கு உடலுக்கு என்ன பிரச்சனை, என்ன அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பன பற்றி எல்லாம் எந்த அதிகார பூர்வ தகவல்களும் நம்மிடம் இல்லை. சும்மா கிசுகிசு போல மட்டுமே விஷயங்கள் உலா வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி சும்மா ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் கூட அந்த ரிப்போர்ட் அவரின் அதிகார பூர்வ இணையத்தில் வெளிடப் பட்டு விடும். அதற்குக் காரணம் ஜனாதிபதியின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இருக்கிறது என்பதுதான். சில தீவிரமான வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் நம் சிந்தனைத் திறமையை பாதிக்கும் சக்தி உள்ளவை. நிறைய நேரங்களில் சரியான முடிவெடுக்கும் திறனை அவை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த ஆட்சியாளர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுகிறார். ஆனால் இங்கே அந்த மாதிரி எந்தக் அக்கறையும் நம் முதல்வருக்கு இருந்ததாக தெரியவில்லை. தமிழகத்தை ‘ஆளும் உரிமையை’ அவர் பரம்பரை சொத்து மாதிரி மட்டுமே கருதுவதாக தெரிகிறது.
தான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை, எந்த நிருபரையும் மதிக்கத் தேவையில்லை. எந்த அக்கவுண்டபிலிட்டி-யும் எனக்குக் கிடையாது என்று உலவும் ஒரு முதல்வர் ஆபத்தானவர். அப்படிப்பட்டவர் நல்லவராகவும், கருணையுடைவராகவும் கூட இருக்கட்டும். ஆனால் அவர் ஜனநாயகத்தின் நீண்ட கால ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதவர்.
முதல்வரை மக்கள் பார்க்க வேண்டும் என்றால் தினமும் கேட் வாசலில் வந்து ‘குட் மார்னிங் ஆன்டி’ என்று சொல்லி விட்டுப் போகிற எதிர் வீட்டு சிந்து அல்ல; நம்மோடே வாழ்கிறார்; நம் கவலைகளை பகிர்ந்து கொள்கிறார்; நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்; தேவைப்படும் போது நம் வீட்டுக்கு அல்ல, நம் ஏரியாவுக்கு வருகிறார் போன்றவைதான் தேவை. வெள்ளம் வந்த போது பாரீஸில் இருந்தாலும் ட்விட்டர் மூலம் கவலைப் பட்டு இந்தியா திரும்பியவுடனே ஹெலிகாப்டரில் ஏறி பாதிப்பை பார்வையிட வந்த மோடியின் கவலை, வீல் சேரில் மட்டுமே வாழும் அளவுக்கு மூப்படைந்து விட்டாலும் தெருவில் இறங்கி சேதங்களை பார்வையிட்ட கருணாநிதியின் அக்கறை, இவைகள்தான் நமக்குத் தேவை. அரசியல் லாபத்துக்காக இவர்கள் செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன் வைத்தால் கூட அதே அரசியல் லாபத்தைப் பற்றி முதல்வர் ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி வருகிறது.
நிறைவாக, ‘எங்கேயுமே போக மாட்டேன்’, ‘யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்’, ‘எந்த நிருபரையும் சந்திக்க மாட்டேன்’, என்று நினைக்கும் ஒருவர் அவர் நல்லவராகவே இருந்தால் கூட எனக்கு தேவையில்லை. எல்லாரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கும், யாரும் சந்திக்க பெரிதும் கஷ்டப்படத் தேவையிருக்காத, பத்திரிகைகளை மதிக்கும் ஒருவர், அவர் ஓரளவு கெட்டவராகவே இருந்தால் கூட அவர்தான் இந்த நாட்டுக்கும், நம் ஜனநாயகத்துக்கும் தேவை. அந்த நோக்கில் இன்றைய விளம்பரத்தில் உள்ளடங்கிய விமர்சனத்தை முழுவதும் ஆதரிக்கிறேன். எந்த அக்கவுண்டபிலிட்டியும் எடுத்துக் கொள்ளாத இந்த அரசும், உப்பரிகையில் அமர்ந்து அருள் புரியும் இந்த மகாராணித்தனமும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.




//அரசியல் லாபத்துக்காக இவர்கள் செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன் வைத்தால் கூட அதே அரசியல் லாபத்தைப் பற்றி முதல்வர் ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி வருகிறது.//
ReplyDeletethe thought might have been that this may be the last term...
நியாயமான கேள்விகள்..
ReplyDeleteஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் சிந்தனை..
அருமையான பதிவு..!
அருமையான பதிவு..!
ReplyDeleteAs a chief minister, she did Good job. No advertisement, no personal relation to people, On command she resolved the maximum problem as much she can. 100% she is right.
ReplyDeleteA wonderful post !! What is there to boast when u stay away from people ? A autocratic ruler who makes mockery of democracy.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI fully agree with Mr.sridhar's
ReplyDeleteviews
Migavum arumaiyana arivupoorvamana pathivu.
ReplyDeleteவரும் தேர்தலை மட்டுமெ மனதில் கொண்டு வடிக்கப் பட்ட முஃபதலை கண்ணிர் களுக்கு துணை பொகும்துர்பாக்கியம் உங்களுக்கு ( முதலவரின் ஈகொ முழுவதுமாக அழியவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடே ஆனால் கருணாஅதை விட பல்வகையிலும் மோசமானவர் ஒரு கீழமைக்குப் பயந்து இன்னொரு கீழமைக்கு துணை போகும் துர்பாக்கியம் தமிழர்களுக்கு எப்போதும்.
ReplyDelete0
கட்டுரையின் அடி நாதம் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் யாருமே சனநாயகப் பண்புடன் இல்லை என்பதுதானே ஒழிய வேறொன்றும் இல்லை
DeleteKarunanithi is a cunning fox. we can't accept his acting.
ReplyDeleteஅருமையான பதிவு..!
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteஅருமை அண்ணா
ReplyDeleteபொது தளத்தில் விவாதிக்க பட வேண்டிய செய்திகள்
ReplyDelete