கவி இளவல் தமிழ் எழுதிய ‘யாதுமாகி நின்றேன்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அதில் நன்றியுரையில் பேசிய கவிஞர் ‘ஆங்கிலம், மலையாளம் இவை எல்லாம் மலட்டு மொழிகள். தமிழ் உயிர்ப்பான மொழி.’ என்றார். அதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் ‘கம்ப்யூட்டருக்கு தமிழில் கணினி என்று ஒரு வார்த்தையை நாம் உருவாக்கி பயன்படுத்த முடிகிறது. காருக்கு மகிழுந்து என்று பெயர் வைக்க முடிகிறது. அந்த மாதிரி புதிய வார்த்தைகளை தமிழில் உருவாக்க முடிகிற அளவுக்கு ஆங்கிலத்திலோ மலையாளத்திலோ உருவாக்க முடியாது,’ என்றார்.
இந்த வாதத்தில் மொழியியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் பிரச்சனைகள் இருப்பதால் கொஞ்சம் இதனை விளக்கலாம் என்று தோன்றியது. முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கில மொழியை சாடும் வகையில் இது இருப்பதால் சற்றே மன வருத்தமும் சேர்ந்து கொண்டு விட்டது.
(நிற்க: எனக்கு மலையாளம் தெரியாது, எனவே அது பற்றி பேசப் போவதில்லை. அது மலட்டு மொழியா இல்லையா என்பதற்கான பதிலை லாலேட்டனோ மம்மூக்காவோ தரட்டும்.)
முதலில், மொழியியல் ரீதியாக இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இது கம்பேர் பண்ணுவதே இரண்டு வேறுபட்ட மொழிகளை. பொதுவாக மொழிக் குடும்பங்களை இரண்டு விதமாக பிரிப்பார்கள்: proto language மற்றும் derivative language. ப்ரோடோ என்பது மிக மிக ஆரம்ப காலத்தில் எந்த மொழி இருந்ததோ அதனைக் குறிக்கும். அதாவது Sino-Tibetan, Latin, Indo-European , Dravidian என்று போகும். Indo-European க்கு மிக அருகாமையில் இருக்கும் மொழி சமஸ்க்ரிதம். Dravidian க்கு மிக அருகில் இருக்கும் மொழி தமிழ். இவை மிகவும் பழைய மொழிகள். அதாவது கிமு 5000 ல் கோதாவரி நதிக் கரையில் பெயரில்லாத ஒரு திராவிட மொழி பேசிக் கொண்டிருந்த ஒரு குழுவினரில் கொஞ்சம் பேர் கிமு 3000ல் தமிழில் பேச ஆரம்பித்தார்கள். மீதிப் பேர் பேச ஆரம்பித்தது வேறு மாதிரி இருந்தது; அது கொஞ்சம் கொஞ்சமாக கன்னடம் என்றானது. அதே மாதிரி கிமு 2500ல் ஆரிய மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள் இந்தியா வந்து சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி புதிய மொழியை, சமஸ்க்ரிதம், பேசத் துவங்கினார்கள்.
அதனால்தான் இவை கிளாசிகல் மொழிகள் என்று அழைக்கப் படுகின்றன.
இந்த மாதிரி மொழிக் குடும்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிளை மொழிகள் பரவத் துவங்கின. அப்படி Indo European ல் வந்ததுதான் ஜெர்மானிய மொழி. அப்படி வித்யாசமான இரண்டு ஜெர்மானிய மொழிகளை பேசிக் கொண்டிருந்த ஆங்கில்ஸ் மற்றும் சாக்ஸன்ஸ் என்னும் இரண்டு பூர்வ குடிகள் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தவுடன் அங்கிருந்த கெல்ட் என்னும் இனத்துடன் சேர்ந்து அவர்கள் மொழி கொஞ்சம் மருவி மாறியது. ஆங்கில்ஸ் இடம் இருந்து வந்ததால் அதற்கு ஆங்கிலம் என்ற பெயர் வந்தது. (இங்கே ஒரு குறுந் தகவல்: நிறையப் பேர் ஆங்கிலத்தை இலத்தீனிய மொழி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு ஜெர்மானிய மொழி.)
பின்னர் நார்மன் என்கிற பிரெஞ்சு இனம் ஒன்று இங்கிலாந்தை ஆக்ரமிக்க, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிரெஞ்சு வார்த்தைகள் ஆங்கிலத்துக்கு இடம் பெயர்ந்தன. பின்னர் ரோமானியர்கள் இங்கிலாந்துக்கு குடியேறிய வுடன் இலத்தீனிய மொழியும் சேர்ந்து கொண்டது.
எனவே ஆங்கிலம் என்று நாம் இன்று அழைப்பது ஜெர்மானிய வடிவம் உள்ள, இலத்தீனிய இலக்கணம் கொண்ட, பிரெஞ்சு வார்த்தைகள் முக்கால்வாசி சேர்ந்த ஒரு கலவைதான். நாம் ஆங்கிலம் என்று பயன்படுத்தும் நிறைய வார்த்தைகள் உண்மையில் பிரெஞ்சுதான். கம்ப்யூட்டர், சிக்கன், மட்டன் இவை எல்லாம் பிரெஞ்சு வார்த்தைகள்தான்.
ஆங்கிலம் ஒரு derivative language . அதாவது ஒரு கிளை மொழி, பற்பல நூற்றாண்டுகள் மாற்றம் கண்டு பலப்பல உருவெடுத்ததில் வந்த ஒரு உருவம்தான் ஆங்கிலம். தமிழ் வேருக்கு மிக அருகில் உள்ள மொழி.
நான் சொல்ல வந்த பாய்ண்ட் இதுதான்: ஒரு கிளாசிகல் மொழியையும் இன்னொரு கிளாசிகல் மொழியையும் ஒப்பிட்டு ஆராய முடியும். ஒரு derivative மொழியையும் இன்னொரு derivative மொழியையும் ஒப்பிட்டு ஆராய முடியும். ஆங்கிலத்தையும் ஹிந்தி அல்லது ஸ்பானிஷ் மொழிகளோடு ஒப்பிடலாம். தமிழை சமஸ்க்ரிதம், கிரேக்கம் அல்லது இலத்தீனிய மொழிகளோடு ஒப்பிடலாம்.
அடுத்த விஷயம், ஒப்பிடும் வார்த்தைகள் பற்றியது. மகிழுந்து என்கிற வார்த்தையையும் Car என்கிற வார்த்தையையும் ஒப்பிடுவது எப்படி சரி என்று எனக்கு தெரியவில்லை. இன்றைக்கு எத்தனை பேர் நம் பேச்சு வழக்கில் ‘நான் ஒரு புது மகிழுந்து வாங்கப் போறேன்,’ என்று சொல்கிறார்கள்? அல்லது ‘வாடகை மகிழுந்துக்கு போன் பண்ணியிருக்கேன். இப்போ அவங்க வர்ற நேரமாச்சி,’ என்று சொல்கிறார்கள்? பேச்சில் விடுங்கள், எழுத்தில் கூட கடந்த இரண்டு வருட ஆனந்த விகடனோ, குமுதமோ தினமலரோ எடுத்துப் பார்த்தால் மகிழுந்து என்கிற பிரயோகம் எங்காவது பிரயோகப் படுத்தப் பட்டிருப்பதை காட்ட முடியுமா? (ஆனால் கணிப்பொறி, இணையம் என்பவை வேறு; அவற்றை நாம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டோம்.)
எனவே சொந்த மொழியிலேயே பயன்பாட்டில் இல்லாத, வலுக்கட்டாயமாக திணிக்கப் பட்ட ஒரு வார்த்தையை ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமல்லாத எல்லா தேசத்திலும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தையோடு ஒப்பிடுவது எப்படி சரியாகும்?
அடுத்தது, புது வார்த்தைகள் ஆங்கிலத்தில் வர முடியாது என்கிற basic premise லேயே எனக்கு பிரச்சனை இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்ட் இணைய தளத்தில் அவர்களே குறிப்பிட்டிருப்பது இதுதான்: ஆண்டுக்கு சராசரியாக 1000 புதிய வார்த்தைகள் ஆங்கில அகராதியில் சேர்க்கப் படுகின்றன. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். இந்த புதிய வார்த்தைகள் மகிழுந்து, குளம்பி மாதிரி, யாரோ யோசித்து உருவாக்கிய, பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் அல்ல. எந்தப் புதிய வார்த்தை பொதுவாக மக்களால் பயன்படுத்தப் படுகிறது என்பதை ஒரு கமிட்டி கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. எந்த வார்த்தை இப்போது எல்லா மக்களாலும் ஏற்கப் பட்டு விட்டது என்று அவர்கள் கருதுவதற்கு தெளிவாக வரையரைக்கப் பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அதில் வெற்றி பெற்று விட்டால் அந்த வார்த்தை அகராதியில் சேர்ந்து விடுகிறது. ஒரு முக்கிய உதாரணம் ஸெல்ஃபி (Selfie).
இந்தப் பின் வரும் பாரா-வைப் பாருங்கள்:
Picture this. You’ve just uploaded a selfie to your favourite social media website using your phablet when your FIL (that’s your father-in-law) shares a supercut of a srslymortifying twerking session. You immediately unlike his page because there isn’t an emoji capable of expressing your desire to vom: apols, but it’s time for a digital detox.
இங்கே தடித்த எழுத்துக்களில் உள்ள யாவுமே இந்தக் காலத்தில் பரவலாக உபயோகப் படுத்தப்படும் வார்த்தைகள்தாம்.
ஆனால் ஒன்று, இதில் சேரும் நிறைய வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒரிஜினலாக உருவாகியவை அல்ல. கம்ப்யூட்டர் என்கிற பதமே பிரெஞ்சு மொழியின் காம்-புதேர் (சேர்த்து கணக்கிடுதல்) என்கிற பதத்தில் இருந்து வந்ததுதான். இரண்டு வருடம் முன்பு சமோசா என்கிற வார்த்தையை ஆங்கில அகராதியில் சேர்த்திருக்கிறார்கள். சிக்கன் டிக்கா-வில் உள்ள டிக்கா இப்போது ஆங்கில வார்த்தை. இந்த மாதிரிதான் உண்மையில் ஆங்கிலம் வளர்ந்தது. Catamaran கட்டுமரம் என்பதில் இருந்து வந்தது. Sugar இன் மூலம் சக்கரை. பெருச்சாளியை குறிக்கும் Bandicoot க்கு மூலம் தெலுங்கு பண்டிகூடம். அவ்வளவு ஏன் Father , Mother க்கு மூலமே சமஸ்க்ரித பிதரஹ, மாதரஹ-தான்.
அந்த மாதிரி கொண்டு வரப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நிலைக்கின்றன. இன்று நாம் யாரும் தலைகீழாக நின்றாலும் தமிழ்ச் சமுதாயத்தை மகிழுந்து என்கிற வார்த்தையை பொது வெளியில் பயன்படுத்த வைக்க முடியாது. டீக்கடையில் போய் ‘ரெண்டு கப் குளம்பி குடுப்பா?’ என்று கேட்க வைக்க முடியாது. (காபி என்கிற வார்த்தை கூட அரபி மொழியில் இருந்து வந்ததுதான்.)
இதில் என்ன விஷயம் என்றால் நாம் தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிறைய வார்த்தைகளின் மூலம் வேறு மொழி. கஞ்சி-க்கு மூலம் ஜப்பானிய மொழி. Robotக்கு ஷங்கர் உருவாக்கிய தமிழ்ப் பதம் எந்திரன் உண்மையில் சமஸ்க்ரிதன்தான். (யந்த்ர என்பதே எந்திரன் ஆனது. இன்னொன்று, Robot என்கிற பதத்தின் மூலம் செக்கொஸ்லோவிய மொழி.) அவ்வளவு ஏன் தமிழ் உணர்வாளர்கள் பெரும்பாலும் பிரயோகப் படுத்தும் ‘திராவிடம்’ என்பதே சமஸ்க்ரித வார்த்தைதான். பல்லவ காலம் முதல் தமிழில் சேர்ந்து கொண்டு வந்திருக்கும் ‘ஆரிய’ வார்த்தைகளை நீக்க ஆரம்பித்தால் நாம் பாதிப் பேர் தமிழே பேச முடியாது.
அடுத்தது நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான ஒரு வார்த்தை தமிழில் கிடையாது. Condescending, Irredentism, Fissiparous,, Cantenkerous
போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமான தமிழ்ப் பதம் யாராவது சுட்ட முடிந்தால் பிரயோஜமாக இருக்கும். (இதற்கு ஒரு விதி: நீங்கள் இதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளைத்தான் சொல்ல வேண்டும். புதிதாக ஒன்றை உருவாக்க முயலக் கூடாது.)
வார்த்தைகளை விட்டு விடுங்கள். நாம் இப்போது பரவலாக பயன்படுத்தும் கமா, நிறுத்தக் குறி, ஆச்சரியக் குறி, கேள்விக் குறி போன்றவை கூட நம்முடைய ஒரிஜினல் அல்ல. ஆனால் அவற்றுக்கு மாற்றாக தூய தமிழில் யாரும் கமாவோ, கேள்விக் குறியோ கொண்டு வர இன்னமும் முயற்சிக்கவில்லை.
மொழி என்பது ஒரு organic entity . யாரும் ஓரிரண்டு பேர் உட்கார்ந்து உருவாக்குவது அல்ல. தானாக சமூகத்தால் உருவாவது. ‘மொக்கை’ என்பதையோ, ‘தெறி’ என்பதையோ ‘கலாய்த்தல்’ என்பதையோ யாரும் மொழியியல் நிபுணர்கள் உருவாக்கவில்லை. சனங்களின் மத்தியில் தானாகவே உருவானவைதான் இவை. இலக்கணம் மட்டும்தான் நிபுணர்கள் வரையறுத்து உருவாக்குகிறார்கள். அப்படித்தான் உலகில் எல்லா மொழிகளும் உருவாகியிருக்கின்றன. இலக்கணம் கூட மாறுதல்களுக்கு உட்பட்டது. மக்களுக்கு பிடிக்கவில்லை அல்லது ஒத்து வரவில்லை என்றால் அவர்களே தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி விடுவார்கள்.
அடுத்து சமூக ரீதியான பிரச்சனை என்ன வென்றால் இந்த மாதிரி ‘தூய’ வார்த்தைகள் உருவாக்குவதுதான். அதனை எனக்குத் தெரிந்து உலகில் எந்த மொழிக் குழுவும் செய்வதில்லை. ஜப்பானில் கார் என்றால் கார் தான். ஸ்பானிஷில் கம்ப்யூட்டர் என்றால் கம்ப்யூட்டர் தான். ரஷ்யாவில் சிபியு, பிராசசர் எல்லாம் அதேதான். அதற்காக யாரும் 'மெல்ல ரஷ்ய மொழி இனிச் சாகும்' என்று அங்கலாய்ப்பதில்லை. இதை மாற்ற முயலும் ஒரே இனம் பிரெஞ்சு மக்கள்தான். அவர்கள்தான் ஒரு கமிட்டி வைத்து ஒவ்வொரு புதிய ஆங்கில டெக்னிகல் வார்த்தைகளுக்கும் சமமான வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரெஞ்சு ஆங்கில இனங்களிடையே இருந்த ஆயிரம் ஆண்டு கால போட்டி மற்றும் பகைமை. கலாசார ரீதியாக ஆங்கிலேயரை விட தாங்கள் உயர்ந்தவர்கள், தங்கள் மொழி உயர்வானது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பிரெஞ்சு சமூகத்தின் ஒரு முயற்சி. ஆனால் அப்படி அந்த கமிட்டி செய்தாலும் அவர்களின் புதிய வார்த்தைகள் நிறைய மக்களிடையே நிலைப்பதில்லை.
குறைந்த பட்சம் பிரெஞ்சு மக்கள் அப்படி செய்வதற்கான வரலாற்று காரணம் புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது. தமிழர்கள் அப்படி செய்வதன் காரணம்தான் புரியவில்லை. நாம் ஏன் மகிழுந்து, குளம்பி என்றெல்லாம் குழம்பிக் கொண்டு இருக்க வேண்டும்; தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் அப்படி என்ன பகை? அந்த அளவுக்கு insecure ஆக தமிழ் இருக்க வேண்டுமா? என்கிற என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
கடைசியாக, இந்த மாதிரி எல்லாம் ஒப்பீடு செய்துதான் தமிழின் உயர்வை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் நல்ல வேளையாக தமிழுக்கு இல்லை. ஒரு மாபெரும் இலக்கியக் களஞ்சியத்தை கொண்ட மொழி. பெரும் சமூக, தத்துவ, ஆன்மீக, கலாசார சிந்தனைகளை முன் வைத்த அற்புதமான மொழி இது. அதனை அப்போது போற்றி வளர்த்த வள்ளுவர், ஆழ்வார்கள், சங்கப் புலவர்கள் முதல் இன்று அதனை செறிவூட்டிய சுஜாதா, சுந்தர ராமசாமி, வைரமுத்து, மனுஷ்ய புத்திரன் வரை மாபெரும் இலக்கியவாதிகள் அதில் பணி புரிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட மொழியை போற்றி, பாடி பணிவது ரொம்ப முக்கியம். ஆனால் அடுத்த மொழியை சுடும் சொற்களால் வசை பாடித்தான் என் மொழியின் பெருமையை நான் பேச வேண்டும் என்பது அந்த சமூகத்துக்கு அழகல்ல. மேலும் ஒரு மொழிக்கு பெருமை சேருவது அந்த மொழியின் இலக்கியங்கள், இலக்கணங்களை விட அது கொடுக்கும் சிந்தனைகள்தான். திருக்குறளின் பெருமை அது பயன்படுத்திய வார்த்தைகளின் வீச்சத்தில் அல்ல, அது சொன்ன அற்புதமான சிந்தனைகளால்தான். அதே போல ஒரு மொழிக் குழு உயர்வது அந்த மொழி பேசுவோரின் வாழ்க்கை முறை, அவர்கள் கண்ட சமூக பொருளாதார சாதனைகளால்தான். ஆங்கிலத்தை விட எத்தனையோ விதத்தில் உயர்வாக இருந்தாலும் பிரெஞ்சு மொழி இன்று உலக அளவில் பயன்பாட்டில் இல்லை. ஆங்கிலத்துக்கு இருக்கும் மதிப்பு உண்மையில் ஆங்கிலேயருக்கும் அவர்கள் சாதனைக்கும் இருக்கும் மதிப்புதான். தமிழின் பெருமையை உயர்த்த வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு தமிழனும் மரியாதைக்கு உரிய அளவில் நடந்து கொள்ளவும், சமூகத்தில் நேர்மை, உழைப்பு, திறமை வளரவும், நாம் சார்ந்திருக்கும் துறைகளில் முடிந்த அளவு சாதனைகள் புரியவும் முனைவோம். தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.

அருமை..நல்ல ஆய்வு & ஒப்பீடு!!!
ReplyDelete