‘ஒ ஸாயா…’ என்கிற அடி நாத சப்தத்தில் அது ஆரம்பிக்கவில்லை. அந்தப் பயணம் உண்மையில் ஆரம்பித்தது கொஞ்சம் நீண்ட, சற்றே கிராமிய வாசம் கொண்ட ஹம்மிங்-கில்தான். ஒரு கிராமப் பெண் தன் சின்னச் சின்ன ஆசைகளை வெளிப்படுத்திய பாடலில்தான் அவரின் முதல் ஹம்மிங் குரல் வெளிப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்ட எல்லாருக்குமே அவர்கள் உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றப் பட்டு விட்டது என்பது புரிந்து விட்டது. பொருளாதார சீர்திருத்தக் குழந்தைகள் எல்லாருக்குமே ஒரே இரவில் அல்லா ராக்கா ரஹ்மான் ஒரு ஆதர்ஷ புருஷனாகி விட்டார்.
ரஹ்மானைப் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். என்ன எழுதினாலும் ரொம்பவும் அதீத பாராட்டுதல்கள் அல்லது ஏற்கெனெவே படித்த வார்த்தைகள் மாதிரி எழுதுவது தவிர்க்க இயலாமல் போகிறது. ஏனெனில் அவ்வளவு வார்த்தைகள் ஏற்கெனெவே எழுதப் பட்டு விட்டன. அவர் ஆரம்பித்த காலத்தில் அவர் இசையில் ‘கம்ப்யூட்டர் வாசம்’ அதிகம் வீசியதாக குற்றம் சாட்டப் பட்டார். கொஞ்சம் பேஸ் சப்தம் அதிகமாகவும், மெல்லிய எதிரொலியோடும், ரொம்ப கீச்சும் பின்னணி இசையும் செயற்கையாக இருப்பதாக கருதப் பட்டது. அவர் ஒன்று ரிதம் லூப்-களிலும் எலெக்ட்ரானிக் வாத்திய இசைகளிலும் வரிகள் கொஞ்சம் அமிழ்ந்து போன நிலையில் அமைத்தார், அல்லது அமைதியான ஹாலோ கிடாரில் தெளிவான வரிக் கொண்ட பாடல்களில் கொஞ்சம் மேலோடியின் விதிகளை வளைத்து பாடல்கள் அமைத்தார். அந்தக் கால கட்டங்கள்தான் அவர் தன் இசை ஒலியை இன்னமும் வளர்த்துக் கொண்டிருந்த தருணங்கள். ஒரு இசைக்கலைஞன் தன் சொந்த இசை ஒலியை உருவாக்குவது என்பது பெரும் சிரமத்துக்குரிய காரியம். அதுவும் இந்திய சூழலில், ஒரு திரைக்கதையை ஒட்டியே இசை அமைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் வெறும் காதல் பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பது ரஹ்மானுக்கு கொஞ்சம் அலுப்பாகவே இருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் அப்போது வந்த நிறைய புதிய இயக்குனர்கள் அவர் சுதந்திரமாக விளையாட களம் அமைத்துக் கொடுத்தனர். அதன் காரணமாக லகான், பம்பாய், ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, மீனாக்ஷி போன்ற படங்கள் வந்தன.
தன் கற்பனை சுதந்திரம் முழுவதுமாக கிடைத்த சந்தோசத்தில் ரஹ்மான் ஒலியில் புதுப் புது பரிசோதனை முயற்சிகள் செய்யத் துவங்கினார். உலகில் பல்வேறு இசை ரகங்களை கலந்து ஒன்றிணைப்பது அவருக்குப் பிடித்தமாக இருந்தது. கவ்வாலி-யில் காதல் கலந்து ‘தேரே பினா’ என்று குரு-வில் கொடுத்தார். Folk Rock எனும் பாப் டிலன் ஸ்டைலில் இளைஞர்களின் எழுச்சி ‘ரூ பா ரூ’ என்று ரங் தே பசந்தியில் பாடினார்கள். மேற்கத்திய கிராமிய இசையை ஒட்டி வந்த பாடல் போருக்கு எதிராக ‘வெள்ளைப் பூக்கள்’ மலர ஏங்கியது. இன்றைய டெக்னோவோடு அன்றைய மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தோடு இயைந்து ‘தில் கா ரிஷ்தா’ வாக கூவியது. பொருளாதார தாராளமயத்துக்குப் பின் தாங்களும் உலகமயமாகிய இந்திய இளைஞர்கள் இவற்றை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார்கள். அதே சமயம் சாஸ்த்ரிய சங்கீத ரசிகர்களையும் கைவிடாமல் அவர்களையும் திருப்திப் படுத்த முனைந்தார். ஜோதா அக்பரின் ‘மன் மோகனா’-வில் சுத்தமான பஜனை கிடைத்தது. ஜானே தூ யா ஜானே நா-வின் ‘ஜானே தூ’ பாடலில் இந்தியாவிலேயே முதன் முதல் தூய ஜாஸ் ஒலித்தது. பகத் சிங்-கில் ‘சர்ஃபரோஷ் கி தமன்னா’ ஹிந்துஸ்தானியில் மேலோடி கலந்து குழைந்தது. இன்னும் கொஞ்சம் மேலே போய் தூய ஹிந்துஸ்தானியே டெல்லி 6ல் ‘போரே மாயி’ வழியாக கொடுத்தார்.
இப்படிப்பட்ட ஆரவாரமான சாதனைகளோடு எல்லாம் ஒப்பிடுகையில் ‘ஜெய் ஹோ’ கொஞ்சம் மட்ட ரகம்தான். ஆனால் என்ன செய்வது, அகாதெமி அவார்ட்-கார்கள் ‘ஜானே தூ’ கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ‘ஜெய் ஹோ’ எப்படி இருந்தாலும் ஆஸ்கார் விருது சரியான ஆளைத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா என்ன? இந்தப் பாடல்தான் அவருக்கு அந்த விருதை கையில் வைத்தது என்றாலும் கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளின் உழைப்பும் அசாத்தியத் திறமையுமே அந்த மேடைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறது என்பது ரஹ்மானின் ரசிகர்களுக்கு தெரியும். ‘ஜெய் ஹோ’-வை விட்டுத் தள்ளுங்கள். டெல்லி 6ல் ‘ரெஹ்னா தூ’ பாடலைக் கேளுங்கள். ஆப்பிரிக்க ரெக்கே பின்னணியில் துவங்கும் பாடல் மெலோடி விதிகளை எல்லாம் உடைத்து ரஹ்மானின் குரலோடு இழைந்து துவங்குகிறது. உடனே இடைவெளியில் கொஞ்சம் அரேபிய இசை உறுத்தாமல் நுழைந்து கலந்து செல்கிறது. கடைசியில் புல்லாங்குழல் போன்ற ஒரு சிந்தஸைசர் ஒலியில் கர்நாடக வடிவ இசை துவங்கி அந்த ரெக்கே-வோடு கலந்து வருடி முடிகிறது. பாப் மார்லியும் தியாகராஜரும் கட்டி அணைத்து விடை பெறுகிறார்கள். அதுதான் ரஹ்மான். அந்த மனிதருக்குத்தான் ஆஸ்கார் கொடுத்திருக்கிறார்கள்!

சிறப்பான கட்டுரை... ஜெய் ஹோ-வை விட பல அற்புத பாடல்களை ரஹ்மான் முன்பே குடுத்து விட்டார். ஆஸ்கார் ஜெய்ஹோ-விற்கு என்றெடுத்துக் கொள்ளாமல் மாபெரும் இசை ஜாம்பவானின் கடின உழைப்பிற்கு கிடைத்த விருதாகத் தான் கொள்ள வேண்டும்.
ReplyDelete