ஒரு வேலையை எவ்வளவு சுருக்கமாக, மலிவாக செய்ய முடியும் என்று யோசிப்பதற்கு ஹிந்தியில் ஜுகாட் (Jugaad) என்று அழைக்கப் படுகிறது. இந்தியர்கள் ஜுகாடில் பெரும் விற்பன்னர்கள் என்று பெருமையாக நிறைய கட்டுரைகளில் எழுதுவார்கள். மார்ஸ்-க்கு சாட்டிலைட் அனுப்பியதில் கூட அந்த விண்கலத்தை எவ்வளவு மலிவாக தயாரித்தோம் என்று பெருமை அடைந்தோம். இன்று கூட ஒரு புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணர் மரணமடைந்ததற்கு ஹிண்டு-வில் அவர் ஜுகாட் கட்டிட டிஸைன்-களில் பெரும் விற்பன்னர் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த ஜுகாட் பற்றி எனக்கு நிறைய குழப்பம் இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்த வரை ‘இந்த அளவு தரம் போதும்’ என்று நிறுத்திக் கொள்வதற்கோ அல்லது தரக் குறைவான வேலையை ‘சட்டு புட்டென்று’ செய்து முடிப்பதற்கு நமக்கு நாமே பெருமையாக வைத்துக் கொண்ட பெயர் போலத்தான் தெரிந்தது. அது இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற ஊர்களில் பணி புரியும் போது தெளிவடைந்தது.
இங்கிலாந்தில் ஒரு ப்ராஜக்ட்-டில் பணி புரியும் போது ஹெல்த் அண்ட் சேஃப்டி (Health and Safety) பற்றி நிறைய படித்தேன். சுகாதாரத்துக்கும், மனிதர்கள் பாதுகாப்புக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், அதனை திரும்ப திரும்ப எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வலியுறுத்துவதை அவர்கள் ரொம்பவும் முக்கியமாக செய்வதை பார்க்கும் போது சில சமயம் ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என்று சிரிப்பே கூட வரும்.
எந்தக் கம்பனியில் இருந்தாலும் வேலை செய்யும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சுகாதார மற்றும் பாதுகாப்பு விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இது பற்றி பயிற்சி திட்டங்கள் வைத்து கம்பனியில் யாருக்கேனும் ட்ரைனிங் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தால் அந்தக் கம்பனிக்கு அரசாங்கம் பெரும் அபராதம் விதிக்கிறது.
அந்த விவரங்கள் சில இங்கே கொடுக்கிறேன். உயரமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு தனி லைசென்ஸ் இருக்கிறது. அப்படி வேலை செய்பவர் பாதுகாப்பாக வேலை செய்ய உபகரணங்களை நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும். அப்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டு விட்டால் அதற்கான மொத்தப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொண்டு பெரும் நஷ்ட ஈடு தர வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு உங்கள் அலுவலகத்தில் ஒரு வயர் சும்மா தரையில் நீட்டிக் கொண்டிருந்து அதில் தடுக்கி நீங்கள் விழுந்து உங்களுக்கு அடி பட்டு விட்டால் உங்கள் மருத்துவ செலவு முழுவதையும் அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு சும்மா மேல்காயம் பட்டால் கூட 10,000 பவுண்டுகள் முதல் நஷ்ட ஈடு தர வேண்டியிருக்கும். அங்கே வேலை செய்பவர்களுக்கே அப்படி என்றால் அந்தக் கம்பனியின் சுகாதார மற்றும் பாதுகாப்பு அலட்சியத்தால் பொது மக்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நஷ்ட ஈட்டுடன் அவர்களின் பாதுகாப்பு கண்ட்ரோல் அரசிடம் வந்து விடும் அபாயமும் இருக்கிறது.
இந்த மாதிரி எல்லாம் இருப்பதால் அவர்கள் பெரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஒரு சாலை போடுவதாய் இருந்தால் அந்த இடத்தை முழுவதும் மூடி அங்கிருந்து ஒரு தூசி கூட வெளியே வராமல் வேலையை முடிக்கிறார்கள். கட்டிடம் கட்டும் வேலை செய்பவருக்கு தக்க பயிற்சி, ஹெல்மெட் போன்ற உபகரணங்கள், சஸ்பெண்டர் பெல்ட், பாதுகாப்பு வலை என்று தேவைக்கு மேலேயே ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு யாருக்காவது உடல் உபாதை வந்து விடக் கூடாது என்பதற்காக சுகாதார ஏற்பாடுகள் கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகவே கூட நடக்கின்றன.
அந்த மாதிரி தேச அளவில் நடப்பதால் அங்கே எல்லோருக்குமே பொதுவான ஒரு விழிப்புணர்வும், கவனமும், எச்சரிக்கை சிந்தனையும் இயல்பாகவே ஊறி விடுகிறது. ‘வேலை சட்டு புட்டென்று முடிய வேண்டும்’ அல்லது ‘வேலை சீப்-பாக முடிய வேண்டும்’ என்பதை விட ‘வேலை பாதுகாப்பாக, யாருக்கும் பாதிப்பின்றி நடக்க வேண்டும்’ என்பதில்தான் கவனம் இருக்கிறது.
அந்த மாதிரி பாதுக்காப்பு பற்றிய சிந்தனை நமக்கு இயல்பாகவே இல்லை என்பது மட்டுமல்ல, பொதுவாக அப்பேர்ப்பட்ட விழிப்புணர்வும் நம்மில் கிடையாது. அரசாங்கம் முதல் தனிப்பட்ட குடிமகன் உள்பட ஜுகாட் பற்றித்தான் யோசிக்கிறோம். யாருக்காவது தலையில் ஒரு பாலத்தில் இருந்து கம்பி உடைந்து விழுந்த பிறகுதான் நமக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் இனம் புரியாததாக, யார் மேல் என்று தெரியாமல் சிலருக்கு முதலமைச்சர் மேலும் சிலருக்கு அதிகாரிகள் மேலும் சிலருக்கு பொதுவாக சமுதாயத்தின் அவல நிலை மேலும் வருகிறது. ஓரிரு நாளில் அது மறந்து போய் விடுகிறது.
இந்த மெட்ரோ ரயில் ப்ராஜக்ட்-டில் நடக்கும் முதல் விபத்து இது அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இது வரை எத்தனை அரசு குடியிருப்புகள் இடிந்து விழுந்திருக்கின்றன? இது வரை எத்தனை கட்டிடங்களில் தீ விபத்து நிகழ்ந்து உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்திருக்கின்றன?
நேற்று மெட்ரோ ரயில் பாலத்தின் அடியில் விபத்து நடந்த அதே நேரம் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்த ஒரு பெங்களூர் ரயில் தடம் புரண்டிருக்கிறது. யாருக்கும் பெரிய காயம் இல்லை. தண்டவாளம் சரியாக மெயிண்டைன் பண்ணப் படாததால் இது நடந்திருக்கிறது என்று ஏதோ வானிலை அறிவிப்பு மாதிரி சொன்னதோடு அதிகாரிகள் பொறுப்பு முடிந்து விட்டிருக்கிறது. சென்ட்ரல் மாதிரி ஒரு முக்கியமான ஸ்டேஷனில் எப்படி இவ்வளவு அக்கறையின்மை நடக்கலாம் என்று யாரும் கேட்கவில்லை. ஒருவேளை கிரிதரன் நேற்று ஒழுங்காக அலுவலகம் போய் சேர்ந்திருந்தால் இந்த சென்ட்ரல் செய்தி கொஞ்சம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் அபார்ட்மெண்டில் மெயிண்டனன்ஸ் வேலை செய்யும் ஒரு ப்ளம்பர் இரண்டாவது மாடியில் வேலை செய்யும் போது ஏணி முறிந்து விழுந்து இறந்து விட்டார். அவர் வயது முப்பது. ‘அவருக்கு இன்ஷியூரன்ஸ் இருக்கா?’ என்று நான் கேட்டபோது எங்கள் மெயிண்டனன்ஸ் மேனேஜர் என்னை மேலும் கீழும் பார்த்தார். இப்போது அந்த ப்ளம்பரின் குடும்பம் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் வீட்டில் முன்பு வேலை செய்து கொண்டிருந்த ஒரு சமையல் பெண்மணி 44 வயதானவர். அவரின் திருமணம் கட்டிடக் கலை செய்யும் ஒருவருடன் 17 வயதில் நடந்து இரண்டே வருடங்களில் அவர் கணவர் வேலை செய்யும் போது சாளரம் முறிந்து விழுந்து இறந்து விட அவர் வாழ்க்கையே தலைகீழ் ஆனது. இன்று வரை வீடுகளில் சமையல் மற்றும் இதர வேலை செய்து தன் குடும்பத்தை ஒட்டி வருகிறார். இந்த மாதிரி எத்தனை எத்தனை குடும்பங்களின் நிலைமை தலைகீழாக மாறிப் போயிருக்கிறது என்று நமக்குத் தெரியாது.
விபத்துகள் பற்றி இருக்கும் புள்ளி விபரங்கள் அளவு கூட இந்த மாதிரி வேலை சம்பந்தமான விபத்துகள் மற்றும் பாதுகாப்பு பற்றி நம்மிடம் பெரிதாக தகவல் இல்லை. இந்த மாதிரி சும்மா anecdotal evidence லெவலில் மட்டும்தான் இருக்கிறது. நம் சாலைகள், நம் வேலை இடங்கள், குறிப்பாக அரசு அலுவலகங்கள், நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் என்று எல்லாவற்றிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய எந்த அக்கறையுமே இல்லாமல்தான் இருக்கிறோம். இது முதலமைச்சர் என்றில்லை. நாமே நாளைக்கு ஒரு வேலை கான்ட்ராக்ட் கொடுத்தால் கூட ‘இது எவ்வளவு சீப்-பாக முடியும்’ இதில் எப்படி ‘ஜுகாட்’ செய்வது என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். அந்த ஜுகாடில் முதல் பலியாவது பாதுகாப்பு ஏற்பாடுகள்தான். ஏனெனில் நமக்கு அசம்பாவிதம் பற்றி பேசுவது அபசகுனம் என்றுதான் படுகிறது. கொஞ்ச நாள் முன்பு சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே நுழைந்த போது ‘இங்கே ஒருவேளை தீ விபத்து நடந்தால் என்ன ஆகும்?’ என்று தோன்றியதை கொஞ்சம் சத்தமாகவே கேட்டு விட்டேன். ‘சீ, உள்ளே நுழையும் போதே ஏன் இப்படி பேசற, வாயை மூடு’ என்று கூட வந்தவரிடம் இருந்து பதில் வந்தது. அங்கே நான் தேடிய எந்த இடத்திலும் தீயணைப்பு கருவி தென்படவில்லை. எல்லாப் புறமும் மூடி இருந்ததால் தீ விபத்து வந்தால் வெளியேறும் Fire Exitகள் எங்கும் இல்லை.
பல்லாவரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தில் சாளரத்தை பொருத்தும் போது ஒருவேளை யாராவது ‘இது ஒருவேளை கீழே அறுந்து விழுந்தால் என்ன ஆகும்?’ என்று கேட்டிருக்கலாம். அதற்கு அடுத்த ஆள் ‘சீ, அபசகுனமா பேசாதே, வாயை மூடு’ என்று பதில் சொல்லியிருக்கலாம்.
அருமையான பகிர்வு்..
ReplyDelete