Sunday, 22 April 2018

சிலைகளின் உணர்வுகள்


.
(7th March 2018)

திரிபுராவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் வெற்றிக்களிப்பில் பாஜக தொண்டர்கள் சேர்ந்து ஒரு கல்லூரி வாயிலில் இருந்த லெனின் சிலை ஒன்றை அகற்றி இருக்கிறார்கள். அதே போல வேறொரு இடத்தில் இருந்த இன்னொரு லெனின் சிலை ஒன்று உடைப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் குதூகலத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா அதே போல தமிழகத்தில் வெற்றி பெற்றால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று ஒரு ட்வீட் பதிய பெரும் சர்ச்சை எழுந்து அவர் அந்த டீவீட்டை நீக்கும் நிலைக்குப் போயிற்று.
எனக்கு இதில் முதல் ஆச்சரியம் பெரியார் வழித்தோன்றல்கள் ஒரு சிலைக்காக இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதுதான். ஒரே ஒரு பெரியார் சீடராவது ‘ஒரு கற்சிலையில் என்ன இருக்கிறது? வேண்டுமானால் உடைத்துக் கொள்ளுங்கள்!’ என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். யாரும் பேசவில்லை. ஏறக்குறைய அந்த அர்த்தத்தில் பேசிய கமலையும் கூட ஸ்லீப்பர் செல் என்று கலாய்த்து விட்டனர். பகுத்தறிவு வழி நடப்பவர்களுக்கே சிலைகள் அத்தனை உணர்வுபூர்வமாக இருக்கிறது என்றால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களுக்கு கோயிலில் உள்ள சிலைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கலாம்.
ஆனால் இதை விட முக்கியம் லெனின் சிலை வீழ்ந்த போது பாஜக அபிமானிகள் அடைந்த புளகாங்கிதம்தான். பெரியார் பற்றிய ராஜா ட்வீட் வந்ததும் உடனே பெரியார் பற்றிய அவதூறுகளும் இணைந்தே துவங்கி விட்டன. சிகரம் வைத்தாற்போல சிலர் ரஷ்யாவில் சோவியத் ஆட்சி நொறுங்கியதும் அங்கே இருந்த லெனின் சிலைகள் சில வீழ்த்தப்பட்ட படங்களைப் பகிர்ந்து ரஷ்யாவிலேயே லெனின் சிலைகளை உடைத்திருக்கின்றனர் பாருங்கள் என்று வாதிடுகின்றனர்.
ரஷ்யாவில் நடந்ததால் இந்தியாவில் நடப்பது சரி என்கிறீர்களா? ஆம் என்றால் அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு கொள்கை தோற்று அதன் ஆட்சி முடிவடைந்து வேறொரு ஆட்சி வந்தால் அந்த முந்தைய கொள்கையின் சின்னங்கள் அகற்றப்பட, உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜக அபிமானிகளின் நிலைப்பாடா? அப்படியானால் உலகெங்கிலும் நிறைய இடங்களில் இப்படி சிலைகள் உடைக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்றதும் அங்கிருந்த மாபெரும் பாமியான் புத்தர் சிலை குண்டுகள் வீசி தகர்க்கப் பட்டது. சிரியாவில் ஐஎஸ் வெற்றி பெற்றதும் அங்கிருந்த பண்டைய பால்மைரா கோயில்களை தகர்த்திருக்கின்றனர். இவை எல்லாம் நியாயமான நடவடிக்கைகள் என்று பாஜக அபிமானிகள் கருதுகிறீர்களா?
சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம். பண்டைய இந்தியாவிலேயே இஸ்லாமிய சுல்தான்கள் வெற்றி பெற்று சாம்ராஜ்யங்களை கைப்பற்றியதும் கோயில்களை இடித்து அங்கிருந்த சிலைகளின் முகங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர். முந்தைய ஆட்சி தோற்று புதிய ஆட்சி வென்றதன் வெளிப்பாடு அது. இப்போது திரிபுராவில் லெனின் சிலைகள் உடைபடுவது சரிதான், நாளை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் அல்லது உடைக்கப்படும் என்று நீங்கள் வாதாடினால் கோயில் சிலைகளை சேதப்படுத்தியதும் சரிதான் என்று அலாவுதீன் கில்ஜி சார்பில் வாதாட முடியும் அல்லவா? அப்புறம் பாபரின் சேனாதிபதி அயோத்தியில் செய்த காரியத்தை நீங்கள் எப்படி தவறென்று விமர்சிக்க முடியும்?
விஷயம் இதுதான்: ஜனநாயகத்தில், மனித உரிமைகளில், பன்மைக் கலாச்சார வாழ்வியலில் நம்பிக்கை உள்ளவர்கள் கலாச்சார சின்னங்களை வரலாற்றின் அங்கமாகவே கொள்வார்கள். அந்த சின்னங்களை போற்றிப் பாதுகாப்பார்கள். கலாச்சார சின்னங்கள் அகற்றப்படுவது, நாசப்படுத்தப் படுவது என்பது உண்மையில் ஃபாசிசத்தின் வெளிப்பாடு. உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் மட்டுமே இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் நாஜிகள், மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், சவுதியில் வஹாபிகள், சீனாவில் கம்யூனிஸ்டுகள், இலங்கையில் சிங்கள வெறியர்கள் என்று இவர்கள்தான் இந்தக் காரியத்தைப் போற்றிப் புகழ்வார்கள். ஊக்குவிப்பார்கள். உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் வென்றதும் அவர்களின் முதல் குறி பிந்தைய கலாச்சாரத்தின் சின்னங்கள் மற்றும் இலக்கியங்கள் இவைதான். முதலில் இவற்றை அழிப்பார்கள், எரிப்பார்கள். அவை தீர்ந்து போனதும் மனிதர்களை எரிக்கத் துவங்குவார்கள்.
இந்தியாவில் இப்போது கலாச்சார சின்னங்கள் மேல் கவனம் துவங்கி இருக்கிறது. அடுத்ததாக...

எனக்குத் தெரியாது


.
(25th March 2018)
மைசூரில் ஒரு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடுகையில் ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை.
'என்சிசி பயிற்சியாளர் சி சான்றிதழ் தேர்வில் தேறி விட்டால் அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும்?' என்று அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு ராகுல் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
இது சர்ச்சையாகி விட்டிருக்கிறது. இதில் ராகுலை விமர்சித்து பாஜக தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்சிசி பற்றி பிரதமர் மோடி பேசிய ஒரு பேச்சை பதிவிட்டு 'இதோ மோடியிடம் என்சிசி பற்றி கேட்டு தெரிந்து கொள்!' என்று கிண்டல் அடித்து இருக்கிறது.
மோடியின் அந்தப் பேச்சு என்ன என்று பார்த்தால் என்சிசி இயக்க மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு அது. அதாவது பிரதமராக, அதிகாரபூர்வமாக பேசிய பேச்சு. அந்த நிகழ்ச்சி பற்றி அவருக்கு முன்னமே தெரிந்திருக்கும். நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமரின் அலுவலகத்தில் அவர் உதவியாளர்கள் தகவல்கள் திரட்டி ஒரு பேச்சை தயாரித்து வைத்திருப்பார்கள். அதில் இருந்துதான் மோடி குறிப்புகள் எடுத்து பேசி இருந்திருப்பார். அதில் பெரிய திறமை இல்லை.
ஆனால் ராகுல் அந்த மாதிரி ஒரு கேள்வி அந்த மாணவி கேட்பார் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதில் ராகுல் மேல் தவறு காண இடமில்லை. அதுவுமின்றி கேள்வி கேட்ட உடனே 'எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஆகவே பதில் அளிக்க இயலவில்லை,' என்று அவர் சொன்னது பாராட்டத் தக்கது. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
இதற்கு முன்பு இதே மாதிரி வேறு ஒரு மாணவிகள் கூட்டத்தில் மோடி கலந்து கொண்ட போது ஒரு மாணவி உலகம் வெப்பமயமாதல் குறித்து ஒரு கேள்வி கேட்டார். அப்போது மோடி சம்பந்தமே இல்லாமல் ஒரு பதில் சொன்னார். அப்போது உண்மையிலேயே மோடிக்கு நேர்மை இருந்திருந்தால் 'எனக்குத் தெரியாது!' என்று சொல்லி இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்த விஷயத்தில் பாஜக எதிர்பார்ப்பது மாதிரி உண்மையிலேயே மோடியை ராகுலுடன் ஒப்பிட வேண்டுமானால் பிரதமர் ஒரு நிருபர் கூட்டம் நடத்த வேண்டும். முன்னமே தயாரிக்கப் பட்ட கேள்விகள் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் டாண் டாண் என்று திறமையாக பதில் சொன்னால் உண்மையிலே அவர் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.
பி. கு.: தான் பிரதமரான நாள் முதல் இன்று வரை நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி அப்படி ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

புராணங்களும் வரலாறும்


.
.

(28th March 2018)

மத்தியில் புதிய அரசு வந்ததில் இருந்து பண்டைய இந்துப் புராணங்கள் எல்லாமே உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் என்கிற விவாதம் துவங்கி தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் பதவி ஏற்ற கையோடு ‘ராமாயணம் ஒரு வரலாற்று சம்பவம்,’ என்று பேசி கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் உத்தரகண்ட் அரசு அனுமார் கொய்து வந்த சஞ்சீவி மலையைத் ‘தேட’ நிதி ஒதுக்கியது. இது பற்றி என் புத்தகத்திலேயே ஒரு கட்டுரை இருக்கிறது. பின்னர் புராணங்கள் எல்லாம் வரலாறுதானா என்று ஆராய்ந்து ‘நிரூபிக்க’ ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது.
இது பற்றி பேசுகையில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்: முந்தைய ஆட்சியில் பாபர் மசூதி வழக்கில் அயோத்தி பற்றிய ஒரு வாதத்துக்கு பதில் அளிக்கையில் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் ‘ராமாயணம் கற்பனையாக புனையப்பட்ட ஒரு காவியம் மட்டுமே,’ என்று அஃபிடவிட் சமர்ப்பித்து சர்ச்சைக்கு உள்ளானது.
அது இருக்கட்டும்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்த சம்பவம், ராமர் என்று ஒருவர் ராவணன் எனும் கொடிய அரக்க குணம் கொண்டவனை வதம் செய்து வாழ்ந்து மறைந்தார் என்று ஆன்மீகவாதிகள் நம்புவதில், அவரை தொடர்ந்து வணங்குவதில், யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கத் தேவையில்லை. ஆனால் அது வரலாறு என்று சொல்ல வந்தால் கேள்விகள் எழும்.
பண்டைய சமூகங்களில், நாகரிகங்களில் வரலாறுக்கும், காப்பியங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. அந்த மாதிரி தனியான வகைமுறைகள் அவர்களுக்கு தேவைப்படவில்லை. ஆனால் நவீன சமூகத்தில், விஞ்ஞான அணுகுமுறையில், வாழ முனையும் ஒரு சமூகத்துக்கு அந்த வித்தியாசம் தேவை. ஏனெனில் வரலாறு என்றது எதைக் கருத வேண்டும் என்பதற்கு கடுமையான விதிமுறைகள் இன்றைக்கு உள்ளன. அதற்கு முதல் விதியே ‘இலக்கியங்களை’ விலக்கி விட்டுப் பார்க்க வேண்டும்,’ என்பதே. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தை வைத்து கண்ணகி என்று ஒருத்தி வாழ்ந்தாள் என்று சொல்ல மாட்டார்கள். உலக இலக்கியங்கள் எல்லாமே புனைவுகள் சேர்த்து, நிறைய மிகைப்படுத்தல்கள் வைத்து வடிக்கப்பட்டவைதான். ஆகவே அதை நோண்டி அதில் எது உண்மை, எது மிகைப்படுத்தல் என்று கண்டுபிடிப்பது வேலையற்ற வேலை. ஆகவே வரலாற்று அறிஞர்கள் அங்கே போவதில்லை.
அவர்களுக்கு நிரூபிக்கப்படும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. Empirical Evidence என்று சொல்வார்கள். அவற்றில் முக்கியமானது அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள். சிவபெருமான் என்று ஒருவர் வாழ்ந்ததற்கோ அல்லது அயோத்தியில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் இருந்ததற்கோ இதுவரை எந்த அகழ்வாராய்ச்சி ஆதாரமும் நமக்கு கிட்டவில்லை. அவை மிகவும் பண்டைய காலத்தவை, ராமர் 8,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார் அதனால்தான் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. டைனோசார்கள் வாழ்ந்ததற்கு நமக்கு இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இதுவரை கிடைத்ததிலேயே பழமையான டைனோசார் எலும்புக் கூடு 23 கோடி ஆண்டுகள் முந்தையது. அதாவது கோடிக்கணக்கான ஆண்டுகள் முந்தைய உயிரினங்கள், வாழ்வியலுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னர் பற்றி ஆதாரங்கள் இல்லை என்பது நம்ப இயலாத விஷயம். அந்த ஆதாரங்களை எல்லாம் யாரோ அழித்து விட்டார்கள் என்று சொன்னால் யார் எப்போது அழித்தார்கள், அப்படி சொல்லும் ஆளுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று கேள்வி வரும். அந்த ‘அழித்த’ சம்பவத்துக்கும் ஆதாரம் தேவைப்படும்.
ராமரோ, சிவனோ, முருகரோ இவர்கள் இங்கே வாழ்ந்து மறைந்த காக்கும் கடவுள்கள் என்று ஆன்மீகவாதிகள் நம்ப முயல்வது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதனை ஒரு அரசு தன் கொள்கையாக வரித்து பரப்ப முனைவது ஆபத்தானது. Scientific Temper எனப்படும் அறிவியல் அணுகுமுறை நம் மக்களிடம் இல்லாமல் போவதற்கு இந்த மாதிரி முயற்சிகள்தான் காரணமாக அமைகின்றன. இதன் பக்க விளைவுதான் டார்வின் தியரி பொய், ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி நம் வேதத்திலேயே உள்ளது என்னும் ஜல்லியடிகள் எல்லாம்.
ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவை நம் பண்டைய சமூகங்களின் மாபெரும் சாதனைகளில் அடங்குபவை. கிரேக்க காப்பியங்களை விட பன்மடங்கு நீளமான, சிக்கலான காப்பியம் மகாபாரதம். நம் நவீன இந்திய சமூகத்தை இன்று வரை பாதித்து நம் கலாச்சாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் காவியங்கள் இவை. இவற்றை அப்படியே விடுவது அவற்றுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வைத் தொடரட்டும். ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஆதாரம் கிட்டினால் பார்க்கலாம்.
அதுவரை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை கடவுளாக வழிபட்டு உய்யட்டும். நம்பிக்கை அற்றவர்கள் இவற்றை இலக்கியங்களாக மதித்து ரசித்து மகிழ்வோம்.
நடுவில் குட்டையைக் குழப்பும் இந்த போலி வரலாற்று அறிஞர்களை புறக்கணித்து, அவர்களை ஊக்குவிக்கும் இந்த அரசின் திட்டத்தை உணர்ந்து அதனையும் புறக்கணிப்போம்.
.

இந்திய மதங்கள்


.
(7th July 2017)
மோடிக்கு மற்ற இந்திய மதங்கள் மீது அக்கறை இருக்கிறதா என்று நான் எழுப்பிய கேள்வி கொஞ்சம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இஸ்லாம், கிறித்துவம் எல்லாம் இந்திய மதங்களா என்று கேள்வி வந்தது.
என்னைப் பொருத்த வரை, அவை இரண்டும் இந்திய மதங்கள்தான். இந்தியா என்கிற நவீன தேசம் உதயமான போது இந்த மதங்கள் இங்கே வேர் கொண்டு இருந்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் கிளைகளுக்கு எந்த அளவு அந்தஸ்து இங்கே இருக்கிறதோ அதே அளவுக்கு அந்தஸ்து இங்கே இந்த இரண்டு மதங்களுக்கும் இங்கே உள்ளது.
அதெல்லாம் இல்லை, சுதந்திரத்துக்குப் பிறகு நடந்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஹிந்து மதம் இங்கே பிறந்தது, மற்றவை இங்கே பிறக்கவில்லை அதுதான் முக்கியம் என்று சொல்லக் கூடும். அப்போது ‘இங்கே’ என்றால் ‘எங்கே’ என்று கேள்வி வரும். வேதங்கள் இயற்றப் பட்டது சிந்து நதிக்கு கொஞ்சம் கிட்டே இன்றைய பாகிஸ்தானில்தான். நூலின் சில பகுதிகள் வடமேற்கு ஹரியானா அருகே இயற்றப் பட்டிருக்கின்றன. அப்படியானால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் இன்றைய பாகிஸ்தானில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை போற்றுகிறீர்கள். ஒரு முஸ்லீம் அதற்கு சில நூறு மைல்கள் தள்ளி இன்னொரு பிரதேசத்தில், அரேபியாவில், எழுதப்பட்ட இன்னொரு புத்தகத்தை போற்றுகிறார். இதில் என்ன பெரிய வித்தியாசம்?
சரி, அது முக்கியமில்லை, அந்த மதங்கள் இந்திய துணைக்கண்டத்தில் எந்த அளவுக்கு பழமையானவை, எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கின்றன என்பதுதான் முக்கியம் என்று கேள்வி எழுப்பலாம்.
இந்தியாவின் முதல் சர்ச் புனித தாமஸ் சைரோ மலபார் சர்ச். இது கேரளாவில் பலையூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. இது முதலாம் நூற்றாண்டில் (52ம் வருடம்) எழுப்பப்பட்டது என்று நம்பப் படுகிறது. இதனோடு ஒப்பிட்டால் இங்கிலாந்தின் முதல் சர்ச் கேன்டர்பரியில் இருக்கும் புனித மார்ட்டின் சர்ச், ஐந்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. கத்தோலிக்க மதத்தின் தலைநகரமாக கருதப் படும் வாடிகனில் உள்ள புனித பீட்டரின் பசிலிகா எனும் சர்ச்சின் முதல் கட்டிடமே நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப் பட்டது.
அதாவது இங்கிலாந்து மற்றும் ரோமாபுரிக்கு போவதற்கு முன்பே இந்தியாவில் கிறித்துவம் வேர்கொண்டு விட்டது.
அதே போல இந்தியாவின் முதல் மசூதி சேரமான் ஜும்மா எனும் மசூதி அதே கேரளாவின் மெத்தலா கிராமத்தில் உள்ளது. இது 7ம் நூற்றாண்டில் (629) எழுப்பப் பட்டது. 2016ல் சவூதி பயணித்த பிரதமர் மோடி இந்த மசூதியின் மாடலை சவுதி அரசர் சல்மானுக்கு பரிசளித்திருக்கிறார். இதனோடு ஒப்பிட்டால் உலகிலேயே இரண்டாவது மசூதி மெதினாவின் குபா மசூதி 622ல் எழுப்பப்பட்டது. அதாவது அரேபியாவில் இஸ்லாம் துவங்கிய காலகட்டத்திலேயே பண்டைய இந்தியாவிலும் அதன் வரலாறு ஆரம்பித்து விட்டிருக்கிறது.
இந்த இரண்டு மதங்களும் அவைகளின் பிறப்பில் இருந்தே ஏறக்குறைய இந்தியாவில் வேர்கொண்டு இருப்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு மதங்களின் வரலாறும் தொடர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் இதர மதங்களினூடே வளர்ந்தே இருக்கின்றன. எனவே அவை இந்திய மதங்களில் ஒன்று என்று ஒப்புக் கொள்வதில் நமக்கு தயக்கம் இருக்கத் தேவையில்லை. ஹிந்து மதம் மட்டுமே இந்திய மதம், மற்றவை எல்லாம் அதில் சேர்த்தி இல்லை என்று சொல்ல முடியாது.
தவிர ஹிந்து மதத்தின் ஆதாரமான வேத சிந்தனைகளே கூட ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்ததுதான் என்கிற தாத்பரியம் வலுப் பெற்று வருகிறது. சமீபத்தில் அதற்கான மரபணு ஆதாரங்கள் பற்றிய ஒரு பதிவை நான் எழுதி இருந்தேன். ஆரியர்கள் மத்திய ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். அதை விட அரேபியா நமக்கு கொஞ்சம் அருகில்தான். எனவே தூரக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் லாஜிக் கொஞ்சம் உதைக்கவே செய்கிறது.
எனவே, என்னைப் பொருத்தவரை இந்தியாவில் இருக்கும் எல்லா நம்பிக்கைகளுமே மதிக்க வேண்டிய நம்பிக்கைகள்தான். இது இந்திய மதம், இது ரஷ்ய மதம், இது ஆஸ்திரேலிய மதம் என்று மதங்களுக்கு விஸா ஸ்டாம்ப் ஓட்டும் உரிமை நம்மில் எவருக்குமே கிடையாது.

பத்மாவதி


.

(18th November 2017)

சஞ்சய் லீலா பன்சாலி என்கிற பிரபல ஹிந்தி இயக்குனர் படைப்பில் ‘பத்மாவதி’ என்கிற படம் வெளிவர இருக்கிறது. இது தடை செய்யப்பட வேண்டும் என்கிற கூக்குரல்கள் ராஜ்புத் சமூகத்தினரால் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக மிகவும் வெளிப்படையாகவும் காங்கிரஸ் ஓரளவு தயங்கித் தயங்கியும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இது பற்றி பார்ப்போம்.
ராஜஸ்தானில் உள்ள சித்தோர் என்கிற சமஸ்தானத்தில் ரத்னசேனன் என்கிற அரசனின் மனைவி பத்மாவதி பற்றிய படம் இது. சின்ஹால் எனும் ஊரில் வசிக்கும் பத்மாவதி எனும் பெண்ணின் பேரழகு பற்றி ஒரு பேசும் கிளி மூலம் ரத்தினசேனன் கேள்விப்படுகிறான். அதிலேயே அவள் மேல் பெரும் மையல் கொண்டு அவளை அடைய எல்லாவற்றையும் துறந்து வீரர் குழு ஒன்றுடன் புறப்படுகிறான். அவனுக்கு ஏற்கெனெவே நாகமதி எனும் மனைவி இருக்கிறாள். ரத்தினசேனன் நடத்தையைக் கண்டு அவள் பெரும் வருத்தமுறுகிறாள். ஆனாலும் அவன் பயணத்தை தொடர்ந்து பெரும் துயரங்களுக்குப் பின் பத்மாவதியை கண்டடைகிறான். அவளை மணமுடித்து சித்தோருக்கு கூட்டி வருகிறான். அப்போது ரத்தினசேனனால் அரண்மனையை விட்டு நீக்கப்பட்டிருந்த ஒரு அமைச்சர் அவனை பழி வாங்க வேண்டி தில்லி சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் பத்மாவதியின் பேரழகினை விவரிக்கிறான். அந்த விவரணையில் மயங்கிய கில்ஜி பத்மாவதியை அடைய வேண்டி படைகளுடன் சித்தோர் விரைகிறான். அங்கே நடக்கும் போரில் ரத்தினசேனன் காயமுற்று இறக்கிறான். பத்மாவதியும் நாகமதியும் தன் கணவனின் சிதையில் புகுந்து உயிர்த்தியாகம் செயகிறார்கள். கில்ஜி அரண்மனை புகும் நேரம் அவனுக்கு பத்மாவதியின் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது.
இதுதான் பத்மாவதி. ஒரு கூடுதல் விஷயம், இது தமிழிலும் படமாக வந்திருக்கிறது. ‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற தலைப்பில், சிவாஜி, பதமினி, நம்பியார் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தியிருக்கிறார்கள். ஹிந்தியிலும் 'மஹாராணி பதமினி' என்ற பெயரில் பதமினியே நடித்து வெளிவந்திருக்கிறது
இந்த சர்ச்சையில் ராஜ்புத் சமூகத்தினருக்கு இருக்கும் புகார்கள் இரண்டு: ஒன்று பன்சாலி வரலாற்றை திரித்து விட்டார். இரண்டு, பத்மாவதி எனும் மானமிகு ராணியின் பெருமையை குலைத்து விட்டார்.
முதல் புகாரை பார்ப்போம். கில்ஜி சித்தோரை தாக்கியது 13ம் நூற்றாண்டில். மேற்சொன்ன சம்பவங்கள் மாலிக் முஹம்மது எனும் ஒரு சூஃபி துறவி எழுதிய ‘ப்ரேமாக்யான்’ என்கிற கவிதை இலக்கியத்தில் இருக்கிறது. அது எழுதப் பட்டது 16ம் நூற்றாண்டில். அதாவது பத்மாவதி என்கிற பாத்திரம் முதன் முதலில் அறிமுகமானது ஒரு கற்பனைப் படைப்பில்தான். அதற்கு முந்தைய எந்த வரலாற்று எழுத்துகளிலும் இந்த ராணி பற்றிய குறிப்புகள் இல்லை. சொல்லப்போனால் பத்மாவதி என்கிற ஒரு ராணி சின்ஹாலில் பிறந்து சித்தோரில் வாழ்ந்து மரித்ததற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. கில்ஜி இந்த ராணியை தேடிப் போனதற்கும் ஆதாரம் இல்லை.
இது வரலாறே இல்லை எனும் போது திரிப்பதற்கு முகாந்திரமும் இல்லை. ஒரு படைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு பாத்திரம் இன்னொரு படைப்பாளியின் கற்பனையில் சிறிய மாற்றங்கள் கொள்வதில் ஆச்சரியமோ தவறோ இல்லை. சொல்லப் போனால் மாலிக் எழுதிய காலத்தில் இருந்து பத்மாவதி பெரும் மாற்றங்கள் கொண்டே வந்திருக்கிறாள். வடஇந்தியாவில் பெரும் பிரசித்தி பெற்று விட்ட இவள் கதை பெர்சியன், பெங்காலி, குஜராத்தி, ஜெயின் இலக்கியங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு எழுதப் பட்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டில் வேறொரு கதையில் ரத்தினசேனன் மேவார் சமஸ்தான அரசனாக மாறிப் போகிறான்.
ஜேம்ஸ் டாட் என்கிற, ராஜபுதன சமஸ்தானத்தில் பணியில் இருந்த, ஆங்கில அதிகாரி 19ம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தில் ராஜபுதனர்களை முஸ்லிம்களுக்கு எதிராக வீரமாக போராடிய தியாகிகளாக சித்தரித்திருந்தார். இதில்தான் முதல் முறையாக பத்மாவதியின் தியாகம் முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துக்களின் போராட்டமாக உருவகப் பட்டிருந்தது. அதுவரை வெறும் கதையாக வழங்கப் பட்டிருந்த ராணி இந்தக் கட்டத்தில்தான் ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையின் தியாகச் சின்னமாக மாறிப் போனாள்.
எனவே வரலாற்றை திரித்து விட்டார்கள் என்கிற புகாரே அர்த்தமற்றது.
இரண்டாவது புகாருக்கு வருவோம்: பத்மாவதியின் மானம் குலைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். மானம் என்றால் இங்கே என்ன குறிக்கப் படுகிறது? அவள் கற்பு. அதாவது கணவன் இறந்ததும் தானும் சிதையில் புகுந்தது வீரச் செயல். கணவனைத் தாண்டிய வேறு வாழ்வை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று பெண்களுக்கு அறிவுறுத்த பத்மாவதி பயன்படுகிறாள். ரத்தினசேனன் முதல் மனைவியையும் தன் ராஜ்ஜியத்தையும் விட்டு விட்டு வேறொரு அழகியைத் தேடி போனது இங்கே பிரச்சனையே இல்லை. கில்ஜி செய்தது பிரச்னை, ஏனெனில் அவன் முஸ்லீம். பத்மாவதி உயிரோடு இருந்திருந்து அவனால் கவரப் பட்டிருந்தால் அது பத்மாவதிக்கு நடந்த அநீதி இல்லை; ராஜபுதன சமூகத்துக்கு நடந்த அநீதி. அதாவது பத்மாவதியின் யோனியில் ராஜபுதன மானம் புதைந்து கிடக்கிறது.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு பெயர் போன மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கருவில் பெண் குழந்தைகளை கொலை செய்வது, வரதட்சணை பிரச்னை, பெண் ஆண் குழந்தைகளிடம் உள்ள கல்வி இடைவெளி இவை ராஜஸ்தானில் இருக்கும் பெரிய பிரச்சனைகள். இப்போதே இப்படி என்றால் 13ம் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். ரத்தினசேனன் பெரிய பெண்ணியவாதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே ரத்தினசேனன் நல்லவன், கில்ஜி கெட்ட மனிதன் என்கிற வாதம் அங்கே எடுபடாது. ஹிந்து முஸ்லீம் இரண்டு அரசர்களும் பற்பல மனைவிகள், அந்தப்புர அழகிகள் என்று வாழ்ந்து வந்த காலம். பெண்கள் ஒரு போகப் பொருளாகவும் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப் பட்ட காலம். எனவே, அங்கே பத்மாவதி நிகழ்த்திய தியாகம் என்று சொல்லப் படுவதுதான் பெண்களை அவமானப் படுத்தும் விஷயம். ஆனால் இன்றைக்கு ராஜ்புத் சாதியினர் நடத்தும் போராட்டத்தின்படி சிதையில் புகுந்து சாவதுதான் பெண்களுக்கு பெருமை. அதுவும் சாதி மாறாமல், மதம் மீறாமல் இருப்பதுதான் பெருமை என்கிற அர்த்தம் புலப்படுகிறது.
பத்மாவதி ஹிந்து முஸ்லீம் போரின் சின்னமல்ல. அவள் சாதிக் கட்டுப்பாட்டின் சின்னம். ஆணாதிக்கத்தின் சின்னம். Patriarchy எனப்படும் தந்தை-வழிக் குல முறையின் சின்னம். இதெல்லாம் 16ம் நூற்றாண்டுக் கதையில் வெளிப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஏனெனில் அந்தக் காலம் அப்படி. ஆனால் இன்றைய தேதியில், பெண்ணியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில், பெண் மீதான அடக்குமுறையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு சமூகம் தங்கள் தியாகச் சின்னத்துக்கு ஆதரவாக போராடுவதுதான் இங்கே முக்கிய பிரச்சனையாக கருதப் பட வேண்டும்.
ஆகவே, ஒரு கற்பனைப் பாத்திரத்துக்கு தன் சுய கற்பனையால் மேலும் மெருகூட்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் முயற்சி எந்த விதத்திலும் ஆட்சேபிக்கத் தக்கதல்ல. படம் பார்த்து அதில் எதாவது விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால் படமே கூடாது என்பது இந்த மாதிரி போக்கிரித்தனங்களை ஊக்குவிக்கவே பயன்படும்.
கடைசியாக, ‘வரலாற்றை திரிப்பது’ பற்றி. பத்மாவதி மாதிரி ஒரு கதைநாயகியை ‘திரிப்பதே’ இவர்களுக்கு ஆட்சேபிக்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் ‘தேஜோமய பாரத்’ என்கிற புத்தகம் குஜராத் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. அதில் வேதகாலத்தில் மோட்டார் கார்கள் இருந்தன. மரபணு தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்தது என்றெல்லாம் எழுதப் பட்டிருக்கிறது. இவை இரண்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. (இந்தப் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதி இருக்கிறார்.) ராமாயணம் உண்மையாக நடந்த வரலாற்று சம்பவம் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் கூறுகிறார். சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு ஒரு வரலாற்று ஆதாரம் கூட யாரும் இதுவரை கொடுக்கவில்லை. சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தை வேவு பார்க்க நேரு உளவாளிகளை நியமித்து இருந்தார் என்று பாஜகவினர் சொல்லி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பிரதமரே வெளியிட்ட போஸ் ஆவணங்கள் எதிலும் இது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தாஜ்மகால் முன்னர் ஒரு சிவன் கோயிலாக இருந்தது என்று பாஜக எம்எல்ஏக்களே சொல்லிக் கொண்டு இதுவரை ஒரு சான்று கூட தராமல் இருக்கிறார்கள்.
இவையெல்லாம்தான் வரலாற்றுத் திரிப்புகள். இவை எல்லாம் எந்தக் கவனிப்பும் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு படைப்பாளியின் கற்பனை காவியம் சாதியவாதிகளால் தாக்கப் படுகிறது. மதவாத வலதுசாரி அரசியல் அதற்கு துணை போகிறது.

கிழக்கும் மேற்கும்


.
(17th March 2018)

'ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உருவாக்கிய ரிலேட்டிவிட்டி தியரி பற்றிய குறிப்புகள் நம் பண்டைய வேதத்திலேயே இருக்கின்றன. சொல்லப் போனால் ஐன்ஸ்டைன் தியரியை விட வேதத்தில் உள்ள தியரி மேன்மையானது என்று மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.'
இப்படி பேசி இருப்பவர் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன். மறைந்த விஞ்ஞானி பற்றி நிருபர்களிடம் பேசுகையில் இப்படி சொல்லி இருக்கிறார். 'வேதத்தில் எந்த இடத்தில் ரிலேட்டிவிட்டி பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது?' என்று ஒரு நிருபர் கேட்டார். 'ஹாக்கிங் எப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பேசினார்?' என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலாக 'நீங்கள் போய் தேடிப் பாருங்கள்; கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கா விட்டால் அப்புறம் நான் ஆதாரம் தருகிறேன்,' என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
நவீன விஞ்ஞானத்தின் சாதனைகளையும் பண்டைய நாகரிகங்களின் சாதனைகளையும் ஒப்பிடும் முயற்சிகள் இதற்கு முன்பே நிறைய நடந்திருக்கின்றன. பிரிஜாஃப் காஃப்ரா என்பவர் எழுதிய 'Tao of Physics ' என்பது இதில் முக்கியமான புத்தகம். எரிக் வான் டானிகன் எழுதிய 'Chariots of the Gods? இன்னொன்று. தமிழில் கூட சுஜாதா எழுதிய ‘கடவுள்’ எனும் புத்தகத்தில் ஆழ்வார் பாசுரங்களையும் சிவ புராண சுலோகங்களையும் குவாண்டம் மெக்கானிக்ஸ் தத்துவங்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து எழுதி இருப்பார்.
எதனால் இப்படிப்பட்ட ஒப்பீடுகளும், பண்டைய சிலாகிப்புகளும் நடக்கின்றன என்பது சரிவரப் புரியவில்லை. ஆனால் ஒன்று, பொதுவாக இந்த மாதிரி புத்தகங்கள் அடிப்படைவாதிகளுக்கு பெரும் ஊக்குவிப்பை தருகின்றன. தாவோ புத்தகத்தை மேற்கோள் காட்டாத ஆர்எஸ்எஸ் தொண்டரை நான் இதுவரை பார்த்ததில்லை. குரானில் இல்லாத வாழ்வியல் நெறிகள் வேறு எங்கும் இல்லை; அதைத் தாண்டி எதுவும் நான் யோசிக்க வேண்டியதில்லை என்பதுதான் இஸ்லாமியவாதிகளின் முக்கிய கொள்கை.
நான் நிறைய தடவை குறிப்பிட்டு உள்ளது போல பண்டைய நாகரிகங்கள் எல்லாமே நிறைய சாதனைகளைப் புரிந்து உள்ளன. இந்தியாவின் வேத நாகரிகம், மெசபடோமியா, எகிப்து, தென் அமெரிக்கா என்று எல்லாமே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி விட்டுத்தான் போயிருக்கின்றன. அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில்தான் நாம் எல்லாரும் பெருமையுடன் வீற்றிருக்கிறோம். ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதைத் தாண்டி யோசிக்க எதுவுமே இல்லை என்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.
கடவுள் புத்தகத்தில் சுஜாதாவே குறிப்பிடுவது மாதிரி, இப்படி எல்லாம் ஒப்பிடுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி தெரிந்திருந்தது, ப்ரோட்டான் துகளை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் உட்டாலக்கடி. ஆனால் நிறைய யோசித்து இருக்கிறார்கள். நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆனால் புரியாதவை, புலனுக்கு எட்டாதவற்றை கடவுள் என்று பிராண்ட் பண்ணி விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் முன்னேற இயலாமல் போயிருக்கிறது.
மேற்கு நாகரிகம் அந்தக் கட்டத்தை தாண்டி முன்னேறி இருக்கிறது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நியால் ஃபெர்குசன் எனும் ஆய்வாளர் Civilisations எனும் தன் புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கிறார். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கிய காரணம் மத அடிப்படைவாதம். அரேபிய நாகரிகமும் சரி, இந்திய நாகரிகமும் சரி ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேறாமல் போனதற்குக் காரணங்களில் ஒன்று மதவாதிகளின் ஆளுமை, குறுக்கீடுகள் என்று அவர் வாதிடுகிறார். மேற்கத்திய சமூகம் மதவாதத்தை தள்ளி வைத்ததால் அறிவியலுக்கும், நிரூபணம் தேவைப்படும் ஆய்வுகளுக்கும் (empirical research) முன்னுரிமை தந்ததில் பெருமளவு முன்னேற முடிந்திருக்கிறது, என்று ஃபெர்குசன் எழுதுகிறார்.
இதனை நேரு புரிந்து வைத்திருந்திருக்கிறார். Scientific Temper என்று பொதுவாக சொல்லப்படும் அறிவியல்ரீதியான சிந்தனைதான் தேசத்தை முன்னேற்றும் என்று பெருமளவு நம்பினார். தன் புத்தகம் Discovery of Indiaவில் இந்தப் பதத்தை முதன் முதலில் பயன்படுத்துகிறார். பின்னர் சுதந்திரத்துக்குப் பின் தொடர்ந்து இதனை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். நேரு அளவுக்கு இந்தப் பதத்தை பயன்படுத்திய வேறு அரசியல்வாதி கிடையாது. அரசியல் சாசனத்திலேயே இந்திய மக்களின் கடமைகளில் ஒன்றாக ‘To develop scientific temper, humanism and the spirit of inquiry and reform’ என்பது உள்ளது.
சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியதற்கே கூட மதங்களின் அடிப்படைவாதங்களை விட்டு விலகி பெருமளவு நவீனக் கண்டுபிடிப்புகளையும், நவீன சிந்தனாவாதங்களையும் பின்பற்றத் துவங்கியதேதான் காரணம் என்று சொல்லலாம். இதர காலனிய ஆதிக்க நாடுகள் பெருமளவு பிரச்சனைகளில் உழல்வதற்கு அவர்கள் அப்படி செய்யாததுதான் காரணம் என்றும் சொல்லலாம். பாகிஸ்தானில் குரான் பற்றி கேள்வி கேட்டால் தூக்கில் போடுகிறார்கள். பங்களாதேஷில் ப்ளாக் எழுதினால் கொலை செய்கிறார்கள். இலங்கையில் பன்மைக் கலாச்சாரத்தை வேரெடுக்கவே விடமாட்டேன் என்கிறார்கள். அதன் பலன்களை அந்த நாடுகள் அனுபவிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தியாவிலும் சமீப காலங்களில் இது துவங்கி இருக்கிறது. பகுத்தறிவுவாதிகள் கொலை செய்யப் படுகிறார்கள். டார்வின் ஒரு வேஸ்ட் என்கிறோம். ஹாக்கிங் வேதம் படித்து சிலாகித்தார் என்கிறோம். வேத காலத்தில் பிளேன் ஒட்டினோம், பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினோம் என்கிறோம். எப்படி இருந்த நாம் இப்படி ஆகி விட்டோம் என்கிறோம். ராமாயணம் உண்மையில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம் என்று வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் ‘அறிவிக்கிறார்’. ஆயுர்வேதம் மிகவும் உயர்ந்தது என்று அதற்கு ஒரு துறை அமைக்கப் படுகிறது. அதன் கீழ் நடக்கும் ஜல்லியடி ஆய்வுகள் சிலாகிக்கப் படுகின்றன. இதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. சுதந்திரத்துக்குப் பின் வந்த மாற்றங்கள், செக்யூலரிஸம், இட ஒதுக்கீடு, பல்-சமய, பன்மைக்-கலாச்சார சூழல் எல்லாமே கேள்விக்கும, விமர்சனத்துக்கும் உள்ளாக்கப் படுகிறது. இவற்றைப் போற்றிய நேரு கேவலப் படுத்தப் படுகிறார்.
இந்த மாபெரும் அலையில் இடையில் வந்து மாட்டிக் கொண்ட ஹாக்கிங்-கும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

நேருவும் பெண்களும்


.

(30th July 2017)

நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப் படுகிறார்.
நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை.
சொல்லப் போனால் அவருக்கு விருப்பமே இல்லாமல் நடந்த கட்டாயக் கல்யாணத்தைக் கூட அவர் உதறி விடவில்லை. காச நோயால் அவதிப்பட்ட கமலா-வை குணப்படுத்த எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸ்விட்சர்லாந்து போய் மாதக்கணக்கில் அவருக்கு மருத்துவம் பார்க்க உடனிருந்து கவனித்துக் கொண்டவர். அவரின் இறுதிக்காலங்களில் அவருக்கு பணிவிடைகள் செய்தவர். அவரின் உடல் மோசமாவதைக் குறித்து தன் குடும்பத்துக்கு பெரும் சோக ரசம் சொட்டும் கடிதங்கள் எழுதியவர். கமலா இறக்கும் வரை வேறு பெண்ணை ஏறெடுத்தும் பாராதவர்.
எட்வீனாவையும் அவரையும் குறித்து கூறப்படும் கதைகள் கட்டுக்கதைகள் அல்ல என்று நம்புபவன் நான். அது பற்றி நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது நேரு ஒரு விடோயர். மனைவியை இழந்து பல ஆண்டுகள் தனியாக இருந்தவர். எனவே என்னைப் பொறுத்தவரை அதில் நேரு தரப்பில் தவறேதும் இல்லை. நேருவுக்கு முன்பே எட்வீனாவுக்கு ‘தோழர்கள்’ இருந்திருக்கின்றனர். அவை எல்லாவற்றையும் பற்றி மவுண்ட் பேட்டனுக்கு தெரிந்தே இருந்தது. அவர்கள் திருமணம் ஒரு வசதித் திருமணம். Marriage of Convenience. ராஜகுலத்தில் பிறந்திருந்தாலும் ராயல் பட்டத்தை இழந்தவர் மவுண்ட் பேட்டன் (அது தனிக் கதை). எட்வீனாவை திருமணம் புரிவதன் மூலம் அவருக்கு ராஜகுல பட்டம் திரும்பக் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே சுதந்திரப் பறவையாக இருந்த எட்வீனாவுக்கு அந்த சுதந்திரம் தொடர மவுண்ட் பேட்டன் அனுமதித்தார். எனவே அங்கும் தவறு காண (என்னைப் பொறுத்த வரை) இடம் இல்லை. ‘அய்யய்யோ கல்யாணம் பண்ணிக்காமல் காதலா! அபச்சாரம்!’ என்று கத்துபவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என்பதை கொஞ்சம் காலண்டரைப் பார்த்து தயவு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது நேரு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு சிகரெட் பற்ற வைக்கும் ஃபோட்டோ. இதனை ஆயிரம் தடவையாவது முகநூலில் பார்த்திருப்பேன். அது எட்வீனா இல்லை. அந்தப்பெண் ஒரு பிபிஸி நிருபர். நேருவின் ராஜரீகப் பயணங்களில் கூடப் பயணித்த ஊடகக் குழுவில் ஒருவர். அவருக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும் காட்சி எனக்குப் பிடித்த நேரு போட்டோக்களில் ஒன்று. ‘அய்யய்யோ ஒரு பொம்பளை சிகரெட் பிடிக்கலாமா? அபச்சாரம்’ என்பவர்களில் நீங்கள் ஒருவர் என்றால் திரும்பவும் ஒருமுறை காலண்டரைப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெண்ணியத்தில், பெண் விடுதலையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் நேரு. சொல்லப் போனால் எனக்குத் தெரிந்து வெளிப்படையாக பெண்ணியம் பேசிய வேறு பிரதமர் கிடையாது. விவாகரத்து உரிமை, மறுமணம், சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை என்று இன்றைக்கு நாம் பார்க்கும் நிறைய சீர்திருத்தங்கள் அவர் கொண்டு வந்ததுதான். அப்போதைய ஹிந்துத்துவா இயக்கங்களான ஹிந்து மஹா சபா, ஆரஎஸ்எஸ் போன்றவை அவரின் சீர்திருத்த முயற்சிகளை கடுமையாக எதிர்த்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நேரு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அந்த சட்ட வடிவங்களை நுழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதில் தாமதம் ஏற்பட்டது. அந்த தாமதத்தை பொறுக்க மாட்டாமல் அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விலகினார். ஆனால் அது நடந்து சில மாதங்களிலேயே (அம்பேத்கர் விரும்பிய) அந்தத் சட்ட வடிவங்களை எல்லாம் நேரு கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
அந்த அளவுக்கு பெண்கள் பற்றியும் இந்தியாவில் பெண்கள் நிலை பற்றியும், அது சம்பந்தமாக நிலவும் பிற்போக்குத்தனம் பற்றியும் நேரு கவலைப்பட்டு தன்னால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பெண்கள் பற்றிய அவர் கவலைகள் மிகவும் நவீனமாக, அறிவியல் பூர்வமாகவே இருந்திருக்கிறன.
ஆனால் அப்படி அவரைக் கரித்துக் கொட்டும், எட்வீனா விஷயத்தில் கிண்டல் அடித்துக் கொண்டிருப்பவர்கள் கையில் அப்போது அதிகாரம் இருந்திருந்தால் இன்றைக்கும் கூட விதவைகளை மொட்டை அடித்து காசிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கலாம்.